பிறப்பு கேட்காமலே கிடைத்த சாபம்...

மரணம் கேட்டும் கிடைக்காத வரம்...

Oct 16, 2007

காதல் அரசி

பெண்ணே, நீ யார் என்பதில் எனக்கு சந்தேகம் இருந்தது... குழம்பி திரிவேன்... பிறகு தான் தெரிந்தது நீ காதல் தேசத்தின் அரசி என்பது... இது வரை வரலாறுகள் அனைத்தும் உலகின் பெண்கள் பலரை காதலின் இள்வரசிகளாகவே அங்கீகரித்து வந்திருக்கிறது... அரசிக்கான இடம் மட்டும் நிரப்பபடாமலேயே... நீ ஜனிக்கும் அந்த நாள்வரை...
மணிமகுடங்கள் தேடி செல்லும் அரசர்களுக்கும், வீரர்களுக்கும் மத்தியில் காதலின் கீரீடம் மட்டும் உன்னை தேடி வந்து தன்னை அலங்கரித்து கொண்டது... மற்றவர்களெல்லாம் வழிவிட்டு நின்றதை பார்த்திருக்க மாட்டாய், நான் அறிவேன்... அனைவரும் ஏக்கதுடனும், பொறாமையுடனும் பார்த்து கொண்டிருக்கும் போதே காதல் உன்னை அரசியாக ஏற்று தன்னை என்றும் நிலை நிறுத்திக் கொண்டது.உன் முக பொலிவின் முன் காதல் கூட சற்றே வெளிச்சம் குறைந்தது உண்மை தான்.
பெண்ணே இனி நீ எச்சரிக்கையாய் இரு.. உனக்கான சுயம்வரத்தில் காத்து கிடக்கும் இளைங்ஞர்கள் எத்தனையோ எனக்கு தெரியாது....

மெளனத்தின் இசை

இசை... எத்தனை இதயங்கள் வசப்படுகின்றன இந்த ஒற்றை வார்த்தையின் வசீகரத்தில்... மனிதர்களின் மகிழ்வையோ, சோகத்தையோ கூட பிரதிபலித்து போகிறது இசை... அதில் தான் எத்தனை எத்தனை வகைகள்... மனதை வருடும் மெல்லிசை, தாளம் போட வைக்கும் மெட்டுகள், ஆட தூண்டும் நடன இசை,உரையாடல்களுக்கு இனிமை சேர்க்கும் பின்னிசை..... இன்னும் இன்னும்.... சாதாரண மூங்கிலை பார்க்கும் விறகு வெட்டிக்கும், புல்லாங்குழல் வாசிப்பவனுக்கும் வேறுபாடிருக்கிறது.. பானை செய்யும் தொழிலாளிக்கும், அதை கடமாய் மாற்றி இசை எழுப்புபவனுக்கும் இடைவெளிகள் இருக்கிறது... மாடு வெட்டி இறைச்சி விற்பவனுக்கும், அதன் தோலை மத்தளமாய் மாற்றி மங்கலம் இசைப்பவ்னுக்கும் வித்தியாசங்கள் ஆயிரம்...
இவர்கள் அனைவரையுமே தன்னிலை மறக்க வைக்கிறது இசையின் மெல்லிய தழுவல்கள்... இவற்றை தாண்டி நிற்கும் சில நேரம் நாட்டு புற கலைஞனின் தனி குரலும், குழந்தைக்கென பாடும் தாயின் தாலாட்டும்...
விவரிக்க இயலாமல் தனித்து கிடந்த என்னை அனைத்து லயங்களிலும் கட்டி ஒற்றை நொடியில் இழுத்து போட்டு வேடிக்கை பார்க்கிறது உன் மெளனத்தின் இசை....
அது உயிரின் இசை.....

மழை

மெல்லிய மழை அமைதியாக நனைக்கும் என்னை... ஈரமான உடைகளோடு ஏகாந்தமான உன் நினைவுகளோடு நடை பயில ஆரம்பிக்கும் நொடியில், சற்றே வேகம் கொண்டு ஆர்ப்பரித்து நீர் துளிகள் ஊடுறுவும் என் அணுக்களின் அடுக்குகளில்... மழை குறைந்த வேளைகளில் பூ வானம் தூறலாய்.... வாய் திறந்து ஏந்துவேன் காதல் தாகம் தீர்ப்பதற்காய்... முற்றிலும் நின்று, வெயில் வந்து அதன் பின்னும் தொடர்கிறேன்.... கொஞ்சம் கொஞ்சமாய் உலர்கிறது உடைகள்.. இன்னும் மழை தாங்கிய நிலம் போல் ஈரமாகவே இருக்கிறது நாம் இணைந்து நடந்த மழை கால நினைவுகள்...

உயிர்ப் பூ

இதோ இந்த நொடியில் எதோ ஒரு பெயர் தெரியாத காட்டு பூ மலர்கிறது. எதோ ஒரு மலர், தன் வண்ணங்களால் ஒரு வண்ணத்து பூச்சியை வரவேற்கிறது. இன்னுமொன்று பனிதுளிகளை தேனாக்கி வண்டுகளுக்கு பரிசளிக்கிறது... தலை அசைக்கிறது அதன் ரீங்காரத்தில்... மற்றொன்று எதோ ஒரு பெண்ணின் கூந்தலில் அழகு சேர்க்க, ஆலயங்களில் பூஜைக்கென,மணவறை அலங்கரிக்க..... இன்னும் எத்தனையோ... ஆனாலும் அடர்ந்த காடுகளில் யாரும் காணாமல் மலர்ந்து உதிரும் மலர்களின் வாழ்க்கையை பரிசளிக்கும் நீ... என் உயிர்ப் பூ...

மின்னலாக....

தனித்து துவங்கிய என் இருளில் நொடி நேர மின்னல் என என்னையும், என் பாதையையும் வெளிச்சமாக்கி போனவள் நீ..... அந்த ஒற்றை கணத்தின் விளிம்பில் நின்று கொண்டு மீண்டும் வருவாய் என எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறது என் மனம்.... நீ தந்த ஒளியால் எனக்கு புலப்பட்ட பாதைகள் அனைத்தும் உன்னையே வந்தடைகின்றன.... இப்பொழுதெல்லாம் என் வானில் மின்னல்களை காண்பதே அரிதாகிறது.... அப்படியும் வரும் சில வேளைகளில் உன் முகம் தேடுகிறேன், அந்த வெளிச்சத்தில்... மின்னலாக வருவதே நீ என்பதை அறியாமல்....

நினைவுகள்

தினமும் உனக்கென கவிதை எழுதும் அந்த நொடிகள், உன் வரவிற்காக காத்திருந்த அந்த பொழுதுகள், தொலை பேசியில் பேசி மகிழ்ந்த கணங்கள்..... எனக்கே எனக்காக நீ அளித்து போன புன்னகைகள், என் புத்தகங்களுக்கு உன் பெயர் சூட்டிய நாட்கள், நனைவை நனைக்கும் மழை காலங்கள்.... இப்படி எத்தனையோ, மனதின் ஒரு மூலையில் பசுமையுடன்... நீ மட்டும் தான் அருகில் இல்லை, அதனால் என்ன உன் நினைவுகள் இருக்கிறதே நான் உயிர் வாழ... அது போதாதா?

கவிதையும், காதலும்

காதலாய் இருப்பதில்லை
கவிதை..
கவிதையாய் இருப்பதில்லை
காதல்...

இருப்பினும்
காதலுக்குள் கவிதை இருக்கிறது
கவிதைக்குள் காதல் இருக்கிறது

வெயிலில் நடக்கும் தன் காதலியின்
பாதம் கண்டு பதறும் காதலன்
மனம் கூட கவிதை தான்...

நல்ல கவிதையின் சுகத்தில்
கண்மூடி கிடப்பவனுக்குள்ளும் காதல் தான்..

கவிதையும், காதலும் அற்ற
சமூகம் வெறும் நிலபரப்பே
இன்றி வேறு என்ன?