பிறப்பு கேட்காமலே கிடைத்த சாபம்...

மரணம் கேட்டும் கிடைக்காத வரம்...

Sep 3, 2011

நீ இல்லா நொடிகளில் 4


சொற்களால் அடிக்கப்பட்ட
கணங்கள் மிக அருகில்
இன்னும் தேவையாய்
இருக்கிறது நீ இல்லாத வலி...

நான் ஒரு பிடிவாதக்காரன்
அதனால் தானோ என்னவோ
பிடுங்கப் படும் என்
வார்த்தைகளில் விஷங்கள்...

நகக் கண்ணில் சொருகப்படும்
ஊசிகளென உன் பிரிவின்
வேதனை படரும்
நொடி துளிகள்...

கிடைக்காத பாவமன்னிப்பை
வேண்டி அனைத்துக்
கடவுளிடமும் தஞ்சம்
புகும் கோழையாய்...

மன்னிப்பவர்கள் இல்லையெனில்
எத்தனை நாள்
உயிர் வாழ்வேன் நான்
நரகத்தின் பிடியில் சிக்காமல்...

சேர்ந்து இருந்தால் என்ன
பிரிந்து சென்றால் தான் என்ன
உன்னை நினைக்காமல்
வாழ கற்றுத்தரவில்லை நீ...

நீ இல்லா நொடிகளில் 3


புகைப் படங்களில் கோரும்
மன்னிப்பை உன்னிடம்
சொல்லிப் போகலாம்
என் தீர்ந்து போன
கனவுகள்...

எனை பார்க்க மறுக்கும்
உன் கண்களில்
என்றும் பிம்பங்களை
மறைப்பவனாகவே நான்...

நீ எழுதத் தொடங்கிய
என் வாழ்க்கையின் வரிகளில்
அடிக்கடி முற்றுப் புள்ளிகளை
வைத்தவன் நான்...

ஒவ்வொரு பேருந்துப்
பயணமும் உன்னை
சந்தித்த பயணத்தை
நினைவு படுத்த
வெடித்தழுகிறது இயலாமை...

எனக்கு நானே சுமக்கும்
சிலுவை ஒன்றில்
உன் நினைவுகளின் பாரத்தை
ஏற்றி வாழ்வின்
மீத நாட்களில் சுமப்பேன்
வார்த்தைகளின் சவுக்கடிகளோடு...

என் வாழ்வின் இறுதி
நொடிகளில்
ஒருவேளை நான்
மகிழ்ந்தால்
உன்னோடு வாழ்ந்த
இந்த நாட்களின்
நினைவுகளால் மட்டுமே...

நீ இல்லா நொடிகளில் 2


தவறுகளை சுட்டிக் காட்டவும்
தட்டிக் கேட்கவும்
யாருமின்றி தவறுகளோடு
என் நாட்கள்...

விலை மதிக்க இயலாப்
பரிசினை தெரிந்தே
தொலைத்த பின்
வீணாய் அழுதென்ன
புலம்பியென்ன...

வறண்டு போன
கனவுகளையும்
கவிதைகளையும்
இனி நட்டு வைப்பேன்
பாலை நிலங்களில்...

கவிதைகள் எப்பொழுதும்
அமைதியாகவே
வாசிக்கப் படுகிறது
அது அமைதி இல்லாத
ஒரு இதயத்தின் அழுகையென
மறக்கப் பட்டு...

நடிக்கத் தெரியா
மனதில் ஆயிரம்
கேள்விகள்
முதல் கேள்வி உன்னிடமிருந்து...

என் எழுத்துகளே
தலை எழுத்தை
மாற்றுமென சொன்னவளுக்கு
வெற்று தாள்களில்
வேதனை கொடுத்தவன் நான்...

தவறுகளுக்கு
தண்டனைகளை தவிர்த்து
விடுதலை செய்கிறாய்
உன்னிடமிருந்து
இனி நான்
யாரென்ற அடையாளம்
தொலைக்க சில
நொடிகள் போதும்...

நீ இல்லா நொடிகளில் 1இன்று காய்ந்து போன
ரொட்டித் துண்டுகளுடன்
கடந்து போகும்
நீ நினைவு படுத்தி
கொண்டிருந்த என்
உணவு வேளைகள்...

இன்னும் உன் கரங்களால்
கிடைத்து விடாத
ஒரு வாய் உணவிற்கென
ஏங்கித் தவிக்கும்
மனதில் பிரிவின் வலி...

நேசிப்பதற்காக
இல்லாவிட்டாலும்
பரவாயில்லை
வெறுக்கவேனும் நினைப்பாயல்லவா
என்னை...

கனவுகளில் வாழ்ந்த
ஒவ்வொரு நிமிடங்களையும்
ஒளித்து வைத்திருக்கிறேன்
மீண்டும் வாழ்வதற்கென...

எத்தனை முறை
கோபம்
கொண்டிருந்தாலும்
இன்று நான் விலகி
நிற்பதன் காரணத்தை
தேடித் பார்
புரியும் உனக்கு...

திறந்த வெளியொன்றில்
கொட்டும் மழையில்
நனைகிறேன் என்னை
அலங்கரித்த வண்ணத்துப் பூச்சியின்
வர்ணங்கள் மெதுவாய்
கரைவதை தவிர்க்க இயலாமல்...

இனிமையான வாழ்வொன்றை
தொலைத்து விட்ட
கண நேர கோபம்
என்னைப் பார்த்து சிரிக்க
தலை குனிகிறது கர்வம்...

கண்ணீரோடு எழுதும்
எல்லா வார்த்தைகளும்
அனைவருக்கும் கண்ணீரை
கொடுத்து விட முடிவதில்லை
ஆனாலும்
உறவுகளின் துயரத்தை
சிறிதேனும்
நினைவு கொள்ள வைக்கும்...