பிறப்பு கேட்காமலே கிடைத்த சாபம்...

மரணம் கேட்டும் கிடைக்காத வரம்...

Mar 31, 2012

சொல்லாத நேசம்...


இன்னும் எதேனும் ஒரு கவிதையின்
வரிகளில் மறைந்து தானிருக்கிறாய் நீ
அலைகளென தொடர்ந்து வருகிறது
சொல்ல இயலா உன் நேசமும் தேடலும்
நேற்று வந்த புழுதிக் காற்றும்
வீசி எறியப் பட்ட நசுங்கிப் போன
தண்ணீர் குவளையும் சுமந்திருந்தது
அதனதன் கனவுகளில் உன்னை
வெட்கங்களால் நிறைந்த சிறுமியின்
பார்வையில் ஒளிர்ந்தவள் நீ தான்
கைகுட்டையெனும் சிறு துணியில்
அடிக்கடி துடைத்து விட முயல்கிறேன்
முகத்தில் படரும் உன் சாயலை
அரூப வெளியென என்னை சூழ்ந்து
எட்ட நின்று ரசித்த படி அலைகிறது
என்றோ முடிந்து விட்ட நிகழ்வின் நீட்சி
கொதிக்கும் காய்ச்சலோடு புரள்கிறது
ஒதுக்கி வைத்த கனவின் மீதங்கள்
விரிந்த இறகுகளோடு என்னைக் கடக்கும்
ஒரு மாமிச பட்சியொன்றை கடவுளென
கொண்டாடி மகிழ்கிறது நம்பிக்கையிலா மனது
ஏதோ ஒரு வியப்பின் குறியீட்டில்
தவிக்கிறது வாழும் கணங்களின் உயிர்ப்பு
சட சடவென மாறி விடும் அனைத்தையும்
தாண்டி மாறாதென சொல்லி
நேசித்துக் கொண்டிருக்கிறேன் உன்னை
மலர்ந்து வாடி உதிரப் போகும்
ஒரு தாமரையின் இதழ்களின் உள்ளாக
ஒளித்து வைக்கப் பட்டிருக்கலாம்
எனக்கென நீ சேமித்த அந்நேசம்...

Mar 27, 2012

அவன் அப்படித் தான்...


அவன் அப்படித் தான் இருந்தான்
எப்போதும் புன்னகைத்த படி
புதிர் ஒன்றுக்குக்கு விடை தேடிய படி
இல்லையெனில்
புதிர் ஒன்றை உருவாக்கியபடி
கிளிகளோடு பேசிக் கொண்டும்
செடிகளிடம் பூக்களுக்காக
வேண்டியபடியும்
நிலவோடு உறங்கவும்
வெயிலோடு விளையாடவும்
அவன் அறிந்திருந்தான்
அவன் மௌனமொழியால்
தாயிடம் பேசி தன்னை
உணர்த்தும் வல்லமையும்
அவனுக்கு இருந்தது
கிணற்றில் கர்ணம் போடுவான்
மிதிவண்டியில் குரங்கு பெடல்
ஒட்டுவான்
கரி துண்டில் சூரியனை வரைவான்...
இன்றோ
அவன் நிறைய கற்றுக் கொண்டான்
அச்சிட்ட காகிதங்களில்
அறிவைப் பெருக்கினான்
சில அல்ஜீப்ராக்களும்
பிதாகரஸ் சமன்பாடுகளும்
வரலாறும் பூகோளமும்
பிறகொரு நாளில்
கவிதை வாசித்துப் பழகினான்
எல்லாவற்றையும் தாண்டி
உதடுகளை தாண்டி
புன்னகைக்காமல் இருக்கவும்
இப்பொழுதெல்லாம்
தன உணர்வுகளைப்
புரிய வைக்க நிறைய
போராட வேண்டியிருப்பதை
உணர்ந்திருந்தான்...
அவன் உருவாக்கி இருந்தான்
அவன் தொலைந்திருந்தான்
அவன் தன்னைத் தானே
தொலைத்திருந்தான்....

நான், நம்பிக்கை...


நான் அங்கு இருந்தேன்
இருந்ததாக நம்பினேன்
இருந்ததாக நம்பப்பட்டேன்
என் இருப்பை நீ உணர்ந்திருக்கிறாய்
இன்றும் நான் இருப்பதாக நம்புகிறேன்
இருப்பதாக நீ சொல்லும் வரை
அங்கு நான் இருக்கக் கூடும்
ஏனெனில்
என் இடத்தில் வேறு யாரும் இருக்க முடியாது
நான் இன்னும் கூட இருக்கிறேன் எனும்
கனவில் தான் இருக்கிறேன்...

பிரதிகள்...


எதுவுமே புதிதில்லை
நீ
நான்
நம் கனவுகள்
சில கவிதைகள்
எல்லாமே...
யாரோ ஒருவர் நமக்கும் முன்னரே
கனவுகளையும்
கவிதைகளையும்
எழுதியிருக்கக் கூடும்
வெறும் பிரதிகளே நம்முடையவை
இது வரை எவருமே
எழுதி விடாத
கூறி விடாத ஒன்றை
நீயும் நானும்
சொல்லாமலே இருப்போம்
அதில் தான்
மிஞ்சியிருக்கிறது
உண்மையான கனவும் கவிதையும்...

கனவு...


ஆகப் பெரும் கனவைச் சுமந்தபடி அலைகிறேன்
அதுவோ தன்னில் சில சூரியன்களை நடுகிறது
நட்சத்திரங்களை வாரியிறைக்கிறது
ஒரு பேரலை ஒதுக்கிய சங்கென மணல் வெளியில்
மாறிக் கிடக்கிறது நானெனும் சுயம்
மெல்ல மெல்ல விரிகிறது அதன் பிரபஞ்சவெளி
எண்ணிலடங்கா நிலவுகள் தன் பாதையில்
என்னைச் சுற்ற மயங்கிச் சரிகிறேன்
பல கோள்களும் அதன் பாதைகளுமாய் நீளும் கனவில்
எதோ ஒன்றில் மழையடிக்கிறது
எதொ ஒன்றில் வேர் பிடித்து பூ பூக்கிறது
கனவுக்குள் ஒருவன் என்னைப் போலவே
தனிமையில் எதையோ தேடி அலைகிறான்
முன் பின்னறியா அவனுக்கும் இருக்கிறது
எனக்கிருக்கும் அதே முகத்தின் சாயல்
சுற்றிலும் சில் வண்டுகள் பறக்க
அவன் எதையோ பிடிக்க முயல்கிறான்
களைத்துப் போகிறான்
அக்கனவினால் நான் அழிக்கப் படலாம்
அழிவது மிக ரகசியமாய் எனக்கே தெரியாமல்
நடந்து விடக் கூடும்
ஏன் அது உங்களுக்கும் தெரியாமல் இருக்கலாம்
மெதுவாய் கண்கள் வலிக்கிறது
பாரமொன்றை சுமப்பது போல்
கனக்கிறது மனதும் தலையும்
திடுமென விழிக்கையில் தொலைவில் அலைகிறது
அப்பெருங் கனவு
அதன் கரையில் நான்
கவிதைகளால் வசியம் செய்து அக்கனவை அடைக்கிறேன்
என் முன் சிறு துகளெனக் கிடக்கிறது அக்கனவு
அதனிடம் சொல்கிறேன்
நானொரு மாபெரும் கனவு
என்னில் ஆயிரம் பிரபஞ்சங்கள்
அதில் நானே படைக்கிறேன் நானே அழிக்கிறேன்
கனவுகளும் அதில் அடக்கம்
மெல்ல மெல்ல அழிக்கத் தொடங்கினோம்
என் கனவுகளை நானும்
என்னை என் கனவுகளுமாய்...

Mar 9, 2012

அன்புள்ள அம்மாவுக்கு....


உன் எல்லா உரிமைகளையும்
மூன்று முடிச்சுக்காகவும்
பெற்றெடுத்த எனக்காகவும்
துறந்து நிற்பவளிடம் எப்படிச் சொல்ல?
அறுபதை நெருங்கி விட்ட பிறகும்
ஆடு மேய்க்க வேண்டுமென்கிறாய்
களை பறிக்கவும்
நெல் நடவும்
பருத்தி எடுக்கவும்
இன்னமும் கூட வயல் நோக்கி
காலணிகள் இன்றி தனியே நடக்கிறது உன் கால்கள்...
அதிகாலை உன் தேநீர் வாசத்தில் மட்டுமே
நான் கண்விழித்திருக்கிறேன்
நீ விற்குப் புகையில் சுடுநீர் வைக்க
குளித்து விட்டு கிளம்பி இருக்கிறேன்
......
...
..
இன்று
உன்னை விட்டு சிறு தொலைவில் இருக்கும் போதும்
காய்ச்சலில் கிடந்த எனக்கு வைத்துக் கொடுத்த
மிளகு ரசம் இன்னும் கூட நாவுக்கடியில் ருசிக்கிறது...
நீ நம்பும் தெய்வங்களை விட
நீ தான் பெரிய தெய்வம் என தெரியுமா உனக்கு,
கல்லூரிக்கு செல்லும் நாளில்
நீ கொடுத்த ஐந்து ரூபாயில்
ஒரு ரூபாயை திருப்பிக் கொடுத்திருக்கிறேன்
உன் வியர்வையின் அடர்த்தி அதிகமென,
இன்று நான் கொடுக்கும் ஆயிரங்களும்
அத்தகைய மதிப்பில்லாதவை காரணம்
என் குளிர் அறையில் வியர்ப்பதே இல்லை...
எனக்குத் தெரியும் நீ அலைந்த வெயிலில் பெற்றது
எனக்கான இந்த சுகவாழ்வென...
ஒவ்வொரு முறை கிளம்பும் போதும்
சொல்லுவாய்....
"பத்தரமா போய்ட்டுவா சாமி..."
உன் முன்னால் அழக் கூடாதென
சற்று தள்ளி வந்து அழுவேன் தனிமையில்...
இன்று உலக மகளிர் தினமாம்
உனக்கு வாழ்த்துச் சொன்னால்
உன்னிடமிருந்து யதார்த்தமாய் வரும்
"அப்படினா?"
இக் கேள்விக்கு எப்படி விடை சொல்ல...

Mar 8, 2012

கலைக்கும் காற்றாய்...


நிலவின் இருண்ட பக்கமாய்-நீ
உதாசீனப்படுத்திய என் பிரியம்
காட்டாறு அடித்து வந்த கூழாங்கற்களாய்
உருண்டு உருண்டு கடக்கும்
உன்னோடு பேசாத என் மெளனங்கள்
கருக்கொண்டும் பொழியாத
காற்றலைத்த மேகமாய்-விரவிப்போன
நீ கேட்காத என் வார்த்தைகள்
குழந்தை தட்டி விட்ட பால்சோற்று விள்ளலாய்
மண்ணில் கிடக்கும் என் நேசம்
பொங்கும் போதெல்லாம்
நெருப்பணைக்கப்பட்ட பாலாய்
ஆடை படிந்தே கிடக்கும் என் பாசம்
ஊதிப்பெரிதான பலூனில்
ஊசியாய் இறங்கும்
என்னைக் காணும் போதான
உன் முகத்திருப்பல்கள்
உதிர்கின்ற போதும் மண்ணை
முத்தமிட்டே வீழும் பவளமல்லியாய்
உனைச் சுற்றியே கவிழும் என் நினைவுகளைக்
கவலையேபடாமல்
கலைத்து விட்டுப் போகிறாய்
காற்றைப் போல்.......

மஞ்சரளிமுகம்


அந்தியின் விழிப்புகளில்
கவிதைகள் வாசித்தபடி
கரம் பற்றி நடக்கிறாய்
மஞ்சரளித் தோட்டத்தினூடே
பள்ளி உறவுகளைப் பதியம் வைக்கையில்
கருப்பு குண்டன் என
வர்ணித்துச் சிரிக்கிறாய்
கண்களைச் சிமிட்டியபடி
கோபமாய்ச் சிணுங்கும் என்னிடம்
கொஞ்சலாய்ப் பேசி
சிறகடிக்கச் செய்கிறாய்
நீ நட்ட மரத்தின் காற்றையும்
கூடடையும் பறவைகள் பேச்சையும்
கைபேசிவழி
என் செவி சேர்க்கிறாய்
பால் மாற்றி விளித்தபடி
பால்யத்துக்குள் சிக்கிக் கொண்டு
மீள மறுக்கிறோம்
வயதுகளைத் தொலைத்தபடி
உருவம் அறியா உறவின் தன்மைக்கு
ஒற்றை முகம் எதற்கு?
ஓராயிரம் உருவகங்கள் இருக்கையில்!

வார்த்தை வியாபாரி


விசித்திர மூட்டையொன்றை
சுமந்தவண்ணம் வீதியெங்கும் அலைகிறாய்
அகப்பட்டவரிடமெல்லாம் பிரித்துக் காட்டியபடி...
வசீகர எண்ணங்களை விற்றுக் கொண்டிருக்கும்
வார்த்தை வியாபாரி... நீ!
யாரும் உட்புகா உன் தனிமைத் தாழினை
உடைத்து நடுநிசியைப் பகிர்ந்தளிக்கிறாய்
எனக்கு மட்டுமாய்!
பின்னிரவில் வானவில் ஒன்றை வரவழைத்து
யாகமொன்றை வளர்க்கத் துவங்குகிறாய்...
உன் மூட்டைக்குள்ளிருக்கும் மது தோய்ந்த
வார்த்தைகளை அக்னிமேல் வீசியபடி...
மென்மொழிச் சுடரொன்று பற்றியெரிகிறது
உன்மத்தம் கொண்டபடி...
பதினான்காம் நூற்றாண்டின் இளவரசனென
முழந்தாளோடு, முத்தமுமிட்டு
உன் காதலைப் பகன்ற பொழுதினில்
வானவில்லுக்குள் வளர்சிதை மாற்றம்!
உனக்கென்னவோ மூட்டையோடு பயணிப்பது
இலகுவாகவும், பாதுகாப்பானதாகவுமிருக்க,
நானோ,
பறவை இறகை இழுத்துச் செல்லும் எறும்பாய்
உன் ஒற்றை வார்த்தையை இழுத்தபடி
தடுமாறி அலைந்தவண்ணமிருக்கிறேன்
இப்பிரபஞ்ச வெளியெங்கும்!

விரல்மொழி


சற்று நேரமாவது

உன் விழிகளை

நேர் நோக்கியிருந்திருக்கலாம்

மெல்ல இமைமூடி, இதமாக

உள் தோளில் சாய்ந்திருக்கலாம்

கேசம் கலைந்திருந்த

உன் நெற்றியில் அழுத்தி ஒரு

முத்தமிட்டிருக்கலாம்

அவசரமாய் அங்கும் இங்கும் ஓடி

பேருந்தில் எனக்கொரு

இடம் தேடிக் களைத்த

சன்னலோரக் கம்பிகளில்

கைபதித்தப் பேசிக் கொண்டிருந்த

கடைசி நொடியிலாவது

மென்மையாக உன் விரல்களை

ஸ்பரிசித்திருக்கலாம்

எப்போதும் எனக்குள்

காலம் தாழ்த்தியே

முளைக்கின்றன

கவிதைக் கன்றுகள்...

Mar 6, 2012

நிலா


தெருவில் விற்றுப்போகும்

தின்பண்டம் கேட்டு மூக்கொழுக்கியபடி

அடம்பிடிக்குமொரு குழந்தை போல்

புதுப்பித்தலை எதிர்நோக்கியிருக்குமொரு

சிதிலமடைந்த புராதனச்சின்னம் போல்

எல்லாப் பயணங்களிலும்

பயணச்சீட்டின்றிப் பயணிக்கும்

ஒரு தேர்ந்த குயுக்திக்காரனைப் போல்

தாண்டிப் போவோர் பின்னெல்லாம்

தத்தெடுத்துக் கொள்வாரோவென

ஏக்கத்துடனே வாலாட்டியபடிக் குழைந்து

பரிதவிக்கும் தூக்கியெறியப்பட்டதொரு

பெட்டை நாய்க்குட்டி போல்

கூடவே வருவேனென்று

அடம் பிடிக்கிறது நிலா.

கெட்டவார்த்தை...


அடிக்கடி மோக வார்த்தையொன்றை உளறும்
வரமளிக்கிறேனென்று சொல்லி மறைந்தான் கடவுள்
இதைப் பரிசோதிக்கப் பெரு விருப்பம் கொண்டவள்
காசி நகர வீதிகளில் அலையும் அகோரியைப் போலே
சுயம் மறந்து பிண்டம் சுமந்து திரிந்தாள்
உடல் உபாதையில் மருத்துவரைச் சந்திக்கையில்
தன்னையுமறியாமல் அவள் அந்த வார்த்தையை பிரயோகித்தாள்
ஏறிட்ட அவன் என் நீலப்படத்தில் நடிக்கிறாயா? என்றான்
நேற்று துணி வியாபாரி ஒருவனிடமும் இதையே சொல்லப் போக
அவன் இவள் கட்டியிருந்த புடவைக்கொரு விலை பேசினான்
மனநிம்மதி தேடியொரு ஆசிரமம் கண்டறிந்தாள்
யோகியொருவன் கேட்ட கேள்விக்குத் தவறாக
இதையே உளறி வைக்க அவன் முற்றும் ”துறந்து” நின்றான்
அச்சத்தில் உறைந்த அவள் வரம் தந்தவனை வரச் செய்தாள்
அவனை நிந்திப்பதற்கு வாயெடுத்த போது வார்த்தை குழறி
அவனிடமும் இதையே மொழிந்தாள்
அவனோ இந்தா பிடி சாபம் எனக்கூறி
அவளைக் கற்படுக்கையாகி தன் மேனியைச் சரித்துக்கொண்டான்...

இடமாறு தோற்றப் பிழை


சுருட்டிய மயிர்க்கற்றையென
வளைந்தும் நெளிந்தும்
குறுக்கும் நெடுக்குமாய்
சுழன்று கொண்டேயிருக்கிறாய்
நினைவறை முழுதும்
வேனிற்கால உடல் தனில்
வேர்வையாய் வழிகிறாய்
விழி பார்க்கத் தவறினாலும்
மணி அறியும் பசித்த வயிறென
வலிகளினூடே ஆறுதலாக
உன்னையே உணர்கிறேன்
பயணப்பொழுதுகளினூடே
முகத்திலடிக்கும் தென்றலாகிக்
குறுக்கிடுகிறாய்
கரம் குவித்து பிடிக்க முயல்கையில்
கண்ணடித்துப் பிரிகிறாய்
இடமாறு தோற்றப் பிழையென....

பூமராங்


சொற்களை தூதனுப்பிப் பார்க்கிறாய்
துவண்டு உன்னிடமே தஞ்சம் வந்தடைகின்றன
சொற்களை பூமராங்காக்கி
என்னை இலக்காக்குகிறாய்
ஆச்சரியமாய் அவை உன்னைத் தாக்குகின்றன
உன் வார்த்தைகளை யாசித்திருந்தவள் தான் என்றாலும்
தேவைகள் என்றுமே ஒன்றில் நிலைத்திருப்பதில்லையென்பதை
நீயும் ஒத்திசைப்பாய் என்பதறிவேன்
ஜூலை 30 வெள்ளி இரவு 11:47க்கு
என்னை சலித்து விட்டதாய் சொன்னாய்
என் அழைப்புகளைத் துண்டித்தாய்
அழகாய்ப் பிரியவே எனக்கு விருப்பமென்றேன்
அடுத்த நாள் அதுவே நடந்தது
எனக்கான உன் சொற்கள் மறுக்கப் பட்ட பிறகு
உனக்கான என் சொற்கள் ஜாதிக்காய் பலகைகளுக்குள்
புழுக்கள் நெளியக் கிடக்கின்றன
66 நாட்களுக்குப் பிறகு
இயல்பாய்ப் பேச விளைகிறாய்
இறுகிய என்னை இளக்க மறுக்கின்றன
வழிநெடுக சிதறிக்கிடக்கும்
உன் இற்றுப் போன சொற்கள்
விட்டுக்கொடுத்தலின் சுகம் வலிது
அதனால் தான் விட்டுக்கொடுத்திருக்கிறேன்
நான் விரும்பிய உன்னை உனக்கே...

Mar 1, 2012

பீதோவன் - ஒரு புதையல்...

இசை என்றாலே என்னைப் பொறுத்தவரை ராகதேவன் இளையராஜா மட்டும் தான்... எனது இரவுப் பொழுதுகளை மிக மிக ரம்மியமாக்கிய பாடல்கள் பெரும்பாலும் இசைராஜாவின் திரைப் பாடல்களே... இன்றும் கூட அலைபேசி நினைவகத்தில் பெரும்பான்மை அவரின் இசையே நிரப்பி வைத்திருக்கிறேன்... இசை என்றால் இளைய ராஜாவை மட்டுமே அறிந்தவன் நான்.. மிக சில ரகுமான் பாடல்களும் பிடித்தமானவையே... இதில் என்ன வினோதம் என்றால் எனக்கு இசை என்றால் என்னவென்றே தெரியாது... வெறும் ரசனை மட்டுமே... சுருதி, லயம், தாளம் இன்ன பிற சங்கதிகள் பற்றி எந்த விஷய ஞானமும் துளி கூட இருந்ததில்லை.... வெறுமனே ரசிப்பதும், அதன் போக்கிலேயே மகிழ்வதும், சோகமாவதும், சிரிப்பதும், ஆடுவதுமாய் என்னை முழுமையாக ஆக்கிரமிப்பு செய்தவை ராஜாவின் பாடல்கள்...

சமீபத்தில் எஸ். ராமகிருஷ்ணனின் இருள் இனிது... ஒளி இனிது வாசித்துக் கொண்டிருந்தேன்... இசை கலைஞர்கள், எழுத்தாளர்கள், ஓவியர்கள் போன்ற கலைஞர்களை பற்றி வெளியான உலக திரைப் படங்களைப் பற்றி மிக அருமையாக எழுதி இருந்தார்... அதில் தான் "பீத்தோவனின் காதல்" இருந்தது... அதுவரை பீத்தோவனின் இசை என்று விண்டோசில் இருக்கும் இரண்டு மூன்று இசை கோர்வைகளை கூட என்னால் சரியாக கேட்கவில்லை என்பது மறுக்க முடியா உண்மை...அது போக பீதோவன் ஒரு காது கேளாதவர், அவருக்கு வெளி உலகம் அறியா காதல் இருந்தது என்பது வரை மட்டுமே தெரியும்...

பீதோவனைப் பற்றிய திரைப் படம் IMMORTAL BELOVED பற்றி சொல்லும் முன் அவரது தனிப் பட்ட வாழ்க்கைப் பற்றியும் சொல்லி இருந்தார் எஸ்.ரா. கூடவே இடை செருகலாக மொசார்ட் பற்றிய AMADEUS திரைப் படம் பற்றியும் ... அந்த நூலில் பீதோவன் வாழ்வைப் பற்றிய சிறு குறிப்பையும், திரைப்படம் குறித்த தனது பார்வையையும் அழகாக சொல்லி விடுகிறார் எஸ்.ரா. ஆனால் எனக்குள் எஸ்.ரா அறிமுகப் படுத்தியது பீதோவன், மொசார்ட் என்னும் இரு இசை மேதைகளின் இசையை... இணையத்தில் பதிவிறக்கம் செய்து முதலில் பீதோவனை கேட்ட்கத் தொடங்கினேன்.. அது வரை இசைக்கு பாடலின் வரிகள், அதன் பொருள் மிக முக்கியம் என்று சொல்லி வந்தவன் நான்... வெறும் இசை பொருளற்றுப் போய்விடுகிறது, இசையையும் பொருளையும் மிக அற்புதமாக கோர்த்ததே இளைய ராஜாவின் மிகப்பெரும் சவால் என்று நம்பிக் கொண்டிருந்தேன்...அனால் என் முடிவுகளை பொடிப் பொடியாக்கி, மௌனமாய் என்னை மாற்றி வைத்தான் பீதோவன். மெல்ல மெல்ல இசை உருமாறி உயிருக்குள் ஊடுருவதும் அதை தள்ளி நின்று நானே வேடிக்கை பார்ப்பதுமான விந்தை... இன்றும் பீதோவன் கொண்டாடப்படுவதன் காரணத்தை மிக மிக காலம் கடந்து அறிந்து கொண்டிருக்கிறேன்...மூன்லைட், சிம்போனி 9.. போன்ற மிகச் சிறந்த இசைக் கோர்வைகளை காது கேளா ஒருவரால் எப்படி இவ்வளவு ரம்மியமாக உருவாக்க முடிந்தது என்று புலம்ப வைத்திருக்கிறான் பீதோவன்... எத்தனையோ அவமானங்களையும், சிறுவயதில் தனக்கு ஏற்பட்ட ஏமாற்றங்களையும், வலிகளையும் தாங்கி கொண்டே தனது இசை பயணத்தை தொடர்ந்திருக்கிறார் மாபெரும் இசை மேதையான பீதோவன்...அதுவே அவரது இசையில் வெளிப் படுகிறது... உணர்வுகளை பாடிய, இசைத்த ஒருவனின் வெற்றியே பீதோவன் என்னும் தனி மனிதனின் வெற்றி...

அப்புறம் மொசார்ட்... பீத்தோவனின் தந்தை ஒரு இசை பாடகர்.. தனது மகன் மொசர்ட்டைப் போல் பெரிய இசைக் கலைஞனாக வர வேண்டும் என்ற ஆசையில் தான் இசை கற்றுக் கொடுத்திருக்கிறார்... மொசார்ட் மற்றுமொரு சகாப்தம்.. பீதோவனுக்கு முந்தையவர் எனினும் அவரது இசை சொல்ல முடியா மகிழவையும் அதே சமயத்தில் நம்மில் எதோ இழந்த ஒன்றை நினைவு படுத்தவும் செய்கிறது... அந்த மகிழ்வில் இனம் புரியா சோகத்தையும் படரச் செய்கிறது...

இசையை மட்டுமே தான் வாழ்நாளென கொண்டிருந்த இரு இசைமேதைகளை அறிமுகப் படுத்தியது இருள் இனிது... ஒளி இனிது...நன்றி எஸ்.ரா வுக்கு...

எஸ்.ராவின் வரிகளில் சொல்வதெனில்... "இவ்வுலகை சந்தோசப் படுத்த நினைத்த எல்லோரின் பின்னாலும் மறைந்திருக்கிறது சொல்ல இயலா துயரங்கள்..."
உண்மை தான் நாமும் இசையிடம் மயங்கி நிற்பது நாம் எதோ ஒரு வகையில் காயம் பட்ட மனதை மயிலிரகென வருடுவதால் தான்... இசை நம்மை மகிழ்விக்கிறது,துயரங்களிலிருந்து மெல்ல மெல்ல விடுவிக்கிறது... மறக்க முடியாத சில உறவுகளின் நேசத்தை மீண்டும் மீண்டும் நினைவு கொள்ள வைத்து, அவர்களே நம் வாழ்வெங்கும் நிறைந்திருக்கிறார்கள் என்பதை நம்மிடம் சொல்லிக் கொண்டே இருக்கிறது....