பிறப்பு கேட்காமலே கிடைத்த சாபம்...

மரணம் கேட்டும் கிடைக்காத வரம்...

Sep 4, 2012

துயர் மிகு வரிகளை இன்றிரவு நான் எழுதலாம் ...

துயர் மிகு வரிகளை இன்றிரவு நான் எழுதலாம்
'இரவு உடைந்து சிதற, நீல விண்மீன்கள் தொலைவில்
நடுங்குகின்றன' என்பது போன்ற
துயர் மிகு வரிகளை இன்றிரவு நான் எழுதலாம்

இரவுக் காற்று வானில் சுழன்று பாடுகிறது

துயர் மிகு வரிகளை இன்றிரவு நான் எழுதலாம்
நான் அவளை நேசித்தேன். சில சமயம்
அவளும் என்னை நேசித்தாள்


இன்று போன்ற இரவுகளில் அவளை நான்
அணைத்திருந்தேன்
எல்லையற்ற வானத்தின் கீழ் மீண்டும் மீண்டும்
முத்தமிட்டேன்

அவள் என்னை நேசித்தாள். சில சமயம் நானும்
அவளை நேசித்தேன்
கரிய பெரிய அவள் விழிகளை
எப்படி நேசிக்காமல் இருக்க இயலும்

அவள் இல்லை என்பதை நினைக்கும் போது, அவள்
இழப்பை நான் உணரும் போது
துயர் மிகு வரிகளை இன்றிரவு நான் எழுதலாம்

பேரிரவு அவள் இல்லாமையால் இன்னும்
பெருகுவது கேட்கையில்
புல்வெளி மீது பனித்துளி விழுவது போல் கவிதைகள்
உள்ளத்தின் மீது படிகின்றன

காதலினால் அவளை அடைய
முடியா விட்டால் என்ன
இரவு உடைந்து சிதறி விட்டது அவள்
என்னுடன் இல்லை

அவ்வளவு தான். தொலைவில் யாரோ
பாடிக் கொண்டிருக்கிறார்கள். தொலைவில்.
அவள் இழப்பை ஏற்க என் ஆன்மா மறுக்கிறது

அவளை அடைந்து விட வேண்டுமென்பது போல
என் பார்வை அவளைத் தேடுகிறது
அன்றிருந்த நாம் முன்பு போல் இல்லை

முன்பு போலவே, அதே இரவு அதே மரங்களை
வெண்மையாக்கிக் கொண்டிருக்கிறது
அன்றிருந்த நாம் முன்பு போல் இல்லை

இப்போது அவளை நான் நேசிக்க வில்லை
உண்மை தான். ஆனால் எவ்வளவு நேசித்தேன்
அவள் செவிகளை அடைய காற்றையும் தேடியது
என் குரல்

இன்னொருவனுக்கு. இனி அவள் இன்னொருவனுக்கு
முன்னர் நான் இட்ட முத்தங்களைப் போல
அவள் குரலும் ஒளிரும் அவள் உடலும்
விரிந்த விழிகளும்

அவளை இப்போது நான் நேசிக்கவில்லை
உண்மை தான்
ஒரு வேளை நேசிக்கிறேனோ?
காதல் மிகச் சிறியது . மறத்தல் மிக நெடியது.

இன்று போன்ற இரவுகளில் அவளை நான்
அணைத்திருந்தால்
அவள் இழப்பை ஏற்க என் ஆன்மா மறுக்கிறது

இதுவே அவள் எனக்குத் தரும் கடைசித் துன்பமாக
இவையே நான் அவளுக்கு எழுதும்
கடைசி வரிகளாக இருந்தபோதும்...

- பாப்லோ நெருதா....

No comments: