பிறப்பு கேட்காமலே கிடைத்த சாபம்...

மரணம் கேட்டும் கிடைக்காத வரம்...

Oct 28, 2011

காத்திருக்கிறான் ஒருவன்...


உனக்கான கவிதையின் முதல் வரியில்
ஒரு விதை நடப் படுகிறது
இரண்டாவது வரி தானே நீருற்றுகிறது
மூன்றாவது வரியில் முளைவிட்டு துளிர்க்கிறாய்
நான்காம் ஐந்தாம் வரிகளில்
இலைகள் பரப்பி கிளைகள் விரிக்கிறாய்
பின் வரும் வரிகள் ஒவ்வொன்றும்
பருவ மாற்றமென மாறி
பூக்களைத் தூவினாய்
கனிகளை தந்தாய்
உன் கிளையில் நீ ரசித்த இசையொன்றை
பாடிக் களைத்த பறவையென நானும்
உன்னுள் வசித்திருக்க
கடைசி வரியொன்றில் காத்திருக்கிறான்
கையில் தாலிக் கோடரியுடன் ஒருவன்...

Oct 22, 2011

நீ இல்லாத பண்டிகை நாட்கள்


என்ன தான் பண்டிகைக்கு
நீ புதிது புதிதாய் கொலுசு
மாற்றிக் கொண்டாலும்,
எனக்கு ஒரே இசையைத் தான்
தந்து செல்கிறது உன் நடை...

இருவரும் தனித் தனியே
வாழ்த்துச் சொல்லுகிறோம் எல்லோருக்கும்...
நீ எனக்கும் , நான் உனக்கும் சொல்வதாய்
நினைத்துக் கொண்டு...

இனிப்புகள் புத்தாடைகள் என
நிறைகிறது வீடு,
எங்கே இருப்பாய் என
தெருவெங்கும் அலைகிறது மனசு...

நாத்திகனாய் இருப்பதில்
இப்படியும் ஒரு சலுகை...
கொண்டாட்டங்களே இன்றி கழிகிறது
பண்டிகை தினங்கள்...

வானவேடிக்கை நிறையும் இரவில்,
வெடித்துச் சிதறிக் கிடக்கிறது,
நீ கொளுத்தி விட்டுப் போன மனசு...

வந்து வந்து போகிறது
ஏதாவது ஒரு பண்டிகை
வருடம் முழுதும்,
இன்னும் நீ மட்டும் தான் வரவில்லை
நான் கொண்டாடி மகிழ...

உன் உறவுகளோடு
நீ கொளுத்தப் போகும் மத்தாப்புகளில்
வண்ணங்களை சிதறி சிதறி
வெறுமையாய் மிஞ்சுவது
நானாகவும் இருக்கலாம்...

என் கவிதை தாள்களை
சிவகாசிக்கு அனுப்பி இருக்கிறேன்,
உன் வீட்டு வெடிகளில் வெடித்து
வாசலில் நிறைய...

உன் புன்னகையை விட
சிறந்ததொரு பூவானத்தை
எவரும் ரசித்திருக்க முடியாது...

எதுவுமே வேண்டுமென
அடம்பிடித்ததில்லை நீ...
என்னை விலகி செல்ல
வேண்டுமென்பதை தவிர...

கூடை நிறைய பூக்களைச்
சுமந்தபடி வரும் பாட்டிக்கு
நீ இல்லா இந்த பண்டிகை
ஏமாற்றம் தான்..

உன் ஈரக் கூந்தல் வாசத்துடனும்,
போலி அதட்டல்களுடனும்
விடியவே அடம் பிடிக்கிறது
எனது பண்டிகை நாட்கள்...

எத்தனையோ இனிப்புகள்
வீட்டில் அடைபட்டுக் கிடக்க,
நீ இல்லாமல் போனதால்
எறும்புகள் பட்டினி கிடக்கின்றன...

நீ ஊருக்குள் இல்லை என்பதை
அமைதியாக இருக்கும்
தெருக்களே சொல்லி விடுகிறது...

ஒவ்வொரு முறையும்
உன் வரவிற்கென காத்திருந்து
ஏமாந்து விடுகிறோம்
நானும் பண்டிகையும்...

உனக்குப் பிடித்த எல்லா பலகாரங்களும்
வாங்கிய பின் தோன்றுகிறது,
எனக்கு பிடித்த ஏதேனும் ஒன்றை
நீயும் செய்திருப்பாயென...

புத்தாடைகள் சரசரக்க
நீ வலம் வந்த வீடு
தனித்திருக்கிறது
இறக்கை முளைத்த நினைவுகளோடு...

எங்கள் ஊரில்
பட்டாசு வெடிக்க தடை செய்யப் பட்ட இடங்கள்
வௌவால் தோப்பும்,
நீ வசிக்கும் தெருவும்...

எல்லா வழிகளையும்
அடைத்துக் கொண்ட பின்னரும்,
ஏதேனும் ஒரு வகையில் கடந்து விடுகிறது
நீ இல்லா பண்டிகை நாட்கள் வெறுமையாய்...

இரவெல்லாம் கண்விழித்து
நீ போட்ட அரிசி மாவுக் கோலத்தில்,
அழகாய் இருந்தது முன்பு வந்த
இதே போன்றதொரு பண்டிகை தினம்...

தீபங்களால்
நீ அலங்கரித்த வீடு
மின்சாரத்தை வீணடித்துக்
கொண்டிருக்கிறது இன்று...

நீ என்னுடன் இல்லையென
சொல்லிக் காயப்படுத்தும்
இந்த நாட்கள்
வராமலேயே இருக்கலாம்...

Oct 15, 2011

நாட்குறிப்பு


ஒரு நாட்குறிப்பில் என்னவெல்லாம்
குறித்து வைக்கலாம்
பெரும்பாலும் நிகழ்வுகளாக
நிறைந்து விடுகிறது
பிரபலங்களின் நாட்குறிப்பு
செலவு கணக்குகள்
குறித்து வைக்கப் படுகின்றன
பலரது வீட்டில்
புள்ளிகள் வைத்து கோலமும்
வரைகிறார்கள் சில பெண்கள்
பால் கணக்கும்
மளிகை தேவைகளும்
தொலை பேசி மின்சாரக் கட்டணங்களின்
கடைசி தேதியும்
மருத்துவ பரிசோதனை தினங்களும் கூட
கவிதைகளால் நிறைகிறது
காதலர்களின் நாட்குறிப்பு
தேதிகளே இல்லையென
புலம்புமோ நடிகர் நடிகைகளின் பக்கங்கள்
அந்தரங்கங்களாலும்
ரகசியங்களாலும்
நிறைந்து யாருக்கும் தெரியாமல்
கிடக்கிறது பரணில் சில நாட்குறிப்புகள்
மறைத்து வைக்கப் பட்ட
கடிதங்களும் புகைப்படங்களும்
இடையில் இருக்கலாம்
வாங்கிய கடனுக்கு
வட்டி கட்டும் தேதிகளும்
குறித்து வைக்கப் படலாம்
நேற்று இரவு பேருந்து நிலையமொன்றில்
கடலை வாங்கும் பொழுது
சுருட்டித் தந்தார்
நாட்குறிப்பு பக்கமொன்றை
அதில்
என்றாவது ஒருநாள் கிழிக்கப்படும்
கவிதைகளை விட
அதிகமாய் என் மனது
........
........
........
........
........
யோசிக்கிறேன்
இனி
ஒவ்வொரு வருட துவக்கத்திலும்
நாட் குறிப்புகளை
பரிசளிக்க வேண்டுமா என?

Oct 13, 2011

மழையும் நீயும்...


மழை நாட்களில் எல்லாம்
அதிகமாகிறது
உன் நினைவுகள்...
இன்று பெய்த மழையைப் போல தான்
நீயும்
முதல் துளியை உணரும்
பரவசம் போல்
சாரலாய் தழுவும்
உன் நேசம்...
சிறிது நேரத்தில் சட சடத்து
நனைத்த மழையென
முழுதும் மூழ்கி விடுகிறேன்
உன் காதலின்
பெருவெளியில்...
காற்று சுழன்றடிக்கும் பொழுதெல்லாம்
வாரி இறைக்கும் சாடல்களில்
உணர்கிறேன் உன்
சில வினாடி கோபங்களையும்...
நனைந்து விட்ட பூமியென
எங்கும் நிறைந்து
விடுகிறாய் என் நினைவெங்கும்...
பூ செடிகளில் தங்கிய
நீரென மழை
முடிந்த பின்பும்
என் மீது விழுந்து கொண்டே
இருக்கிறது
உன் பிரிவின் பின்னரும்
நம் மகிழ்வின் ஈரம்...
நீ எப்பொழுதும்
மழையாகி விடுவதும்
உன்னை எதிர் பார்த்துக்
காத்திருப்பதுமாய்
காலம்
என்னையும்
வாழவைத்து விடுகிறது...

நான் தொலைத்த ஊரில்


செம்மண் புழுதிக் காட்டில்
பொங்கி வருகிறது வெயிலின் வாசம்
மழை நனைத்த இரவு முடிந்து
காலையில் பசுமை போர்த்தும்
புல் மேய இழுத்துப் போகும்
என் வீட்டு ஆட்டுக் குட்டி
வெறும் கால்களால்
வரப்புப் பாதையில் நடை
எருமைக்கென வெயிலில்
சிறு துணியை தலையில் கட்டிக் கொண்டு
புல் அறுக்கும் பாட்டி
ஈரம் காய்வதற்குள் விதைக்கப் படும்
சோள விதைகள்
எஞ்சினை சுழற்றி விடும்
அண்ணனின் லாவகம்
பக்கத்து ஓடையில்
காத்திருக்கும் நாரைகள்
மதிய நேர வேப்பமரக் காற்று
சலங்கை கட்டிய மாட்டுவண்டிப் பயணம்
மரத்தடி கருப்பராயன்
பத்து மணி பழைய சோறு
கம்புச் சோறும் மிளகாய் வத்தலும்
கற்றாழை
கள்ளிப் பழம்
பனங்கிழங்கு
அக்கா குருவி
மாலைநேர மிதிவண்டி
இரவு நேர அரிக்கேன் விளக்கு
அண்ணமார் கதை கூத்து
எத்தனை எத்தனை இழந்திருக்கிறேன்
குளிரூட்டப் பட்ட அறையில்
அலுவலக கணினியில்
வாழ்வைத் தொலைத்த படி..

சிறு துளிகள்


அம்மா
அப்பா
மனைவி
அனைவரும் வேலைக்கு!
குழந்தைகள்
பள்ளிக்கு!!
என்ன செய்து கொண்டிருக்கும்
தனிமையில் வீடு...

நேற்று மாலை
நீ பறிக்கத் தவறிய
மல்லிகைப் பூக்களுடன்
பேச வருகிறது
இரவிலும் வண்ணத்துப் பூச்சிகள்...

பூச்சாண்டிகள் இல்லாமல்
தானாகவே சாப்பிடும்
குழந்தைகள்
சீரியல் பார்க்கும்
அம்மாவுக்கு பயந்தபடி...

பேருந்து கிளம்பி விட்டது
மக்கள் கூட்டம்
சில்லறைகளின் சப்தம்
முதியோருக்கான இருக்கையில்
நீயும் நானும்
சிறிதும் கூச்சமின்றி...

மலர்களைப் பற்றி
யோசித்துக் கொண்டிருக்கும்
பொழுதெல்லாம் நினைவில் வருகிறது
எப்போதோ வெடித்து அப்பாவியின்
உயிர் குடித்த துப்பாக்கி தோட்டா...

பொய்களைப் பரப்பி விட்டு
நிஜங்களில் ஒளிந்து கொள்வேன்
வெளிவருவதற்குள்
அடுத்த பொய்களை
தயாரித்து விடுவேன்...

Oct 12, 2011

யானை


வேலையிலிருந்து திரும்பும் போது
ஏறக்குறைய பாதி இரவாகி விட்டிருந்தது
அதுவரை விழித்திருந்து கேட்கிறாள்
அப்பா யானைனா எப்படி இருக்கும்?
பெரிய உடல்
கரிய உருவம்
பெரிய காது
சிறிய வால்
தும்பிக்கை
என சொல்லி முடிக்கிறேன் நான்
பாடப் புத்தகத்தில்
எருமைக்கு பக்கத்தில் இருக்கும்
யானையின் படமொன்றை காட்டி
இதில் சின்னதா தானே இருக்கு என்கிறாள்
சரி விடு நாளை பார்க்கலாம் என சொல்லி
உறங்கச் சொல்லுகிறேன்
எனக்கு முன் விழித்துக் கொண்டு
யானை பார்க்கப் போகலாம் என்கிறாள்
சரி என அழைத்துச் செல்கிறேன்
பக்கத்து நகரத்தில் எங்கும் இல்லை
பெருமாள் கோவில் யானை இறந்து
மூன்று மாதங்கள் முடிந்துவிட்டதாம்
வேறு வழிகளே இல்லை
பழனி செல்லும் பேருந்தில் ஏறினோம்
இரண்டு பழமும் ஒரு தம்ளர் பாலும்
போதுமானதாய் இருக்கிறது அவளுக்கு
பக்கத்து இருக்கை சிறுவனிடம்
யானை பார்க்க போவதாக
சொல்லிக் கொண்டு வருகிறாள்
இரண்டு மணி நேரப் பயணம்
பாகனின் அங்குசத்தில்
பிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறது
பழனியில் யானைகள்
முதல் ஐந்து ரூபாய்க்கு துதிக்கை ஆசிர்வாதம்
பின்னர் கொடுத்த இருபது ரூபாயில்
சிறிது தூரம் யானைப் பயணமென
பயம் கலந்த மகிழ்வுடன் சிரித்துக் கொண்டே
கையசைக்கிறாள் எல்லோருக்கும்
திரும்பி வீடு வந்ததும்
இரு கைகளையும் விரித்து
அம்மா இவ்ளோ பெரிய யானை
என்று சொல்லி கட்டிக் கொள்கிறாள்
மீண்டும் பறந்து செல்கிறது
பக்கத்து வீட்டு வாண்டுகளிடம் விவரிக்கும் ஆவலில்
இனி அவள் சொல்லும் கதைகளில்
நிச்சயம் இருக்கும் ஒரு யானையும்
அதன் மீது பவனி வரும் இளவரசியும்
நாளை அவளிடம் யாரும்
ஒரு புலியைப் பற்றியோ
சிங்கத்தைப் பற்றியோ
சொல்லிவிடக் கூடாதென்ற
கவலை எனக்கு...

Oct 11, 2011

பரிதவிக்கும் கவிதை...


தோட்டத்தில் பதியமிட்ட மல்லிகைக் கொடியின்
முதல் மொட்டு மலர்ந்த நொடி
பாரம் தாளாமல் வளையும் இலையிலிருந்து
சொட்டும்
ஒரு துளி மழை நீர்
அதிகாலை புற்றிலிருந்து ஈசல்கள்
வெளிவரும் அற்புத கணம்
தூக்கத்தில் சிரிக்கும் குழந்தையின்
மெல்லிய உதட்டுச் சுழிப்பு
கதிரவனின் வெயிலில் கரையத்
துடிக்கும் பனித் துளி உருளைகள்
யாரும் கண்டுவிடாத நேரத்தில்
குட்டிக்கு பால்க் கொடுக்கும் தாய் ஆடு
நாய்க் குட்டியின் உறக்கம்
வண்ணத்துப் பூச்சியின் முதல் சிறகடிப்பு
தேனீக்களின் மலர்த் தேடல்
கிணற்றின் ஆழத்தில் ஒளிரும்
மீசை மீன்கள்
சாரைப் பாம்பொன்று
சட்டை மாற்றும் சூழல்
தொலை தூரத்தில் கூவி வரும்
நீராவி புகைவண்டி குரல்
வானமெங்கும் அலையும் மேகக் கூட்ட பறவைகள்
சிறுகல் பட்டு நெளியும் குளங்களின் வட்டங்கள்
மெல்ல மெல்ல தோகை விரிக்கும் மயில்களென
அனைத்தையும் ஒரு சேர கண்டுவிட துடித்து
அத்தனையும் இழந்துவிட்ட
பரிதவிப்பில் தனித்திருக்கிறது
உனக்கான கவிதையொன்று....

கரையும் வாழ்வு...


சில சில்லறை காசுகளுடன்
நைந்து போய்க் கிடக்கிறது நீ தந்த
இரண்டு ருபாய் நோட்டு...
இருவரும் பயணித்த பேருந்துகளின்
கட்டணச் சீட்டுகள் இன்னும்
மறக்க விடுவதில்லை கடந்து வந்த
தூரங்களையும் பாதையோர மரங்களையும்...
உன்னிடமிருந்து தெரியாமல்
எடுத்த கைக் குட்டையில்
இன்னும் வீசிக் கொண்டிருக்கிறது
உன் வியர்வையின் வாசனை...
ஒவ்வொரு தெருவிலும்
பதித்து வந்த காலடிச் சுவடுகள்
தளம் பூசப்பட்டு வெடித்துக் கிடக்கிறது
இந்த தனிமை நாட்களில்...
ஒரே ஒரு முறை உனக்கென
நான் வாங்கி வந்த மலர்ச் சரத்தின்
காய்ந்த மீதங்களை தேடுகிறேன் நினைவெங்கும்...
என்னை வெறுத்து ஒதுக்கி
நீ வாழும் வாழ்வில் ஒரு கணமேனும்
உன் புன்னகையில் ஒளிந்து கொண்டு
வெளிப்படுவேன் உனக்கும் தெரியாமல்...
எத்தனை சொந்தங்கள் இந் நாட்களில்
அந்நாளில் தந்தையென அறிமுகமானவன் நான்
அறிமுகம் தந்தவள் நீ
இருவரின் தோள்களை சாய்ந்து கொண்டு
அப்பா என்றழைத்தது நம் பிள்ளை...
காலங்கள் கடந்து விட்ட போதிலும்
முகம் கானா உன் நலம்
விசாரிக்கும் என் தாயின் கண்ணீரில்
கரைகிறது என் நாட்கள்...

Oct 10, 2011

கூடல் பொழுதொன்றில்...


எப்பொழுதும் உன் வருகைக்காய்
விழித்திருக்கிறது என் இரவு
தேய்ந்து போன நிலவொன்றின்
ஏக்கங்களை சுமந்த படி...
சிவந்து போன தடயங்களோடு
இன்னும் மீதமாக இருக்கிறது
மென்மையான உதடுகளின்
சில நொடிகள் வன்முறை...
நிலவுக்கான அல்லியாகவும்
பசித்த புலியாகவும் முரண்பட்ட நிலையில்
நானிருந்தேன் உன் நெருங்கிய
முத்தத்தின் பிடியில்...
நீ இன்னும் எதற்கு காத்திருக்கிறாய்
இதுவரை அறிந்திராத ருசிக்குத்
துடிக்கும் உன் உதடுகளில் தெரிகிறது
பகல் முழுதும் மறையும் வேட்கை...
உறக்கம் இல்லா இரவுகளின் நீட்சியில்
உனக்கென நானும் வைத்திருக்கிறேன்
கண்ணிமைக்கும் நொடிப் பொழுதில்
சம்மதிக்கும் பார்வையொன்றை...

ஆடைகள் பத்திரம்

முக நூலில் வெளிவந்த என்னை கவர்ந்த கவிதை....

நாம் எப்பொழுதெல்லாம்
நிர்வாணமாய் இருந்திருக்கிறோம்?

உலகின்பால் பிறத்தலிலும்
உடலின்பால் இறத்தலிலும்
சுத்தத்தின்பால் குளித்தலிலும்
சுகத்தின்பால் கூடலிலும்
நாம் நிர்வாணம் தரித்திரிக்கிறோம்.

சரி,
நாம் எப்பொழுதெல்லாம்
நிர்வாணமாய் உணர்ந்திக்கிறோம்?

மனைவியின் தோழி ஒருத்தி
'முகம் பார்த்து பேசுங்கள்'
என்ற பொழுது என்
மேலாடைகள் களையப்பட்டன...

கர்ப்பினியை கண்டுகொள்ளாத
பேருந்து பயணங்களில் என்
கீழாடைகள் கிழிக்கப்பட்டன

சிறுவன் பரிமாற
சிரித்துண்ட சிற்றுண்டி நிமிடங்களில்

அடிபட்டுகிடந்தவனைவிட
அலுவலக கடிகாரம்
பெரிதாய்த் தெரிந்த நொடிகளில்

கருப்பான குழந்தையென
கொஞ்சாத தருணங்களில்

இப்படி அன்றாட வாழ்வின்
கொடூர நேரங்களில்
நானே திரௌபதியாய்
என் தவறுகளே துச்சாததனாய்
மேலாடைகள் களையப்பட்டும்
கீழாடைகள் கிழிக்கப்பட்டும்
உள்ளாடைகள் கூட
ஒவ்வொன்றாய் உருவப்பட்டும்,
அங்காடிதெருவில் அலைகின்ற
நிர்வாண நாய்போல
நிற்பதுவாய் என் நெஞ்சம்
நிற்காமல் சொல்கிறது

உங்களுக்கு எப்படியென
எனக்குத் தெரியவில்லை...
அன்பாய்ச் சொல்லுகிறேன்
'ஆடைகள் பத்திரம்'....!
-த.ஜெகன்

நத்தைக் கனவு


ஒரு நீண்ட படிக்கட்டின்
ஒரு முனையில் நானும்
மறு முனையில் என் நினைவுகளுமாய்
கண் முன் விரியும் வெளியை வெறித்தபடி...
நேற்றைய பூங்காவின் மகிழ்வு
இன்று காணமல் போயிருந்தது
இடைவெளியை நிரப்பும்
கவிதைகளை சமைத்துக் கொண்டு நானும்
அதற்கான சொற்களில் உன் ஞாபகங்களும்...
கடந்து போகும் நகர்ப் பேருந்தின்
கரும் புகையை சுவாசிக்க
திணறும் மூச்சுக் குழலென
திகைத்து கடக்கிறது காலம்...
நிஜங்களை ஏற்க மறுத்து
நிழல்களோடு சண்டை பிடிக்கிறது
வாழ்க்கையை திருடும் கனவுகள்...
அனைத்தும் வேகமாய் மாறிவிட்ட உலகில்
இன்னும் நத்தைக் கனவுகளோடு
காத்திருக்கிறது உனக்கான
இரவுகளில் உதிராத சில விண்மீன்கள்...
பறவைகளின் மொழியை
இன்னொரு பறவை மட்டுமே அறியும்
சிறு நெல் மணிக்கென
காகிதங்களைப் கவ்வும் கிளிகள்
ஒரு வேளை நேசிக்கப் படலாம்
விரும்பும் சீட்டினை எடுத்தால்...
தந்திகள் அறுபட்ட வீணையென
ஒதுக்குப் புறமாய் அலங்காரப் பொருளாய்
உன் வீட்டில் நீ வைத்திருக்கலாம்
நம் நேசத்தையும் சட்டமிடப்பட்ட
புகைப் படங்களிலும்
யாரும் எடுத்து விடாத
புத்தகத்தின் இடுக்குகளிலும்...

Oct 9, 2011

பிதற்றல்கள்


தனிமையின் தீராத பக்கக்களின்
பற்றி எரியும் கூண்டுகளின் சுவர்களில்
ஒரு தேவையில்லா விசாரணை
ஒரு முறை முழுமையாய்
அழுதுவிட வினாடிகள் அற்று
வெளிபாடா வேதனைகள் அறுபட
ஒளிகிறது கனவு கொண்ட மனது
கழிவு நீர்க் குட்டையில்
நீண்ட நாள் தேங்கிய நீரின்
அசுத்தத்தில் பொறிபடும் புதிய மீன்களென
நீந்திக் களைக்கிறது தேடிய பாடலொன்று
அரூபமாய் பின் தொடரும் உன்னை
விலக்கிவிடவும் சேர்த்துக் கொள்ளவும்
வலிமையின்றி துவளும் கரங்களில்
மூன்று நாட்களுக்கு முன் பறித்த
மலரொன்றின் இடைவிடா மரணக் கேவல்
விடுதலைக்குப் பின்னரும்
சிறை வேண்டி தவமிருக்கும்
குற்றவாளியென உன்னிடம் புலம்பி
சரணடையும் புரளி பிதற்றல்கள்
யாருமே இல்லை என்றான உலகில்
இனி யாருடனும் பேசவேண்டி இருக்காது
எனக்கான ஒரு புது மொழியில்
என் கனவுகளை தேடுவேன்
கிடைத்தால் கிடைக்கட்டும்
இல்லையென்றாலும் கவலை இல்லை
உச்சிக் கிளைப் பறவையென
நீ உண்டுவிட்ட மீதக் கனிகளை விட்டுச் செல்
என் பசி பொழுதுகள் காத்திருக்கிறது
ஒரு எச்சிலின் ருசிக்கென
எல்லாவற்றையும் வாசித்து விட்டு
என்னிடமே விளக்கம் கேட்காதே
நிச்சயம் என்னிடமும் இல்லாத
ஒன்றை நானும் தந்துவிட முடியாது

Oct 4, 2011

காத்திருப்பு...


கண்கள் ஒளிரக் காத்திருக்கிறது
பூனையொன்று பாலின்
வாசத்தை நுகர்ந்த படி
நானும் காத்திருக்கிறேன்
என் பாதி உறக்கத்தில்
உருளப் போகும் பாத்திரங்களின்
சப்தங்களை எதிர்பார்த்து...

Oct 3, 2011

சாபக் கனவுகள்


உனக்குள் புதைந்து கிடக்கும்
கவிதைகளை விட நான் ஒன்றும்
பெரிதாய் எழுதி விடப் போவதில்லை
உன்னைப் பற்றி...

பிடித்திருக்கிறதா என்ற கேள்வியுடன் நான்
ஆம் என்ற பதிலுடன் நீ
இருவருமாய் காத்திருக்கிறோம்
ஒரு சந்தர்ப்பத்தை எதிர் நோக்கி...

ஒருவேளை இந்த நேரத்திலும்
உன் விரல்கள் அனிச்சையாய்
தடவிக் கொண்டிருக்காலாம்
அலைபேசியில் என் எண்களை...

உன் மெல்லிய உதடுகளை
வருடும் போது என் விரல்கள்
உதிர்ந்து விட்ட ஒரு
மயிலிறகாய் மாறி விடுகிறது...

என் கவிதைக்கான முதல் தேடல்
காலையில் உன் நெற்றியில் நான் இடும்
குங்குமத்தின் சிறு வட்டத்தில்
தொடங்கி விடுகிறது...

நாம் இருவருமாய்
இணைந்து ஒரு மழை நாளில்
பார்த்த வானவில்லில்
பதினாறு வர்ணங்கள்...

நம்முடைய வாரிசை நீ
சுமப்பதை என் தோள்களில்
சாய்ந்து கொண்டு சொன்ன போது
நான் பார்த்தது இவ்வுலகின்
அழகான வெட்கம் ஒன்றை...

இன்னும்
இன்னுமாய்
ஏராளமான கனவுகள்
கொட்டிக்கிடக்கிறது என்னில்
உன்னை சேரும் பாதைகள்
அடைபட்டு கிடக்க
வாழ்வின் சாபங்களாகவும்....

Oct 2, 2011

நானும் ஒரு பறவையும்...


எத்தனை எதிர் பார்ப்புகளுடன்
கிழித்தாலும் நாட்காட்டியில்
திரும்பியா வரப் போகிறது
உன்னோடு நானிருந்த நாட்கள்...

ஒளிந்து விளையாடும்
விளையாட்டில் நீ எப்பொழுதும்
ஒளிந்து கொள்கிறாய்
நான் தேடுவதாய் நடிக்கிறேன்...

ஒரு கவிதையாவது
எழுதி விட வேண்டும்
உன்னைப் பற்றி நினைக்காமலோ
வார்த்தைகளுக்குள் அடைக்காமலோ...

உனக்கும் எனக்குமான
இடைவெளியில் நிறையும்
கனத்த மௌனங்களிடையே
ஒரு கடலின் ஓயாத அலைகளின் ஓசை...

நமக்குப் பிறக்கப் போகும்
குழந்தைகளின் சிரிப்பால்
இன்றைய என் உறக்கத்தின்
கதவுகளை திறக்கிறேன்...

கனவின் ஒரு முனையில் நீயும்
மறு முனையில் நானுமாய் காத்திருக்க
முடிவின்றி நீள்கிறது
நம் தனிமை இரவுகள்...

என் நினைவுகளில் ஒரு
மரமும் அதில் அழகான பறவையும்
எப்பொழுதும் பறக்கலாம்
என்னை தனிமையில் விட்டு விட்டு...