பிறப்பு கேட்காமலே கிடைத்த சாபம்...

மரணம் கேட்டும் கிடைக்காத வரம்...

Jun 30, 2012

மீட்பு...

மிகுந்த கவலையோடுதான்

நீ பேசிக்கொண்டிருந்தாய்..

அவிழ்க்க முடியாத முடிச்சுகள் நிரம்பிய

சிக்கலின் மையத்தில் நின்றாய்..

.

எங்கோ தொலைந்துபோயிருந்த தீர்வின் முனையை

என்னால் கண்டுபிடிக்க முடியுமென்று தோன்றவில்லை

என்னால் தீர்க்கமுடியுமென்ற நம்பிக்கையில்

நீ வந்திருப்பாய் என்றும் தோன்றவில்லை..

யாரிடமாவது சொன்னால்

ஆறுதலாயிருக்குமென்று வந்திருக்கலாம்..

.

தோளின் முனையில் நழுவத்துடிக்கும்

முந்தானை பற்றியோ

அது விலகியிருப்பதால் தெரியும்

அங்கங்கள் பற்றியோ

உனக்கு எந்தக் கவணமும் இல்லை

உன் வேதனையின் தீவிரம் அப்படி.

.

ஆனால்..

என் கவணம் முழுவதும் அதில்தான்.

அந்த அறைக்குள்

இரவின் கணமும் மார்கழியின் குளிரும்

நொடிக்கு நொடி கூடிக்கொண்டேயிருந்தன..

.

திடீரென்று நீ விசும்பி அழத்தொடங்கினாய்

என் ஆண்மனம் நடுங்கியது

அவமானமும் சங்கடமும் நிலைகுலைத்தது

வழக்கமான ஆறுதல் வார்த்தைகளை

அனிச்சையாகச் சொன்னேன்

விசும்பல் கூடி என் தோளில் சாய்ந்து

மேலும் தேம்பினாய்..

.

சட்டையைப் பிடித்திருந்த கை

இறுக்கி இழுத்தபடியே இருந்தது

தோளில் ஊறிய ஈரம் சூடாக இருந்தது

உன் மூச்சுக் காற்றுக்கு பயந்து

முகத்தைத் திருப்பிக்கொண்டேன்..

என்மீது வைக்கப்பட்ட நம்பிக்கையின் அழுத்தத்தால்

கூனிக்குறுகினேன்..

.

ஒருவாரத்துக்குப் பின்..

என் முயற்சி ஏதுமின்றியே

பிரச்சனைகள் தீர்ந்தபோதும்

தேடிவந்து நன்றி சொல்கிறாய்..

அன்று உன் தோள்கள் இல்லையென்றால்

செத்துப்போயிருப்பேன் என்கிறாய்..

ஒரு தோழனையும் சகோதரனையும்விட

உயர்ந்த இடத்தில் அமர்த்துகிறாய்..

.

என் மொத்த உடம்பும் கூசுகிறது

வேதனை கொப்பளமிடுகிறது

குற்ற உணர்வால் எட்டி உதைக்கப்பட்டு

ஒரு அடிமைபோல் வதங்கிக்கிடக்கிறேன்

என்றாவது ஓர்நாள்

நான் சொல்லி அழுவதற்கு

உன் தோள்களைக் கொடுத்தால்

எனக்கும் கிடைக்கலாம் மீட்பு..

- Director Charles...

முக நூல் 30.06.12

ஒரே வரியில்
உன் மீதான காதலை
 சொல்லி விட முடிவதில்லை,
 நீயோ என் காவியங்களில்
அக்கறை கொள்வதும் இல்லை...

நீ வரும் ஒரு நாளுக்காக
காத்திருக்கிறது
வாழ்வின் எல்லா நாட்களும்... 

நீ கவிதை கேட்டு என்னிடம் வருகிறாய்
நானோ அந்த நேரத்தில்
மரத்தை வெட்டிக் கொண்டிருக்கலாம்
தேநீர் பருகியபடியும் இருக்கலாம்
சிரித்த படி குழந்தைகளுக்கு
கதைகள் சொல்லிக் கொண்டும்
அல்லது
ஒரு விலைமாதை அழைத்துக் கொண்டு
எங்கேனும் சென்றிக்கவும் கூடும்
உன் பொருட்டு நான் நல்லவன்
நீயும் எனக்கு அப்படியே
ஒருவேளை அசந்தர்ப்பவிதமாக
நீ வரும் வேளையில்
நான் உனக்கான கவிதையொன்றை
எழுதியபடி இருந்தால்
உனக்கு நான் நல்லவனாகவே தொடரலாம்...


அவளுக்கு கவிதை பிடிக்கும்

அவள் அவனை விடவும் அழகு
அவள் அவனுக்கு சமமாக படித்தவள்
அவள் அவனுக்கு மேலான வசதி படைத்தவள்
அவளுக்கு அவனைத் தான்
மணம் முடித்தார்கள்
கல்லூரி வாழ்க்கை முடிந்ததும்
அவர்களாகத் தான் கேட்டார்கள்
இவர்கள் சம்மதித்தார்கள் அவ்வளவு தான்
படித்தவன் என்றார்கள்
பண்பாளன் என்றார்கள்
கைநிறைய சம்பளம் என்றார்கள்
வீடு என்றார்கள்
கார் என்றார்கள்
இன்னும் எத்தனையோ...

அவளோ கவிதைகளின் ரசிகை
காவியங்களை நேசிப்பவள்
மனதை உருக்கி விடும் படங்களை
கண்ணீரோடு கடப்பவள்
நாஞ்சில் நாடனும், புதுமை பித்தனும்
பெரியாரின் சிநேகமுமாய் வாழ்ந்தவள்
தடம் புரண்ட பயணமென இன்று
மின்னஞ்சல் முகவரி தொடங்கி
முக நூல் நட்பு வரை அவனைக் கேட்டுத் தான்
இருக்கும் இருபதோ முப்பதோ
அவனின் சொந்தங்களும் கல்லூரி நட்புகளுமே
மாற்றுவதும் விலக்குவதும் அவன் விருப்பமாய் ...

அவன் குடிப்பதை யாரும் சொல்லவில்லை
அவனும் சொல்லவில்லை
முதலில் செல்லும் முன் அனுமதி வாங்கினான்
எப்பொழுதாவது ஒருமுறை என்று
பின்னர் குடிக்கும் முன் அனுமதி கேட்டான்
நண்பர்களின் வற்புறுத்தல் என்று
அதுவும் பின்னர் தகவல் சொல்வதாயிற்று
இப்பொழுதெல்லாம்
அவன் கேட்பதுமில்லை சொல்வதுமில்லை
வீடு திரும்பும் போது தான் தெரியும்...

முதலில் கோபம் கொள்வதாகவும்
பின்னர் திட்டுவதாகவும் தொடங்கி
இப்பொழுது எப்பொழுது அடி விழும்
என்பதாக நடுங்கிக் கிடக்கிறாள் அவள்
அவன் மிதப்பில் வருகையிலெல்லாம்
அவள் மரமாகி கிடக்க வேண்டும்
இல்லையெனில் படுக்க வேண்டும்
படித்தவன் என்றார்கள்
பண்பாளன் என்றார்கள்
யாருமே சொல்லவில்லை
அவளுக்கு கவிதை பிடிக்கும் என்றும்
அவனுக்கு குடிக்கப் பிடிக்கும் என்றும்...