பிறப்பு கேட்காமலே கிடைத்த சாபம்...

மரணம் கேட்டும் கிடைக்காத வரம்...

Sep 5, 2012

எல்லோரையும் விட...

அப்பேருந்து நிலையத்தில்
அப்படியொன்றும் கூட்டமில்லை
எனக்கான பேருந்தும் அதனிடத்தில்
ஜன்னலோரமாய் நீ
அனிச்சையாய் உதிர்கிறது
விரலிடுக்கின் சிகரெட் துண்டு
அமர்கிறேன்
உனைப் காண ஏதுவான இருக்கையில்
அழகு
காதோரச் சுருள் முடியும்
நீண்ட கூந்தலும்
கண்களில் பெயர் தெரியா நாட்டியம்
அல்லது நாடகம்
பேருந்து நகர
நானோ
உனக்கானதொரு கவிதையை
தொடங்குகிறேன்
அடுத்த நிறுத்தம்
இன்னொருத்தி வருகிறாள்
இவளும் அழகு
தெற்றுப் பல்
குதிரை வால் சடை
காற்றில் விளையாடுமதில்
நானும்
நீர்ச் சுழியில் சருகாய் மனம்
யார் அழகு... ?
இன்னும் சில நிறுத்தங்கள்
இன்னும் சில பெண்கள்
இருப்பதோ இரு விழிகளும்
ஒற்றைப் பார்வையும்
இடையில் ஏறியவர்கள் எல்லாம்
இடையிடையே இறங்கிவிட
நீ மட்டும் இருக்கிறாய்
உறுதியாய்ச் சொல்கிறேன்
எல்லோரையும் விட நீ தான் அழகு...

ஆணுக்கும் பெண்ணுக்கும்…


ஆணுக்கும் பெண்ணுக்கும் பிறந்து,
என் நாளங்களில்
நூற்றாண்டுகளின் சாரத்தைப் பாய்ச்சுபவளே !

உன்னை வெற்றி கொள்ள
உன் விரிந்த சதை மேல்
என் ஆன்மா கவிகிறது.
ஒரு வேங்கையைப் போல் சோம்பல் முறித்துக் கொண்டு
என் இதயம் தன்னைத் தானே அழித்துக் கொள்கிறது.
விண்மீன்களை ஒளி பற்றிக் கொள்வது போல்
சிதறிய என் உயிர் உன்னைப் பற்றிக் கொள்கிறது.

காற்றைத் தழுவும் பாய்மரம் போல
என்னை நீ அணைக்கிறாய்.
விதையைப் பெறும் பாத்தியைப் போல
உன்னை நான் அணைக்கிறேன்.
என் துயரங்கள் உன்னைச் சுடவில்லையெனில்
அவற்றின் மீது படுத்துக் கொள்.
என் சிறகுகளுடன் உன்னைப் பினைத்துக் கொள்.
அவை உனக்குப் பறக்கும் ஆற்றலைத் தரலாம்.
என் ஆசைகளைச் சீராக்கு.
அவற்றின் போராட்டம் உன்னைப் புண்படுத்தலாம்.
துயரத்தை நான் இழந்த பிறகு
எனக்கென நீ மட்டுமே இருக்கிறாய்
வாளைப் போல் என்னைக் கிழித்தெறி.
அல்லது, ஓர் உணர்கொம்பைப் போல்
என்னை மென்மையாகத் தொடு
என்னை முத்தமிடு
என்னைக் கடி
என்னைக் கொழுந்துவிட்டெரியச் செய்.
எனது ஆண்விழிகள்
எல்லையற்ற உன் கடல் விழிகளில்
உடைந்தழியும் கப்பலாவதற்காக
நான் கரைக்கு வருகிறேன்.

என் கைகளையும்…


என் கைகளையும் இதயத்தையும் விட்டு விடு.
, என்னை விட்டு விடு !
உன் உடலின் பாதல் வழி
என் விரல்களை ஓட விடு.
மோகம்குருதியும் தீயும் முத்தங்களுமாக
துடிக்கும் தீ நாவுகளால் என்னை எரிக்கிறது.
இது என்னவென்று உனக்குப் புரியாது.

என் நரம்புகளின் உணர்வுக் காடுகளூடாக
ஓடும் புலன்களின் புயல் அது.
மோக நாவுகளால் சதை இப்படிக் கத்துகிறதே !
எத்துணைப் பெருந்தீ !
பெண்ணே, கன்னி ஒளி போல நீ இருக்கிறாய்.
கருகிப் போன என் உயிரோ
இரவின் விண்மீன்கள் நிறைந்த உன் உடலை நோக்கிப்
பறந்து வருகிறது.

என் கைகளையும் இதயத்தையும் விட்டு விடு.
, என்னை விட்டு விடு.
காதல் அன்று,
ஆசைதான் மெதுவாக அவிந்து போகிறது.
மோக வெறியே மழையாக,
சாத்தியமற்றதைத் தேடுவதாக
ஆனால், உன்னிடம் இருப்பதையெல்லாம்
எனக்குத் தருவதற்காக
இதோ நீ இருக்கிறாய்.
உன்னை அணைப்பதற்காக
உன்னை விரும்புவதற்காக
உன்னைப் பெறுவதற்காக
நான் பிறவி எடுத்துள்ளது போல்
உன்னிடம் உள்ளவற்றையெல்லாம் எனக்குத்
தருவதற்கென
நீ பிறவி எடுத்துள்ளாய் !