பிறப்பு கேட்காமலே கிடைத்த சாபம்...

மரணம் கேட்டும் கிடைக்காத வரம்...

Feb 8, 2012

ஒரு கோப்பை திரவம்...


கண்ணாடிக் குடுவையில் அடைபட்ட
பொன்னிற திரவத்தை
வெறுமையில் பார்க்கிறேன்
பார்த்தல் ரசிப்பாகிறது
தக தகக்கிறது தன் மீது படும்
மெல்லிய ஒளியை பரிதிபலித்து
இன்னும் சில நொடிகள் ரசிக்கிறேன்
இந்த ரசனை தான் இழுக்கிறது போலும்
விரல்களால் திருகி உடைபடுகிறது
இணைப்புத் தடுப்புகள்...

முதலில் பரவுகிறது நெடி
வேறு வழிகளில்லை
நாசியின் அருகே வைத்து
முழுமையாய் சுவாசிக்கிறேன்
மூச்சுக் காற்றோடு நிறைகிறது போதை
கவிழ்த்து கிடக்கும் சிறு கோப்பைகள்
நிமிர்த்தப் படுகின்றது ஒரு சிணுங்கலோடு...

பாதிக்கும் குறைவாகவே நிரப்பப்படுகிறது
நிறைகிறது குளிர் நீரும் அதன் மீது
மிதக்கும் பனித் துண்டுக்களுமாய்
இப்படியும் ரசிக்க வைக்கிறது
மிக மெதுவாய் மென்மையாய்
உதடுகளில் இணைக்க
நெடி பரவுகிறது நாவில்
தொண்டை நனைக்கும் பொழுது
துடிக்கிறது வெளித் தள்ள...

கண்கள் மூடி ஒரே மூச்சில்
குடித்து நிமிர மீண்டும் நிரம்புகிறது கோப்பை
அருகில் நிறைகிறது மிளகாய்த்தூள் முந்திரி
இரண்டாம் முறை
நெடியுமில்லை துடிப்புமில்லை
மூன்றாம் முறை
நெடி மணமாகிறது
துடிப்பு ஏக்கமாகிறது
மெதுவாய் தொடங்குகிறது தன் வேலையை
எனை நிறைக்கும் அத்திரவம்...

சுற்றம் நினைவிருக்கிறது
உறவுகள் நினைவிருக்கிறது
எல்லாம் கொஞ்சம் தள்ளியே இருக்கிறது
காயங்கள் இருக்கிறது
ஏமாற்றங்கள் இருக்கிறது
கவலை கொஞ்சம் தள்ளி இருக்கிறது
தள்ளாடும் உடல்
தாங்கும் மனது
இரவு கவிழ உறங்கி விடுகிறேன்...

ஒரு வேளை நாளையும்
காயங்களையும்
கவலைகளையும்
மறக்க மீண்டும் நான் வரலாம்
ஆனாலும்
பகலெல்லாம் சுமக்கத்தான் வேண்டியிருக்கிறது
நீ உடனிருந்த நினைவுகளை...