பிறப்பு கேட்காமலே கிடைத்த சாபம்...

மரணம் கேட்டும் கிடைக்காத வரம்...

Oct 6, 2007

என்னவள் காதலில் ஒரு நாள்


நேரமாகி கொண்டு இருக்கிறது

இன்னும் இரண்டு நிமிடங்களே மீதம்,

நட்பு வீடு என்று பெயரிட்டு

அழைக்கிறேன் துணைக்கு தம்பியை


அவசரமாய் காலணி பூட்டி

வேகமாய் தெருவிறங்கி நடக்கும் போது

அக்கம் பக்கம் சூழலும் பார்வை

யாரும் பார்க்காமல் இருக்க வேண்டுமென


கோபம் வருகிறது

மெதுவாக போகலாம் என்று

அவன் சொல்கையில்

இருந்தும் கால்கள் விரைவாய்


மஞ்சள் பெட்டி

மங்கலாய் வெளிச்சம்

தொலைவாகி கொண்டே இருக்கிறது

மன வேகத்தின் முன்னால்


அப்பாடா!

பெரு மூச்சு ஒன்று அறியாமலேயே..

கண்ணாடி கூண்டுக்குள் நுழைந்து

எண்கள் தொட்டு விரல் எடுக்கையில்

தம்பி கவனிப்பான் என


வேண்டுமென்றே வெறுப்பூட்டும்

பெண் குரல்

" சற்று நேரம் கழித்து தொடர்பு கொள்ளவும்"

பட்டென வைத்து

மீண்டும் தொடர்புக்கையில்

அதே குரல் அதே லயம்


இரண்டு நாட்கள் அடைப்பட்டது போல்

வியர்வை வெளிக் கொட்ட

இரு நிமிட தவிப்பு நரகமாய்

இதோஒலிக்கும் மறுமுனை

இசையென இதயத்தில்


அரத பழையாதாய்

அதே "ஹலோ"

மூலையில் பரவி

குரல் பதிந்து

நீ தான் என தெரிந்து

மென்மையாய் சொன்னேன்

அதே "ஹலோ"


அரசியல்

சினிமா

விளையாட்டு

படிப்பு

சீரியல்

என முடிக்க முடியாமல்

திண்டாடும் பொழுது

கண்கள் மேல் நோக்கி

கட்டணம் பார்த்து பதறும்


வைக்கட்டுமா?

என மூன்று முறை கேட்ட பின்

பேசிய வார்த்தைகள்

மூன்று நூறுக்கும் அதிகமாய்

கையோடு

இதயத்தையும் சேர்த்து இறக்கி

வைத்து விட்டு

கதவு திறக்கையில்

முகம் வருடும் மென் காற்று

மூச்சின் வெப்பத்தையும்

நனைந்த ஆடைகளையும்

உணர்த்தும்


அலட்சியமாய்

சில்லறைகளோடு

சில நோட்டு களையும்

தந்து விட்டு பார்க்கையில்

தெருவில் போகும் பேருந்தை

வேடிக்கை பார்ப்பவனை கண்டு

நிம்மதியாய் முறுவல்

உதடுகளில்


திரும்புகையில்

வேகமாய் போகிறான் அவன்

தலை குனிந்தவாறே

பின் செல்கிறேன்

"அம்மா விடம் சொல்லி விட கூடாது"

என்ற பெரிய வேண்டுதலில்.....


No comments: