பிறப்பு கேட்காமலே கிடைத்த சாபம்...

மரணம் கேட்டும் கிடைக்காத வரம்...

Sep 18, 2012

எவ்வளவு காலம்?



ஆமாம், எவ்வளவு காலம் தான் மனிதன் வாழ்கிறான்?
ஓராயிரம் நாளா அல்லது ஒரு நாள் மட்டும் தானா?
ஒரு வாரமா அல்லது சில நூற்றாண்டுகளா?
இறப்பதில் எவ்வளவு காலம் மனிதன் செலவிடுகிறான்?
என்றைக்குமேஎன்று சொல்வதற்கு என்ன பொருள்?
இந்தச் சிந்தனைகளில் ஆழ்ந்திருந்த நான்
இவற்றில் தெளிவு பெற முடிவு செய்தேன்.

ஞானமிகுந்த பூசாரிகளை அணுகினேன்
அவர்களின் சடங்குகள் முடியும் வரை காத்திருந்தேன்.
கடவுளையும் சாத்தானையும் சந்திக்க
அவர்கள் தத்தம் வழி செல்வதைப்
பார்த்துக் கொண்டிருந்தேன்.
என் கேள்விகளால் அவர்கள் சலிப்படந்திருந்தனர்.
அவர்கள் அதிகமாய் ஒன்றும் அறிந்திருக்கவில்லை.
அவர்கள் நிர்வாகிகள்.
நாளுக்கு நாள் அலுவல் மிகும் மருத்துவர்கள்
கையில் ஆரியோமைசின் தோய்ந்த கத்தியுடன்
நோயாளிகளைப் பார்ப்பதற்கிடையில்
என்னை வரவேற்றனர்.
அவர்கள் பேச்சிலிருந்து நான் புரிந்து கொண்டது;
நுண்கிருமிகளின் மரணம் அன்று
அவை தாம் ஆயிரக்கணக்கில் மடிகின்றனவே
உயிர் பிழைக்கும் சில கிருமிகளின்
தொந்தரவுதான் சிக்கல்.”
அவர்கள் சொன்னது என்னை அதிர்ச்சியுறச்
செய்ததால்
வெட்டியான்களை அணுகினேன்.
கொடிய சாபங்கள் சூழ்ந்த பேரரசர்கள்
காலராவின் ஒரே வீச்சில் அவிந்து போன பெண்கள்,
அலங்கரிக்கப்பட்ட பெரும் பிணங்கள்,
சிறிய எலும்பு உடல்கள்-
இவை எரிக்கப்படும் ஆற்றோரம் சென்றேன்.
கரை மணல்வெளி முழுதும்
பிணங்களாலும் சாம்பல் வல்லுநர்களாலும்
நிறைந்திருந்தது.

வாய்ப்புக் கிடைத்ததும்
கேள்விகளைச் சரமாரியாகத் தொடுத்தேன்.
என்னை எரிக்க அவர்கள் முன்வந்தனர்
அது மட்டும் அவர்கள் அறிந்தது.
என் தாய் நாட்டில், வெட்டியான்கள்
குடிப்பதற்கிடையே பதில் சொன்னார்கள்
ஒர் அழகிய பெண்னைக் கட்டிக் கொள்.
இதப் பைத்தியகாரத்தனத்தை விட்டுத் தொலை.’

இவ்வளவு மகிழ்ச்சியான மக்களை நான் கண்டதில்லை.
மதுக் குவளைத் தூக்கிப் பிடித்து,
உடல் நலமும் மரணமும் வேண்டி
அவர்கள் பாடினார்.
அவர்கள் பெரும் கள்ளப்புணர்ச்சியாளர்கள்.

உலகம் முழுவதையும் சுற்றிவிட்டு
முதியவனாக நான் ஊர் திரும்பினேன்.

இப்போது யாரையும் நான் கேள்வி கேட்பதில்லை.
ஆனால், நாளுக்கு நாள் குறைவாக
அறிந்து கொண்டிருக்கிறேன்.