பிறப்பு கேட்காமலே கிடைத்த சாபம்...

மரணம் கேட்டும் கிடைக்காத வரம்...

Nov 30, 2011

அவளும் அவன் கவிதையும் -பிறாபுல் சீலீடர்


அறிந்து கொண்டீர்களா
அவள் மாறிவிட்டாள் என்பதை.
அந்தக் கவிஞனால் கூட
அவளை அடையாளம் காண
முடியவில்லை.
அவள்
பிறர் அறியாமல்
மறைவாய்
இந்த உலகத்தைச்சுற்றி வருகிறாள்.

மனித மனங்களின்
மூலைமுடுக்குகளில்
நுழைந்து
ஆழம் பார்க்கிறாள்.
அவள் சுமந்து வரும்
உலகளாவிய செய்திகளில்
அதிரடி மாற்றங்களில்
கவிஞனின் கவிதை
தன்னை
உயிர்ப்பித்துக் கொள்கிறது.
கவிதைக்கு முதலிடம் தர
மறுத்தவர்களையும்
முழுமையாக
ஆட்சி செய்கிறது
கவிதையின் ராஜாங்கம்.

கவிதை
அவளைப் பலியாடாக்கிவிட்டது.
தன் தலையில்
கைவைத்துக் கொண்ட
பத்மாசுரனாய் அவள்.
வாதங்களிலும்
இசங்களிலும்
கிழிந்து தொங்குகிறது
அவள் கவிதையுடல்.
அவள் இருக்கையை
அவளே அசைத்துப்பார்க்கிறாள்.
அவளுக்கான அவள் முகத்தை
கவிதை
ஒதுக்கித்தள்ளிவிட்டதோ
நிலத்தைப் போல
உறுதியான
அவள் ஆளுமையை
கவிதை விரும்புவதில்லை.
காற்றைப் போல
அவளிருக்கட்டும்.
உலகத்தைச் சுற்றிவரட்டும்.
அவன் கவிதைகள் மட்டுமே
அவளை அடையாளம் காணட்டும்.
அவளுக்கும்
அவன் கவிதைகளுக்குமான உறவு
தலைமுறைகளாக
தொடரும் கதை.

கவிதை..
அதுதான்
அவள் பலகீனம்.
அதுதான்
அவள் நாடி நரம்புகளின்
உயிர்த்துடிப்பு.
அதனால்தான்
கவிஞனின் அருகாமையில்
எப்போதும்
உயிர்த்துடிப்புடன் அவள்.

மற்றபடி
அவனும்
பல்வேறுமொழிகளுக்கு நடுவில்
வந்துப்போகும்
ஒரு வலைப்பதிவு
அவ்வளவுதான்.

- மொழியாக்கம் : புதியமாதவி.

பிறழ்வின் காலடிகள்


இன்னும் ஈரமாகதான்
இருக்கிறது
குறுஞ் செய்தியில்
நீ புதைத்தனுப்பிய
முத்தங்கள்...

பெரு மழை யொன்றை
எதிர்பார்த்துக்
காத்திருக்கிறேன்
யாருமறியாமல் கரைந்தழுக...

இலைகளற்ற மரத்தினடியில்
காத்திருக்கிறது
நிழல் வேண்டும்
என் கனவுக் கூட்டம்...

கிடைத்த வரை இலாபம்
என்பதான வாழ்க்கை வாழ
முடியாமல் வெட்கித் துடித்து
தானே சாகிறது மனது...

ஆசைகளும்
கோபங்களும்
காதலுமாய் பெருகும்
என்னில்
மனப் பிறழ்வின் காலடிகள்...

அரைக் கோப்பை தேநீரிலும்
நிறைத்துக் கொண்டே இருக்கும்
புகையிலுமே வாழ்ந்து விட
முடியும் என்றான போது
எப்படி குறையும் உன் மீதான
என் பெரும் காதல்...

சக்தி ஜோதியின் இரு கவிதைகள்...

காலையில் வாசித்த சக்தி ஜோதியின் இரு கவிதைகள்...

அலைச்சல்

காற்றின் ஈரத்தை
உணவாக்கி
உயிர்த்திருக்கும்
மரமென
அடி பெருத்து அசைகின்ற
முத்தம் ஒன்றை
நீண்ட அலகுடைய
கனவுப்பறவை
கொத்திக் கொண்டு செல்கிறது
பாலைவன மெங்கும்
இன்னும்
ஒருமுத்தம் தேடி.வெளிப்பாடு

உன் நினைவில்
தாமரைக் கொடியெனச்
சுகித்திருக்க
கதிர்களால் உயிரூட்டுகின்றாய்

உன்னை விட்டகன்றால்
பிரிவுத்துயர்
என்னை வாட்ட
காய்ந்துச் சாகின்றேன்

நெருப்பை விழுங்கிக் கொண்டு
குளிர் ஒளியை வெளியெங்கும்
விரிக்கும் நிலவென

பிரிவின் வாதையைச் சுமந்து கொண்டு
புன்னகையோடு உற்றோரை
எதிர்கொள்கிறேன்

உன்னைப் பிரிகையில்
பெருகும் துயரத்திற்குக்
குறைந்தது இல்லை

நினைவின் மகிழ்வு.

நாளைய பறவையொன்று...


நேற்றைப் போலவே
இன்றும்
உதிர்ந்து போன அதே
கனவுப் பூக்களுடன்
விடிகிறது என் காலை...

உதிரம் சொட்ட
ஓடும் உயிரின் பின்னால்
துரத்திக் கொண்டே தான்
அலைகிறது
சில அரிவாள்களும்
கூர் மழுங்கிய
கத்திகளும்....

வெட்டப்படும் அடிமரத்தின்
உச்சிக் கிளையில்
அடைகாக்கும் பறவையொன்று
உயிர் தப்பிப் பறக்க
விழுந்து உடைகிறது
நாளைய பறவையொன்று...

ஓடிக் கொண்டிருக்கும்
நொடி முட்களுடன்
நகர இயலாமல்
துடித்துக் கிடக்கிறது
நீ இலா நாட்கள்...