பிறப்பு கேட்காமலே கிடைத்த சாபம்...

மரணம் கேட்டும் கிடைக்காத வரம்...

Dec 24, 2012

வர்ணங்கள் அற்ற வானம்...

வர்ணங்கள் அற்ற வானில்
சிறகுகளின்றிப் பறப்பதில்
என்ன இருந்து விடப் போகிறது?

ஏதாவது ஒரு துயரம் தொலைக்க
உன்னிடம் ஓடி வருகிறேன்
எப்பொழுதாவது,
திரும்புகையில் புதிதாய் ஒன்று கூடுகிறது.

எந்தக் கதையும் உனக்கு சுவாரசியம் இல்லை
முன்பே நீ அறிந்திருக்கக் கூடும்
இல்லையெனில், நீ
ரசிக்கும் அளவுக்கு சொல்லத் தெரிவதில்லை.

அடிக்கடி உன்னை விடைபெறுவதன் நிமித்தமாய்
வட்டத்தினுள் அடைபட்ட காலத்தை பார்க்கிறேன்
என்னை தன் கையில் வைத்து விளையாடியபடி
புன்னகைக்கிறது அதன் போக்கில்.

கடந்து வெளிவரும் வேளையில்
சட்டென உதிரும் ஒரு துளி நீரில்
எதுவும் இருக்கலாம்
நீ
நான்
நம் உறவு
எல்லாவற்றையும் தாண்டி எதுவுமில்லையென
நீ அடிக்கடி சொல்லும் அந்த ஒன்று.


Dec 20, 2012

யாதுமறியேனடி தோழி…

குளிரறியேன்
சுடும் வெப்பமறியேன்
வாடைக் காற்றறியேன்
தென்றலறியேன்
யாதுமறியேனடி தோழி…

காடு மலையறியேன்
கடல் கொண்ட அலையறியேன்
சமவெளியறியேன்
பசும் புல்வெளியறியேன்
பாதாளமறியேன்
யாதுமறியேனடி தோழி…

சட்டெனக் கடக்கும்
வண்ணத்துப் பூச்சியறியேன்
தேன் குடிக்கும் வண்டறியேன்
மின்மினிப் பூச்சிகளுமறியேன்
காக்கை குயிலறியேன்
தோகை மயிலறியேன்
யாதுமறியேனடி தோழி…

மழையறியேன்
ஒடும் நதியறியேன்
உதிரும் பனியறியேன்
கொடும் பசியறியேன்
நெடுநாள் பிணியறியேன்
யாதுமறியேனடி தோழி…

மான் கூட்டமறியேன்
பிளிறறியேன்
ஓடும் மீன்களறியேன்
ஊரும் நத்தைகளுமறியேன்
யாதுமறியேனடி தோழி…

செம்பருத்திப் பூக்களறியேன்
தொட்டிச் செடிகளறியேன்
நெடிதுயர்ந்த மரங்களறியேன்
தவழும் மேகங்களறியேன்
வான் திரியும் பறவைகளறியேன்
யாதுமறியேனடி தோழி…

சுவையறியேன்
சுவாசமறியேன்
நில்லாமல் துடிக்கும் நாடியறியேன்
உடல் நிறைக்கும் குருதியறியேன்
காட்சியறியேன்
யாதுமறியேனடி தோழி…

கவிதைச் சொல்லறியேன்
மனமகிழ் இசையறியேன்
தாய்மொழியறியேன்
கடந்து போன உறவறியேன்
யாதுமறியேனடி தோழி…

உனையறிந்த ஒரு கணத்தில்
யாவும் நீயாகிட
அனைத்தும் நீயாக அறிந்தேனடி தோழி


Dec 19, 2012

காத்திருத்தல்


காத்திருத்தல்
எப்பொழுதும் காத்திருத்தலே
காத்திருத்தல் ஒரு நதி
வலியும் சுகமும் இருகரைகள்
வலியின் கரையில் சுடு மணல்
சுகத்தின் கரையில் மலர்த் தோட்டங்கள்,
ஒற்றைக் காலில் மரங்கள் பூத்தபடி  காத்திருக்கிறது
மலைகள்
கடல்
இரவுதோறும் விண்மீன்கள்
என எல்லாமே,
இதோ இங்கே யாரோ ஒருவன்
தொடர்ந்தபடியே இருக்கும்
நேசத்தின் நிராகரிப்புக்காக காத்திருக்கிறான்
சில நேரங்களில் மெளனத்தை
பல நேரங்களில் இயலாமையை,
ஒரு பாடலுக்காகவோ
இசைக்காகவோ காத்திருக்கும் ஒருவனை
பார்த்திருக்கிறேன்
ஒரு பூபாளத்தையோ முகாரியையோ
பல்லவிகளற்ற சரணத்தையோ
சுமந்தபடியே அலைகளோடு திரிகிறான்…
ஒருவன் கவிதைக்காகக் காத்திருக்கிறான்
ஒருவன் மழலைக்காக
சட்டென பொழியும் மழைக்காக...

ஒரு சிலுவையும் காத்திருக்கிறது
சிலுவையாய் மாறிப் போன பாவம் போக்க
அதற்கோ ஒற்றை உயிர் தேவை
அது புனிதனோ
பாவியோ,
யாரவது ஒருவர் காட்டிக் கொடுக்கும் போது
புனிதன் பாவியாகிறான்
பாவி புனிதனாகிறான்…
யார் புனிதன் என்பதையும்
யார் பாவி என்பதையும்
மற்றவர்களே முடிவு செய்கிறார்கள்,
...
..
எதைப்பற்றியும் கவலைப்படாமல்
காத்திருக்கிறது காலம்
எல்லோரையும் விழுங்க,
நமது முறைக்கு காத்திருப்போம்,
வேறென்ன சொல்ல
காத்திருத்தல் அழகானது என்றே
முடிப்பதைத் தவிர ...


Dec 17, 2012

ஆம், இப்படித்தான்...

எல்லோரிடமும் விலகிக் கொண்டிருக்கிறேன்
காரணங்கள் எதுவுமின்றி
என்னை நேசிப்பவர்களிடமிருந்து
என்னை வெறுப்பவர் களிடமிருந்து
எந்த இலக்கணமும் இல்லா
இக்கவிதையிடமிருந்து
எல்லா வெளிச்சங்களும் இருளின் புகைபோக்கிகளே
என்னை நேசிக்கவோ
என்னை வெறுக்கவோ
உங்களிடம் ஏதாவது ஒரு காரணம் இருக்கலாம்
அப்படி என்னிடம் எதுவுமில்லை தான்
என் மீதான அச்சம் என்பது
ஆகச் சிறந்தது
எனக்கான நிலையின்மை என்பது
சலிப்பானது
முடிவுகள் எடுப்பதில்லை எனும் போதும்
எனது செயல்கள் எனது முடிவுகளாகின்றன
ஒரு இறகு முளைத்த மீனென
பற்கள் முளைத்த பறவையென
இன்னும் எதோ ஒன்று தேவைப்படுகிறது
சுடும் சொற்களில்
பன்னீர் துளியின் நறுமணம்
அடங்கா காதலின்
அத்துமீறல் துயரங்கள்
இப்படி எதையாவது சொல்லிக் கொண்டிருத்தலில்
எதுவுமில்லை
எல்லோரிடமிருந்தும் விலகத் தொடங்கினேன்
என்னை நேசிப்பவர்களிடமிருந்தும்
என்னை வெறுப்பவர்களிடமிருந்தும்...