பிறப்பு கேட்காமலே கிடைத்த சாபம்...
மரணம் கேட்டும் கிடைக்காத வரம்...
மரணம் கேட்டும் கிடைக்காத வரம்...
Jul 7, 2011
நந்தவனம்
என்னிடம் ஒரு நந்தவனம்
இருந்தது...
அதில் சில
செடிகளும்
மரங்களும்
பின்னிப் படர்ந்த கொடிகளும்
வைத்திருந்தேன்...
என் நந்தவனத்தில்
மலர்கள் இருந்தது
காய்கள் இருந்தது
கனிகளும் நிறைய
காய்ந்து போன விதைகளும்....
என் நந்தவனத்தில்
அணில்கள்
நத்தை
முயல்கள்
எறும்புகள்
ஏன் சில பாம்புகளும்...
என் நந்தவனத்தில்
ஒரு குளமும்
அதில் வண்ண மீன்களும்
நாரைகளும்
நண்டுகளும்
நீரோடையும்
கூழாங் கற்களும் ...
பறவைகளும்
ஓணான்களும்
சிறு கீரிப் பிள்ளையொன்றும்
வண்ணத்து பூச்சிகளும்
வண்டுகளும்....
ஒரே ஒரு நொடியில்
ஆழிப் பேரலையாய்
நீ அடித்து நொறுக்கும் வரை
என்னிடம் ஒரு நந்தவனம் இருந்தது
அதில்
உன் மீதான காதலும் இருந்தது...
கண்ணீர் சாரல்
குளிர் சாரல்
நுரை பொங்கும் அருவி
தாவிக் குதிக்கிறது தண்ணீர்
கணவனோடு கைகோர்த்து
உச்சியில் நீர் விழும் பொழுது
உன் கால்களினடியில் மூச்சிரைத்து
சாகிறது என் காதல்
ஓடும் நீரோடு இரு துளி
கண்ணீர் கலந்து
மன்னிப்பை கூறுவாய்
துண்டுகளாய் சிதறிய
இதயத்திடம்...
என்னிடம் ஆயிரம்
கேள்விகளுண்டு
உன்னிடம் ஒற்றை பதில்
அதுவும் எனக்கானதாய் இல்லை
புன்னகைக்கும் உன்
உதடுகளின் ஓரத்தில்
நீ குவித்து வைத்திருந்த
நஞ்சு
எனக்கானதாய் இருக்கிறது...
என் பாடலின்
ஒவ்வொரு பல்லவியும்
சரணமும்
முகாரியிடம் மண்டியிடுவது
ஏனென்று தெரியவில்லை
கனவுகள் மட்டுமே
வாழ்வென ஆன பின்
உறக்கத்தை தொலைத்தவன் நான்...
இந்த வெறும் வார்த்தைகள்
செவிகளை எட்டப்போவதில்லை
அருவியின் சாரலில்
லயித்து கிடக்கும் உனக்கு
நிஜங்கள் துரத்தும் ஒரு நாளில்
நீயும் நானும்
பேசப் போவதில்லை
ஆனாலும் இந்த வரிகள் பேசிடும்
நீரின் குளுமையையோ
நம் நேசத்தையோ...
உடன்படிக்கை
உனக்கும் எனக்குமான
காதல் உடன்படிக்கையின்
பக்ககங்களை கிழித்தெறிகிறது
நிகழ்கால ஏமாற்றங்கள்....
விசும்பல்களுடன்
மூடிப் படுக்கையில் அருகில்
புரண்டு கொண்டிருக்கிறது
உனக்கான கவிதைகள்....
கண்ணீர் துளிகள் உணவாகும்
என்றொரு நிலை வந்தால்
இனி நான் யாரிடமும்
யாசிக்க வேண்டி இருக்காது...
கிழிந்து போன நினைவுகளை
நெய்து வருகிறது கனவுகள்
மீண்டும் புதிதாய் கிழித்து
வேடிக்கை பார்க்கிறது உன் விருப்பம்...
காரணங்களே இன்றி
தண்டிக்கப்ப் படுபவனுக்கு
ஆறுதல் மீது என்ன
அக்கறை இருந்துவிடப் போகிறது...
திசையெல்லாம் முட்கள்
பரப்பி நடக்கிறேன்
இதயத்தை விட
பாதங்களுக்கு வலிமை அதிகம் என....
காலின் கீழ் நசுக்கப் பட்ட
சிகரெட் துண்டுகளாய்
மனதின் ஏக்கங்கள்
புகைந்து கிடக்கிறது...
மதுவின் கசப்பும்
தொண்டையின் எரிச்சலும்
என்ன செய்து விட முடியும்
நினைவு ரணங்களை....
உதிர்ந்த இறகுக்கும்
பிடுங்கப்பட்ட சிறகுக்குமான
வேதனைகளை வீசும்
காற்று அறிந்திருக்குமா என்ன?...
தனிமையும்
பிரிவும்
கொடூரம் என்றாய்!
இன்று தனித்திருப்பது நான் மட்டுமே...
வெளியூரோ வெளி நாடோ
உன் அருகாமையின்றி வெறுமையாய்
என்பாய்!
புகைப் படங்களில் புன்னகை நிரப்பி...
உணர்வுக்கும் அறிவுக்குமான
போட்டிகளில் பெரும்பாலும்
அறிவே வெல்கிறது
நீ அறிவாளி....
இறுதியாய் கேட்டாய்
எனக்கான கனவுகளை
நீ ஏன் வளர்த்தாய் என
விதைத்தவள் நீயன்றி யார்....
ஒரு கனவும் சில நிஜங்களும்
ஒவ்வொரு வார்த்தைக்கும்
ஒரு வண்ணத்துப் பூச்சி
என்னுள் உன்னால்
உனக்காக....
வெடித்து சிதறும்
கண்ணீர் துளிகளில்
சேகரித்து வைத்த
உனக்கான கனவுகள்...
பயணங்கள் இதமானவை
உன்னோடு பயணிக்கும் போது
சிறகுகள் விரித்து
என்னோடு பறக்கிறது வானம்...
காதல் பறவைகள் என
மனதில் நான்
வளர்த்தவை உதிரம்
குடிகின்றன பசிக்கு...
சிதறிக் கிடந்த
எண்ணங்களை ஒன்றாக்கி
எனக்கு பரிசளித்தது
உன் காதல்...
என் கருவிழிக்குள்
ஊசி ஒன்றை இறக்கி விட்டு
நேசத்தின் வண்ணமென்று
ஓவியத்தை வரைகிறாய்...
அன்பான உன்
முத்தங்கள் எனக்கு
சில வினாடி பூகம்பங்கள்
பூ... கம்பங்கள்... உன் இதழ்களாய்...
ஒவ்வொரு முறையும்
உனக்காக காத்திருந்து
ஏமாறுவது வேடிக்கை என
நினைத்திருந்தேன் இது வரை...
என்னால் என்ன
செய்ய முடியும்? அடிக்கடி சொல்வாய்!
என் சாவு ஊர்வலம் வரும்
ஒரு நாளிலும் அதே போலித்தனம் தொடருமா என்ன?
Subscribe to:
Posts (Atom)