பிறப்பு கேட்காமலே கிடைத்த சாபம்...

மரணம் கேட்டும் கிடைக்காத வரம்...

Feb 26, 2013

குழந்தை போல.



 














யாரையும் வெறுக்காமல்
யாரையும் உறுத்தாமல்
நாக்கைச் சரியாக அடக்கி
நான் வாழ்ந்து விடுகிறேனே
குழந்தை போல
மூன்று மாதக் குழந்தை போல
கற்பனைச் சிலந்தி கட்டாமல்
மனத்தின் தூய கோட்டையினுள்
ஒன்றுமே அறியாத ஆத்மாவைப்போல
கனவுகளைப் பற்றிக் கொண்டு
விலை மதிக்க முடியாத தன் புதையலை
தனக்கே தனக்கு என நினைத்து
தன் விலையில்லா மணிக்கு
பாலூட்டும் அன்னையைப் போல
நானும் வாழ்ந்து விடுகிறேனே
குழந்தை போல
ஆசையில்லாத பூச்சி போல
திருப்தியுடன்
தன்னலமற்று.


-இரோம் சர்மிளா (தமிழில் அம்பை)

அமைதியின் நறுமணம்



 

வாழ்க்கை முடிந்துபோனதும்
உயிரற்ற கூடான என் உடலை
தயவு செய்து தூக்கிச் சென்று
தந்தை கூப்ரூவின் மலை உச்சியில்
வைத்து விடுங்கள்

என் செத்த உடல்
கோடாரியாலும் மண்வெட்டியாலும்
சிதைக்கப்பட்டு
நெருப்பில் சாம்பலாவதை
நினைத்தால்
மனதில் அசூயை பொங்குகிறது

வதங்கப் போகும் சருமம்
பூமியினடியே அழுகட்டும்
வரும் தலைமுறையினருக்கு அது உபயோகப்படட்டும்
உலோககருவாக அது மாறட்டும்

இனிவரும் காலங்களில்
நான் பிறந்த காங்லேயின் வேர்களிலிருந்து
நான் அமைதியின் நறுமணத்தைப் பரப்புவேன்
உலகின் ஒவ்வொரு மூலைக்கும்.


-இரோம் சர்மிளா ( தமிழில் அம்பை)

தந்தை கூப்ரூ: மணிப்பூரின் வடமேற்கில் உள்ள மலை. தங்கள் மூதாதையர் என்று அவர்கள் கருதும் புனித ஸ்தலம்.
காங்லேய்: காங்லேய்பாக் என்பதின் சுருக்கம். மணிப்பூரின் பழங்காலப் பெயர்.

செத்த உடல் நெருப்பில் சரியாக எரிந்து முற்றிலும் சாம்பலாக, சிலசமயம் அதை வெட்டித் துண்டு துண்டுகளாக்கி, பின் எரிக்கும் வழக்கம் மணிப்பூரில் உள்ளது.