பிறப்பு கேட்காமலே கிடைத்த சாபம்...

மரணம் கேட்டும் கிடைக்காத வரம்...

Sep 4, 2011

நீ இல்லா நொடிகளில் 5

மழைச் சாரலோடு
விடிகிறது இன்றைய
காலை
உன் நினைவுகளோடு
விழிக்க மறுத்து
கற்பனைகளில் விழுந்து கிடக்கிறேன்
நிஜங்கள் பயமுறுத்தும்
நாளொன்றை சந்திக்க
இயலாமல்....

நேசிக்கவும்
கோபம் கொள்ளவும்
அன்பாய் அணைக்கவும்
பிடிக்கவில்லை என
நிரந்தரமாய்
விலகி நிற்கவும்
என்னிடம் மட்டுமே
சாத்தியமாகிறது
ஏனெனில்
நான் உனக்கானவன்...

புத்தகங்களோ
இசையோ
விடுமுறை
நாளில் பொழியும்
மழையையோ
மறந்து விட்டு
நமக்கான ஒரு கனவில்
அடைத்துக் கொள்கிறேன்...

மனதின் ரணங்களுக்கு
மயிலிறகால் மருந்திட்டவள் நீ
ஆறிப் போன
வடுக்களோடு
என்றுமே ஆறிவிடாத
காயங்களை நீயும்
தருவாயா என்ன?

ஒரு நாளின் தவறுக்கென
என்னை வெறுத்து
நிற்கும் உனக்கு
என்னைப் போல ஒதுக்கி
விடும் உறவு சுதந்திரம்
என்னிடம் மட்டும்  தானே...

விலகிப் போன
உன்னால் இந்த
உலகையே வெறுக்கத்
துடிக்கும் எனக்கு
அழகிய உலகென
நீ இருந்ததை
மறந்து விடுவாயா என்ன?

மன்னிப்பு மனிதர்களுக்கு மட்டுமே

வெளியில் முகமூடிகளோடு
மனதில் மிருகமென
அலைகிறேன்
பெருகும் ரத்த வேட்கையோடு...
நேசித்தலுக்கும்
புரிதலுக்கும்
இன்னும் பக்குவப் படாத
மனம்  இன்னும்
வனாந்திரங்களிலும்
குகைகளிலும்...
எப்பொழுதும் அகலிகைகளே
பாதம் பட காத்திருக்க வேண்டுமா
இங்கே என் போன்ற
துரியோதனர்களும்
சீதையின் வரவை நோக்கி...
குருதியின் வேகமும்
திமிரும் அடங்கும்
வேளையொன்றில்
வேதனைகளை சொல்லி
மன்னிக்கக் கோருவேன்
முகத்தை மறைத்துக் கொண்டு...
உண்மையான நேசத்தின்
உறவொன்றை
நேசத்தின் பெயராலேயே
காயப் படுத்திய உயிர்கள்
இருப்பது பாரம் தான்
இவ்வுலகில்...
கண்ணீரின் புனிதங்களை
தொலைத்தவன்
அழுவதில் எந்த
நியாயங்களும்
மதிக்கப்படுவதில்லை...
செய்த பாவங்களுக்கான
நரகத்தை
பிரிவின்
வலிகளே தரும்
தண்டனைகளென...

உன்னிலேயே முடியும்

இந்த இரவு வேளையின்
தனிமை பொழுதுகளில்
உறக்கம் தொலைத்து அலைகிறேன்
மீண்டும் ஒருமுறை
உன் குரல் கேட்கத்
துடிக்கும் ஆவலுடன்...
நீ என்னை வெறுத்தொதுக்கிய
நொடிகளில் உணர்கிறேன்
இதுவரை அறிந்திராத
வெறுமையின் நிறங்களை...
மித மிஞ்சிய
கனவுகளில் வாழ்ந்த
வாழ்வினை பலியிடுகிறேன்
கோபங்களின் வாசலில்...
வார்த்தைகளால் நேசிக்கத்
தொடங்கிய நம்மை
வார்த்தைகளே
பிரிக்கும் அவசரங்களில்...
அதிகமான நேசம்
அதிகமான எதிர்பார்ப்புகள்
சூழ்நிலை கைதிகளாய்
பொறுமை தொலைத்த
விட்டில் பூச்சிகளாய்
வேதனையின் வெளிச்சம் நோக்கி..
உணவே பிடிக்காமல்
கடந்து விட்ட இரு நாட்களில்
மனதை மட்டும்
நிறைத்துக் கொண்டிருக்கிறேன்
நினைவுகளின் பசிக்கு...
உன் நிழலின் எச்சங்ககளை
மட்டுமாவது விட்டு செல்
உயிருடன் இருக்கும்
என் நினைவுகளுக்கு துணையென...
ஒரே ஒருமுறை
விட்டுக் கொடுத்திருக்கலாம்
பெண்ணே
ஒருநாள் காத்திருப்பின்
துயரம் போக்க...
தொடங்கியவரே
முடிப்பது தான் நியதி
உனக்காக தொடங்கியது
உன்னிலேயே முடியும்...
அனைத்து சொந்தங்களுமாய்
ஆனவள் நீ
அதனால் தானோ என்னவோ
அனைத்தையும் எடுத்து
சென்று விட்டாய் உன்னுடன்...
இன்று துணையென
இருக்கும் நம் நேசத்தின்
நினைவுகளில்
இந்த ஒரு பிறவியில்
வாழ்ந்துவிட முடியும் என்னால்...