பிறப்பு கேட்காமலே கிடைத்த சாபம்...

மரணம் கேட்டும் கிடைக்காத வரம்...

Dec 2, 2011

நீண்ட தெருவும் சில பூக்களும்...

இப் பெருநகரத்தின் எதாவது ஒரு
நீண்ட தெருவில்
ஏதேனும் ஒரு சந்தர்ப்பத்தில்
இருவரும் எதிரெதிர் திசைகளில்...
நெருங்கும் நம் இருவருவரின் பார்வைகளும்
கண நேர சந்திப்பில் திடுக்கிட்டு இயல்பாகலாம்...
முன் செல்லும் குழந்தையை
அதட்டி நீ அழைக்கும் போது
தனித்து விட்டுப் போன என்னையும்
அழைப்பதாகவே இருக்கும்...
எப்படியும் நலம் விசாரிக்கப் போவதில்லை
கேட்டாலும் பொய் சொல்லத் தெரியா
உதடுகளும் என்னிடம் இல்லை...
நினைவிருக்கிறதா?
சில வருடங்களுக்கு முன்
இதே நீண்ட தெருவில்
சில மரங்கள் பூக்களை
தூவிக் கொண்டிருந்தது...
இருவரும் கை கோர்த்து
அலைந்தபடி இருந்தோம்...
இன்று மரங்கள் இல்லை
நம் காலடியில் நசுங்கிய பூக்களும்
எனக்கென நீ விட்டுப் போன காதலுமாய்
நீண்டு கொண்டே...


தொலைகிறது சுயம்...


இன்னும் அமைதியாகத்தான் இருக்கிறாய் நீ
உள்ளுக்குள் சுழலும் சூறாவளிகளை மறைத்து
நானும் இயல்பாகவே இருக்கிறேன்
மனதின் நடுக்கங்களை பூட்டிக் கொண்டு
ஒரு நதியின் பெரு வெள்ளமதில்
புரட்டப்படும் சருகென தொலைந்து போகிறது சுயம்
மௌனங்களை சுமக்கிறேன்
மொழிகளை தீயிலிட்டுக் கொளுத்தி
சில நேரங்களில் பூக்களின்
பாரம் தாங்காமல் ஒடிந்து விடுகிறது காம்புகள்
நானும் எதிர் பார்த்தே காத்திருக்கிறேன்
என்னை தாங்கிப் பிடிக்கும்
உன் ஒற்றைச் சொல்லுக்கோ
உயிருடன் எரித்து விடும் நினைவுகளின்
கடும் சினத்திற்கோ...

மௌனமாகும் புல்லாங்குழல்....

முக நூல் கவிதையொன்று...


ஏன் அடர்ந்த மௌனத்தை
இசைத்துக் கொண்டிருக்கிறது
உன் புல்லாங்குழல்...

மேகத்தில் எழுதிவிட்டேன்
என் கனவுகளை...
அதுதான்
மழையாய்ப் பொழிந்திருக்கும்
நேற்றிரவு உன் வாசலில்...

பேசாமலே இருந்திருக்கலாம்
வசந்தமும் தெரியாது
வலியும் தெரியாது
பேசாமல் இறந்திருக்கலாம்....

உன் மௌனங்களால்
விழுங்கப்பட்ட
என் வாழ்கையின் துயரங்களை
சொல்லி அழுகிறது
மேகங்கள்....

- தீபு நல்லசிவம்