பிறப்பு கேட்காமலே கிடைத்த சாபம்...

மரணம் கேட்டும் கிடைக்காத வரம்...

Feb 21, 2012

அணுமின்சாரம்...


அண்மைகாலமாக அனைத்து அறிவு சார் நண்பர்களாலும் மீண்டும் மீண்டும் கூடங்குள அணுமின் நிலைய ஆதரவு பெருகிக் கொண்டு வருகிறது.இந்திய அரசும், தமிழக அரசும் ஆளுக்கொரு குழுவினை அமைத்து அணுமின் நிலையம் மிகவும் பாதுகாப்பானது என்று ஆணித்தரமாக சொல்லப் பட்டுவிட்டது.ருஷ்ய அணுஆராய்ச்சியாளர்களும் தங்களின் அதி நவீன படைப்பை பெருமைப் படுத்தி சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள்.அப்படியே செயல்படுவதாக வைத்துக் கொண்டாலும் தமிழகத்தின் மின் தேவைகளை இது பூர்த்தி செய்துவிடுமா? இதில் பெறப் படும் மின்சாரம் எந்த் மாநிலங்களுக்கு, எந்த நாட்டுக்கு
பயன்படப் போகிறது என்பதுவும் முக்கியமான ஒன்று.

பாதுகாப்பானது, பாதுகாப்பானது என்று வானுயர ஒலிக்கிறது குரல். ஜப்பானில் இல்லாத தொழில் நுட்ப பாதுகாப்பா?புகுஷிமா அணு உலை விபத்தில் உலகிற்கு மறைக்கப் பட்ட செய்திகள் நிறையவே, குறிப்பாக உயிர் சேதம் குறித்த தகவல்கள். சுமார் இருபதாயிரம் வரை இருக்காலாம் என்று சொல்லி இருக்கிறார்கள். உண்மையில் கிட்டத் தட்ட இரண்டு இலட்சங்களை தொட்டிருக்கிறது உயிர் இழப்புகள். ஜப்பானின் மக்கள் தொகை, அவர்களின் தொழில் நுட்பம், உலக நடுகளின் உதவிகள் என அனைத்தும் இருந்தும், மிக மிக விரைவில் அணு உலை கதிர்வீச்சுகள் கட்டுப் படுத்தப் பட்ட போதிலும் அச்சிறிய நாட்டுக்கு இந்த மக்கள் தொகை இழப்பு என்பது மிக மிக அதிகமானது.சரி இந்தியாவை எடுத்துக் கொண்டால் ஜப்பானின் தொழில் நுட்பம் இங்கே இல்லை எனும் போதும் நாம் கொஞ்சம் கூட சளைத்தவர்களில்லை. என்ன சுற்றி வாழும் அப்பாவி மக்களின் அடுத்த தலைமுறையோ, அதற்குப் பின் வரும் சந்த்தியினரோ தான் பாதிக்கப் படப் போகிறார்கள். தமிழ் நாட்டில் பூகம்பமே வராது... என்ன தான் சுனாமி பேரிடர்கள் வந்த போதிலும் அணு மின் நிலையம் எந்த வித பாதிப்புக்கும் உள்ளாகாது. எந்த வெங்காயப் பாதுகாப்போ, மூன்றடுக்கு,நான்கடுக்கு அன்று வரிசைப் படுத்திக் கொண்டாலும், அதே எச்சரிக்கை ஏன் மக்கள் வாழும் எண்ணிக்கை அதன் சுற்றுப் புற மக்கள் பெருக்கம் போன்ற சாதராண விஷயங்களில் எடுத்துக் கொள்ளப் படவில்லை.அதுவும் படித்த நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த மக்களிடையே இருக்கும் பிரச்சனையே, எதற்காகவும் போராட மாட்டார்கள். தொலைக் காட்சியிலும், செய்தித் தாள்களிலும் அரசு தரும் அறிவியல் பூர்வமான விளக்கங்களை படித்து விட்டு மித மிஞ்சிய அணு அறிவால்? ஏன் இந்த வெற்றுக் கூட்டம் சில வெளி நாட்டு சக்தி( இது தனி விவகாரம்) களிடம் பணம் வாங்கிக் கொண்டு நல்ல திட்டத்தை எதிர்த்து போராடிக் கொண்டிருக்கிறது எனும் சிந்தனையில் அறிவுபூர்வமாக விவாதிக்கச் சொல்லிக் கொண்டிருக்கிறது. எனக்கும் கூட அவனவனுக்கு வரும் போது செத்து தொலையட்டும் என இருந்து விடலாம் என்று தோன்றுகிறது, என்ன செய்ய நான் அப்படி சிந்திக்கப் பழகியவன் அல்ல.


எதுவும் நடக்கவே நடக்காது என்று சொல்லி. எதாவது ஒரு விதத்தில் நடந்தே விட்டால், போபால் சம்பவம் எனக்கும் செய்தியாகவே தெரியும். ஆனால் மறுக்க முடியா உண்மைகளும் இன்று வரை கண்முன் தொடர்கிறது. இந்த நொடி பிறக்கும் குழந்தை எதாவது ஒரு குறையுடன் பிறக்கிறது. இன்று வரை அதன் கழிவுகள் முழுமையாக அகற்றப் படவில்லை. விபத்து நடந்து இத்தனை ஆண்டுகள் முடிந்தும் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் நம் அறிவாளி கூட்டங்கள்? இது வரை எத்தனை மக்களுக்கு நிவாரணம் வழங்கப் பட்டிருக்கிறது. இந்த குற்றத்திற்கு யார் தண்டிக்கப் பட்டிருக்கிறார்கள்.சரி எனக்கு அறிவியல் தெரியாது, ஆனால் இந்திய மற்றும் தமிழக அரசு சுயனலவாதிகளின் கபடங்கள் தெரியும். விஷ வாயு கசியும் காரணம் சொல்லி கைது செய்யப் பட வேண்டிய ஒருவனை பாதுகாப்பாக வெளி நாட்டுக்கு தப்ப வைக்கும் அயோக்கியர்கள் இங்கு இருந்திருக்கிறார்கள். இப்பொழுது இன்னும் அதிகமாகி இருக்கிறார்கள்.தமிழ், தமிழ் என சொல்லிக் கொண்டே தமிழர்களை அழிக்கும் நாசகாரக் கும்பல், அதை வேடிக்கை பார்க்கும் மற்றொரு கும்பல், தந்தை பெரியாரின் வழித் தோன்றல்கள் என்று சொல்லிக் கொள்ளும் இந்த இரு அயோக்கிய பதர்களும் இங்கு தான் இருக்கிறார்கள்.

எங்கு ஆபத்து இல்லை, வீட்டில் எரிவாயு வெடிக்காதா? பேருந்து கவிழாதா? ரயில்கள் விபத்துக்குள்ளாகாதா? இப்படி என்னைச் சுற்றி கேள்வி கேட்கும் கும்பல்களுடன் நானிருக்கிறேன். அப்போதைய விபத்துகள் எதிர்கால சந்ததிகளை பாதிப்பதில்லை. எதற்கும் விஷ வாயு கசிவினால் இப்பொழுது போபாலில் பிறக்கும் குழந்தைகளின் நிலை பற்றி விசாரித்துப் பாருங்கள்.இங்கு வியாபாரமாக்கப் பட்டு வரும் கல்வியைப் பற்றியோ, மருத்துவமனை கொள்ளைகளைப் பற்றியோ, நீர்ப்பாதையின் மணல் திருடப்படுவது பற்றியோ, பரமக்குடி, வாச்சாத்தி நிகழ்வுகள் பற்றியோ எந்த நடுத்தர வர்க்கத்திற்கும் கவலை இல்லை.. கொலைவெறிப் பாடலும், நயன்தாராவின் காதலுமே மிக முக்கியமான ஒன்றாக முன் நிற்கிறது. குழந்தைகள் கல்வி என்ற பெயரில் மீண்டும் மீண்டும் பணம் சேர்க்கும் இயந்திரங்களாக மாறிக் கொண்டிருக்க மகிழ்வோடு வேடிக்கை பார்க்கிறது, மிஞ்சிப் போனால் ஒரு ஐ.டி பொறியாலனை உருவாக்கி வெளிநாட்டுக்கு வேலைக்கு அனுப்பி மகிழும் மனநிலை மாறி விடப் போவதில்லை. தான், தன் குடும்பம் என்ற சிந்தனை மட்டுமே முக்கியமாகிப் போன சமூகத்தில், தனிமனித சுகங்களே பெரிதாய் கவனத்தில் கொள்ளப் படுகின்றன. இது ஒரு மன நோய் அன்றி வேறில்லை..

ஒன்று மட்டும் நிச்சயம், ஒரு பேரினவாத அரசையோ, மின் தேவை அதிகம் தேவைப் படும் பணக்கார தொழில் முதலாளிகள் கூட்டமோ நிச்சயம் இத் திட்டத்தை நிறைவேற்றாமல் விட்டு விடப் போவதில்லை.யார் போராடினாலும். அது சுயநலமோ, பொதுநலமோ தடுத்து நிறுத்தி விட இயலாது. எப்படியும் இன்னும் சிறிது நாட்களில் செயல் படத் துவங்கும் இந்த அணு உலை நிச்சயம் நம் தலைமுறையை பாதிக்கப் போவதில்லை.உங்களது குழந்தைகளோ, அவர்களது சந்ததியினரோ பாதிக்கப் படுவதை நாம் இருந்து பார்க்கப் போவதுமில்லை. வாழ்க அணு உலை. வாழ்க மின்சாரம்.

நிச்சயமாக இது அறிவியல் பூர்வமான ஒருவனின் செய்தி அல்ல, ஆனால் என் வருங்கால மனித இனத்திற்கு பூக்களை மட்டுமே பரிசளிக்க விரும்பும் ஒருவனின் அலறல் சத்தம்... அவ்வளவே...