பிறப்பு கேட்காமலே கிடைத்த சாபம்...

மரணம் கேட்டும் கிடைக்காத வரம்...

Feb 27, 2013

வர்ணங்கள் அழகானவை

வண்ணங்களைச் சுமந்து
அங்குமிங்கும் அலைந்தபடி இருந்தன
அவ்வண்ணத்துப் பூச்சிகள்
பனித் துளிகளில் கரையாத
மழைக் காலத்தில் சாயமிழக்கா
அவ்வர்ணங்கள் அழகானவை
பறக்கும் பூக்கள் அவை
மிதக்கும் பூக்கள் அவை
சிறகடிக்கும் பூக்கள் அவை
தும்பை செடி தேடி தன் உறிஞ்சு குழல்களால்
தேனெடுக்கும் அழகில்
காலம் மறந்திருக்கிறேன்
அதே தும்பைச் செடிகளால்
துரத்திச் சென்று அமிழ்த்திப் பிடித்திருக்கிறேன்
இறகுகளைக் கையில் பற்றி
துடிப்பதை ரசித்திருக்கிறேன்
மீண்டும் பறக்க விடுகிறேன்
மீண்டும் பிடிக்கிறேன்
அடையாளமென
விரல்களில் தங்கியிருக்கிறது
கருப்பும் சிவப்புமாய் அதன் வர்ணங்கள்
பனித் துளி கரைக்காததை
மழைத் துளியில் சாயமிழக்காததை
எப்பொழுதும்
மனித விரல்கள் சாத்தியப்படுத்துகின்றன
தன் குரூரங்களால்...

போலீஸ்காரனின் அந்தக் கழி!முகம் மூடியிருக்கும் ரிக்ஷா ஓட்டியே!
உனக்கு பயந்த சுபாவம் எனத் தோன்றுகிறது
வெயில் பொறுக்காமல் கொஞ்சம் ஓய்வு எடுக்கிறாய்
ஆனால் எனக்கென்னவோ உன்னை நினைத்துக் கவலை
இந்த நேரத்தில்
மினுதாங்கின் நடுவில்
உன்னைப் பார்த்த கணமே
மனத்தை உலுக்கிய வேறொரு நிகழ்வு
நினைவுக்கு வருகிறது.
கவனமாகக் கேள்
இது உன்னைப் போன்ற இன்னொருவனின் கதை
எதற்கெடுத்தாலும் தன் விதியை
நொந்து கொள்ளாத ஒருவன்
உன்னைப் போல
தைரியமான இளைஞன்
இன்றுபோல் அன்றும் தகிக்கும் சூரியன்
இதே பாலத்தின் தெற்குக் கோடியில்
ஓய்வெடுக்க ரிக்ஷாவில் உட்கார்ந்திருந்தான்
அவன் அருகே வயதான மற்றவர்கள்
அந்த கணம்
கிழக்கிலிருந்து வந்த லாரியில் போலீஸ்காரர்கள்
வண்டியின் வேகத்தைக் குறைத்ததும்
முன் பகுதியில், இடது மூலையில்
இருந்த கான்ஸ்டபிள் எழுந்து, கழியை எடுத்து
அடித்தான்
நிறுத்தாமல் ஒன்று, இரண்டு, மூன்று முறை
! எப்படிச் சிரித்தார்கள்
அந்த லாரியில் இருந்தவர்கள்!
வெட்கத்துடன் அவன் தலை குனிந்தான் வலியுடன்
வலிமை வெற்றிபெறும் இவ்வுலகில்
அர்த்தமற்றுப் போன வாழ்க்கை வாழும்
அந்த இளைஞன்
வலி தாளாமல் முதுகை வளைத்தபடி
பாலத்தைக் கடந்துபோனான் ரிக்ஷா ஓட்டியவாறு
மேற்கை நோக்கி
ஏன்தான் அங்கே வந்தேனோ என்று நொந்தபடி
இதயம் கனக்க
அன்று நான் பார்த்த
போலீஸ்காரனின் அந்தக் கழியைப்
படைத்தது யார்?

மினுதாங்: மணிப்பூரின் தலைநகரான இம்பாலின் துரெல் நதி மேல் உள்ள பாலத்தின் பெயர்.

- இரோம் ஷர்மிளா (தமிழில் அம்பை)

காதல்.என் அன்பு என்று நான் குறிப்பிடும் நீ
தாங்க முடியாத சுமையாய்
என் தசைநார்களில் புகுந்து கொண்டிருக்கிறாய்
இனிமேல் என்னால்
வேறு யார் தரும் அன்பையும்
ஏற்க முடியாது
கனமில்லாத இந்தப் பாத்திரம்
அதன் விளிம்புவரை
நிரம்பியாகிவிட்டது
என்னிடமிருந்து வெகு தூரம் போய்விடு
என் நலன் பற்றி இனி விசாரிக்க வேண்டாம்
காலப் புயல் என்னை அடித்துச் சென்றால்
நான் நம்பியது அவனைத் தான்
என் விதியை நிர்ணயிக்கும்
அந்த மேலான் ஒருவனைத் தான்
என் பலத்தையும் பலவீனத்தையும் சோதிக்க
அனலில் இடப்பட்ட வாழ்க்கை என்னுடையது
காலமெல்லாம் உடனிருக்கும் நண்பனுக்காக
என் மனம் ஏங்குகிறது
யார் ஏற்றாலும் சரி
ஏற்காவிட்டாலும் சரி
அவன் தான் என் வாழ்க்கையின் சாரம்
மரியாதையுடன்
மானத்துடன்
வாழ விழைகிறேன்
என் விழிகள் நிரந்தமாக மூடும்போது
என் ஆத்மா வானத்தில் சிறகடிக்கும் போது
எனக்காகக் காத்திரு
என் அன்பே.

- இரோம் ஷர்மிளா (தமிழில் அம்பை)