பிறப்பு கேட்காமலே கிடைத்த சாபம்...

மரணம் கேட்டும் கிடைக்காத வரம்...

Sep 4, 2012

முக நூல் 03.09.2012

சற்று முன்
என் சொற்களுக்குள்
உன் மௌனத்தைப் புதைத்தேன்
இனி அது
கவிதையாகிவிடும்...


..........................................................................................................

சற்று முன்
ஒரு கவிதையை வரைகிறாய்
அதில் என்னையும் ஒரு சொல்லில்
இருத்துகிறாய்
இனி அக் கவிதையில்
உன்னுடன் நானும் இருக்கிறேன்
என்பதை நம்புகிறேன்
நீயே சொல்
வார்த்தைகளில் மட்டுமில்லை
என்பதை...


............................................................................................................

எனக்கான கனவுகளை
நீ காணத் துடிப்பதன்
நியாயங்கள் புரியவில்லை
எனது வலியும்
எனது புன்னகையும்
அதன் கனவுகளில்
என்னை தொலைத்திருக்கும் போது
சாத்தியமாகலாம்
உன் கனவுகளும்...


.............................................................................................................

கனவுகளில்
வழி தவறும் குழந்தை நான்
கை பிடித்து அழைத்து வருகிறாய்
ஒவ்வொரு முறையும்
இவ்வுலகிற்கு
உன் யதார்த்தங்கள் புரியும் தான்
என் கனவுகளும் தெரியும் தானே
ஊர்க் குருவியோ
பருந்தோ
அதன் வானம் வெளியில் இல்லை
சிறகுகளில் மட்டுமே...


................................................................................................................


யாருக்கும் தெரியா கதையை
சொல்லத் தொடங்கினேன்
தயக்கமே இல்லை
அது சரி
உன்னிடம் சொல்லாமல்
யாரிடம் சொல்வது...


...................................................................................................................

எங்கிருந்து வந்தாய் நீ
என் பால்யத்தோடு கைகோர்க்க
கனவுகளோடு விளையாட
கண்ணீருக்கு ஆறுதல் சொல்ல
யாரோவாக இருந்த நீ
எப்படி நுழைகிறாய்
என் சொற்களுக்குள்
என் கனவுகளுக்குள்
என் வாழ்க்கைக்குள்... 


     

பிரிந்து போ...


எதுவுமில்லை
எனும்
எதோ ஒன்று இருக்கிறது
நம்மிருவருக்கும்...


எனக்கு வேறெதுவும்
தெரியாது
உன் மெளனத்தை
மெளனமாக
எதிர்கொள்வதைத் தவிர...


இதுவரை...
இனிமேல்...
வேறுபடலாம்
உன் மெளனத்தின்
அருஞ்சொற் பொருள்...


உயிரைச் சிதைக்கிறது... 
ஒரு பொருளற்ற மௌனமும்
புரிதலற்ற சொல்லும்... 

உன்னிடம்
நான் கேட்பதெல்லாம்
சண்டையிட்டுப் பிரிந்து போ
என்பது தான்...


 

  

முதல் வெள்ளி

நடை பெற்றுக் கொண்டிருக்கும் பாரா- ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் சார்பாக களமிறங்கி உயரம் தாண்டுதலில்  முதல் வெள்ளிப் பதக்கத்தை பெற்றுத் தந்திருக்கிறார் கர்நாடகாவைச் சேர்ந்த நாகராஜே கவுடா ( சாதிப் பெயர் இருக்குன்னு யாரும் வம்புக்கு வராதீங்கப்பா).

மற்ற எல்லா நாட்டவரும் விளையாட்டுக்குப் பயன்படும் காலணிகள் அணிந்து விளையாட, வெறும் கால்களால் ஓடி வந்து தாண்டுகிறார் ஒருவர்... இந்திய அரசாங்கத்தை நினைத்து பெருமைப் படாமல் இருக்க  முடியவில்லை... நம்மளுக்கு சானியா கூட யாரு டபுள்ஸ் விளையாடுவது என்பது தான் முக்கியமே தவிர, இவர்களுக்கான காலணிகள் இல்லை...

இரண்டு விஷயங்கள் தான்...

தகுதி உள்ளவனை இந்த அரசாங்கம் எப்பொழுதுமே உற்சாகப் படுத்தியதில்லை...

தகுதி உள்ளவன் எல்லா தடைகளையும் தாண்டி சாதிப்பான்....

துயர் மிகு வரிகளை இன்றிரவு நான் எழுதலாம் ...

துயர் மிகு வரிகளை இன்றிரவு நான் எழுதலாம்
'இரவு உடைந்து சிதற, நீல விண்மீன்கள் தொலைவில்
நடுங்குகின்றன' என்பது போன்ற
துயர் மிகு வரிகளை இன்றிரவு நான் எழுதலாம்

இரவுக் காற்று வானில் சுழன்று பாடுகிறது

துயர் மிகு வரிகளை இன்றிரவு நான் எழுதலாம்
நான் அவளை நேசித்தேன். சில சமயம்
அவளும் என்னை நேசித்தாள்


இன்று போன்ற இரவுகளில் அவளை நான்
அணைத்திருந்தேன்
எல்லையற்ற வானத்தின் கீழ் மீண்டும் மீண்டும்
முத்தமிட்டேன்

அவள் என்னை நேசித்தாள். சில சமயம் நானும்
அவளை நேசித்தேன்
கரிய பெரிய அவள் விழிகளை
எப்படி நேசிக்காமல் இருக்க இயலும்

அவள் இல்லை என்பதை நினைக்கும் போது, அவள்
இழப்பை நான் உணரும் போது
துயர் மிகு வரிகளை இன்றிரவு நான் எழுதலாம்

பேரிரவு அவள் இல்லாமையால் இன்னும்
பெருகுவது கேட்கையில்
புல்வெளி மீது பனித்துளி விழுவது போல் கவிதைகள்
உள்ளத்தின் மீது படிகின்றன

காதலினால் அவளை அடைய
முடியா விட்டால் என்ன
இரவு உடைந்து சிதறி விட்டது அவள்
என்னுடன் இல்லை

அவ்வளவு தான். தொலைவில் யாரோ
பாடிக் கொண்டிருக்கிறார்கள். தொலைவில்.
அவள் இழப்பை ஏற்க என் ஆன்மா மறுக்கிறது

அவளை அடைந்து விட வேண்டுமென்பது போல
என் பார்வை அவளைத் தேடுகிறது
அன்றிருந்த நாம் முன்பு போல் இல்லை

முன்பு போலவே, அதே இரவு அதே மரங்களை
வெண்மையாக்கிக் கொண்டிருக்கிறது
அன்றிருந்த நாம் முன்பு போல் இல்லை

இப்போது அவளை நான் நேசிக்க வில்லை
உண்மை தான். ஆனால் எவ்வளவு நேசித்தேன்
அவள் செவிகளை அடைய காற்றையும் தேடியது
என் குரல்

இன்னொருவனுக்கு. இனி அவள் இன்னொருவனுக்கு
முன்னர் நான் இட்ட முத்தங்களைப் போல
அவள் குரலும் ஒளிரும் அவள் உடலும்
விரிந்த விழிகளும்

அவளை இப்போது நான் நேசிக்கவில்லை
உண்மை தான்
ஒரு வேளை நேசிக்கிறேனோ?
காதல் மிகச் சிறியது . மறத்தல் மிக நெடியது.

இன்று போன்ற இரவுகளில் அவளை நான்
அணைத்திருந்தால்
அவள் இழப்பை ஏற்க என் ஆன்மா மறுக்கிறது

இதுவே அவள் எனக்குத் தரும் கடைசித் துன்பமாக
இவையே நான் அவளுக்கு எழுதும்
கடைசி வரிகளாக இருந்தபோதும்...

- பாப்லோ நெருதா....

சிறிது காலத்துக்கு முன்பே...

சிறிது காலத்துக்கு முன்பே உன்னை சந்தித்திருக்கலாம்
இன்னும் நிறைய பேசி இருக்கலாம் 


இன்னும் நிறைய சண்டை போட்டிருக்கலாம் 


என்னக்கான வேறொரு பாதையை
நீ அடையாளம் காட்டியிருக்கலாம் 


இப்போதைய நான் இல்லாமல்
ஒரு பருந்தாக வெளியெங்கும் அலைந்திருக்கலாம் தான் 


சிறிது காலத்துக்கு முன்பே உன்னை சந்தித்திருக்கலாம்...

அப்பொழுது உன்னை சந்தித்திருந்தாலும்
இதையே தான் சொல்லி இருப்பேன்
சிறிது காலத்துக்கு முன்பே உன்னை சந்தித்திருக்கலாம்...

அலறல்...

சற்று முன் என்னைக் கடந்த தொடர்வண்டி
என்னையும் சுமந்து கொண்டிருக்கிறது
அதன் குளிர் சாதனம் பொருத்தப் படாத
s3 பெட்டியின் ஏதாவது ஒரு காலி இருக்கையில்
நான் என்னை அமர்த்தி இருக்கலாம்
ஆம் அப்படித் தான் இருக்க வேண்டும்
உன்னோடு கதைகள் பேசியபடி
பயணமொன்றை துவங்குவதில்
நான் ஆனந்தமடைகிறேன்
சினிமா பற்றி பேசு
கவிதைகள் பற்றி பேசு
கதைகள் இலக்கியம்
விண்வெளி
இன்னும் நான் அறிந்திராத எல்லாவற்றைப் பற்றியும்
நானும் பேசுவேன்
எல்லாம் தெரிந்தவன் போல்
ஜன்னலில் ஓடும் மரங்களையும்
சில பாலங்களின் கீழ் நகரும் நதியினையும்
ரசிப்பதாக நடிக்கிறேன்
அடிக்கடி கதவோரம் நின்றபடி
உனக்குத் தெரியாமல் ஒரு சிகரெட்டைப் புகைத்தபடியும்
இந்தப் பயணம் எனக்கு முக்கியமானது
உன்னுடனான பயணம் என்பதை விட வேறெதுவும் இல்லாததால்
மற்றபடி உனக்கு இது வழக்கமான ஒன்றாக இருக்கலாம்
.....
...
..

அடுத்ததாய் வந்து நிற்கும் ரயிலின் அலறல் கேட்கிறது
நீ இல்லை என்பதும்
நீ போய் விட்டாய் என்பதும்.....
என் கனவுகளிலிருந்து விழித்துக் கொள்ள
அவகாசம் தருவதில்லை நீ எப்போதும்...