பிறப்பு கேட்காமலே கிடைத்த சாபம்...

மரணம் கேட்டும் கிடைக்காத வரம்...

Aug 23, 2011

தேவதை





உன்னைப் போல ஒரு பெண்
குழந்தை வேண்டுமென
ஆசையாய் பெற்ற
மகளிடம் மாட்டிக்கொண்டு
விழித்த கதை தெரியுமா உனக்கு...
அது நீ உன் தாயை
பார்க்கச் சென்ற ஞாயிறு
தூங்கி விழித்த பின்
அருகில் வந்து
தோள்களில் ஆடி
விளையாட அழைக்கிறாள்
மரமொன்றின் கீழ்....

பிஞ்சு குரல் ஒலிக்கிறது
அப்பா இதன் பெயரென்ன?
"மரம்" என்கிறேன் நான்
பிறகு ஏன்
எங்க மிஸ்"tree " என்கிறாள்?
அது ஆங்கிலம் என்றேன்...
இது என்ன?
ஒரு பூவை காட்டி
மலரென்றேன்
ஐயோ எங்க மிஸ் flower என்கிறாள்
அதுவும் ஆங்கிலத்தில் தான்
என்றேன்...
எல்லா மொழியிலும்
ஒரே பேரு தான இருக்கணும்
ஏன் வேற வேறயா இருக்கு? என்கிறாள்
சிறிது நேரம் மௌனமாகிறேன் நான்

மீண்டும் தொடர்கிறாள்
வேறு ஒன்றிலிருந்து
என்னை இங்கே பாப்பா
என்கிறீர்கள்
என் பள்ளியில் என்னை
பெரிய பெண் என்றே
அழைக்கிறார்கள் என்றாள்
நீ மற்றவர்களை விட
உயரமாக இருப்பதால்
என்றேன்...
அப்பா உங்களுக்கு
பூதமும்
பூச்சாண்டியும் தெரியுமா?
தெரியாது என்றேன்,
எங்க மிஸ்க்கு தெரியும்
படிக்கலான புடிச்சு குடுபாங்க...


அம்மா எப்ப வருவாங்க?
சாயந்திரம் என்றேன்
அது எப்போ வரும்?
சூரியன் மறையும் போது
சூரியன் ஏன் மறையுது?
அதுக்கு ஒய்வு வேணுமில்ல
அப்போ அதுக்கு வீடு இருக்கா?
உலகம் தான் அதனோட வீடு
வீட்டுகுள்ள எப்படி போகும்?
...........
.....
....
..

ஒய்ந்து உறங்கும் வேளையில்
புன் முறுவல் முகத்தில்!!
ஒரு வேளை தேவதைகள்
தேவதைகளின் கனவுகளில்
மட்டும் தான் வருவார்களோ?
எல்லாம் சரி....
இக் குட்டி தேவதையின்
கேள்விகளுக்கு
எப்படி பதில் சொல்கிறாய்
என் பெரிய தேவதையே!!
எனக்கென்னவோ
ஒரு குட்டி தேவதை
போதாதென்றே தோன்றுகிறது
எப்பொழுது வருவாய்?

இடைவிடாத ஏக்கங்கள்


ஒரு நாளின் நள்ளிரவுப்
பொழுதின் தொடக்கத்தில்
உன் கன்னத்தில் பதித்த
முத்தத்தின் ஈரத்தை
சுமந்து திரிகிறது உன்
வீட்டு வரவேற்பறை காற்று...

மின்னலென பார்வைகள்
புன்னகைகள்
ஆதரவாய் தலை கோதிய
விரல்களென அத்தனைக்கும்
ஆசைப் படுகிறது
விலகி வந்த உயிரொன்று...

நிலவின் ஒளியில்
பார்த்த உன் முகத்தை
பகல் பொழுதில் புகைப் படங்களாக்கி
ரசித்து மகிழ்கிறது
இடைவிடாத ஏக்கங்கள்...

வறண்டு போன பாலை நிலத்தில்
சிறு சாரலென நீ பொழிந்து போன
மழையில் மலர்ந்திருக்கிறது
சில கனவுப் பூக்கள்
ஒரு வேளை நாளைய
கண்ணீர் பூக்களாகவும்
இருக்கக் கூடும்....

மழை கானா பூமியில்
சுமக்கும் குடையென
உன் நினைவுகள்
பாரம் என தூக்கி
எறிய முடியவில்லை என்னால்...

நேசிப்பதற்கு எப்பொழுதுமே
இரண்டு இதயங்களும்
பிரிந்து செல்ல ஒரு
இதயமுமே
போதுமானதாக இருக்கிறது...

என் நினைவுகளில் நீ
அங்கு விழித்திருக்கலாம்
நமக்கான கனவுகளோடு
நானும் இங்கு விழித்திருக்கிறேன்
உனக்கான கவிதைகளோடு...

ஒற்றை காகமென


அன்புத் தோழியே
நலமா...
நாம் பேசிக் கொண்டிருக்கும்
இந்த நாட்களிலேயே
உன்னுடன் பேசாமல்
சில எண்ணங்களை
ஒளித்துவைக்கிறேன் நீ
வேதனை கொள்வாய் என...
மாற்றிக் கொண்ட
மின்னஞ்சல் கடவுச் சொற்களோடு
காணாமல் போயிருக்கும்
என் மீதான
உன் நம்பிக்கைகளும்...
பணியின் நெருக்கடிகளும்
உறவுகளின் கண்டிப்புமாய்
இனி பேச்சுக்கள்
குறுஞ் செய்திகளாகும்
நாட்களை எதிர் நோக்கி என் காலம்...
என்ன செய்வது என்று
எனை கேட்கும் கேள்விகளில்
மறைந்திருக்கிறது உன் தவிப்பு...
கொடுத்து விட்ட மனதிற்கு
காதலை பெற்றதன்
விலையாக பறி போகலாம்
நம் பெயர் சொல்லாத உறவு...
தினமும் என் அலைபேசியில்
ஒலிக்கும் உன் குரல்
நினைவில் படிந்து
நீங்க மறுக்கும் கனவெனப்
போய்விடுமா என்ன?
நடு இரவில் கரைந்து
செல்லும் ஒற்றை காகமென
அலைகிறேன் வெளியெங்கும்
நம்மைச் சுமந்து கொண்டு
நீ வரும் நாள் ஒன்றை எதிர் பார்த்து...
வரா விட்டால்
ஆறுதல் சொல்லி விடாதே
எனக்கு தெரிந்தே இருக்கிறது
என்னை நேசிக்கும்
எல்லோரும் தயாராய்
வைத்திருக்கிறார்கள்
பிரிந்து செல்வதற்கான
ஒரு காரணத்தையும்....