பிறப்பு கேட்காமலே கிடைத்த சாபம்...

மரணம் கேட்டும் கிடைக்காத வரம்...

Aug 11, 2011

நினைவு காலங்களில்....






நினைவிருக்கிறதா?
இல்லை நினைவு படுத்திக் கொள்ள என்னைப் போலவே காலத்தின் ஏணிகளில், வருடப் படிக்கட்டுகளில் கிழிறங்கி தயக்கமாய் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறாயா?... மனிதன், வாழ்வில் மறக்க முடியாத தருணங்கள் எத்தனையோ இருந்தாலும், எல்லோருடைய நினைவிலும் நிச்சயம் இருக்கும் அந்த பருவ கால ஈர்ப்பு, காதலின் ஞாபகங்கள் என்றும் பசுமையாக.. என் மனமும் விரிகிறது உனக்காக வாழ்ந்த அந்த சில காலங்களின் இனிமையான கனவுகளில்....

கண்களின் கண்கள் சந்தித்தோ, குரல் கேட்டு மயங்கியோ தொடங்கவில்லை நம் உறவு... நமக்கான தொடர்பை உறவேன்றே நம்புகிறேன், நட்பென்றும் காதலென்றும் சொல்ல இயலாது.. நீ அனைத்தும் கடந்து என்னில் நிலை பெற்றவள். உறவென்றே இருக்கட்டும் அதில் தான் சொல்ல முடியா அத்தனை பந்தங்களும் இருக்கின்றன.

சரியாக இயங்காமலோ, இயக்கத் தெரியாமலோ என்னை அழைத்தாய்... நான் பழுது நீக்குபவன் தொலைபேசி இயந்திரங்களை... எத்தனை சொல்லியும் புரியவில்லை உனக்கு... வேறு வழி இல்லை என்று பதினைந்து நிமிட நடைக்குப் பின் அடைந்தேன் உன் அலுவலகம், வியர்த்த முகத்துடனும் அதில் நனைந்த உடையுடனும்...

நான் சரி பார்க்கும் பொழுது சரியாகவே வேலை செய்தது உன் தொலை பேசி. கோபம் இருமடங்காய் மாற, கொட்டி விட்டு வந்தேன் நெருப்பில் கலந்த வார்த்தைகளை... திரும்பி என் அலுவலகம் வருகையில் அலறிக் கொண்டிருந்தது என் தொலை பேசி, கையிலெடுத்து செவி மடுக்க " மன்னியுங்கள்" என்றாய், உன்னை அறிமுகப் படுத்திக் கொண்டு...

தொடர்ந்து வந்த நாட்கள், இதோ இதனை மகிழ்வும் வேதனையும் எழுத காரணமானவை. எனக்கென நான் கனவுகண்ட பெண்ணின் சாயலோடு என்னில் நுழைய நினைக்கிறாய் அன்று. விருப்பங்கள் கேட்டாய், பிடித்த திரைப் படம், வண்ணம், எழுத்துகள், பாடல்கள், பாரதி எல்லாமும்... இறுதியில் கேட்காமல் கேட்டாய் " உன்னை எனக்கு தருவாயா?" என....

என் மீதான உன் அன்பு என்னை எப்படி சலனப் படுத்தியது என்று தெரியுமா உனக்கு? என் புகை பிடிக்கும் பழக்கத்திற்காக நீ பட்டினி கிடந்த நாட்கள், இருந்தாலும் அழைப்பாய்!! சரியான நேரத்தில் நான் உண்ணுவதை அறிந்து கொள்ள...சொல்லிக் கொண்டே இருந்தேன் நீ ஏமாந்து விடுவாய், தூக்கி எரிந்து விடுவேன் என்று... நீ நம்பவில்லை நான் பலவீனமானேன் உன்னிடம்...

உனக்கும் கவிதைகள் பிடித்திருந்தது... சிலவற்றை எழுதி என்னிடம் கொடுப்பாய், பெரும்பாலும் காதல் கவிதைகள். எண்ணங்கள் ஒன்றாகி ஒரே பாதையில் பயணிக்கத் தொடங்கிய காலம் அது. தினமும் என்னை கடக்கும் பொழுது புன்னகைத்தபடியே செல்கிறாய். ஒரு நாள் பேசிக்கொண்டிருக்கும் வேளையொன்றில் கேட்டாய் " என்னிடம் சொல்ல நினைத்து சொல்லாத விஷயம் ஏதாவது இருக்கிறதா என்று?" மௌனமாய் இருந்தேன், புரியாமல் இல்லை... ஆனால் உன் அளவிற்கு அன்பு செலுத்த முடியுமா என்னால்? மனதில் மட்டும் ஏனோ இனம் புரியா ஆரவாரம்.

நாட்கள் நகர்ந்து கொண்டே இருந்தது, உனக்கு வேறு ஒரு இடத்தில் வேலை கிடைத்திருப்பதாக சொன்னாய், மகிழ்ச்சியில் வாழ்த்தினேன். என் மகிழ்ச்சியில் நீ துயருற்ற தருணம் அது. சமாதானம் செய்யவே போராட வேண்டி இருந்தது.கவலையின்றிப் போ நானிருக்கிறேன் என்று சொல்ல வந்த வார்த்தைகளை உமிழ் நீரோடு விழுங்கிக் கொண்டேன். ஆறுதல் சொல்லும் நேரமெல்லாம் நீ அழுகைக்கு தயாராகி கொண்டிருந்த நிமிடங்கள் அவை.

இறுதியாய் அந்த நாள், நீ என்னையும், நான் உன்னையும் பார்த்துக் கொண்ட இறுதி நாள். என்னை காத்திருக்க சொல்லி விட்டு வந்தவுடன், தேநீர் விடுதிக்கு அழைத்தாய். இருவரும் அருகருகே நடந்த முதல் நாள் அன்று. எதிர் படும் பார்வைகளில் கிண்டல். உன் கண்களில் நீர். ஏதாவது பேசு என்று சொல்லி நான் பேசிக்கொண்டே இருக்க நடந்தோம். உன் மனதின் வேதனையை உணர்ந்தும் மௌனமாய் நானும் கூடவே...
தேநீர் விடுதிக்கு மிக அருகில் வந்ததும் வேண்டாம் திரும்பலாம் என்றாய்...ஏன் என்றேன்.. ஒரு வேளை நாம் தேநீர் அருந்தும் பொழுது நான் உன் எதிரில் அமர்வேன், உன் கண்களை நேரடியாக சந்திக்க வேண்டியிருக்கும் என்றாய். அது என்னால் முடியாது, இன்னும் அதிகமாக வேதனை தரும் நிகழ்வு என்றாய். என் அருகில் அமர்வாய் எனில் வருகிறேன், இல்லையெனில் வேண்டாம் எனச் சொல்ல, சிதறிப் போனது இதயம்... திரும்பி நடந்தோம்...

பேருந்து நிறுத்தத்தில் உனக்கான பேருந்து இல்லை. வேறு ஒரு பேருந்தில் ஏறி உன்னை பேருந்து நிலையத்தில் விட வந்தேன். பின்னால் அமர்ந்த என்னை, உன் கண்களாலேயே அருகில் வா என்றாய். அந்த நொடியில் நீ சொல்லுவதை செய்ய வேண்டும் போலிருந்தது எனக்கு. உன் வலிகளை குறைக்க வேறு என்ன வழிகள் இருக்கிறது.உன் அருகில் அமர்ந்தவுடன் என் தோள்களில் தலை சாய்த்தாய், உன் கண்ணீர் என் தோள்களில் வழியத் தொடங்கியது. நீ எனக்கானவள் ஆகியிருந்தாய் அந்த நொடியில்...


பேருந்து நிலையம். சற்றே அதிகமான உன் அழுகை இப்பொழுது, அதை மறைக்கும் முயற்சியில் நீ தோற்றுக் கொண்டிருந்தாய். அழுகையின் உச்சம். அப்பொழுதும் கேட்டாய் அதே கேள்வியினை... " "இப்பொழுதாவது சொல்! என்னிடம் சொல்ல நினைத்து சொல்லாத விஷயம் ஏதாவது இருக்கிறதா என்று". நான் அன்று போலவே இன்றும் மௌனமாகிறேன். என் பைத்தியகாரத் தனத்தை என்னவென்று சொல்ல... தலைகுனிகிறேன் உன்னை நேரில் சந்திக்க துணிவில்லை எனக்கு..


பேருந்து வந்தது, உள் சென்று மீண்டும் பார்த்தாய் ஜன்னலோர இருக்கையொன்றில் அமர்ந்த படி. ஆயிரம் அர்த்தங்கள், பரிதவிப்புகள், வலிகள், எதிர்பார்ப்புகள் என ஒன்றாய் கலந்த அப் பார்வை.. காத்திருக்கிறேன் என்று சொல்லிக் கொண்டே இருந்தது. நகர்ந்து செல்ல துவங்கியது பேருந்து... நீ என்னை பார்த்த இறுதி நொடிகள் மனதில்... அதுவரை கட்டுப்படுத்திக் கொண்டிருந்த என் கண்ணீர் கரை தாண்டத் தொடங்கியது எனக்கு. தவறு செய்தவன் போல் புலம்புகிறேன் தினமும்...

இன்றும் சற்று நேரத்தில் விடிந்து விடும், நானோ சிவந்த விழிகளுடன் கடமையென துவங்குகிறேன் என் இன்னுமொரு நாளை. மீண்டும் சந்திப்போமா?. ஆனால் எங்காவது கவிதை வாசிக்கும் பொழுதோ, பேருந்தில் பயணம் செய்யும் பொழுதோ கூடவே வரும் உன் நினைவுகளும்... நீயும் இதே போல் ஒரு நிலையில் இருந்துவிடக் கூடாது என வேண்டுகிறேன். என் நினைவு காலம் முழுதும் உன்னில் இருக்க வேண்டுமென விரும்பியவன் தான்.. ஆனால் இனிய நினைவுகள் கூட வலி மிகுந்தவையே... வலிகளும், வேதனைகளும் என்னோடு போகட்டும்...

எனக்காக நீயும்
உனக்காக நானும்
வாழ்ந்த அந்த காலங்கள்!!!
கடந்து போய்விட்டால்
என்ன?
வாழ்ந்து கொண்டே தான்
இருக்கிறேன்
நீ விட்டுப் போன
நினைவு காலங்களில்....

புன்னகையொன்றை களவாடிய பொழுது...








உன்னைச் சந்தித்த அந்த நள்ளிரவுப்
பொழுதொன்றின் தொடக்கத்தில்
களவாடிக் கொண்டேன்
உன் இதழ் உதிர்த்த
வெட்கப் புன்னகையொன்றை...

காலில் சதங்கைகளைக்
கட்டிக்கொண்டு என்னுடன்
வந்தது அப் புன்னகை
திரும்பிப் பார்த்த பொழுது
நீ மேலும் சில புன்னகைகளை
பிரசிவித்துக் கொண்டிருந்தாய்....


ஒற்றைப் புன்னகையோடு வந்திருக்காலாம்
எல்லாவற்றையும் கவர்ந்து செல்ல
நினைத்து மீண்டும் வந்தேன்
ஒரு கூடைப் புன்னகை மலர்கள்
நடக்கும் பொழுது பாரம் தாங்காமல்
விழுகிறேன் தரை மீது...

விடுபட்ட புன்னகைகள் திசைக்கொன்றாய்
பறக்கிறது பட்டாம் பூச்சிகளென
நட்சத்திரத்திடம் ஒன்று
வயல் வெளிகளில் ஒன்று
நதியிடம் ஒன்று
மலரிடம் ஒன்று
மரத்திடம் கொடியிடம்
துள்ளிக் குதிக்கும் கன்றிடம்
நடனமிடும் பறவையிடம்
ஒவ்வொன்றும் ஒவ்வொரு இடத்தில்...


தொலைத்து விட்ட புன்னகைகளை
திரும்ப பெற இயலா சோகத்துடன் நான்
கேட்கவா முடியும் அவற்றிடம்
திருடத் தெரிந்தவனுக்கு
பத்திரப் படுத்த தெரியவில்லை....

உன்னைப் பார்க்கிறேன்
தவற விட்ட புன்னகைகளை
திருப்பி தாவென கேட்கிறாய்
ஒரு மழலையின் சிணுங்கலோடு
புதிய புன்னகையை மறுதலித்து...

வீடு திரும்பி என் கால்கள்
வரும் வழியெங்கும்
தெருவில் என்னை கேலியாய்
பார்த்து புன்னகைக்கிறது
நான் தவற விட்ட புன்னகை கீற்றுகள்...

வெறுமையாய் அறையில்
வீழ்ந்த பொழுது
காற்று பறித்த புன்னகையொன்று
வந்து பதுங்கி இருந்தது
என் படுக்கை அறையில்
உன் முத்தங்களை சுமந்து கொண்டு....

எப்படி வந்தாய் என
முத்ததிடம் கேட்டேன்
முகவரி சொன்னது நீதான் என்றது
காலையில் கேட்டால்
ஆமென்றா சொல்லப் போகிறாய் நீ....