பிறப்பு கேட்காமலே கிடைத்த சாபம்...

மரணம் கேட்டும் கிடைக்காத வரம்...

Sep 27, 2011

அவள் அவன் மற்றும் ஓர் மனமுறிவு...

ஒரு கொலை மற்றும் ஒரு தற்கொலை
இவற்றை தவிர்க்கும் பொருட்டு
நாம் பிரிந்தோம்...

இருவரும் பிரிந்தது ஒரு மைதானமல்ல
வெவ்வேறு திசைகளில் போக...

மலைப் பாதையில்
மேல் நோக்கிய பயணத்தில் நீ
பள்ளத்தாக்கில் நான்...

கைக்கு கிடைத்த
செடி கொடி இண்டு இடுக்குகளைப்
பற்றியபடி மேலேறி வர
நடத்திய மரணப் போராட்டமே
பயணமாக நான்....

என்னை மீண்டும் கீழே தள்ளிவிடக்
காத்திருந்ததில் உன் பயணம்
மறந்தவனாய் நீ...

என் திசைகளில் நீ இல்லை
உன் எல்லா திசைகளிலும்
நான் இருந்தேன்...

முகமற்ற அருவத்தை வீழ்த்த
காற்றை பாளம் பாளமாக
வெட்டிய படி நீ
கொஞ்சம் கொஞ்சமாய்
பைத்திய காரனாகிக் கொண்டிருந்தாய்...

நான் திரும்பியும் பார்க்காமல்
நகர்ந்த போது
நீ
என் ஆடைகளைப் பறித்து
நிர்வாணமாக்க முயன்றாய்...

என் சிம்மாசனத்தை
நான் அடைந்த போது
உன் மகுடம்
கீழே விழுந்திருந்தது..

உன் முகமிருக்கும் இடத்திற்கு
என் பாதம் உயர்ந்த போது
கட்டுகளற்ற வெறிநாயாய்
உன் நாக்கை அவிழ்த்து விட்டாய்...

நான்
உன் வீட்டின் வழியே
மேள வாத்தியங்களோடு
ஊர்வலம் போன போது
நீ
என் பழைய கடிதங்களில்
பூதக் கண்ணாடி வைத்து
தேடிக் கொண்டிருந்தாய்...

நான்
மேலே மேலே நகர்ந்து
மேகங்களை அடைந்து
மழையை பொழிவித்த போது
நீ
நகர முடியாத
பெரு வியாதிக்காரனாய்
ஊர் எல்லையில் கிடந்தாய்
அழுகிய விரல்களோடு...

"பத்தினிகள் அற்ற ஊரில்
இன்னும் எப்படி
மழை பெய்கிறது? என்று
முனு முணுத்துக் கொண்டே
உன் பசிக்கு
ஏந்தினாய்
என் மழையை...

-தாமரை...

மழை நாடகம்...

அவர்களின் பிரிவுக்கு
அவர்களே தான்
காரணமாய் இருந்திருக்கிறார்கள்

அவர்கள் கண்களை
வீசிக் கொண்டது
அதே மக்களின் வீச்சரிவாளுக்கு
மேலாகத்தான்

அவர்கள் நெருங்கி வந்த போதும்
வீதிகள் இப்படித்தான்
பிரிக்கப் பட்டிருந்தன

மாடி வீட்டுக்காரர்கள்
குச்சு வீட்டுக்காரர்களோடு
அதிகம் பேசிக் கொள்வதில்லை
இப்போது போலவே

வீரத்தோடு உயர்த்திக் காட்ட
கைதான் இல்லை
இழுத்துக் கொண்டு ஓட
கால்கள் கூடவா இல்லை?

வேறொருவனுக்கு வாக்கப்பட்டு
புதுச் சரடு மின்ன அவ்வப்போது
வாசலில் எட்டிப் பார்க்கிறாள் அவள்

எதோ கொடுக்க எதோ வாங்க
கடை எடுபிடியாய்
அடிக்கடி வந்து போகிறான் அவன்

மழை வந்தாலும் வராவிட்டாலும்
அவனோடு ஒரு குடை
எப்போதும் வருகிறது

மறந்து விட்டுப் போன குடையை
வாங்க வருகிறான் அவன்
எடுத்துக் கொடுக்கிறாள் அவள்

கோழைகளுக்கு மழையில்
நனைய கொடுத்து வைக்கவில்லை
என்றாலும் குடையை
மறந்து விட்டுப் போகும்
மதி நுட்பமேனும் வாய்த்திருக்கிறதே...

-தாமரை...

ஏரியில் ஒருவன்....

உட்காரப்
புல்வெளி
எதிரே
நீர் வெளி
நீர் மேல் எண்ணெயாய்
சூரியன்
பால் சொட்டுகளாய்
பறவைகள்
முட்டாமல் மோதாமல்
இணக்கமாய் காற்று
தூரத்து ரயிலோசைக்கும்
செவி கூசும் நிசப்தம்...
...........
.....
....

எல்லாம் தவிர்த்து
கவனமாய்க் காத்திருக்கிறான்
கரையில் ஒருவன்
தொண்டை கிழித்து
கண்ணைத் துளைத்த
தூண்டில் முள்ளுடன்
துடிக்கும்
மீன் ஒன்றைக்
காணும் ஆவலுடன்....

-எஸ். கோபிநாத்

காதல் தீவிரவாதி...

நான்
தீவிர வாதி தான்...

ரசனையான
வாழ்க்கையை
வெறித்தனமாய்
நேசித்த தீவிரவாதி....

சின்ன சின்னதாய்
ஏராளக் கனவுகள்
ஜெலட்டின் குச்சிகளை
என்னிடம் உண்டு....

பெண்ணடிமைத் தனக்
கட்டுப்பாடுகளை
உடைத்தெறிய
பலமுறை
கொரில்லாத் தாக்குதலகள்
நடத்தியதுண்டு
பெற்றோருடன்...

கடைசியில்
காதல் தடுப்புச் சட்டத்தில்
கைது செய்யப் பட்டேன்
குடும்ப கௌரவத்தை
குண்டு வைத்து தகர்த்த தாய்
குற்றச்சாட்டு...

தினம் தினம்
சித்திரவதைகள்
சொல்லடிகள்
இறுதியில்
நாள் குறிக்கப்பட்டது...

முன்பின் அறியாத
அந்நியனின் காலடியில்
ஆயுள் சிறையென
கல்யாணத் தீர்ப்பு
எழுதப் பட்டது....

பூச்சரங்கள்
அலங்கரித்த
அறைக்குள் வந்தான்
புருஷன் எனும் போலீசுக்காரன்...

அன்பான சொல் இல்லை
ஆதரவான பகிர்தல் இல்லை
.........
.....
...
அவ்வளவுதான்
முடிந்து விட்டது...

முதலிரவு
என்கவுண்டரில்
மொத்தமாய்
செத்துப் போனேன்
நான்....

-உமா சம்பத்