அந்தி மயங்கிச் சரிந்த அப்பொழுதொன்றில்
விரல்கள் கோர்த்து நடை பழக்கும் குழந்தையென
எனை மாற்றியபடி
கதைகள் சொல்லத் துவங்குகிறான் அவன்...
அவன் கதைகள் சுவாரசியமானவை
அதன் லயங்களுக்குள்
அதன் கட்டுகளுக்குள் மெல்ல மெல்ல
தொலைகிறேன்
என்னை மறந்து சிரிக்கிறேன்
அவன் நகைச்சுவைகளில்
பிரம்மித்துப் போகிறேன்
அவன் புதிர்களில்...
சில துளி கண்ணீரையும்
கதைகளில் உருவாக்குகிறான்
என்னை அழ வைக்கும் முயற்சியில்
அவன் குரல் சிரிக்கிறது
அவன் குரல் அழுகிறது
அவன் குரல் சிலிர்க்கிறது...
அவன் கதை சொல்லியாக இல்லாமல்
கதையாகவே இருக்கிறான்
அதன் பாவங்களாக மாறியபடி
கதாபாத்திரங்களை எனக்கு அறிமுகம் செய்கிறான்
கதைக்குள் என்னை ஒரு தேவதையாக்கி
கவனமாக அழைத்துச் செல்லும்
அவன் நுட்பமும் நளினமும் அழகு...
மழை பொழிகிறது
வெயில் மணக்கிறது
விண்மீன்கள் உதிர நிலவு கரைய
எத்தனை காட்சிகள் மனச் சித்திரத்தில்
கண் மயங்கி உறங்கிப் போகையில்
மெல்லிய தாலாட்டென முடிகிறது அவன் கதை...
பிறகவனை காணவில்லை
அவன் கதைகள் நினைவிலிருக்க
அவன் மட்டும் இல்லாதிருந்தான்
பிறிதொரு நாள் உறங்கும் வேளையொன்றில்
தலையணை கட்டிக் கொண்டு
உறங்கச் செல்லும் சிறுபிள்ளையென
காதோரம் வந்து கேட்கிறான்
”எனக்கொரு கதை சொல்லேன்”...
முயலும் ஆமையுமின்றி, தொப்பி திருடும் குரங்குகளின்றி
தெனாலிராமனும் பீர்பாலும், குட்டி கபீஷும் தவிர்த்து
ஒரு கதை சொல்ல வேண்டும்
அவனுக்கே அவனுக்காய்
தலையணைக்கு பதில்
என்னைக் கட்டிக் கொண்டு உறங்கும் படியாய்….