பிறப்பு கேட்காமலே கிடைத்த சாபம்...

மரணம் கேட்டும் கிடைக்காத வரம்...

Jun 2, 2012

தவறிய முத்தம்...

தவறிய முத்தமொன்றை
தேடியலைகிறேன்
எங்கு தவறவிட்டேன்
உத்தேசமாய் எதுவும் நினைவில்லை
கூட்டம் நிறைந்த
ஒரு பேருந்தின் நெரிசலில்
தனிமை புல்வெளியின்
பசும் நுனியில்
கடலோரத்து ஒதுங்கிய
சிறு சிப்பியில்
மழை தொடங்கிய
முதல் துளியில்
நேற்று இன்று என
தேடுதலிலே தொலைகிறது
என் நிமிடங்கள்
ஒரு ஆலமரத்தின்
விழுதுகளில்
சிறகு விரிக்கும் பறவையின்
கூறிய அலகில்
அப்பாவி மீன் ஒன்றை
குறிவைத்த தூண்டிலில்
ஒரு நள்ளிரவு பொழுதின்
விண்மீன் சிணுங்கலில்
எங்கேயும் காணமல்
பரிதவித்து ஓய்கையில்
பௌர்ணமி நிலவின்
வெள்ளொளியில்
மிதந்து வருகிறது
என்னைத் தழுவ
அம்முத்தம்
இன்னும் சில முத்தங்களோடு...

ஆறுதல்...

எனக்குத் தெரியும்
உனக்கான ஆறுதலை
உனக்கான அன்பை
உனக்கான சில நொடிகளை
மட்டுமே எதிர்பார்க்கிறாயென
எத்தனையோ அழைப்புகள்
மௌனமாய் வேடிக்கை பார்க்கிறேன்
குறுஞ்செய்திகளை புறக்கணிக்கிறேன்
அன்பை வெளிப்படுத்தும்
சில வார்த்தைகளுக்காய்
கையேந்தி நிற்கிறாய்
நானோ கண்டும் காணாதவனாய்
நீ என்னை புறக்கணிக்கப் போவதில்லை
ஒரு நாள் ஓடிக் களைத்து
ஆசுவாசப் படுத்திக் கொள்ள
உன் மடி தேடுகையில்
நீ காத்திருக்கலாம்
இது நாள் வரை எங்கிருந்தாயென
கேள்விகளோடு மறுத்தும் விடலாம்
நீ என் உலகமடி
எங்கும் சுற்றினும்
உனக்குள் சுற்றுகிறேன்
எதை தேடினும்
உன்னை அடைகிறேன்
உனக்கான கவிதைகளை
என் விரல்கள் எழுதியபடியே
நீ பெரும் கடல்
மூழ்கடிப்பதும்
தக்கை கொடுத்து பயணம்
தொடர்வதும் உன் முடிவில்
தேவைப்படும் போது
கிடைக்காத ஆறுதலும்
எவ்வகையிலும் பயனில்லை
மழையிடமும் வெயிலிடமும்
ஆறுதல் தேடி
எந்த பூவும் வேண்டி நிற்பதில்லை
நான் மழை
நான் வெயில்
நான் நீ சொல்லும் அதே பைத்தியகாரன்
நான் என் இறுதி வரை
உன்னை நேசிக்கும் அதே நான்....

பள்ளிக்கு சென்ற முதல் நாள்

இன்று காலை நானும் என் முதலாளியும் அலுவலக நிமித்தமாக அவருடைய அறையில் பேசிக் கொண்டிருந்தோம்... அப்பொழுது அவருக்கு அலைபேசியில் அழைப்பு வந்தது, நான் வெளியேற முற்படுகையில், எதிர் இருக்கையில் அமரச் சொல்லி விட்டு அலை பேசியில் பேசத் துவங்கினார். பேச்சு இன்றைய பள்ளி துவக்கம் குறித்ததாக இருந்தது. தன்னுடைய இரண்டாவது மகளுக்கு இன்று பள்ளி துவங்குவது பற்றி சொல்லி விட்டு, ஒவ்வொரு வருடமும் பள்ளி முதல் நாளில் தானே அழைத்துச் சென்று முதல் வரிசையில் அமர்த்தி விட்டு வந்ததாகவும், இந்த வருடம் தனக்கு சொல்லி விட்டு, வாழ்த்துப் பெற்று, அவள் மட்டுமே கிளம்பி விட்டதாகவும் சொல்லிக் கொண்டிருந்தார்.

மெல்ல அவரின் பேச்சு அப்பெண் குழந்தையாக இருக்கும் பொழுது, முதல் நாள் பள்ளியில் சேர்த்த நினைவுகளில் பயணிக்கத் தொடங்கியது. அழுது புரண்டு "டாடி, வேணாம் டாடி நான் உங்க கூடவே வீட்டுக்கு வரேன் டாடி" என்ற பெண்ணை சமாதனப் படுத்தி அமரவைத்து விட்டு விசும்பி அழும் பெண்ணை, சன்னலின் வழியாக பார்த்தபடி தானும் அழுது கொண்டிருந்ததை சொல்லும் போது, அவர் கண்களில் திரண்டிருந்த கண்ணீர் துளிகள் மெல்ல கீழிறங்கத் துவங்கியது...

அனைத்து பெற்றோரும் தம் குழந்தை பள்ளிக்கு சென்ற முதல் நாள் நினைவுகளை மறந்து விடுவதே இல்லை. மெல்ல மெல்ல ஒரு பொக்கிஷம் போல நினைவின் அடுக்குகளில் புதைந்து கிடக்கின்றன். சில பெற்றோர் அவர்களாகவே நினைத்துப் பார்ப்பதோடு சந்தோசப் பட்டுக் கொள்ளகிறார்கள். ஒரு சிலர் விபரம் தெரிந்த வயதில் தன் குழந்தைகளிடம் புகைப் படத்தோடு அந்நினைவுகளை சொல்லி மகிழும் நாட்களும் உண்டு. பெண் குழந்தைகள் எனில் பெரும் பாலும் பெற்றோர் திருமணம் முடிந்த பிறகு, அப் பெண்ணின் சிறு வயது புகைப் படங்களை பார்த்தபடி நினைவுகளை தங்களுக்குள் பகிர்ந்து கொள்வதைப் பார்த்திருக்கிறேன்.

மெல்ல மெல்ல வளரும் குழந்தையை, அவர்களின் கனவுகளை, அவர்களுடைய வெற்றிகளை, தோல்விகளை எல்லாவற்றையும் தங்களுடைய வாழ்வாக மாற்றிக் கொண்ட பெற்றோர்களே எங்கும் நிறைந்திருக்கிறார்கள். நான் முதல் நாள் பள்ளிக்கு சென்றது நன்றாக நினைவிருக்கிறது. என்னுடைய மூன்று வயதிலேயே பால் வாடியில் (அரசு மழலையர் பள்ளி) அக்காவுடன் அமர்ந்து அம்மா, ஆடு, இலை மற்றும் ஆங்கிலத்தில் எழுத்துகளை கற்றுக் கொண்டதன் விளைவாக நான்காம் வயதில் நான் முதல் வகுப்பில் சேர்த்துக் கொள்ளப் பட்டேன். தலையைச் சுற்றி காதைத் தொடும் வழிமுறையில் வெற்றி பெற்றதால், ஆசிரியை ஒருவரால் பிறந்த தேதி மாற்றப் பட்டு என் கல்விப் பயணம் தொடங்கியது. அக்காவும் நானும் ஒரே வகுப்பு, ஏறக்குறைய எட்டு ஆண்டுகள் இருவரும் வேறு வேறு பிரிவில் கூட மாற்றப் படவில்லை.

என் நினைவுகளில் நான் கரைய, ஒரு தகப்பானாய் எதிரில் அமர்ந்திருந்த ஒருவர் தன்னிலை மீண்டார். எப்பொழுதும் பெண்களுக்கும், அப்பாக்களுக்குமான உறவு மகத்தானது. அலுவலக பணிகளை பேசி முடித்து வெளியே வரும் போது யோசித்தேன், எப்பொழுதும் ஓரிரு ஆண்டுகளுக்கு மேல் எங்கும் நிலைக்காத நான் இதே நிறுவனத்தில் நான்கு வருடங்களைக் கடந்தும் இங்கு பணி புரிந்து வருவதன் காரணம் புரியத் துவங்கியது....