பிறப்பு கேட்காமலே கிடைத்த சாபம்...

மரணம் கேட்டும் கிடைக்காத வரம்...

Dec 10, 2011

கானல்நீரும் தாகமுமாய்...


என்றுமே பலித்துவிடாத
கனவுகள் நினைவெங்கும்
சிதறிக் கிடக்க கதறி அழுகிறேன் உன்னிடம்
சில நேரங்களில் உன் தோள் சாயல் கூட
ஆறுதலாய் இல்லை
எழுந்ததும் உன்னை பிரிய நேரிடும்
அச்சம் சுமந்த மனதில்
அடிக்கடி நீ சொல்லும் கானல் நீர்
மட்டுமே தெரிகிறது
எல்லா கவசங்களையும் மீறித்
துளைக்கிறது சில கூர் அம்புகள்
நியதிகளின் பெயரில்
அறுந்து தொங்கும் சதைகளுடன்
பயனற்று கிழ் விழவும்
தாங்கிப் பிடிக்கிறது அதே கானல்வெளி
எரியும் உடலுடன் சுற்றி சுற்றி
வெறும் கைப் பிடி சாம்பலென
உதிரும் வேளையில் வருகிறது தென்றல்
உன் வாசலில் தூவ
கனவுகளை எல்லாம் புதைத்துக் கொள்கிறேன்
நினைவுகளையெல்லாம் தூக்கிலிட்டு
இனி என்ன
கானல் நீரும்
அதன் மீதான தாகமுமாய்
மீண்டும் மீண்டும்
தொலையட்டும் வாழ்வு
சாவுக்கும் வாழ்விற்குமான
இடைவெளிகளை நிரப்பிக் கொண்டே...

ஆபிஸில் மதிய உணவு நேரம்


அவன் நிறுத்தாமல்
பேசிக்கொண்டே இருந்தான்.
திறந்திருந்தது அவன் பெரிய டிபன் கேரியர்
அறுசுவை உணவு வகைகள்
அவியல், பொறியல்
சட்னி, சாம்பார் சாதம், தயிர்ச்சாதம்,
அப்பளம் தொட்டுக்கொள்ள ஊறுகாய்
இத்துடன்
தித்திக்கும் இனிப்பில்
இரண்டொரு மாங்கனித் துண்டுகளின் மணம்.

சாப்பிட்டுக்கொண்டே
அவன்
அவன் மனைவியைப் பற்றிக்
குறைபட்டுக்கொள்கிறான்.
அவள் - அறிவிலியாம்.
சோம்பேறியாம்
குண்டாம்
பார்க்க சகிக்கலையாம்
முட்டாளாம்
நடனங்கள் கண்டதில்லையாம்
சங்கீதக்கச்சேரி கேட்டதில்லையாம்
ஏன்..
மாசாலா டீ னா கூட
என்னவென்று தெரியாதாம்
அவளுடன் வாழும் வாழ்க்கை
வெறுத்துவிட்டதாம்
ஆனாலும் ஆனாலும்
என்ன செய்வது
குழந்தைகளுக்காக
குடும்ப கவுரவத்திற்காக..
என்றவன்..

என்னைப் பார்த்து
சொன்னான்..

நான் புத்திசாலியாம்
அறிவுஜீவியாம்
ஆபிஸ் வேலை
வீட்டு வேலை
இரண்டிலும் கெட்டிக்காரியாம்
சம்பாதிக்கிறேனாம்
கவிதை கூட எழுதுகிறேனாம்
என் கணவர் ரொம்பவே
கொடுத்து வைத்தவராம்...

நான் அமைதியாக கேட்டுக்கொண்டிருந்தேன்..

அன்றுமாலை
என் கணவருக்குப் பிடித்தமானதை
சமைத்துக் கொண்டிருக்கும்போது
அவர் ஆபிஸ் பையன்
கழுவப்படாத டிபன் பாக்ஸை
என்னிடன் நீட்டிவிட்டு
சொல்லிச்சென்றான்
'பாஸ் இன்று லேட்டாக வருவார் என்று'

-பிரதிபா கன்னடக்கவிதைகள்
மொழியாக்கம்: புதியமாதவி.