பிறப்பு கேட்காமலே கிடைத்த சாபம்...

மரணம் கேட்டும் கிடைக்காத வரம்...

Aug 8, 2011

உயிர்க் கோலம்










நகரமும் அல்லாத கிராமத்தின் பழமை தொலைத்த என் ஊர்...விடியற் காலை... பனி பொழியும் இந்த நாளின் துவக்கத்தில் வெளியூர் பயணம்.... தெருவெல்லாம் அமைதியாய், இரவு நேர தெரு விளக்குகள் சில எரிந்தும் எரியாமலும்... குளிருக்கு நான் பிரத்யேகமாக வேறு உடைகள் அணிவதில்லை. மெல்லிய குளிர் ஒரு அனுபவம்... மெல்ல உடலில் ஊடுருவி, முழுதும் ஆக்கிரமித்து, அமைதியாய் ரசிக்கவைக்கும் ஆனந்தம்.... ரயில் பயணங்களில் ஜன்னலோர இருக்கை போல... இரண்டு தெருக்களை தாண்டி நடக்கிறேன்... ஒரு இளம் பெண் தான் வீட்டு வாசல் தெளித்துக் கொண்டிருந்தாள்... மனம் லயித்துப் பார்த்துக் கொண்டே கடந்து போகிறேன்... பேருந்து நிறுத்தம், கூட்டமின்றி வந்தது ஒரு அரசு பேருந்து... அங்கிருந்து நகரப் பேருந்து நிலையம், மறுபடி ஒரு நீண்ட பயண தொடக்கம், இடையில் நுரையீரலை புகையால் நிரப்பிக் கொண்டேன்...

பேருந்து வெறுமையாக இருந்தது... இரண்டே பேர்... ஓட்டுனர், நடத்துனர் என்னோடு சேர்த்து மொத்தம் ஐந்து பேர்... எப்பொழுதும் போல எனக்குப் பிடித்த ஜன்னலோர இருக்கை... சில அமைதியான நிமிடங்கள்... நகரம் விட்டு வெளியே வந்திருந்தது பேருந்து... என் நினைவுகள் காலையில் தண்ணீர் தெளித்துக் கொண்டிருந்த பெண்ணை சுற்றத் துவங்கியது... இதே போல் நான் வெகு நாட்கள் வாழ்ந்திருக்கிறேன்... குளிர் காற்று முகம் வருட,முன்னோக்கி நகரும் பேருந்தில் பின்னோக்கி நகர ஆரம்பித்தன என் நினைவுகள்....

அது அவளின் கிராமம், பெயர் என்று ஒன்று இருந்தாலும் என்னைப் பொறுத்தவரை அது அவளின் கிராமம். அடிப்படை வசதிகள் கூட முழுமையாய் சென்றடையாத அந்த மிக சிறிய பகுதி நகரத்திலிருந்து கிட்டத் தட்ட முப்பது கிலோமீட்டர்களில் இருந்தது. நீரோடையின் சலசலப்பு, மரங்களின் தூய்மையான காற்று, மதிய நேர வெயிலோடும் கூட குளுமையை பரப்பி நிற்கிறது உனது கிராமம், உன்னை வளர்த்த கிராமம். நீ நடந்த தெருக்களும், நீர் பிடிக்கும் தெருக் குழாய்களும், கிணற்றடியும் என்றும் உன் வரவிற்காக காத்துக் கொண்டே இருந்தன. உன் வீட்டின் முன் ஒரு பெரிய வேம்பும், அதனால் உன் வீடு வாசலில் படரும் நிழலும், அதில் வசித்த பறவைகளும், நிழலில் படுத்துறங்கும் நாயும் காணாமல் போயிருக்கும் இந்நாட்களில்....என் நினைவில் நீங்காமல் இருக்கிறது நம் முதல் சந்திப்பு, அது என்னையே எனக்கு அறிமுகம் செய்த முதல் பயணத்தின் தொடக்கம்.. ஒரு மலையின் குகைக் கோவில் ஓவியங்கள் போல மறையாமல் இருக்கிறது நம் நினைவுகள்...

அந்த அதிகாலையில் நான் பணிக்கென தனியே நடந்து வருகையில் உன் வீட்டு வாசலுக்கு நீ நீர் தெளித்துக் கொண்டிருந்தாய். அதிகாலை மண் வாசனை புறப்பட்டு என்னை மென்மையாய் வருடிச் சென்றது. உன் விரல் பட்ட நீர்த் துளிகளெல்லாம் பனித் துளிகளாகவும், விரல் பட காத்திருந்த துளிகளெல்லாம் பன்னீர்த் துளிகள் போலவும் இருந்தன.உன்னை கடந்த அந்த நொடியில், தலை குனிந்தவாறு உன் விரல் பட்ட நீர்த் துளிகள் என் மீது பட்டுவிட தயங்கி நின்றேன். நிமிர்ந்து நீ என்னைப் பார்த்த அந்த பார்வையில் கோரப்பட்ட மன்னிப்பு, சற்றே மிரண்ட மானின் பரிதவிப்பு இரண்டுமாய்.. நேர்கோட்டில் சந்தித்த பார்வையை தவிர்க்க வேண்டி நீ தலை குனிந்தாய்.. அழகிய மலரொன்று அதிகாலையில் தலை குனியுமா என்ன... முகம் பார்த்து ரசிக்க முடியா ஏமாற்றம் எனக்கு...

அடுத்த நாளும் அதே அதிகாலையில் மீண்டும் வருகிறேன், நிகழ்ந்து விடாதா நம் அடுத்த சந்திப்பு என்கிற பதைக்கும் மனதோடு.ஆனால் இன்று நீ வாசலுக்கு தெளித்துக் கொண்டிருந்தது பசும் சாணம் கலந்த நீர். என் ஆடை மீது பட்டு, புது வண்ணம் கொண்டது மேல் சட்டை.. நிமிர்ந்து பார்த்தேன், இம்முறை நீ நிற்கவில்லை, பதற்றத்துடன் வீட்டுக்குள் ஓடினாய்.. திரும்பி அறைக்கு வந்து வேறு உடை மாற்றி திரும்புகிறேன், வாசலில் நீ... உன் வீடு கடக்கும் பொழுது ஒளிந்து கொண்டு, சென்ற பின் வந்து நின்று பார்த்துக் கொண்டிருந்தாய். திரும்பி முகம் பார்த்தேன், இந்த முறையும் தலை குனிந்தாய் சிறு புன்னகையோடு... பின்னொரு நாளில் தான் தெரிந்தது, முதலில் நான் அணிந்து வந்த உடையின் நிறம் உனக்கு பிடிக்காது என்று... அதிலிருந்து அந்த மேல் சட்டை அணிவதில்லை நான்..

அடுத்தடுத்த நாட்களிலெல்லாம் நீ நான் வரும் முன்னதாகவே நீர் தெளிப்பாய், உன் கைகளில் கோலப் பொடிகளுடன் வர்ணமாய் மாறிக் கொண்டிருக்கும் உன் வாசல். சில பண்டிகை நாட்களில் தெரு முழுதும் வண்ணமயமாய்... கோலத்தின் இறுதியில் நீ எழுதிப் போகும் நல்வரவு எனக்கானது என்று எனக்குத் தெரியாமலா போகும்...ஆர்ப்பரிக்கும் மனதோடு அலைந்த நாட்கள் அவை. முதலில் புள்ளிகள் தொடங்கும் போதே நம் கருவிழிப் புள்ளிகளும் சந்திக்கத் தொடங்கின. நம் பார்வையின் சந்திப்பில் பல நேரங்களில் சிதறிப் போயிருக்கிறது நீ வைக்கும் கோலப் புள்ளிகள். சில நேரம் மிதிக்காமல் செல்ல வேண்டி நான் தயங்கி நிற்கும் பொழுது, எழுந்து நின்று வழி விடுவாய். அப்பொழுது தான் பார்ப்பது போல் பார்ப்பேன், அதிகாலை வானம் சிவக்கிறது உன் முகத்தில். வாசல் கோலங்களை விட்டு உன் முகத்தின் அழகுக் கோலத்தை ரசிக்கத் தொடங்கிய தினம் அன்று... தினமும் வழக்கமாகிப் போனது உன் முகமும், வாசல் வர்ணங்களும்...

இப்பொழுதெல்லாம் நான் அதிகாலை விடியலுக்கு காத்திருக்க, தவமிருக்க ஆரம்பித்தேன். உன்னைக் காணும் அந்த நொடிகளுக்காக நாள் முழுதுமாக காத்திருக்கிறேன் என்ற உண்மை என்னில் உணர்கிறேன்.. சற்றே முன்னேற்றம் பெற்று புள்ளிகளிலிருந்து வளைவுகளுக்கு வந்திருந்தது உன் கோலம்.பார்வைகளிலிருந்து புன்னகைகளாய் உரு மாறியிருந்தது நம் உறவு. தினமும் அதிகாலை நேர பறவையின் குரல்களும், சிவந்த கதிரவனின் ஒளியும் நம்மை மெதுவாக ரசிப்பது போல இசையும் ஒளியும் மனதில் காதலென குடிகொண்ட அந்த அற்புத மணித் துளிகள்.காதலா இல்லை ஈர்ப்பா என உணரும் முன்னரே, என் பணி மாற்றம் காரணமாய் வேறு இடத்திற்கு மாற வேண்டி வந்தது... அன்று நம் கடைசி சந்திப்பு.. அன்றும் அதிகாலை தான். என் கையில் வழக்கத்திற்கு மாறாக புதிதாய் பயணப் பெட்டி. அன்று நீ அப்பொழுது தான் நீர் தெளித்துக் கொண்டிருந்தாய். உன்னைக் கடக்கும் பொழுது வேண்டுமென்றே நின்றேன், கைகளில் மட்டுமன்றி, கண்களிலும் நீர்த் துளிகளோடு நீ. இருவர் கண்களிலிருந்தும் தானாக விழுந்த துளிகளில் உன் வீட்டு வாசல் ஈரமாகி கொண்டிருந்தது...

அன்றிலிருந்து பண்டிகை நாட்களைத் தவிர வேறு நாட்களில் நீ கோலமிடுவதில்லை என்றும், உன் தாய் தான் தினமும் வாசலில் நீர் தெளிக்கிறார்கள் எனவும் நண்பனை விசாரித்த பொழுது தெரிந்து கொண்டவை. கனத்து போன இதயம், புரட்டி போட்ட காலம், பணி மாறுதல்கள், பயணங்கள், பல்வேறு நகரங்கள்.. எதிலும் மறக்க முடியா உன் நினைவுகள்... ஒரே ஒரு முறை உன் கிராமம் வந்தேன். நீயில்லாத கிராமம் அது...

வெகு நாட்கள் கழித்து உன் கிராமத்தில் நான். அதே அமைதிதான் ஆனால் இதில் அழகில்லை. வெறிச்சோடிக் கிடந்தன தெருக்கள். பொதுக் கிணறு குப்பைத் தொட்டியை மாறிக் கிடந்தது. வீடு வீடாய் குழாயில் நீர் வந்து சேர்ந்திருந்தது. தெருக் குழாய் மட்டும் குற்று செடிகள் சூழ, கள்ளி செடிகள் வேலியாய் மாறிக் கிடந்தது. பூட்டிக் கிடந்தது உன் வீடு, காணாமல் போன மரத்துடன் முன் வாசல். சில வருடங்களுக்கு முன் உனக்கு திருமணம் நடந்ததும், பிறகு தாய் இறந்து போனதுமாய் உன்னை பற்றிய செய்திகளை கேட்காமலேயே சொல்லிக் கொண்டு வந்தான் நண்பன்... பல ஆண்டுகளாக நீர் தெளிக்காமல் வறண்டு கிடந்தது உன் வீட்டு வாசல்.. அன்றொரு நாள் நீ வரைந்த கோலம் ஒன்றையும், நல்வரவு வார்த்தைகளையும் அங்கே பொருத்திப் பார்த்து கண்ணீருடன் நிற்கும் என்னை தோள் தட்டி ஆறுதல் சொல்லும் நண்பனுக்குத் தெரியுமா என்ன? உன் கோலங்களுக்கு உயிர் உண்டு என்பது....


நடத்துனர் தோள் தட்டி எழுப்புகிறார். தம்பி பேருந்து நின்று பத்து நிமிடமாகிறது என்று... மன்னியுங்கள் சார்.. உறங்கி விட்டேன் என்று பதிலுரைத்து விட்டு கிழே இறங்கி தேடுகிறேன் கோலமிடப்பட்ட வாசல் ஒன்றை இந்த பெரு நகரத்தில்...

தாமரை






தாமரையை பற்றி கவிதையொன்று
எழுதச் சொன்னாய்.....

தாமரைப் பூவை
தாமரைப் பூ என்றே அழைப்பதைத் தவிர
வேறென்ன சொல்லி விட முடியும்....
சில நேரங்களில் வண்ணங்களைப் பற்றியோ
கோர்க்கப்படும் சரங்களிலோ தாமரை பற்றி
சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்
ஆனால் நானோ
தாமரை பூத்த குளங்களைப்
ரசித்துக் கொண்டிருக்கிறேன்...
இளஞ் சிவப்பு, ஊதா, வெண்மை என
பல தாமரைகள் உண்டு
நான் ரசித்ததென்னவோ
அடர் சிவப்பில் குருதியின் நாளங்களை
கொண்ட மலரொன்றை...


தன் இரு புறங்களிலும்
நீர் ஒட்டி விடாத இலைகளை பரப்பி
அழகான குழந்தை போல இதழ்
விரித்துச் சிரிக்கிறது,
எப்பொழுதும் குளிர் நீரில்
இருப்பதால் என்னவோ அதி மென்மையாய்
விரல்களால் தீண்டவும் பயம் என்னில்...
நடுங்கும் கைகளோடு நான் வருடும்
வேளையொன்றில்
தேனுண்ணும் பறவையென மாறி
சிறகடிக்கிறது ஒளிந்து கொள்ளும் மனம்....
சில வக்கிர மனங்கள்
பறித்து சூடி தங்களை அழகு படுத்திக்
கொள்ளும் பொழுது
தாமரைப் பூக்கள் பூக்களாய் இருப்பதில்லை
வெறும் காகிதப் பூக்களாகவே,
என்னில் என்றும்
பூக்களையும் நீர் நிலைகளையும்
பிரிதரிந்தவனில்லை
வெறும் இதழ்களை நம்பி வந்தவன்
வேர்களில் சிக்கி தவிக்கிறான்
நான் வேர்களை நம்பியவன்...
எல்லோரும் சொல்வது போல்
எல்லாமே பூக்களுமே ஒன்று அல்ல
ஒரு பூவின் வாசனையை
வேறு ஒரு பூவிடம் தேடுபவன் அறிவிலி
நான் ஒரு ரசிகனே
எனக்கென மலர்ந்த
தாமரையை ஒன்றை
அதன் இதழ்களை
அதன் பரந்த இலைகளை
நீர் மறைத்த வேர்களை
செம்மை பரவிய அதன் நிறத்தை....


இனி என்ன,
தாமரைப் பூவை
தாமரைப் பூ என்றே அழைப்பதைத் தவிர
வேறென்ன சொல்லி விட முடியும்....
தனக்கான சூரியன் எதுவென்று
தாமரைக்கு தெரியும்....
என்னவளுக்கு சொந்தமாய்
இருக்கிறது ஒரு தாமரையும்
ஒரு ரோஜாவும்...