பிறப்பு கேட்காமலே கிடைத்த சாபம்...

மரணம் கேட்டும் கிடைக்காத வரம்...

Jun 30, 2012

மீட்பு...

மிகுந்த கவலையோடுதான்

நீ பேசிக்கொண்டிருந்தாய்..

அவிழ்க்க முடியாத முடிச்சுகள் நிரம்பிய

சிக்கலின் மையத்தில் நின்றாய்..

.

எங்கோ தொலைந்துபோயிருந்த தீர்வின் முனையை

என்னால் கண்டுபிடிக்க முடியுமென்று தோன்றவில்லை

என்னால் தீர்க்கமுடியுமென்ற நம்பிக்கையில்

நீ வந்திருப்பாய் என்றும் தோன்றவில்லை..

யாரிடமாவது சொன்னால்

ஆறுதலாயிருக்குமென்று வந்திருக்கலாம்..

.

தோளின் முனையில் நழுவத்துடிக்கும்

முந்தானை பற்றியோ

அது விலகியிருப்பதால் தெரியும்

அங்கங்கள் பற்றியோ

உனக்கு எந்தக் கவணமும் இல்லை

உன் வேதனையின் தீவிரம் அப்படி.

.

ஆனால்..

என் கவணம் முழுவதும் அதில்தான்.

அந்த அறைக்குள்

இரவின் கணமும் மார்கழியின் குளிரும்

நொடிக்கு நொடி கூடிக்கொண்டேயிருந்தன..

.

திடீரென்று நீ விசும்பி அழத்தொடங்கினாய்

என் ஆண்மனம் நடுங்கியது

அவமானமும் சங்கடமும் நிலைகுலைத்தது

வழக்கமான ஆறுதல் வார்த்தைகளை

அனிச்சையாகச் சொன்னேன்

விசும்பல் கூடி என் தோளில் சாய்ந்து

மேலும் தேம்பினாய்..

.

சட்டையைப் பிடித்திருந்த கை

இறுக்கி இழுத்தபடியே இருந்தது

தோளில் ஊறிய ஈரம் சூடாக இருந்தது

உன் மூச்சுக் காற்றுக்கு பயந்து

முகத்தைத் திருப்பிக்கொண்டேன்..

என்மீது வைக்கப்பட்ட நம்பிக்கையின் அழுத்தத்தால்

கூனிக்குறுகினேன்..

.

ஒருவாரத்துக்குப் பின்..

என் முயற்சி ஏதுமின்றியே

பிரச்சனைகள் தீர்ந்தபோதும்

தேடிவந்து நன்றி சொல்கிறாய்..

அன்று உன் தோள்கள் இல்லையென்றால்

செத்துப்போயிருப்பேன் என்கிறாய்..

ஒரு தோழனையும் சகோதரனையும்விட

உயர்ந்த இடத்தில் அமர்த்துகிறாய்..

.

என் மொத்த உடம்பும் கூசுகிறது

வேதனை கொப்பளமிடுகிறது

குற்ற உணர்வால் எட்டி உதைக்கப்பட்டு

ஒரு அடிமைபோல் வதங்கிக்கிடக்கிறேன்

என்றாவது ஓர்நாள்

நான் சொல்லி அழுவதற்கு

உன் தோள்களைக் கொடுத்தால்

எனக்கும் கிடைக்கலாம் மீட்பு..

- Director Charles...

முக நூல் 30.06.12

ஒரே வரியில்
உன் மீதான காதலை
 சொல்லி விட முடிவதில்லை,
 நீயோ என் காவியங்களில்
அக்கறை கொள்வதும் இல்லை...

நீ வரும் ஒரு நாளுக்காக
காத்திருக்கிறது
வாழ்வின் எல்லா நாட்களும்... 

நீ கவிதை கேட்டு என்னிடம் வருகிறாய்
நானோ அந்த நேரத்தில்
மரத்தை வெட்டிக் கொண்டிருக்கலாம்
தேநீர் பருகியபடியும் இருக்கலாம்
சிரித்த படி குழந்தைகளுக்கு
கதைகள் சொல்லிக் கொண்டும்
அல்லது
ஒரு விலைமாதை அழைத்துக் கொண்டு
எங்கேனும் சென்றிக்கவும் கூடும்
உன் பொருட்டு நான் நல்லவன்
நீயும் எனக்கு அப்படியே
ஒருவேளை அசந்தர்ப்பவிதமாக
நீ வரும் வேளையில்
நான் உனக்கான கவிதையொன்றை
எழுதியபடி இருந்தால்
உனக்கு நான் நல்லவனாகவே தொடரலாம்...


அவளுக்கு கவிதை பிடிக்கும்

அவள் அவனை விடவும் அழகு
அவள் அவனுக்கு சமமாக படித்தவள்
அவள் அவனுக்கு மேலான வசதி படைத்தவள்
அவளுக்கு அவனைத் தான்
மணம் முடித்தார்கள்
கல்லூரி வாழ்க்கை முடிந்ததும்
அவர்களாகத் தான் கேட்டார்கள்
இவர்கள் சம்மதித்தார்கள் அவ்வளவு தான்
படித்தவன் என்றார்கள்
பண்பாளன் என்றார்கள்
கைநிறைய சம்பளம் என்றார்கள்
வீடு என்றார்கள்
கார் என்றார்கள்
இன்னும் எத்தனையோ...

அவளோ கவிதைகளின் ரசிகை
காவியங்களை நேசிப்பவள்
மனதை உருக்கி விடும் படங்களை
கண்ணீரோடு கடப்பவள்
நாஞ்சில் நாடனும், புதுமை பித்தனும்
பெரியாரின் சிநேகமுமாய் வாழ்ந்தவள்
தடம் புரண்ட பயணமென இன்று
மின்னஞ்சல் முகவரி தொடங்கி
முக நூல் நட்பு வரை அவனைக் கேட்டுத் தான்
இருக்கும் இருபதோ முப்பதோ
அவனின் சொந்தங்களும் கல்லூரி நட்புகளுமே
மாற்றுவதும் விலக்குவதும் அவன் விருப்பமாய் ...

அவன் குடிப்பதை யாரும் சொல்லவில்லை
அவனும் சொல்லவில்லை
முதலில் செல்லும் முன் அனுமதி வாங்கினான்
எப்பொழுதாவது ஒருமுறை என்று
பின்னர் குடிக்கும் முன் அனுமதி கேட்டான்
நண்பர்களின் வற்புறுத்தல் என்று
அதுவும் பின்னர் தகவல் சொல்வதாயிற்று
இப்பொழுதெல்லாம்
அவன் கேட்பதுமில்லை சொல்வதுமில்லை
வீடு திரும்பும் போது தான் தெரியும்...

முதலில் கோபம் கொள்வதாகவும்
பின்னர் திட்டுவதாகவும் தொடங்கி
இப்பொழுது எப்பொழுது அடி விழும்
என்பதாக நடுங்கிக் கிடக்கிறாள் அவள்
அவன் மிதப்பில் வருகையிலெல்லாம்
அவள் மரமாகி கிடக்க வேண்டும்
இல்லையெனில் படுக்க வேண்டும்
படித்தவன் என்றார்கள்
பண்பாளன் என்றார்கள்
யாருமே சொல்லவில்லை
அவளுக்கு கவிதை பிடிக்கும் என்றும்
அவனுக்கு குடிக்கப் பிடிக்கும் என்றும்...

Jun 4, 2012

THE FATHER - by Majid Majidi..

மஜீத் மஜிதி எனக்கு பிடித்தமான இயக்குனர்... எப்பொழுதும்  மனிதர்களின் உணர்வுகளை, உறவுகளின் இன்பத்தை, துன்பத்தை, சங்கடங்களை... இன்னும் இன்னும் எழுத்துகளில் வடிக்க இயலா தருணங்களை  தன்  திரை மொழியில் சொல்லியவர். கண்ணீரின்றி இவரது படங்களை நான் கடந்ததே இல்லை....


இவரின் திரையில் வாழும் மனிதர்கள் எல்லோருமே இயல்பானவர்கள். பெரும்பாலும் ஒரு குடும்பத்தைச் சுற்றி நகரும் இவரது திரைக்கதை அவர்களை நம்மோடு, அந்தக் குடும்பத்தில் நம்மையும் ஒரு உறுப்பினராகவே மாற்றி விடுகிறது. வெறும் பார்வையாளனாக நான் இவரின் எந்தப் படத்தையும் பார்த்ததே இல்லை...படம் தொடங்கிய  இரண்டு  மூன்று நிமிடங்களில் முழுதாய் வசீகரித்துவிடும் மந்திரம் இவரது ஒவ்வொரு படைப்பிலும்  வாய்க்கிறது. The Colour Of  Paradise, Chidren  Of  Heaven  வரிசையில் இன்று "The  Father". குழந்தைகளின் அற்புதமான உணர்வுகளை, அது வாழ்வில் ஏற்படுத்தும் தாக்கங்களை, குழந்தைகள் மீதான அன்பை  தனது திரையில் காட்சிப் படுத்தியபடி நம்மையும் பயணிக்க வைக்கிறார்....

1966  இல் பெர்சியன் மொழியில் வந்த இந்தப்  திரைப் படத்தின் பெயர்  Fedar , ஆங்கிலத்தில்  "The  Father"..



இனி the  father...

தந்தை விபத்தில் இறந்து விட, குடும்ப சுமையேற்று நகரத்தில் வேலை செய்யும் சிறுவன், தன் இரு பெண்களின் எதிர்காலம் கருதி, குழந்தைகளுக்காக ஏங்கும்  ஒரு காவல் அதிகாரியை இரண்டாவதாக மணந்து கொள்ளும் அவனின் தாய், மற்ற குழந்தைகளைப் போலவே அவனிடமும் அன்பை எதிர்பார்த்தும், அன்பு செலுத்த தயாராகவும் உள்ள காவல் அதிகாரி, பணம் சம்பாதிக்க துடிக்கும் அவனது நண்பன் இவ்வளவு தான் படத்தின் கதாபாத்திரங்கள்.. ஆனால் இவர்களுடன்  ஒன்றரை மணி நேரம் நாம் செய்யும் பயணம் மறக்க இயலாததாகவே அமையும்.

நகரத்தில் தன் தங்கைகளுக்காகவும், அம்மாவுக்காகவும் உடைகள், ஆபரணங்கள் வாங்கி கொண்டு, சொந்த ஊருக்கு விடுமுறையில் வரும் மெஹருல்லா இக்கதையின் நாயகன். தன் தாய் இரண்டாவது திருமணம்  புரிந்து கொண்டு தங்கைகளுடன் ஒரு காவல் அதிகாரியுடன் வசிப்பதை கண்டு பிடிக்காமல், எப்படியாவது அந்த அதிகாரியிடமிருந்து  தன் தங்கைகளையும், அம்மாவையும் பிரித்து பழைய வீட்டிற்கு செல்ல வேண்டும் என்று நினைக்கிறான். அவரோ அவன் எது செய்தாலும் பொறுத்துக் கொண்டு, அவனையும் தன்னுடன் இணைத்து வாழ விரும்புகிறார். காவல் அதிகாரியை தன் தந்தையாக ஏற்றுக் கொள்ள மறுக்கும் சிறுவன் ஒரு நாள் அவரின் துப்பாக்கியை திருடிக் கொண்டு, நண்பனுடன் முன்பு  வேலை செய்த இடத்திற்கு செல்கிறான். அதிகாரியோ அவனை  கண்டு பிடித்து மீண்டும் அழைத்து வருகிறார். வரும் வழியில் வாகனம் பழுது பட, இருவரும் பாலைவனத்தின் வழியே நடக்கத் தொடங்குகிறார்கள். மணல் புயலில் சிக்கி தத்தளிக்கிறார்கள். தண்ணீர் தேடி அலைகிறார்கள். முதுமையின் காரணமாக மயங்கி விடும் அவரை காப்பாற்றத் துடிக்கும் சிறுவனின் இறுதி கட்ட தவிப்பு, இடையில் அவர்களிடையே ஏற்படும் உறவும் பாசமும் என படம் திரையில் என்பதையும் தாண்டி மனதிற்குள் ஓடத் தோவங்கி விடுகிறது....

படத்திற்கு இசை என்பது தேவைப்படும் இடத்திற்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது. பின்னணி இசை பெரும்பாலும் மிக மிக மென்மையாக, காட்சிகளின் உணர்வை மெருகேற்றும் வகையில் அற்புதமாக கையாளப்பட்டிருக்கிறது. ஒளிப்பதிவும் அப்படியே. நம் கண்  முன்  எளிய வாழ்வை  பதிவு செய்கிறது...

இனி காட்சிகள்...

அனைத்து காட்சிகளுமே பிடித்தமானவைகளாக இருந்து விடும் இது போன்ற படங்களில் பிடித்தவற்றை சொல்லுவது சற்றே சிரமமான விசயமாகவே உள்ளது இருப்பினும் சிலவற்றை பகிர்ந்து கொள்கிறேன்...

1. தன் தங்கைகளுக்கு, அம்மாவுக்கு என ஒவ்வொரு பொருளாக தேடி அலைந்து வாங்கும் தொடக்கக் காட்சி அற்புதம்.

2. தனது கிராமத்திற்கு வந்தவுடன் தன் பையில் வைத்திருக்கும் அப்பாவுடனான புகைப் படம் நீரில் அடித்துச் செல்லப் பட, அடுத்த காட்சியில் தன் தோழன் வாயிலாக தன் தாய் இன்னொருவரை திருமணம் செய்து அவருடன் வாழ்வதை கேட்கும் செய்திக் காட்சி... நீரில் புகைப் படம் அடித்துச் செல்லப் படும் போதே அடுத்து வரும் காட்சியை உணர்த்திவிடும் அற்புதம்... மஜீத் அற்புதம்...

3. வீட்டிற்குள் வராமல் வெளியில் நின்று கொண்டு பேசும் சிறுவனை பார்த்து அவனது தாய் தவிக்கும் தவிப்பு. அவரின் கண்களின் வழியே தெரியும் பாசம், சோகம், பரிதவிப்பு என உணர்வுகளை குவித்த ஒற்றைக் காட்சி...


4 பணத்திற்காகத் தானே திருமணம் புரிந்து கொண்டார்கள் என்னும் தவறாக எண்ணத்தில் அக்காவல் அதிகாரி மீதும், தன் தாயின் மீதும் தன்னிடமிருக்கும் பணத்தை விட்டெரியும் ஒரு சிறுவனின் கோபம், புரிந்து கொள்ள மறுக்கிறானே எனும் அந்த இரண்டு பெரியவர்களின் துயரம் என இரு பதிவுகளால்  உயிரூட்டப் பட்ட காட்சிகள்...

5. வாகனத்தை எதிர்பாரா தருணமொன்றில் எடுத்துச் செல்கையில் சற்று தொலைவில் நிறுத்தி விட்டு, தன் மனதில் உள்ள கேள்விகளை, அவரிடமே கேட்கும் ஆதங்கம், பிறகு அவரிடமே சிக்கிக் கொள்ளும் பரிதாபம்.

6. இடையில் வரும் மணல் புயல், இறுதியில் தன்னால் இனி முடியாது எனும் போது விலங்கை கழற்றி விட்டு எங்காவது போய் தப்பித்துக் கொள் என்று சொல்லும் ஒரு தகப்பனின் முழுமை, அவரை அப்படியே விடாமல் தன் தோள்களில் சாய்த்துக் கொண்டு பாலையை கடக்க முற்படும் சிறுவனின் அன்பு...

7. இறுதிக் காட்சியில் அவர் அக் குழந்தைகளோடும், மனைவியோடும் எடுத்த புகைப் படம் நீரில் மெல்ல நழுவி சிறுவனை நோக்கிப் பயணிக்கிறது. புகைப் படம் முதல் காட்சியில் சிறுவனிடமிருந்து  நழுவுகிறது, இறுதிக் காட்சியில் வேறு புகைப் படமாக அவனை சேர்க்கிறது....

8. சிறுவனின் நண்பனாக வரும் இன்னொரு சிறுவன், அட்டகாசமான நடிப்பு. அடுத்தவரின் மனநிலை புரிந்து கொள்ளுதல், பயம், நண்பனை காப்பற்ற வேண்டுமென்ற தவிப்பு என அனைத்து காட்சியிலும் பிரமாதப் படுத்துகிறான்...

9. ஊரை விட்டு வந்து இரு சிறுவர்களும் கடலில் விளையாடும் காட்சி மனதிருக்கு பெரும் ஆறுதலாய் இருக்கிறது...

10. படம் முழுக்க வரும் மெஹருல்லா, நடித்ததாகவே தெரியவில்லை, ஊருக்கு வரும் வரை முகத்தில் காணும் சந்தோசம், பிறகு எப்பொழுதும் படரும் அடர்ந்த சோகம், கோபம், எதுவும் செய்ய முடியவில்லையே என்ற ஆதங்கம், தன் தாய் மற்றும் தங்கைகள் மீதான அன்பு, பாலை வனத்தில் அவரை காப்பற்ற போராடும் காட்சிகள் என வாழ்ந்திருக்கிறான்...

இப் படத்திற்கான விருதுகள்...

    1996, Crystal Simorgh Fajr Film Festival
    1996 Prize of the Jury San Sebastián International Film Festival
    1996 C.I.C.A.E. Award, Holden Award for the Best Script, Jury Special Prize Torino International Festival of Young Cinema
    1997, Golden Dolphin Festróia - Tróia International Film Festival


 நிச்சயம் அனைவரும் பார்க்க வேண்டிய ஒரு திரைப் படம்... ( இந்தப் படத்தை எனக்கு தந்த நண்பன் முரளிகுமாருக்கு நன்றி..)

Jun 2, 2012

தவறிய முத்தம்...

தவறிய முத்தமொன்றை
தேடியலைகிறேன்
எங்கு தவறவிட்டேன்
உத்தேசமாய் எதுவும் நினைவில்லை
கூட்டம் நிறைந்த
ஒரு பேருந்தின் நெரிசலில்
தனிமை புல்வெளியின்
பசும் நுனியில்
கடலோரத்து ஒதுங்கிய
சிறு சிப்பியில்
மழை தொடங்கிய
முதல் துளியில்
நேற்று இன்று என
தேடுதலிலே தொலைகிறது
என் நிமிடங்கள்
ஒரு ஆலமரத்தின்
விழுதுகளில்
சிறகு விரிக்கும் பறவையின்
கூறிய அலகில்
அப்பாவி மீன் ஒன்றை
குறிவைத்த தூண்டிலில்
ஒரு நள்ளிரவு பொழுதின்
விண்மீன் சிணுங்கலில்
எங்கேயும் காணமல்
பரிதவித்து ஓய்கையில்
பௌர்ணமி நிலவின்
வெள்ளொளியில்
மிதந்து வருகிறது
என்னைத் தழுவ
அம்முத்தம்
இன்னும் சில முத்தங்களோடு...

ஆறுதல்...

எனக்குத் தெரியும்
உனக்கான ஆறுதலை
உனக்கான அன்பை
உனக்கான சில நொடிகளை
மட்டுமே எதிர்பார்க்கிறாயென
எத்தனையோ அழைப்புகள்
மௌனமாய் வேடிக்கை பார்க்கிறேன்
குறுஞ்செய்திகளை புறக்கணிக்கிறேன்
அன்பை வெளிப்படுத்தும்
சில வார்த்தைகளுக்காய்
கையேந்தி நிற்கிறாய்
நானோ கண்டும் காணாதவனாய்
நீ என்னை புறக்கணிக்கப் போவதில்லை
ஒரு நாள் ஓடிக் களைத்து
ஆசுவாசப் படுத்திக் கொள்ள
உன் மடி தேடுகையில்
நீ காத்திருக்கலாம்
இது நாள் வரை எங்கிருந்தாயென
கேள்விகளோடு மறுத்தும் விடலாம்
நீ என் உலகமடி
எங்கும் சுற்றினும்
உனக்குள் சுற்றுகிறேன்
எதை தேடினும்
உன்னை அடைகிறேன்
உனக்கான கவிதைகளை
என் விரல்கள் எழுதியபடியே
நீ பெரும் கடல்
மூழ்கடிப்பதும்
தக்கை கொடுத்து பயணம்
தொடர்வதும் உன் முடிவில்
தேவைப்படும் போது
கிடைக்காத ஆறுதலும்
எவ்வகையிலும் பயனில்லை
மழையிடமும் வெயிலிடமும்
ஆறுதல் தேடி
எந்த பூவும் வேண்டி நிற்பதில்லை
நான் மழை
நான் வெயில்
நான் நீ சொல்லும் அதே பைத்தியகாரன்
நான் என் இறுதி வரை
உன்னை நேசிக்கும் அதே நான்....

பள்ளிக்கு சென்ற முதல் நாள்

இன்று காலை நானும் என் முதலாளியும் அலுவலக நிமித்தமாக அவருடைய அறையில் பேசிக் கொண்டிருந்தோம்... அப்பொழுது அவருக்கு அலைபேசியில் அழைப்பு வந்தது, நான் வெளியேற முற்படுகையில், எதிர் இருக்கையில் அமரச் சொல்லி விட்டு அலை பேசியில் பேசத் துவங்கினார். பேச்சு இன்றைய பள்ளி துவக்கம் குறித்ததாக இருந்தது. தன்னுடைய இரண்டாவது மகளுக்கு இன்று பள்ளி துவங்குவது பற்றி சொல்லி விட்டு, ஒவ்வொரு வருடமும் பள்ளி முதல் நாளில் தானே அழைத்துச் சென்று முதல் வரிசையில் அமர்த்தி விட்டு வந்ததாகவும், இந்த வருடம் தனக்கு சொல்லி விட்டு, வாழ்த்துப் பெற்று, அவள் மட்டுமே கிளம்பி விட்டதாகவும் சொல்லிக் கொண்டிருந்தார்.

மெல்ல அவரின் பேச்சு அப்பெண் குழந்தையாக இருக்கும் பொழுது, முதல் நாள் பள்ளியில் சேர்த்த நினைவுகளில் பயணிக்கத் தொடங்கியது. அழுது புரண்டு "டாடி, வேணாம் டாடி நான் உங்க கூடவே வீட்டுக்கு வரேன் டாடி" என்ற பெண்ணை சமாதனப் படுத்தி அமரவைத்து விட்டு விசும்பி அழும் பெண்ணை, சன்னலின் வழியாக பார்த்தபடி தானும் அழுது கொண்டிருந்ததை சொல்லும் போது, அவர் கண்களில் திரண்டிருந்த கண்ணீர் துளிகள் மெல்ல கீழிறங்கத் துவங்கியது...

அனைத்து பெற்றோரும் தம் குழந்தை பள்ளிக்கு சென்ற முதல் நாள் நினைவுகளை மறந்து விடுவதே இல்லை. மெல்ல மெல்ல ஒரு பொக்கிஷம் போல நினைவின் அடுக்குகளில் புதைந்து கிடக்கின்றன். சில பெற்றோர் அவர்களாகவே நினைத்துப் பார்ப்பதோடு சந்தோசப் பட்டுக் கொள்ளகிறார்கள். ஒரு சிலர் விபரம் தெரிந்த வயதில் தன் குழந்தைகளிடம் புகைப் படத்தோடு அந்நினைவுகளை சொல்லி மகிழும் நாட்களும் உண்டு. பெண் குழந்தைகள் எனில் பெரும் பாலும் பெற்றோர் திருமணம் முடிந்த பிறகு, அப் பெண்ணின் சிறு வயது புகைப் படங்களை பார்த்தபடி நினைவுகளை தங்களுக்குள் பகிர்ந்து கொள்வதைப் பார்த்திருக்கிறேன்.

மெல்ல மெல்ல வளரும் குழந்தையை, அவர்களின் கனவுகளை, அவர்களுடைய வெற்றிகளை, தோல்விகளை எல்லாவற்றையும் தங்களுடைய வாழ்வாக மாற்றிக் கொண்ட பெற்றோர்களே எங்கும் நிறைந்திருக்கிறார்கள். நான் முதல் நாள் பள்ளிக்கு சென்றது நன்றாக நினைவிருக்கிறது. என்னுடைய மூன்று வயதிலேயே பால் வாடியில் (அரசு மழலையர் பள்ளி) அக்காவுடன் அமர்ந்து அம்மா, ஆடு, இலை மற்றும் ஆங்கிலத்தில் எழுத்துகளை கற்றுக் கொண்டதன் விளைவாக நான்காம் வயதில் நான் முதல் வகுப்பில் சேர்த்துக் கொள்ளப் பட்டேன். தலையைச் சுற்றி காதைத் தொடும் வழிமுறையில் வெற்றி பெற்றதால், ஆசிரியை ஒருவரால் பிறந்த தேதி மாற்றப் பட்டு என் கல்விப் பயணம் தொடங்கியது. அக்காவும் நானும் ஒரே வகுப்பு, ஏறக்குறைய எட்டு ஆண்டுகள் இருவரும் வேறு வேறு பிரிவில் கூட மாற்றப் படவில்லை.

என் நினைவுகளில் நான் கரைய, ஒரு தகப்பானாய் எதிரில் அமர்ந்திருந்த ஒருவர் தன்னிலை மீண்டார். எப்பொழுதும் பெண்களுக்கும், அப்பாக்களுக்குமான உறவு மகத்தானது. அலுவலக பணிகளை பேசி முடித்து வெளியே வரும் போது யோசித்தேன், எப்பொழுதும் ஓரிரு ஆண்டுகளுக்கு மேல் எங்கும் நிலைக்காத நான் இதே நிறுவனத்தில் நான்கு வருடங்களைக் கடந்தும் இங்கு பணி புரிந்து வருவதன் காரணம் புரியத் துவங்கியது....