பிறப்பு கேட்காமலே கிடைத்த சாபம்...

மரணம் கேட்டும் கிடைக்காத வரம்...

May 11, 2013

Peepli (Live) - ஒரு விவசாயியின் தற்கொலை          கருப்பு நகைச்சுவை அப்படின்னு ஒரு வகையான திரைப்பட கதை சொல்லல் இருக்கிறது. ஹாலிவுட்டில் இது போன்ற படங்கள் அடிக்கடி வந்து பட்டைய கிளப்பும். அங்கு நாட்டின் அதிபர் முதல் யாரை வேண்டுமானாலும் நடுரோட்டில் இழுத்து வைத்து சந்தி சிரிக்க வைக்கும் இயக்குனர்கள் உண்டு. அப்படிப் பட்ட திரைப்படங்கள் இந்தியாவில் சில சமயங்களில் வருவதுண்டு. மிக அழுத்தமான ஒரு செய்தியை, நகைசுச்வை ததும்ப சொல்லுவது தான் கருப்பு நகைச்சுவை (பிளாக் காமெடி). அமீர்கான் தற்போது சமூகத்தின் சில அவலங்களை இது போல் நகைச்சுவை ததும்ப, சொல்ல வந்த கருத்தை சுவையாகவும் சொல்லும் படியான சில திரைப்படங்களை இயக்கி இருக்கிறார். அப்படி ஒரு படம் தான் “பீப்ளி (லைவ்)”. இது அவரது இயக்கம் அல்ல, ஆனால் தயாரிப்பு.


        நம்ம தமிழ்நாட்டில் பாளையம், புதூர், பட்டி இப்படி முடியும் பல ஊர்கள் இருப்பது போல் மத்திய இந்தியாவில் பீப்ளி என்று முடியும் நிறைய கிராமங்கள் இருக்கின்றன. அப்படி ஒரு கிராமத்தில் நிகழும் கதை. கதை என்று எடுத்துக் கொண்டால் இன்றைய விவசாயிகளின் நிலை என்பது மட்டும் தான். அவர்கள் தங்கள் விவசாய நிலத்தை காக்க முயலுவதையும், தற்கொலை முடிவுகளையும், அதை இந்த அரசாங்கமும், பத்திரிக்கைகளும் எப்படி எதிர்கொள்கின்றன என்பது தான் காட்சிகளாக்கப்பட்டிருக்கிறது.

         நிலத்தை அடமானம் வைத்து விவசாயம் செய்யும் ஏழை விவசாயக் குடும்பம். தவணைத் தொகைகளை செலுத்தாமல் தவறி இருப்பதால், நிலத்தை விற்று விடுவோம் என அறிவுறுத்த, சொந்த நிலத்தையும், தன் குடும்பத்தையும் காக்கும் பொருட்டு, அரசாங்கம் விவசாயிகளின் தற்கொலைக்காக அறிவிக்கும் ஒரு லட்ச ரூபாயை பெற்றால் எப்படியாவது கடனை அடைத்து விடலாம் என தற்கொலை முடிவெடுக்கும் ஒரு எளிமையான விவசாயி மற்றும் அவரின் குடும்பம், கிராமத்தின் எளிய மக்கள் இவர்களே கதை மாந்தர்கள்.

           அடுத்தகாக மிக முக்கியமானது, பத்திரிக்கை உலகின் மீதான சாடல். உலகின் ஒருவர் இறந்தால் அது செய்தியல்ல, ஒரு குடும்பமே இறந்தால் காமிராவையும், மைக்கையும் தூக்கியபடி அங்கே வரும் கூட்டம், யாரோ ஒருவர் ரயிலில் அடிபட்டு இறந்தால் அது செய்தியல்ல, ஆனால் ஒரு பெட்டி கவிழ்ந்து மொத்தமாக இறந்து போனால் அங்கு சென்று செய்தி சேகரிக்கும் பத்திரிக்கை கூட்டங்கள்… இவர்கள் சாவையோ, இன்னும் பிற நிகழ்வுகளையோ தங்கள் வணிகத்திற்கான் செய்தியாகவே பார்க்கும் விதத்தை நச் என சொல்லி இருக்கிறார்கள். உணமையில் இன்றைய பத்திரிகை தர்மமும் இப்படித் தான் இருக்கிறது. பேருந்து எரிவதை படம் பிடித்துக் கொண்டே, இதைப் பத்தி என்ன நினைக்கிறீங்க என்று மைக் பிடிக்கும் கூட்டமாகவே பத்திரிக்கை உலகம் மாறி விட்டது.

         அடுத்து அரசாங்கம், மாநில அரசும், மத்திய அரசும் ஒருவர் மீது ஒருவர் மாற்றி மாற்றி குற்றம் சுமத்திக் கொள்வதையும், காவல்த் துறையும், சட்டமும் சாதாரண மக்களுக்கு செயல்படும் விதமும், அரசாங்க அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் எப்படியெல்லாம் தங்கள் பொறுப்பைத் தட்டிக் கழிக்கிறார்கள் என்பதையும் நகைச்சுவை பொங்க சொல்லியிருக்கும் படம் தான் “பீப்ளி லைவ்). 


          இனி படத்திலிருந்து, அக்கிராமத்திலிருந்து அருகிலிருக்கும் நகரத்தின் வங்கிக்கு செல்லும் தொடக்ககாட்சி, அது முடிந்ததும் வீடு, அங்கு கேட்கப்படும் கேள்வி எனத் தொடங்குகிறது. தங்கள் நிலம் பறி போவதைத் தவிர்க்க, அருகிலிருக்கும் அரசியல்வாதியை உதவிக்காக சந்திக்கச் செல்கிறார்கள் அண்ணனும், தம்பியும். அங்கு விவசாயி தற்கொலை செய்து கொண்டால் அரசாங்கம் பணம் தரும் அதனால் செத்துப் போ என்று சொல்லி அனுப்புகிறார்கள். அதை கேட்டு தற்கொலை முடிவை எடுக்கிறார்கள். திருமணமாகத அண்ணன் இறந்தால் எதுவும் கிடைக்காது என்பதன் பொருட்டு, தம்பி தற்கொலை செய்வதாக முடிவாகிறது. அந்த விசயம் வெளியில் தெரிந்து, அதன் பிறகு நடக்கும் அட்டகாசங்களே திரைப்படமாக காட்சிப்படுத்தபட்டிருக்கிறது.

           முதலில் ஊடக வியாபாரிகள் வந்து அந்தக் குடும்பத்தை பேட்டி எடுத்து, எப்பொழுது தற்கொலை செய்யப் போகிறீர்கள், எப்படி தற்கொலை செய்யப் போகிறீர்கள் என்பதை நேரடி ஒளிபரப்பாக ஒளிபரப்புகிறார்கள். அதன் பிறகு காவல்த்துறை பாதுகாப்புக்கு வருகிறது. அரசியல்வாதிகள் வருகிறார்கள். வழக்கம் போல் சிறுவயது நண்பர்கள், பக்கத்து வீட்டினர், குழந்தைகள் என அனைவரின் பேட்டிகளும் எடுத்து ஒளிபரப்பப் படுகின்றன. அரசியல்வாதிகள் சாதிப் பிரச்சனையாக மாற்ற முயலுகிறார்கள். அதிகாரிகளோ தற்கொலையைத் தடுப்பது தங்கள் கையில் இல்லை, அது காவல்துறையின் பொறுப்பு, நீதிதுறையின் பொறுப்பு என்று தட்டிக் கழிக்கிறார்கள். முதல்வர் முதல் பிரதமர் வரை அடுத்தவர் மீது பழியைப் போடுகிறார்கள். 

           இடையில், இந்த பத்திரிக்கை, டீவி கூட்டங்களால் நாடெங்கும் செய்தி பரவி விடுகிறது. கிராமம் திருவிழாக் கோலம் பெறுகிறது. கடைகள் முளைக்கின்றன. விவசாயின் ஒவ்வொரு அசைவும் படம் பிடித்து காட்டப்பட்டுக் கொண்டே இருக்கிறது. எல்லோருக்கும் அவர் எப்பொழுது தற்கொலை செய்து கொள்வார் என்பது மட்டுமே தேவையாக இருக்கிறது. இடையில் ஒரு காலை நேரத்தில் மலம் கழிக்கச் செல்லும் போது அவர் கடத்தப்படுகிறார். எங்கே என்று எல்லோரும் குழம்பித் தவிக்கிறார்கள். அவரின் மலத்தைச் சுற்றி சுண்ணாம்புத் தூள் வட்டமிட்டு, இங்கு தான் அவர் கடைசியாக மலம் கழித்தார் என்பதை தொலைக்காட்சிக்காரர்கள் படம் பிடித்துக் காட்டும் போது, உண்மையில் ஊடகங்கள் இந்த நாட்டுக்கு என்ன செய்கிறார்கள் என்பது விளங்குகிறது.

         கடத்தபட்ட விவசாயி இருக்குமிடம் தற்செயலாகத் தெரியவர, ஊடக்கூட்டம் அங்கும் குவிகிறது. அங்கு நடக்கும் எதிர்பாரா விபத்தில், அந்தப் பகுதி எரிந்து விட, இறந்த ஒருவரின் சடலத்தை எடுத்துக் கொண்டு, அது தான் அவ்விவசாயின் பிணம் என்று சொல்லி அலப்பறைகளோடு அதன் இறுதிச்சடங்குகள் நடைபெறுகின்றன. மெல்ல மெல்ல அந்த கிராமம் காலியாகிறது. இவர்கள் உருவாக்கிய குப்பை கூளங்களுடன் வெறிச்சோடிய கிராமத்தை காணமுடிகிறது. இறுதியில் மழிக்கப்பட்ட முகத்தோடு ஒரு நகரத்தில் கட்டிடத் தொழிலாளியாக அவ்விவசாயி வேலை செய்வது காட்டப்படுகிறது. கடந்த 1991 முதல் 2001 வரை 8 லட்சம் விவசாயிகள் தங்கள் கிராமங்களை, தொழிலைக் கைவிட்டு நகரத்தின் கூலிகளாக மாறி இருப்பதாகச் சொல்லி படம் நிறைவடைகிறது.

         உண்மையில் மக்களுக்கு எப்பொழுதுமே பரபரப்பான ஒரு நிகழ்வு தேவைப்பட்டுக் கொண்டே இருக்கிறது. பத்திரிக்கை உலகமும், தொலைக்காட்சிகளும் ஏன் அரசியல்வாதிகளும் கூட அந்த பரபரப்பை தக்க வைத்துக் கொள்வதையே விரும்பிகிறார்கள். ஒரு விவசாயின் தற்கொலை என்பது ஒரு நாட்டின் கேவலம். அதை ஊடகங்களும், அதிகாரிகளும், அரசியவாதிகளும் எப்படி அனுகிறார்கள் என்பதை வெளிப்படையாக இது வரை யாரும் சொன்னதில்லை. இது அந்த வகையில் மிக முக்கியமான திரைப்படமாகவே இருக்கிறது.  இது போன்ற ஊடகங்களை, அதிகாரிகளை மக்கள் புறந்தள்ள வேண்டும் என்பதும், ஒரு சாதாரண விவசாயின் தற்கொலை முடிவென்பது, எந்த விதமான துயர நிலையை அக்குடும்பத்தில் உருவாக்கும் என்பதும் நாம் கவனிக்க வேண்டிய செய்தி.

          பருவமழை பொய்த்துக் கிடக்கும் இன்றைய சூழலில், வங்கிகளிடம் வாங்கிய கடனை, பிறரிடம் வட்டிக்கு வாங்கிய கடனை அடைக்க முடியாமல் தற்கொலை செய்து கொள்ளும் விவசாயிகள் நாடெங்கும் இருக்கிறார்கள். வெறும் எண்ணிக்கை, புள்ளி விவரங்களாக அரசாங்கமும், அதிகாரிகளும் பார்ப்பதை, பரபரப்புக்குரிய விசயமாக ஊடகங்கள் சித்தரிப்பதன் பின்னால் இருக்கும் விவசாயக் குடும்பத்தின் துயரங்களை யாருமே அறிவதில்லை. சிந்திக்க வேண்டிய விசயங்களை நாம் சுலபமாகக் கடந்து விடுகிறோம் என்பதும், ஒவ்வொரு விவசாயி கிராமத்தை விட்டு வெளியேறும் போதும் இழப்பு நமக்குத் தான் என்பது அறியாத வரை, இது போன்று நகரத்தின் கூலிகளாகக் குடியேறும் விவசாயம், நெசவு இன்னும் பிற பாரம்பரிய தொழில் செய்யும் மக்களின் வாழ்வை பழிவாங்கும் கூட்டத்தில் நாமும் ஒருவராக இருக்கிறோம் என்பதை உணர்ந்து வெட்கப்பட வேண்டிய ஒன்றாகவே இருக்கும். 

      இத்திரைப்படத்தில் வரும் எந்த ஒரு கதாபாத்திரத்தின் பெயரையும் நான் இங்கு குறிப்பிடவில்லை. ஏனென்றால் இதில் காட்சிப்படுத்தபடும் விவசாயி நாடெங்கும் இருக்கிறான். இதே அரசியல்வாதிகளும், அதிகாரிகளும், ஊடகத்துறையினரும் தான் அவர்களின் சாவை வேடிக்கை பார்க்கிறார்கள். செய்திகளாக்குகிறார்கள். புள்ளி விவரங்களாக குறித்து வைத்துக் கொள்கிறார்கள். மற்ற எல்லோரையும் விட, நான் நேசிக்கும் ஊடகத்துறையின் மீது தான் எனக்கு கோபம் அதிகமாக இருக்கிறது. ஒரு தவறைச் சுட்டிக் காட்டி, மக்களோடு மக்களாக நின்று போராட வேண்டிய ஊடகத்துறை பரபரப்பு செய்திகளாக மாற்றி தங்கள் விற்பனையை, டி.ஆர்.பி யை உயர்த்திக் கொள்ளவே விரும்புகிறார்கள். அவர்கள் பாதிக்கப்படும் போது மட்டும் சமுதாயத்தின் அனைத்து தரப்பினரும் போராட வேண்டுமென்று நினைக்கிறார்கள்.

        நாம் செய்ய வேண்டியதெல்லாம், ஒரு சமூக அவலம் எப்படி நடைபெறாமல் தடுக்க வேண்டும் என்பதாகவே இருக்க வேண்டுமே தவிர, நடைபெறும் அவலத்தை பயன்படுத்தி எப்படி வாழ்வை ஓட்டுவது என்பதாக இருக்கக் கூடாது. அந்த வகையில் இத்திரைப்படம் மிக முக்கியமான ஒன்றாகவே இருக்கிறது.

       ""இந்தப்படத்தில் அந்த மனிதன் தற்கொலை செய்து கொள்கிறானோ இல்லையோ, நிச்சயம் ஒரு விவசாயி இறந்து விடுகிறான் என்பதே உண்மை... ""