பிறப்பு கேட்காமலே கிடைத்த சாபம்...

மரணம் கேட்டும் கிடைக்காத வரம்...

Oct 30, 2007

கோபத்தின் விரல்கள்

தூரத்து விண்மீன் கூட்டங்களை
எண்ணி முடிக்கும் தருணத்தில்
பூஜ்யத்தில் தொடங்கும்
உன் ஸ்பரிசங்கள்
மறக்க செய்கிறது யாவையும்...

பூக்களின் நறுமணத்தை
மூச்சாய் உள்ளிழுக்கும் வேளைகளில்
என்றோ நீ வீசிப்போன
பார்வை சிக்கி
வெளியேறாமல் தவிக்கிறது
உள் சென்ற காற்றுத் துளி....

அமைதியான ஒரு மழை நாளில்
ஆர்ப்பரித்து வரும்
உன் நினைவுகளின் மெளன மொழி
ஆவேசமாய் உடைத்தெரிகிறது
என் கனவு கலங்களை....

என் தோட்டம் நோக்கி வந்த
வண்ணத்து பூச்சியின்
வர்ணங்களை திருடிச் செல்கிறது
உன் கோபத்தின் விரல்கள்...

சில மணி நேர தடங்களுக்காய்
வாழ்க்கையை வெறுக்கத் துடிக்கும்
உனக்காய் நாள்தோறும்
இரவில் அழுகிறது
என் கவிதைக் குரல்...

கண்டதை எழுதுகிறாய்

ஒரு வார்த்தைக்கும் மற்றொரு வார்த்தைக்குமான
இடைவெளியில் செல்லும் ஒரு மரண ஊர்வலம்....

காட்டு குயிலோடு போட்டியிட்டு கூவி
தண்ணீர் தேடும் வீட்டுப் பறவை....

நாள் காட்டியில் விரைவாய் கிழிபடும்
காகிதங்கள் யாருடைய இறுதி நாளைத் தேடி....

இன்று மதியம் உணவு கிடைத்தது
இனி இரவுக்கு யாரைத் தேட...

எழு ஜென்மங்கள் உண்டாம் கொடுமை
எல்லாவற்றிலும் நான் மனிதன் ....

பொதி சுமக்கும் கழுதை போல
நினைவுகள் குட்டிசுவர் தேடி புறப்படுகிறது....

காரமான குழம்பு, ரசம் குடித்து
அதிலும் காரமென தயிர் தேடுகையில்
நிறைந்து விடுகிறது பசித்த வயிறு...

என்னடா இது கண்டதை எழுதுகிறாய்
என்ன செய்ய? சொல்லாமல் விட்டதை நீ புரிந்துகொள்...

Oct 29, 2007

மடல்!!!!!



அன்புள்ள மகளுக்கு,

புன்னகைக்கும் பூவே நலமா....

உன் சின்ன சின்ன சிரிப்புகளோடும்

சிதறிக்கொண்டிருக்கும் நினைவுகளோடும்

தூரமாய் நான்....


நீ சாய்ந்துறங்கும் தோள்களும்

எதிர் தருணங்களில் நீ இதழ் பதித்த

கன்னத்தின் ஈர சுவடுகளும்

மார்பு சூட்டில் கண்ணுறங்கிய தருணங்களுமாய்

தொடர்கிறது என் நொடிப் பொழுதுகள்....


பால் சோறு உண்ணும் போது பங்கு

வைக்கும் செல்ல பூனைக்குட்டி சுகமா?


இல்லத்திற்கு யார் வரும் போதும் உறுமலோடு

உனை அழைக்கும் அன்பு நாய்க்குட்டி சுகமா?


பூ பறிக்கும் பெண்களிடையே சிரிக்கும் மலரை

தொடாமல் ரசிப்பாயே அந்த பூந்தொட்டி சுகமா?


ஜன்னலில் வந்தமர்ந்து உன்னோடு கதை பேசும்

குருவிக் கூட்டங்கள் சுகமா?


வேப்ப மரத்து அணில் சுகமா?


வெயில் விளையாடும் முற்றம் சுகமா?


தண்ணீர் தெளித்து கோலமிட்டு

அழகு பார்க்கும் வாசல் சுகமா?


உன் உறக்கத்தோடு வரும் கனவுகள் சுகமா?


அனைத்தும் சுகம் தானே!!!!


உனக்கு பிடித்த பாடல் வானொலியில்

நீயும் வாயசைத்து பாடுகிறாய் இங்கு...


நீர் குடிக்கும் போதெல்லாம் நினைவில் வருகிறது

"ஜி" என நீ வைத்த புனைப்பெயர்...


வீடு மாறி விட்டதாய் கேள்விப்பட்டேன்

எப்போது வரப்போகிறாய் நம் வீட்டிற்கு...


கூடு கட்டும் பறவை சேகரிக்கும்

சுள்ளிகள் போல சிறிது சிறிதாய் சேர்க்கிறேன்

உனக்கான என் வார்த்தைகளை...


எப்போதும் நாம் விளையாடும்

கண்ணாமூச்சி போல நீ ஒளிந்து கொள்கிறாய்

என் கவிதைகளின் பின்னால்...


உன்னை கண்டு பிடிக்கும் பொழுதுகளில்

காணாமல் போகிறது என் கவிதை...


என்னிடம் இருக்கும் வெற்று தாள்களுக்கு

கனவுகளால் நிரப்பும் கவிதைகளை தந்தவள் நீ...


இறுதியாய் ஒன்று..,

நான் அங்கு வரும் வரையோ

நீ இங்கு வரும் வரையோ

புன்னகையோடு காத்திரு

என்னை விட்டு உன் தாய் உயிர்த்திருப்பது

உன் புன்னகையில் மட்டுமே...


பிரிவுகள் சுகம் தான்

காத்திருத்தல் தவம் தான்

நான் இங்கு காத்திருப்பதற்காக

பிரிந்திருப்பவன்....

இப்படிக்கு,

கை கோர்த்து நடை பழக்கும் நினைவுகளோடு

கனவுகள் சுமக்கும்

மழை காதலன்..

Oct 26, 2007

நான் கேவலமானவனே


புதிதாக நான் எதை பற்றி

எழுதப் போகிறேன்

எல்லாமே பழகிப் போய்விட்டது

என் கனவுகளையோ

மகிழ்வுகளையோ

ரணங்களையோ...


கண் நிறைத்த இடங்களையோ

கவர்ந்த பெண்களையோ

ரசித்த கவிதை ஒன்றை பற்றி சிலாகித்தோ

வேறு என்ன இருக்க போகிறது

என் கவிதைகளில்....


என் தவறுகளை மறைத்து

எழுதும் இவற்றில் என்ன உண்மை

இருக்கப் போகிறது

நெருப்பால் சுட்டால் எரிவது போல‌

என் நிதர்சனமும் தினமும்

சுட்டு பொசுக்குகிறது என்னை...


என் கேவலங்கள், காம வக்கிரங்கள்

சுயனலம், பொறாமை மறைத்து

காதலையும்,மலர்களையும்

தென்றலயும் மட்டுமே

எழுதுவதால் நான் என்னில்

யோக்கியமாகி விட முடியாது..


இங்குள்ள அனைவரையும் விட‌

நான் கேவலமானவனே....

கறுப்புமையும், தனிமையும்


நான் கவிதை எழுதும் போது

தீர்ந்து போகும் பேனாவின்

மையை போலவே

அதிவிரைவில் முடிந்து போகிறது

என் காதலின் கனவுகளும்...


பென்சிலின் கறுமையான‌

எழுத்துகளில் வெளிப்படுகிறது

என் தனிமையின் புலம்பல்

என்றபோதிலும்

அவ்வளவு சீக்கிரம்

தீர்ந்து போவதில்லை

பென்சிலின் கறுப்பு மையும்

என் தனிமை குரலும்....

Oct 19, 2007

எனக்கும் ஆசைகள் உண்டு


மெளனமாய் வெளிப்படுகிறது

என் விசும்பல் சத்தம்...


உனக்கும் சுதந்திரம் உண்டு

ஆம் பெண்ணே...

உனக்கும் சுதந்திரம் உண்டு...

உனக்காக நான் வெட்டிய விரல் நகங்கள்

உனக்காக நான் மாற்றி கொண்ட என் புகை பழக்கம்

உனக்காக நான் மறந்து போன என் கல்லூரி தோழிகள்

என் சிறு வயது நட்புகள்

என் காகித கிறுக்கல்கள்

என எல்லாமே...


ஆனாலும் என் வெற்றிகளுக்கு ஆசைப்படும் நீ

என் தோல்விகளை மட்டும் மறுக்கிறாயே...


என் புன்னகைகளை அலங்கரிக்கும் நீ

என் கண்ணீர்துளிகளுக்கும் காரணமாய்...


இருவருமாய் இது வரை திரைப்படம்

சென்றதில்லை உனக்கு பிடிக்காது

பூங்கா ரசித்ததில்லை

உனக்கு பிடிக்காது

உணவகங்கள் செல்வதில்லை

உனக்கு கூச்சம்


அனைவருக்கும் உடைகள்

உன் தேர்வில் மட்டுமே

பயணங்கள் உன் விருப்பத்தில்

பண்டிகைகள் உன் விருப்பத்தில்

உறவுகள் உன் விருப்பத்தில்....


எனக்கும் ஆசைகள் உண்டு

எப்பொழுது புரியும் உனக்கு....

Oct 16, 2007

காதல் அரசி

பெண்ணே, நீ யார் என்பதில் எனக்கு சந்தேகம் இருந்தது... குழம்பி திரிவேன்... பிறகு தான் தெரிந்தது நீ காதல் தேசத்தின் அரசி என்பது... இது வரை வரலாறுகள் அனைத்தும் உலகின் பெண்கள் பலரை காதலின் இள்வரசிகளாகவே அங்கீகரித்து வந்திருக்கிறது... அரசிக்கான இடம் மட்டும் நிரப்பபடாமலேயே... நீ ஜனிக்கும் அந்த நாள்வரை...
மணிமகுடங்கள் தேடி செல்லும் அரசர்களுக்கும், வீரர்களுக்கும் மத்தியில் காதலின் கீரீடம் மட்டும் உன்னை தேடி வந்து தன்னை அலங்கரித்து கொண்டது... மற்றவர்களெல்லாம் வழிவிட்டு நின்றதை பார்த்திருக்க மாட்டாய், நான் அறிவேன்... அனைவரும் ஏக்கதுடனும், பொறாமையுடனும் பார்த்து கொண்டிருக்கும் போதே காதல் உன்னை அரசியாக ஏற்று தன்னை என்றும் நிலை நிறுத்திக் கொண்டது.உன் முக பொலிவின் முன் காதல் கூட சற்றே வெளிச்சம் குறைந்தது உண்மை தான்.
பெண்ணே இனி நீ எச்சரிக்கையாய் இரு.. உனக்கான சுயம்வரத்தில் காத்து கிடக்கும் இளைங்ஞர்கள் எத்தனையோ எனக்கு தெரியாது....

மெளனத்தின் இசை

இசை... எத்தனை இதயங்கள் வசப்படுகின்றன இந்த ஒற்றை வார்த்தையின் வசீகரத்தில்... மனிதர்களின் மகிழ்வையோ, சோகத்தையோ கூட பிரதிபலித்து போகிறது இசை... அதில் தான் எத்தனை எத்தனை வகைகள்... மனதை வருடும் மெல்லிசை, தாளம் போட வைக்கும் மெட்டுகள், ஆட தூண்டும் நடன இசை,உரையாடல்களுக்கு இனிமை சேர்க்கும் பின்னிசை..... இன்னும் இன்னும்.... சாதாரண மூங்கிலை பார்க்கும் விறகு வெட்டிக்கும், புல்லாங்குழல் வாசிப்பவனுக்கும் வேறுபாடிருக்கிறது.. பானை செய்யும் தொழிலாளிக்கும், அதை கடமாய் மாற்றி இசை எழுப்புபவனுக்கும் இடைவெளிகள் இருக்கிறது... மாடு வெட்டி இறைச்சி விற்பவனுக்கும், அதன் தோலை மத்தளமாய் மாற்றி மங்கலம் இசைப்பவ்னுக்கும் வித்தியாசங்கள் ஆயிரம்...
இவர்கள் அனைவரையுமே தன்னிலை மறக்க வைக்கிறது இசையின் மெல்லிய தழுவல்கள்... இவற்றை தாண்டி நிற்கும் சில நேரம் நாட்டு புற கலைஞனின் தனி குரலும், குழந்தைக்கென பாடும் தாயின் தாலாட்டும்...
விவரிக்க இயலாமல் தனித்து கிடந்த என்னை அனைத்து லயங்களிலும் கட்டி ஒற்றை நொடியில் இழுத்து போட்டு வேடிக்கை பார்க்கிறது உன் மெளனத்தின் இசை....
அது உயிரின் இசை.....

மழை

மெல்லிய மழை அமைதியாக நனைக்கும் என்னை... ஈரமான உடைகளோடு ஏகாந்தமான உன் நினைவுகளோடு நடை பயில ஆரம்பிக்கும் நொடியில், சற்றே வேகம் கொண்டு ஆர்ப்பரித்து நீர் துளிகள் ஊடுறுவும் என் அணுக்களின் அடுக்குகளில்... மழை குறைந்த வேளைகளில் பூ வானம் தூறலாய்.... வாய் திறந்து ஏந்துவேன் காதல் தாகம் தீர்ப்பதற்காய்... முற்றிலும் நின்று, வெயில் வந்து அதன் பின்னும் தொடர்கிறேன்.... கொஞ்சம் கொஞ்சமாய் உலர்கிறது உடைகள்.. இன்னும் மழை தாங்கிய நிலம் போல் ஈரமாகவே இருக்கிறது நாம் இணைந்து நடந்த மழை கால நினைவுகள்...

உயிர்ப் பூ

இதோ இந்த நொடியில் எதோ ஒரு பெயர் தெரியாத காட்டு பூ மலர்கிறது. எதோ ஒரு மலர், தன் வண்ணங்களால் ஒரு வண்ணத்து பூச்சியை வரவேற்கிறது. இன்னுமொன்று பனிதுளிகளை தேனாக்கி வண்டுகளுக்கு பரிசளிக்கிறது... தலை அசைக்கிறது அதன் ரீங்காரத்தில்... மற்றொன்று எதோ ஒரு பெண்ணின் கூந்தலில் அழகு சேர்க்க, ஆலயங்களில் பூஜைக்கென,மணவறை அலங்கரிக்க..... இன்னும் எத்தனையோ... ஆனாலும் அடர்ந்த காடுகளில் யாரும் காணாமல் மலர்ந்து உதிரும் மலர்களின் வாழ்க்கையை பரிசளிக்கும் நீ... என் உயிர்ப் பூ...

மின்னலாக....

தனித்து துவங்கிய என் இருளில் நொடி நேர மின்னல் என என்னையும், என் பாதையையும் வெளிச்சமாக்கி போனவள் நீ..... அந்த ஒற்றை கணத்தின் விளிம்பில் நின்று கொண்டு மீண்டும் வருவாய் என எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறது என் மனம்.... நீ தந்த ஒளியால் எனக்கு புலப்பட்ட பாதைகள் அனைத்தும் உன்னையே வந்தடைகின்றன.... இப்பொழுதெல்லாம் என் வானில் மின்னல்களை காண்பதே அரிதாகிறது.... அப்படியும் வரும் சில வேளைகளில் உன் முகம் தேடுகிறேன், அந்த வெளிச்சத்தில்... மின்னலாக வருவதே நீ என்பதை அறியாமல்....

நினைவுகள்

தினமும் உனக்கென கவிதை எழுதும் அந்த நொடிகள், உன் வரவிற்காக காத்திருந்த அந்த பொழுதுகள், தொலை பேசியில் பேசி மகிழ்ந்த கணங்கள்..... எனக்கே எனக்காக நீ அளித்து போன புன்னகைகள், என் புத்தகங்களுக்கு உன் பெயர் சூட்டிய நாட்கள், நனைவை நனைக்கும் மழை காலங்கள்.... இப்படி எத்தனையோ, மனதின் ஒரு மூலையில் பசுமையுடன்... நீ மட்டும் தான் அருகில் இல்லை, அதனால் என்ன உன் நினைவுகள் இருக்கிறதே நான் உயிர் வாழ... அது போதாதா?

கவிதையும், காதலும்

காதலாய் இருப்பதில்லை
கவிதை..
கவிதையாய் இருப்பதில்லை
காதல்...

இருப்பினும்
காதலுக்குள் கவிதை இருக்கிறது
கவிதைக்குள் காதல் இருக்கிறது

வெயிலில் நடக்கும் தன் காதலியின்
பாதம் கண்டு பதறும் காதலன்
மனம் கூட கவிதை தான்...

நல்ல கவிதையின் சுகத்தில்
கண்மூடி கிடப்பவனுக்குள்ளும் காதல் தான்..

கவிதையும், காதலும் அற்ற
சமூகம் வெறும் நிலபரப்பே
இன்றி வேறு என்ன?

Oct 10, 2007

சில வினாடிகள் -3


தெரு விளக்கும்

இந்த காகிதமும் பேனாவும்

இருக்கும் வரை

உன்னையும் என்னையும்

யாராலும் பிரிக்க முடியாது.......


செடிகளில் பூக்கும்

மலர்களை நீ

ரசிக்கிறாய்

மண் மூடி கிடக்கிற

வேர் போல் என் காதல்.....


என் இளமை பருவம்

எழுதிய கவிதைக்கு

நீ கொடுத்த தலைப்பு

முற்று புள்ளி.....


உன்னுடைய இமைகளை

கொஞ்சம் சேர்த்து வை

இரவு எப்படி இருக்கும் என

மறந்து போய் விட்டது....


தூங்காமலேயே கனவுகள்

வலம் வருகிறததடி

உன்னால்

என் வாழ்க்கை கனவாகி

போனதால்.....


எதற்கும் மற்றவர்களிடம் இருந்து

விலகியே இரு

என்னை போல வேறு

யாராவது ஒருவனும்

கவிதை எழுத போகிறான் .....


தீக் குச்சியாக இருந்தவன் தான்

நீ என் இதயத்தில்

உரசிய பின்பு தான்

எரிந்து சாம்பாலானேன்......


குயிலின் குரல் தேடி

வந்தவள் தானே நீ

பிறகு ஏன் நிறத்தை பற்றி

கவலை படுகிறாய்...


என் எண்ண காடுகளில்

தீ பற்றி எரிந்தாயடி

உன் குளிரை

போக்கி கொள்ள.....


இளைப்பாறி செல்ல‌

என் இதயம் தானா

கிடைத்தது உனக்கு....


அழுகையை விட‌

சிரிப்பு தான்

அதிகம் பிடிக்கிறது

நீ எப்பொழுதும் சிரிப்பதால்

நான் எப்பொழுதாவது

சிரிப்பதால்....


என் இதய மேடையில்

நடனமிடுகிறாய்

மிதிபடுகிறேன் என்றாலும்

ரசிக்கவே தோன்றுகிறது....

சில வினாடிகள் -2


கண்ணாடி துண்டுகளுக்கு இடையே

நடந்து கொண்டு இருக்கிறேன்

அதில் படிந்த

என் உதிரம்

துடைத்து விட்டு

முகம் பார்க்கிறாய் நீ.....


என்னை கடக்கும்

போது சூறாவளியாய்

கடக்கும் காற்று

உன்னை கடக்கும் போது மட்டும்

தென்றலாய்

ஒரு வேளை காற்றும்

கூட உன் காதலனோ....


முகம் காட்டும் கண்ணாடி கூட

வெட்கப்பட்டு சிவக்கிறதடி

நீ முகம் பார்க்கும் போது.....


ஒரு காற்றாடி போல

பறந்து கொண்டிருக்கிறேன்

கீழே இருந்து

காதல் நூலால்

நீ தான் இயக்குகிறாய்.....


எதிரொலியாய்

ஒலித்து கொண்டே இருக்கிறது

உன் மறுப்பு குரல்

என் செவிப் பறை

கிழிந்தது கூட தெரியாமல்....


சோர்வு வரும் போதெல்லாம்

எடுத்து பார்த்துகொள்கிறேன்

உன் முதல் பார்வையை.....


காதல் பூக்களை

அறுவடை செய்ய மனமே இல்லை

நட்டு போனது

நீ என்பதால்...


கடிகார முட்கள் கூட

காத்திருக்கிறதடி உன்வரவுக்காய்

நீ வந்தால் தான்

அதற்கும் கூட நல்ல நேரமாம்.....


அழகு என்ற சொல்லுக்கு

பொருள் தேடி அலைகிறேன்

உன்னை பார்த்த பிறகும்.........

ப‌ற‌வைக‌ள் வ‌ரும் என‌


என் க‌விதைக‌ளில்

ஒன்றும் இல்லை

வெறும் செடிக‌ளும் ம‌ல‌ர்க‌ளுமே...

சில‌ ம‌ர‌ங்க‌ளும் ந‌ட்டு வைக்கிறேன்

ப‌ற‌வைக‌ள் வ‌ரும் என‌...


இர‌த்த‌ம் தோய்ந்த‌ சுவ‌டுக‌ளும்

முலாம் பூசிய‌ முக‌ங்க‌ளும்

என்னோடு சினேக‌ம் கொண்ட‌

நாட்க‌ள் ம‌ற‌க்க‌ முடியாம‌ல்...


ஒற்றை வ‌ழி பாதையில்

என் ப‌ய‌ண‌ம்

குளிர் த‌ரும் நிழ‌லில்

ம‌ன‌ம் ம‌ட்டும் பாலையின் நினைவுக‌ளில்...


நினைக்க‌ கூட‌ வ‌லி தான்

சில‌ உற‌வுக‌ளும்

சில‌ நினைவுக‌ளும்

இருந்தும் நினைப்ப‌தில்

தான் இருக்கிற‌து வாழ்வின் ர‌க‌சிய‌ம்....


நோய் ப‌ட்ட‌வுட‌ன் வெட்ட‌ ப‌டும்

செடி போல‌ சுல‌ப‌ம் இல்லை

ம‌ன‌ங்க‌ளின் துண்டாட‌ல்

இருந்தும் வெட்ட‌ ப‌டுகிற‌து

வார்த்தைக‌ளால்....


என‌வே தான் நான்

என் க‌விதைகளில்

வெறும் செடிக‌ளும் ம‌ல‌ர்க‌ளுமே வைத்திருக்கிறேன்

சில‌ ம‌ர‌ங்க‌ளும் ந‌ட்டு வைக்கிறேன்

ப‌ற‌வைக‌ள் வ‌ரும் என‌...

Oct 8, 2007

கண்ணெதிரே அவலம், கொதிக்கும் மனம்...

தினமும் நான் சந்திக்கும் அவலங்களை, வேதனை கொடுக்கும் நிகழ்வுகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ள போகிறேன்.

அவன் எனக்கு மேல் அதிகாரி, சரளமாக 6 மொழிகள் பேசுபவன், வயது 50 ஐ நெருங்குகிறது. வீடு, மனைவி, மகன் என உறவுக்கு ஒரு முகம், பதவியில் இருப்பவன் என் ஊருக்கு ஒரு முகம்... இருந்தும் இன்னொருமுகமும் உண்டு...

அவன் காம லீலைகளின் முகம்...பல பெண்களின் வாழ்வில் விளையாடும் இவன் திருமணம் ஆன, ஆகாத இளம் பெண்களை இலக்ககாக கொண்டு தான் காய்களை நகர்த்துக்கிறான்.பணம், பரிசு, செல் பேசி இவை அஸ்திரங்கள்...பொருளாதார நிர்ப்பந்தங்களுக்காக தன் பெண்களை வேலைக்கு அனுப்பும் பெற்றோர்களின் கதி என்ன?தற்போது ஒரு இளம் பெண் வயது 23-25 குள். அந்த பெண்ணுக்கும் இதே பரிசுகள், உடைகள், செல் பேசி... இதற்காக அந்த பெண் விட்டு கொடுத்திருப்பது தன் கற்பை...
பணம், வசதி, உல்லாச பயணங்கள் இவற்றுக்கு மேலாக தான் உடல் பசி என் தொடருகிறது... இல்லை அன்பு தான் தேவை என்றால் விடுதிகளில் என்ன வேலை.. தாய், தந்தையிடம் கிடைக்காத அன்பு இவனிடம் கிடைக்கிறதா என்ன.... ஒரு சகோதரி இருப்பதாக தெரிகிறது... அவரும் இவ்வாறே செய்தாள் ஒப்பு கொள்ளுவாரா?

பெற்றொருக்கு தெரிந்தால் என்னவாகும்...பெரும்பாலும் ஏழை தமிழ் குடும்பங்கள் மானம் மட்டுமே உயிர் என கருதி வாழ்பவர்கள். அவர்களுக்கு அந்த பெண் எப்படி பெயர் வாங்கி தர போகிறாள். தன்னை திருமணம் செய்து கொள்ள போகும் ஒரு இளைஞனின் கனவுகளை எப்படி உண்மையாக்குவாள்... அவனும் இதே போல பல பெண்களை பார்த்திருந்தால் எப்படி இருக்கும்?

அந்த காம வெறி பிடித்தவனுக்கு, தான் மனைவியிடம் கிடைக்காத சுகம் அப்படி என்ன மற்ற பெண்களிடம் கிடைக்க போகிறது. புதிது புதிதாய் ரூசிக்க நினைக்கும் இவன் மனிதனா? இல்லை மார்கழி மாத தெரு நாயா? நாளை இவன் ஒரு மனிதனாக சமூகத்தில் தன் பிள்ளைக்கு என்ன கற்று தர போகிறான்... வெறும் ஏட்டு கல்வியா? இவன் மனைவி இவ்வாறு இருந்தால் சரி என சொல்லுவானா?எனக்கு தெரிந்து இந்த அலுவலகத்தில் இவன் துன்பத்தால் வேலை விட்டு போனவர்கள் 2 பேர்.. பெண்கள் வேலைக்கு வர கூடாதா... வந்தால் இந்த ஓநாய்கள் கடித்து பார்க்குமா என்ன!! தன்னிடம் மயங்காதவர்களை வேலை பளுவில் துடிக்க வைக்கும் வக்கிரம் அட டா.. கொடுமை...

இதை என் இயக்குநர் பார்வைக்கு கொண்டு சென்றார் ஒரு பெண்.. வெறும் விசாரணை, கண் துடைப்புகள்... அவர்களுக்கு அமெரிக்க டாலர், ஈரோப்பிய யூரோ இவை மட்டுமே முக்கியம். தன் பிள்ளைகள் இவ்வாறு பாதிக்க பட்டால் இப்படி இருப்பார்களா என்ன? பணத்திற்காக கற்பை விற்கும் கூட்டம் தானே அது!!!

இன்னும் தொடர்கிறது அக் கொடியவன் ஆட்டம்....

இவர்களுக்கு மத்தியில் நான்..? என்ன செய்வது... கொலை வெறி வருகிறது.... இவர்கள் மட்டும் தானா? இன்னும் எத்தனை ஆயிரம் பேர்... தண்டிக்கும் உரிமை எனக்கு உண்டா என்ன.... அப்படி களை எடுக்க ஆரம்பித்தா நான் எங்கு நிறுத்துவது... இந்த அரசாங்கமும், சட்டமும் ஒழுக்கமாக இருந்தால் கூட பரவாயில்லை.. பணம் இருப்பவர்களுக்கு பாதுகாப்பு அளிப்பதே இவை தான்...

மானம், கற்பு இவைகளை விட பணம் பெரிதென நினைக்கும் அதிகாரிகள் என்னை குற்றவாளியாக நிற்க வைப்பார்கள்...முதலாளிக்கு சட்டம் கழிவு நீர் சாக்கடை போல, ஊத்தி கழுவி விடுவார்கள்.... இந்த சமூகமும் ,என் வீடு எரியும் போது நான் பார்த்துக்கொள்வேன் என்கிற மன நிலையில் இருக்கிறது... எப்பொழுது மாறும் இந்த எண்ணம்...

என் தோழியிடம் சொன்னேன், அவள் சொன்னாள் கண்களை மூடி கொள்... மேலும் அது அவன் தவறல்ல அந்த பெண்ணின் தவறு... இடம் கொடுக்கிறாள் அவன் போகிறான்... புத்தி எங்கே போனது... அவள் குடும்பம் பாவம் இல்லையா என்றேன்... இதை நானோ, நீயோ யோசிக்க தேவை இல்லை... அவள் தான் யோசிக்க வேண்டும்..... " உன் சகோதரி தவறு செய்தாள் திருத்த மாட்டாயா? என்றேன்.... எனக்கு வரும் போது பார்க்கலாம்.... வேறு ஏதாவது பேசு என முடித்து கொண்டாள்....

என் தோழன், நீ ஒன்றை பார்க்கிறாய்!!!, நான் பார்த்து பார்த்து பழகியவன்... என்ன செய்ய தனி மனித கோபம் வெறும் இயலாமையில் தான் முடியும்... அவர்களுக்கு பிடித்திருக்கிறது... உன் பார்வைக்கு குற்றம் என்றால் நீ விலகி இரு... இங்கு எல்லோருக்கும் தெரியும் தவறுகள் தான் என்று... ஆனாலும் அது தொடரும்... உன் குடும்பம் பற்றி நீ யோசி என்றான்...

காந்தியின் குரங்கை போல நானும் வாழ வேண்டுமா? நம் தமிழ் சமுதாயம் நல்ல முறையில் இருக்க வேண்டும் என்று நான் நினைப்பது தவறு தானா? குற்றம் செய்பவனை பார்த்து கொடு தண்டிக்காமல் இருந்தால், அதற்கு நாமும் உடந்தை அல்லவா? சிறு தவறுகளை திருத்தாமல் விட்டு விட்டு, இப்போது பெரிய தவறுகலுக்கு அதிகாரமும் ,பதவியும் கொடுத்து அமர்த்தி இருப்பது யார் ... நாம் தானே......"

சமூக குற்றவாளி உருவாவதில்லை, உருவாக்க படுகிறார்கள்" ( நானுமா )

உங்கள் கருத்துக்கள் தேவை...

Oct 6, 2007

ஊளையிட்ட தெரு நாய்




























வீதியெங்கும் சிதறிய குருதியில்


தெரிய வில்லை

நீ எந்த மதம் என்பது....


ஆனாலும் சாகும் வரை

உன்னிடம் கேட்க பட்டது

அது மட்டுமே......


கை விலங்குகள்

விலக்கப்பட்ட போதும்

இன்னும் கழற்ற படாமலேயே

இருக்கிறது தீண்டாமை......


இரட்டை குவளைகளை

இன்னமும் காண்கிறேன்

வழி நெடுக்கும்......


ஆங்கிலேய அறிவு

அப்படியே பிரித்து வைக்கிறது

அரசியல் புண்ணியத்தில்......


இன்னமும் சொல்லுகிறார்கள்

நீங்கள் இன்று வெட்டி கொண்டு

மாண்டத்துக்கு

அகால வேளையில்

ஊளையிட்ட தெரு நாய்

தான் காரணம் என்று.....

என் நினைவுகளிலிருந்து


என் நினைவுகளிலிருந்து

எழுந்து செல்லும் வண்ணத்து பூச்சி

செல்லும் முன் என் மீது

உன் நினைவுகளை வண்ணங்களாய்

வாரி இறைத்து செல்கிறது


வெள்ளி காசுகளை அருவியில்

கொட்டி விட்டு தேடி கொண்டிருக்கிறேன்

அக்கரையில் அமர்ந்து கேலி செய்கிறாய்

நான் தேடி கொண்டிருப்பது

காசுகளை அல்ல

நதியில் தெரியும் உன் பிம்பத்தை....


நான் ஓவியன் தான் மறுப்பதற்கில்லை

ஆனால் இருவரையும் சேர்த்து

வரைந்தே பழகி இருக்கிறேன்

உன்னை மட்டும் தனித்து வரைய சொல்கிறாய்

என் விரல்களை கேட்டிருக்கலாம்.....


உன் நினைவுகள்

துயரத்தையோ, மகிழ்ச்சியையோ

தந்து விடலாம்

சிறிது கால இடைவெளிக்கு பின்

இந்த துயரம் ஒரு பெரும் துயரத்தையோ

இந்த மகிழ்ச்சி ஒரு பெரும் மகிழ்ச்சியையோ

நினைவுகள் கடை விரிக்கலாம்

இவற்றை தாங்காத வண்ணம்

என் இதயம் பலவீனமாய் இருப்பது

உனக்கு தெரியாமல் போயிருக்காது.....


இப்பொழுதெல்லாம்

இருண்ட அறைகளுக்குள்

கண் விழித்து உன் நினைவகளோடு

கரைகிறேன் நான்

தனிமையின் கொடுமையில்.....

இனி எலாம் நலமே....






இப்பொழுதெல்லாம்


எதுவும் புரிவதில்லை


புரிந்து கொள்ள விழைவதுமில்லை


கற்பனை சாயம் ஏற்றி


புதுப்பிக்க தேவை இல்லை


இயல்பாக இருக்கட்டும்


தேவை அற்ற புரிதல்களை விட


நம்பிக்கைகளே


அமைதியாய் மனதிற்கு...




ஒரு நதியை நதி எனவும்


ஒரு கடலை கடல் எனவும்


ஒரு மலையினை மலை எனவுமே


அறிந்து கொள்ளப்பட்டுருக்கிறேன்


இனி புதிதாய் சேர்க்க


எதுவும் இல்லை....




பழங்கதையோ


புராணமோ


அறிவியல் கட்டுரையோ


வாசிக்க மட்டுமே


குளிரோ வெப்பமோ


இனி உணர மட்டுமே


தேவை அற்ற குழப்பம் இல்லை....




கவிதையும் ஓவியமும்


புரிதல்களை தாண்டி


செல்ல முற்படுகையில்


தளைகள் இடுவேன்


வேறு பரிமாணத்திற்க்கு


என்னை அழைக்கும்


உடன் பாடில்லை மனதில்.....




குழந்தையின் புன்னகை


தென்றலின் குளுமை


மழை துளிகளின் மென்மை


பாலை வெப்பத்தின் வீச்சு


இவை வாக்கியங்களில்


அடங்கும் எனில்


புரிந்து கொள்கிறேன்


அக் கணத்தில்....


அது வரை


இனி எலாம் நலமே....

என்னவள் காதலில் ஒரு நாள்


நேரமாகி கொண்டு இருக்கிறது

இன்னும் இரண்டு நிமிடங்களே மீதம்,

நட்பு வீடு என்று பெயரிட்டு

அழைக்கிறேன் துணைக்கு தம்பியை


அவசரமாய் காலணி பூட்டி

வேகமாய் தெருவிறங்கி நடக்கும் போது

அக்கம் பக்கம் சூழலும் பார்வை

யாரும் பார்க்காமல் இருக்க வேண்டுமென


கோபம் வருகிறது

மெதுவாக போகலாம் என்று

அவன் சொல்கையில்

இருந்தும் கால்கள் விரைவாய்


மஞ்சள் பெட்டி

மங்கலாய் வெளிச்சம்

தொலைவாகி கொண்டே இருக்கிறது

மன வேகத்தின் முன்னால்


அப்பாடா!

பெரு மூச்சு ஒன்று அறியாமலேயே..

கண்ணாடி கூண்டுக்குள் நுழைந்து

எண்கள் தொட்டு விரல் எடுக்கையில்

தம்பி கவனிப்பான் என


வேண்டுமென்றே வெறுப்பூட்டும்

பெண் குரல்

" சற்று நேரம் கழித்து தொடர்பு கொள்ளவும்"

பட்டென வைத்து

மீண்டும் தொடர்புக்கையில்

அதே குரல் அதே லயம்


இரண்டு நாட்கள் அடைப்பட்டது போல்

வியர்வை வெளிக் கொட்ட

இரு நிமிட தவிப்பு நரகமாய்

இதோஒலிக்கும் மறுமுனை

இசையென இதயத்தில்


அரத பழையாதாய்

அதே "ஹலோ"

மூலையில் பரவி

குரல் பதிந்து

நீ தான் என தெரிந்து

மென்மையாய் சொன்னேன்

அதே "ஹலோ"


அரசியல்

சினிமா

விளையாட்டு

படிப்பு

சீரியல்

என முடிக்க முடியாமல்

திண்டாடும் பொழுது

கண்கள் மேல் நோக்கி

கட்டணம் பார்த்து பதறும்


வைக்கட்டுமா?

என மூன்று முறை கேட்ட பின்

பேசிய வார்த்தைகள்

மூன்று நூறுக்கும் அதிகமாய்

கையோடு

இதயத்தையும் சேர்த்து இறக்கி

வைத்து விட்டு

கதவு திறக்கையில்

முகம் வருடும் மென் காற்று

மூச்சின் வெப்பத்தையும்

நனைந்த ஆடைகளையும்

உணர்த்தும்


அலட்சியமாய்

சில்லறைகளோடு

சில நோட்டு களையும்

தந்து விட்டு பார்க்கையில்

தெருவில் போகும் பேருந்தை

வேடிக்கை பார்ப்பவனை கண்டு

நிம்மதியாய் முறுவல்

உதடுகளில்


திரும்புகையில்

வேகமாய் போகிறான் அவன்

தலை குனிந்தவாறே

பின் செல்கிறேன்

"அம்மா விடம் சொல்லி விட கூடாது"

என்ற பெரிய வேண்டுதலில்.....


காதல் வாழ்க்கை -1


"திருமணங்கள் சொர்க்கத்தில்

நிச்சயிக்க படுகின்றன"

அவ்வளவு உயரத்தில்

ஒரு அசம்பாவிதம்

நடந்தால்

எப்படி தடுக்க?


காதலில் நீ எப்போதுமே

அமைதி தான்!

நான் பேசுவதை கவனமாய் கேட்பாய்

உன் சிறு சிறு அசைவுகளை

ரசித்து கொண்டே

நானும் தொடருவேன்!!!


இன்று நான் பேசுவது

அலுவலகத்தில் மட்டுமே

மீறி பேசினால்

பதிலுக்கு பூரி கட்டைகளும்

பறக்கும் தட்டுகளுமே பேசுகிறது

என்ன செய்ய?


என் மனைவிக்கு

அன்பு அதிகம் என் மீது

நான் அடி பட்டாலும்,

வலிக்கிறதா என்று

கேட்கும் போது மட்டும்......


அலுவலகம் விட்டு வந்ததும்

காபி கொடுப்பாய்

அப்பொழுதே தெரிந்து விடும்

நான் மார்க்கெட்

செல்லவேண்டும் என்பது....


இரவு 11 மணிக்கு

தோள் சாய்கையில்

கேட்பாய்

அலாரம் வச்சீங்களா?

தேவை இன்றி

நினைவில் வரும்

அதிகாலை பால் பூத்....


பொண்ணு படிக்கவே

இல்லை பா...

எனக்கு புரியும்

"கொஞ்சம் சொல்லி கொடு"

என்கிறாய்.


பேப்பர் பையனுக்கு

என்ன சொல்ல?

இன்னிக்கு ரசம் தான்...

கப் ல தயிர் இருக்கு...

பக்கத்து வீட்டில

கார் வாங்கி இருக்காங்க....


இப்படி எத்தனையோ

இருந்தாலும்

பிடிக்கிறது அவள் வைக்கும்

வத்த குழம்பு...


இப்பொழுதெல்லாம்

மாலை வந்தாலே

நீ சொல்லும் அனைத்தும்...?

சரியாகிவிடுகிறது...

இரவு பட்டினி கிடக்க

என்னால் முடியாது

( சோறு இல்லாம பா)


விடுமுறை வந்தால்

கொண்டாட்டம் தான் உனக்கு

வித விதமாய் சமைத்து

கொடுக்க சொல்லுவாய்

வாசிங்மிசின், கிரைன்டர்

என எதுவும் கேட்டதில்லை நீ

பிறகு நான் எதற்கு....


சேலைகள் ,சுடிதார்கள்

மடிப்பு கலையாமல்

இருக்க வேண்டும் உனக்கு

இஸ்திரி பெட்டி

சூடு பட்டு

கை உதறும் போதும்...


இருந்தாலும் விடுமுறை வேண்டும்

எனக்கு.....

எனக்காக அனைத்தையும்

விட்டு வந்தவளை

நெஞ்சுக்குள் தூங்க வைக்கும்

மதிய வேளை

ஒன்று கிடைக்க.....


நீ ஊருக்கு போன

ஒரு நாளில் தொலை பேசியே

துணை நமக்கு

சீண்டல்கள்

சிரிப்புகள்

அழுகை

கோபம்

பிடிவாதம்

என அனைத்துமாய் கலந்து

கடைசியில் சொல்லுவாய்

"உன்ன பாக்காம இருக்க முடியல" டா

அது போதும் எனக்கு....


ஒரு நாள் மாலை

உன் கல்லூரி தோழி வந்திருந்தாள்

இருவரும் அமர்ந்துபேசி

கொண்டு இருந்தீர்கள்

நெடு நேரம்....

சிறிது நேரம் கழித்து

தேநீர் கோப்பைகளுடன்

வந்தேன்ஆச்சரியமாய் உன் தோழி !!

அவள் கண்களில் தெரிந்தது

பொறாமை மட்டுமே

அவள் போனதும்

என்னிடம் "ஏண்டா என் மானத்தை வாங்கர"

என்றாய்

ஆனாலும் உன் கண்களில்

நன்றி தெரிந்தது..

எத்தனை முறை

நீ கொண்டு வந்திருப்பாய்

எனக்கும் ஒரு சந்தர்ப்பம் கொடு...

Oct 5, 2007

சில வினாடிகள்... தொடரும்


சோர்வு வரும் போதெல்லாம்

எடுத்து பார்த்து

கொள்கிறேன்

உன் முதல் பார்வையை.....


காதல் பூக்களை

அறுவடை செய்ய

மனமே இல்லை

நட்டு போனது

நீ என்பதால்...


கடிகார முட்கள் கூட

காத்திருக்கிறதடி

உன்வரவுக்காய்

நீ வந்தால் தான்

அதற்கும் கூட

நல்ல நேரமாம்.....


அழகு என்ற சொல்லுக்கு

பொருள் தேடி

அலைகிறேன்

உன்னை பார்த்த பிறகும்.........


கண்ணாடி துண்டுகளுக்கு இடையே

நடந்து கொண்டு இருக்கிறேன்

அதில் படிந்த

என் உதிரம்

துடைத்து விட்டு

முகம் பார்க்கிறாய் நீ.....


என்னை கடக்கும்போது

சூறாவளியாய்

கடக்கும் காற்று

உன்னை கடக்கும் போது மட்டும்

தென்றலாய்

ஒரு வேளை காற்றும்

கூட உன் காதலனோ....


முகம் காட்டும்

கண்ணாடி கூட

வெட்கப்பட்டு சிவக்கிறதடி

நீ முகம் பார்க்கும் போது.....


ஒரு காற்றாடி போல

பறந்து கொண்டிருக்கிறேன்

கீழே இருந்து

காதல் நூலால்

நீ தான் இயக்குகிறாய்.....


எதிரொலியாய்

ஒலித்து கொண்டே இருக்கிறது

உன் மறுப்பு குரல்

என் செவிப்பறை

கிழிந்தது கூட தெரியாமல்....

Oct 4, 2007

பெண்ணல்ல நீ எனக்கு....


நாள் தவறி போனதே என

நீ வெட்கத்தோடு உரைத்ததும்

மார்பில் முகம் புதைத்ததும்

மேடிட்ட வயிறு கண்டு

முத்தமிட்டு சிரித்ததும்

புளிப்பு மாங்காய் வேண்டுமென

காதோரம் சொன்னதும்

கண்ணுக்குள் ஆடுதடி.....


மூன்றாம் மாதம் முதல்

நீர் இறைக்க தடை போட்டேன்

ஐந்தாம் மாதம் முதல்

கனம் தூக்க தடை போட்டேன்

ஏழாம் மாதம் தனில்

சீமந்தம் செய்தார்கள்

மஞ்சள் பூசி, வளவி இட்டு

திருஷ்டி சுற்றி போட்டாலும்

போய்விடுமா உன் அழகு தாய்மையில்....


ஆண்டவன் இருந்திருந்தால்

அப்பொழுதே கேட்டிருப்பேன்

ஏன் படைத்தாய்

ஆண் எனவே மண்ணில் எனனை?

தினமும் மாலை கை கோர்த்து

நடை பயின்று

இரவெல்லாம்

கண் விழித்து மடி மீது

உறங்க வைத்தேன் தாயென்றே உனை...


நாட்கள் நெருங்க நெருங்க

கலவரம் கண் மறைத்து

நம்பிக்கை கை பற்றி

மார்பனைப்பேன் என் உயிரே

இறுதியாய் பல் கடித்து

வலியென நீ புலம்புகையில்

ஊர்தி கொண்டு அவசரமாய் மருத்துவமனை

வரும் முன்னே

வியர்த்தொழுகும் முகமெல்லாம்......


சில நொடி பொழுதுகளில்

வந்தனரே உன் தாயும் என் தாயும்

உறவினரும் நண்பருமாய்

தனியறைக்குள் நீ செல்ல

கதறும் ஒலி கேட்டு தாங்கவும்

முடியாமல் தனியிடம்

அமர்ந்திருந்தேன் கண்ணீரும் இல்லாமல்

நினைவெல்லாம் உன் பிம்பம்.....


அவசரமாய் தாதி பெண் எனை அழைக்க

ஓடி வந்தேன்

உள் வர சொன்னாயாம்

சொல்லி விட்டு போய் விட்டால் மின்னல் கீற்று போல

பல் கடித்து வேதனையில்

பக்கத்தில் வாவெனவே முககுறி தனில் எனை

அழைத்து கைபற்றி கொண்டாய்....


இறுக்கும் கைகளில் உன் வேதனை நான் உணர்ந்தேன்

இருந்தும் என்ன செய்ய இயலவில்லை

உன் வலி நான் பெறவே,

ஆர்ப்பரித்து அடங்கியதும்

அரை நினைவில் நீ சிரித்தாய்

பிஞ்சு முகம் காணும் முன்னே

நெற்றி ஒதுக்கி முத்தமிட்டேன்

நீ எனக்கு உயிரடி....

பெண் குழந்தை நீ பெற்றாய்

பேரின்பம் நான் பெற்றென்

முகமெல்லாம் உன் வடிவம்

நிறம் மட்டும் பொன் எழிலாய்

நீ கொஞ்சம் கண்ணயர்ந்த வேளையில்

வெளியே வந்தேன்

அதுவரை கட்டி வைத்த

கண்ணீர் எலாம் கரை தாண்டும்

காரணம் நான் அறியேன்

புரியவில்லை அக்கணம்.....


வாரி எடுக்க வந்தார்கள்

உன் தாயும் என் தாயும்

யாரிடம் கொடுக்க?

யாரிடமும் வேண்டாம்

முதல் சொந்தம் அவளுக்கே

சொல்லி விட்டேன் என் முடிவை

30 வினாடிகள்

கண் விழித்து தேடினாய்

மகளை அல்ல என்னை

கை பற்றி மூத்த மிட்டாய்

பின் ஏந்தினாய் பெண் பூவை....


பெருமையாய் பார்த்தாள் என் தாய்

பொறாமையாய் பார்த்தாள் உன் தாய்

இருவரும் பெற்றதில்லை

இந்த பாக்கியம் என

உன் முகம் பார்த்திடவே

புன்னகைக்கும் முகமொடு

என் தாயிடம் கொடுத்தாய் நம் மகளை

அவர் கொடுத்தார் உன் தாயிடம்.....


அவனைவரும் இனிப்பு கேட்டு

வாங்கி கொடுத்த பின்

கலைந்தது கூட்டம்

தனியே நீயும் நானும்

எனக்கு எங்கே இனிப்பென்று

நான் கேட்கஇறுக கரம் பற்றி

இதழோடு இதழ் பொருத்தினாய்

இதை விட பேரின்பம்

பெறுவேனோ சொர்க்கமதில்.....


பெண்ணல்ல நீ எனக்கு

குல தெய்வம் அல்லவோ....