பிறப்பு கேட்காமலே கிடைத்த சாபம்...

மரணம் கேட்டும் கிடைக்காத வரம்...

Apr 17, 2013

The Japanese Wife - Aparna Sen




 
இந்தியாவில் மேற்கு வங்கத்தின் சுந்தரவனக் காடுகள் நிறைந்த ஒரு சிறுகிராமத்தின் கணக்கு வாத்தியாருக்கும், ஜப்பானின் ஒரு இளம் பெண்ணுக்குமான பேனா நட்பு, காதல், திருமணம், திருமணத்திற்குப் பின்னதான வாழ்வில், அவர்கள் அதற்கு உண்மையாக வாழும் வாழ்க்கை, இவையெல்லாம் வெறுமனே கடிதப் போக்குவரத்தும், மிகச் சில தொலைபேசி அழைப்புகள் மூலம் சாத்தியப்படும் என்று தோன்றுகிறதா? சாத்தியமே என்கிறார் அபர்னா சென். இவர் வங்காளத்தின் மிகமுக்கிய இயக்குனர்களில் ஒருவர். இதுவே ஜப்பானிய மனைவியின் ஒற்றை வரி கதை. குணால் பாசு இதே தலைப்பில் எழுதிய கதையை ஒரு திரைப் படமாக, இல்லை ஒரு திரைக் கவிதையாக மாற்றி காட்சிகள் வழியே ஓடவிடுகிறார் அபர்ணா சென்.(அக்கதையை இதுவரை நான் வாசித்ததில்லை. தமிழ் மொழிபெயர்ப்பு இருந்தால் குறிப்பிடலாம்). அதற்கு முக்கிய உறுதுணையாக இருப்பது ஒளிப்பதிவு. சுந்தரவனக் காடுகளில் பொழியும் மழையை, ஆற்றை, படகுப் போக்குவரத்தை, ஒரு சிறு கிராமத்தை, ஜப்பானின் சாதரணக் குடும்பத்தை அழகாகக் காட்டியிருக்கிறது.

ஒரு சிறுகிராமத்தின் கணக்கு வாத்தியார் செனமாய் சேட்டர்ஜியாக ராகுல் போஸ். ஜப்பானிய இளம் பெண் மியாகியாக ஜப்பானிய நடிகை சிகுசா டகாகு. இருவருக்கும் கடிதங்கள் மூலமான் நட்பு பின் காதலாக மாறி ஒரு நிலையில் இருவரும் கடிதங்கள் மூலமாகவே திருமணமும் செய்து கொண்டு கணவன் மனைவியாக வாழத் தொடங்குகிறார்கள். ஒருவருவருக்கு ஒருவர் மிக உண்மையாக இது போல் வாழ சாத்தியமா எனும் எண்ணம் எழுகிறது தான், ஆனால் படம் முடியும் வரை அவ்வெண்ணம் தோன்றாது என்பது உறுதி. இதற்கிடையில் உறவினர் வீட்டில் தங்கியிருக்கும் கணக்கு வாத்தியார் (உறவினராக மெளஷிமா சேட்டர்ஜி), பின் அங்கு இளம் விதவையாக தன் மகனுடன் வந்து சேரும் சந்தியா (ரெய்மா சென்), அச்சிறுவன் ஆகியோர் மட்டுமே முக்கிய கதைமாந்தர்கள். சந்தியா வந்த பிறகு கதையின் போக்கு சற்று மாறக் கூடும் என்றே நினைக்கிறோம். இருவருக்குமான நேசம், சிறுவனின் மீதான பற்றுதல் ஆகியவை பார்வையாளர்களை அப்படியே தோன்ற வைக்கிறது. ஆனாலும் ஜப்பான் மனைவிக்கு ஏற்படும் நோயும் அதற்கான மருத்துவத்திற்கான செனமாய் –யின் தேடலும் அவர்கள் இதுவரை சந்திக்காத போதும் இருவருக்குமான ஒரு கட்டுக்கோப்பான வாழ்வை, அடுத்தவர் மேல் கொண்டிருக்கும் நம்பிக்கையை சொல்லிக் கொண்டேயிருக்கிறது. 

சரி முடிவு எப்படி இருக்கலாம் என யூகிக்க முடிகிறதா? அதை எந்த விதமான விமர்சனங்களையும் வாசிக்காமல் படத்தை ஒருமுறை பார்ப்பவர்களுக்கான ஒரு அதிர்வாக, அவர்கள் வாழ்ந்த வாழ்வின் அடையாளமாக அம்முடிவு இருக்கக் கூடும்.
இப்படத்தில் மெல்ல மெல்ல கடிதங்கள் மூலமாகவும், பரிசுகள் மூலமாகவும் கல்கத்தாவின் மூலையில் இருக்கும் ஒரு சிறு கிராமம் ஜப்பானிய நகரத்தின் ஒரு அறை போல, பொம்மைகள், மேசை விரிப்புகள், அலங்காரப் பொருட்கள் என மாறிவிடுவதும், ஜப்பானியப் பெண் தன் கணவன் அனுப்பும் சித்த மருத்துவ மருந்துகளை தன் நோய் குணமாக தொடர்ந்து எடுத்துக் கொள்வதும் ஏறக்குறைய இருவரும் கலாச்சார மாறுதல்களை, புரிதல்களை தங்கள் காதலுக்காக ஏற்றுக் கொள்பவர்களாக இருக்கிறார்கள் என்பது காதலின் விதியாகவே இருப்பதை நினைவுபடுத்துகிறது.

சந்தியாவுக்கும், செனமாய்க்குமான திருமணப் பேச்சு எழுவதும், மியாகி தன் காதலை அவனிடம் கடிதம் மூலம் தெரிவிப்பதும், அதை ஏற்றுக் கொண்டு கடிதம் மூலமாகவே இருவரும் திருமணம் செய்து கொள்வதுமாய் இருப்பினும், ஏற்கனவே தனக்கான ஒருவனாக சந்தியா செனமாய் யை உருவாக்கிக் கொள்வதால் இருவருக்குமிடையே இருக்கும் நேசம் மிக மிக இயல்பான ஒன்றாகவே நமக்குத் தெரிகிறது. சந்தியாவுக்கும் செனமாய்க்குமான நேசம் ஒரு வெளிப்படுத்த இயலாக் கவிதையென நிகழ்கிறது. இரவில் தனிமையில் அழும் அவளுக்கு ஆறுதல் சொல்ல வருபவனின் மார்பில் சாய்ந்து அழும் போது கதையின் போக்கில் மாறுதல் நிகழுமோ எனும் எண்ணம் பார்வையாளர்கள் எல்லோருக்கும் எழுவதைத் தவிர்க்கவே இயலாது.

பட்டம் விடும் காட்சிகள் ஒளி ஒவியம். அதற்கான மாஞ்சா கயிறு தயாரித்தலும், ஜப்பானிய காற்றாடிகள் போல உருவங்கள் செய்து பறக்க விடுதலுமாய் அழகாகத் தொடங்கும் பட்டம் விடும் போட்டி, மற்றொரு பிரிவினரால் கயிறு துண்டிக்கப்பட்டு தோல்வியடையும் போது, அச்சிறுவனை விட அதிகம் ஏமாற்றமடைபவனாக செனமாய் இருப்பதும், சிறுவனுக்கும் அவனுக்குமான அன்பை வெளிப்படுத்தும் காட்சியாக அமைகிறது. 

இறுதிக் காட்சிக்கும் முன்வரும் மழையும், பெருக்கெடுத்து ஓடும் ஆறும், சுழன்று வீசும் காற்றும் படத்தின் கதையோடு ஒரு அங்கமாகவே மாறியிருக்கிறது. இசை பற்றி சொல்லவே வேண்டாம் எந்த இடத்திலும் உறுத்தலே இல்லை, கதையோடு பயணிக்கும் இயல்பான இசையாகவே இருக்கிறது. ஜப்பானிலிருந்து மியாகி அனுப்பும் கடிதத்தை, செனமாய் யிடம் கொடுக்க அச்சிறுவன் ஒவ்வொருமுறை சந்தோசமாக ஓடிவருகையிலும் நம் மனதில் சந்தியா, சென்மாய் இருவரும் இணைந்தால் தான் என்ன எனும் எண்ணமும் தோன்றாமல் இல்லை.
இங்கே இறுதியில் என்ன நிகழ்கிறது என்பதை மட்டும் சொல்லாமல் விட்டிருக்கிறேன். ஒரு அழகிய காதல் கவிதையை வாசிக்க உங்களுக்கு விருப்பமிருக்கிறதா? அதை காட்சிகள் வழியாக, தன் திரை மொழியில் தர இயலும் என்பதை நிரூபித்திருக்கிறார் அபர்னா சென்.

*நிச்சயம் பார்க்கலாம்.

மிஸ்டர் அன் மிஸஸ் அய்யர் படத்திற்குப் பிறகே அபர்னா சென் படங்களை தேடிப் பார்க்கத் தொடங்கினேன். அதுவும் ஒரு அழகான காதல் கதையே…. அதை வேறு ஒரு நாள் பார்க்கலாம்.