பிறப்பு கேட்காமலே கிடைத்த சாபம்...

மரணம் கேட்டும் கிடைக்காத வரம்...

Jul 1, 2012

திரைச் சேலைகளுக்குப் பின்னால்....

அடுத்த தெருவில் தான் இருந்தாள்
ஒவ்வொரு முறை கடக்கும் போதும்
அனிச்சையாய் பார்ப்பது போல்
இருவரும் பார்த்துக் கொண்டனர்
அவள் வீட்டருகில் தான் இருந்தது
இஸ்திரி பெட்டி அண்ணனின் கடை
விடுமுறை நாளில் துணிகளை
அள்ளிச் செல்வான்
அவள் வாசல்படியில் அமர்ந்தபடி
ஏதேனும் படித்துக் கொண்டிருப்பாள்...

எப்படியும், என்றாவது
பேசுவான் என எதிர்பார்த்து
அவள் ஏமாந்திருந்தாள்
இவன் பேசவே இல்லை
ஒரு முறை நேர் எதிரே வருகையில்
மென்மையாக சிரித்துப் போனாள்
அதிகாலை இவன் கிளம்புகையில்
அவள் வீட்டில் விளக்கெரியும்
வாசல் தெளித்து கோலமும் இருக்கும்
சன்னலின் திரைகளுக்குப்
பின்னால் அவள் முகமும்
அவள் என்றுமே அவனுக்காக காத்திருந்தாள்
அவனும் தயங்கியபடியே
அவளால் வேறெப்படியும்
வெளிப்படுத்த முடியவில்லை நேசத்தை...

அவர்கள் முறைப்படி பூச்சூடுதலாம்
அவனுக்கு தெரிந்திருக்க நியாயம் இல்லை
உறவினர்கள் நிறைந்திருக்க
அவள் வீட்டை
வேடிக்கை பார்த்தபடி கடந்த போது
அலங்கரிக்கப்பட்ட அவள்
அவன் ஏனோ இயல்பில் இல்லை
வெகு நேரம் உறக்கமின்றி
மீண்டும் அதே தெருவில்
இம்முறை விளக்கின் வெளிச்சம் இல்லை
திரைச் சேலைகளுக்குப் பின்னால்
இருள் படிந்த முகம் மட்டும் இருந்தது
இன்னும் சில நாட்களுக்கு
அதிகாலை கோலமும் இருக்கலாம்....