பிறப்பு கேட்காமலே கிடைத்த சாபம்...

மரணம் கேட்டும் கிடைக்காத வரம்...

May 15, 2012

அம்மாவின் படம்

செல்லரித்துப் போய்
பாசி படர்ந்த
சட்டத்துள்
அம்மாவின் கல்யாணப்படம்..

சிரித்த நிலையில்
கருப்பு வெள்ளையிலும்
அழகாக இருக்கிறது
ஆபரணங்களால் ஜொலிக்கும்
அம்மாவின் முகம்...

"அம்மா மாதிரி
சீதனம் போட்டு வந்தவள்
ஊருக்குள் ஒருத்தியுமில்ல"
கணக்கர் வீட்டுக் கிழவி
அம்மாவின் கதை
சொல்கிற போதெல்லாம்
பரணில் தூக்கியெறிந்த படம்
எடுத்துப் பார்க்கத் தூண்டும்...

விடைத்த நாசிக்கு
அழகு கூட்டியிருந்த
ஒற்றை மூக் குத்தியும்
சொந்தமற்றுப் போன பின்பும்
எப்படி
நிலைத்தே இருந்தது
அந்தச் சிரிப்பு மட்டும்...

- மீரா கதிரவன்.

முரண்

கண்ணாடி சீசாவின் கையகல நீருக்குள்
நீந்த விடப்பட்ட மீன்கள்
கடலையே உருவகப்படுத்திக்கொண்டு
அலைந்து கொண்டிருக்கின்றன

உயிர்க்காட்சி சாலையில் அலைந்துதிரிந்து
கொண்டிருந்த ஒட்டகங்கள் வீசிய காற்றில்
மண்துகள்களை எதிர்கொள்ள தம் கண்களின்
தோல்திரைகளை சிறிது மூடித்திறந்தன

திறந்து வைத்திருந்த ஜன்னலின் வழி
சட்டென என் உள்அறைக்குள் நுழைந்துவிட்ட தேனீக்கள்
சுவரொட்டியிலிருந்த வண்ணவண்ணப்பூக்களில்
தேனெடுக்க முட்டி மோதின

கூடு கட்டப் பொருள் சேகரம் பண்ணிக்கொண்டிருந்த
அந்த நீலப்பறவைகள் அருகிலிருந்த நீல நிற
சாக்லேட் தாள்களையும் கொத்திக்கொண்டு பறந்தன.

திரும்பத்திரும்ப எண்ணிப் பத்தே கம்பிகளில் மட்டுமே
அமர்ந்துகொள்ள முடிந்தாலும் அந்தக் கூண்டுக்குள்
சலிக்காமல் குயில்கள் பாடிக்கொண்டிருக்கின்றன.

வலிந்து வாசிக்க முயலவில்லையெனினும்
வீணையின் தந்திகளின் மேல் தவறுதலாகப்பட்டுவிட்ட
என் கைவிரல்களும் நாதத்தை எழுப்பத்தான் செய்கின்றன.

ஓடிக்கொண்டிருக்கும் தொலைக்காட்சித்திரையில்
துப்பாக்கிசூடு, அதீதவன்முறை, குருதி வடிதல் போன்ற
இன்னபிற பரபரப்பான காட்சிகளினூடே
மெல்லிய மலரின் விரிதல்களையும்
சேர்ந்தே ரசிக்கத்தான் செய்கிறது மனது.

- சின்னப்பயல்

சுவடுகள்...

விட்டுச் சென்ற
விருந்தாளியின் புன்னகை
பரிமாறிக் கொண்டிருக்கிறது
அவர்களைப் பற்றிய செய்திகளை...

தூக்குக் கயிற்றின் மீது
ஊர்ந்து நகர்கிறது ஒரு எறும்பு
அதில் பலியாகப் போகிறவனின்
பரிதவிப்பு உணராமல்....

எதிரே குதித்து விளையாடிய
அணில் சொன்னது
உன் கவிதையில்
ஒரு மரத்தை நட்டு வை
அதில் நான் வந்து
விளையாடும் வேளை
நீ உணரலாம்
என் அன்யோன்யம்...

நான் அனுப்பி வைத்த
பொய்கள் எல்லாம்
திரும்பிக் கொண்டிருக்கின்றன
என்னிடமே
இன்னும் சில பொய்களை
அழைத்துக் கொண்டு....

கண்களில் ஆரம்பிக்கும் ஏணி
வானம் வரை நீள்கிறது
இனி என் வீடு வந்து போகும்
நிலவும்
நட்சத்திரங்களும்....

-ராஜா சந்திர சேகர்...

பாய்களின் சத்தம்...

கொத்தித் தின்னும்
நம்பிக்கையின் சிதைவால்
நரகமாகும் பொழுதுகளில்
நகர்கிறது வாழ்க்கை

கையகல மண மேடைக்குள்
முடங்க வேண்டும்
பெண் பிரபஞ்சம்
என்பதான
திராவக வீச்சில்  கருகும்
தாம்பத்யத் தோழமையோடு 
விடியல்கள்...

பிரம்மாஸ்த்திரம்
குருஷேத்திர யுத்தம் என
இணைகோடு
இல்லம்...

தீக் குளிப்புக்கு அப்புறம் வரும்
சகஜ சிரிப்பில்
நெகிழ மறுக்கிறது
அஞ்சரை அடி உயரச்
சதையும் ரத்தமும்
நரம்பும் மனசும்
சுருங்கிவிடுகிறது
அவளின் சகலமும்....

ஆனாலும் கேட்கிறது
அக்கம்பக்கத்தில்
பாய்கள்
விரிக்கப்படும் சப்தம்

இங்கே பலபொழுதும்
விரிகிறது படுக்கை
மனைவியின் மன்னிப்பில்....


- ஆண்டாள் பிரியதர்ஷினி

ஒலிக்காத ஓசைகள்...

அதிகபட்சத் தனிமையில்
ஒலித்துக் கொண்டிருந்த மணியின் நாவினைக்
கட்டிப்போட்டு விட்டு
உனக்கான
இசையை ரசிக்கத்துடிக்கிறாய்
உன் வசதிக்கேற்ப கர்னாடிக் கஜல் என மாற்றி மாற்றி
இசையை ரசிக்க முடிகிறது உன்னால்
பாவம் மணியின் நாவு
ஒரு வார்த்தையேனும் பேசி விடத்துடிக்கிறது
அதன் குரலை நீ கேட்டு ரசிக்க
வேண்டுமாய்
தனக்கான லயத்தில் ஒலித்து விடவும்
முனைகிறது
சன்னல்களையும்
கதவுகளையும் அடைத்தாகி விட்டது
திரைச்சீலைகளையும் இழுத்து விட்டாயிற்று
துளி வெளிச்சமும் வராதபடிக்கு
இருள் போர்த்தப்பட்ட பிறகு
தேடத்துவங்குகிறாய்
சிறு ஒளிக்கீற்றையேனும்
இப்போது கொஞ்சம் மனமிரங்கி
மணியின் நாவை விடுவிக்கிறாய்
வெகு நாட்களாய்க் கட்டப்பட்டிருந்ததில்
பிடி தளர
நாவு கழன்று தரையில் கிடக்கிறது..