பிறப்பு கேட்காமலே கிடைத்த சாபம்...

மரணம் கேட்டும் கிடைக்காத வரம்...

Jan 2, 2012

ஒரு சாலையும் வளைவும்...


காலையில் கதிரவனின்
செம்மைக் கதிர்களால் சூடேறிச் சிலிர்க்கிறது
நகரத்துச் சாலை
இரு கோவில்களும்
எண்ணற்ற கடைகளுமாய்
நிரம்பிய இதில் தான்
என் பார்வை முழுதும்
பயணித்துக் கொண்டே...

நல்ல வளைவு இவ்விடம்
எதிரே வரும் வாகனங்கள்
தெரிய வாய்ப்புகளே அற்ற வளைவு
சப்தங்கள் ஒலிக்கப் படவேண்டிய ஒன்று
எந்த வாகனமும் முந்திச் செல்லக்
கூடாத வளைவு
இங்கே சாலையைத் தவிர
சாலை விதிகளை
எல்லாமே விதிகளை மீறும்...

காலையில் காய்கறிகாரர்களின் அவசரம்
பால் வண்டிகளின் வேகம்
பள்ளி கல்லூரி பேருந்துகளின் விரைவு
தண்ணீர் வண்டிகள்
மீன் வண்டிகள்
எல்லாம் கடந்த பின்
பெரு முதலாளிகளின்
விலையுயர்ந்த கார்கள்...

அனைத்தும் கடந்தும்
ரப்பர் உருளைகள் தேய்த்தும்
தேயாமல் அப்படியே தான்
மௌனமாய் படுத்துக் கிடந்தது
கரிய உடல் பாம்பென
சில கால் நடை மனிதர்களும்
மாடுகளும் கூட மெதுவாய்க் கடந்து
அப்புறமும் இப்புறமுமாய்
போயிருந்தார்கள்...

கொதிக்கும் மதிய வெயிலில் வெப்பத்தோடும்
வெள்ளை கோடுகளால் பிரிக்கப்பட்ட போதும்
கூட்டங்களுக்கு துளைகள் போட்ட போதும்
ஓரமாய் சாக்கடை கழிவுகள்
குவியலாய் மாறி நாற்றமெழுப்பிய போதும்
அமைதியாகத் தான்
படுத்துக் கிடந்தது இச் சாலை....

இன்று மாலை தான்
எதிர் பாரா விதமாய்
லாரி ஒன்றை முந்த எண்ணி
விரட்டிய வாலிபனின் குருதியில்
சிவப்பை சிறிது பூசிக் கொண்டது
விரைந்து சென்று அவசர ஊர்தியை
அழைக்கிறேன்
சிதறிய சடலம் சேர்க்க...

வியாபார நகரமல்லவா?
சில நிமிடங்களில்
எல்லாமே சரியாகி போனது
மீண்டும் அதே வேகம்
அதே போல் வாகனங்கள்
சுமக்கத் துவங்கியது சாலை
இன்னும் அதன் ஒரத்தில்
இடுக்கில் என ஒட்டிக் கொண்டிருக்கிறது
உயிர் விட்ட என் போல
ஒருவனின் ரத்தத் துளிகளின் எச்சம்....

இதே சாலை தான்
இப்பொழுது நிலவின் ஒளியில்
பனியின் குளிரில்
குளிர்ந்து கிடக்கும்
இதே சாலை தான்
இதே வளைவு தான்...

சொற்களைச் சுமக்கும் மேகங்கள்...


இறைந்து கிடக்கும்
சொற்களிலிருந்து விதையென
எடுத்துக் கொள்ளகிறேன்
என் கவிதைக்கான முதல்
சொல்லொன்றை...

எனக்குள் விதைக்கப் பட்ட
விதையிலிருந்து துளிர்க்கிறது
சிறிய வேருடனும்
இரு மெல்லிய இதழ்களுடனுமான
ஒரு உயிர்...

வேர்கள் பதிய
உடலொன்று உருவெடுக்கிறது
மேல் நோக்கிய
வளர்ச்சியும்
கீழ் நோக்கிய தேடலுமாய்...

செடியாகிறது
மரமாகிறது
உறிஞ்சும் நீரை
மேகத்துள் விதைக்கிறது
கிளைகளின் அசைவில்
மென் காற்றை உருவாக்கி
மேகத்தை நகர்த்த...

பல விதைகள்
பல மரங்கள்
பல மேகங்கள்
இப்பொழுது ஒரு காடும்
வான் நிறைய நீர்
சுமக்கும் மேகங்களுமாய்
ஒற்றை சொல் ...

மெல்ல மெல்ல நகர்ந்து
உன் வீடு நோக்கி வருகிறது
மேகங்களென
சொற்களைச் சுமக்கும்
என் கவிதை...

சூழ் கொண்டு
பொழிகிறது மழை
உன்னைச் சுற்றி
தவறிய சொற்கள்
காற்றென மாறி
கண்ணாடி சட்டமிடப்பட்ட
சன்னலின் வழியே
ரசிக்கும் உந்தன்
முகத்திலும் தூவலாம்
என் நினைவுகளை...