பிறப்பு கேட்காமலே கிடைத்த சாபம்...

மரணம் கேட்டும் கிடைக்காத வரம்...

Aug 9, 2011

அதிர்வு


எனக்கான முதல் கவிதையொன்றை
எழுத நினைத்த நாளொன்று
இரவின் வெளிச்சத்தில்
தூங்காத பொழுதொன்றில் வந்தது...

எப்படி ஆரம்பிக்க?
ஒன்றும் புரியாமல்
புரண்டு புரண்டு விழுகிறது
வார்த்தைகள்
வேடிக்கை பார்த்தது மௌனம்...

கற்பனைகளையும்
கனவுகளையும் தாண்டி
இது செயல் படும் தருணம்
படபடக்கும் மனசில்
கதிரவன் வீழ்ச்சி
நிலா அதிர்வு...

அக்கவிதையில் முயல்கள் துள்ள
தேனீக்கள் மலர் தேடியது
தாமரை மலர்ந்தது
ரோஜா ஒன்று பனித்துளியில்
நிரம்பியது....

ஒருவாறு எழுத்துக்களை வருடி
சொற்களின் இதழ் சேர்த்து
துவண்டு விழுகையில் கிடைத்தது
என் முதல் கவிதையின் முடிவு...

சற்றே ஆசுவாசம் பெற்ற போது
அக்கவிதை என்னிடம் சொன்னது
இன்னும் இருவரிகள் நீ எழுதியிருந்தால்
நான் முழுமையடைந்திருப்பேன் என்று...