பிறப்பு கேட்காமலே கிடைத்த சாபம்...
மரணம் கேட்டும் கிடைக்காத வரம்...
மரணம் கேட்டும் கிடைக்காத வரம்...
Jul 12, 2012
ஊர் கிணறு...
தினமும் மாலை நேரத்தில்
தோழிகளுடன்
கிணற்றடி வருகிறாய்
நீரிறைத்து
திரும்புகையில்
நிறைகிறது அக் கிணறு...
உன் பிம்பம் பார்த்தே
தன் தாகம் தீர்த்தது
அக் கிணறு...
நீ தோழிகளோடு
பேசிச் சிரித்த கதைகளை
யாருமில்லா நேரத்தில்
எனக்குச் சொல்லிச் சிரிக்கிறது
ஊர் கிணறு...
தெருவின் மூலையில்
நீர்க் குழாய் வந்த பிறகு
உன்னைப் பார்க்காமல்
பாழடைந்து கிடக்கிறது
அதே கிணறு...
உன் வீட்டிற்குள்
நீர் இணைப்பு வர
தேவைகளே இல்லாமல் போனது
தெருவின் நீர்க் குழாய்கள்...
நீ திருமணமாகிப் போன
நாளிலிருந்து
பேச்சுத் துணைக்கு
இருப்பதென்னவோ
நீரிறைக்கும் ஊர் கிணறு தான்...
யாருமே செல்வதில்லை
எனும் போதும்
அக் கிணறு
இன்னும் இருக்கிறது
உன் நினைவுகளையும்
நீரையும்
சுரந்த படி...
இந்நாளிலும்
சில இரவுகளை
நான் கழிப்பதுண்டு
உனக்கும் எனக்குமான
காதலை
அக்கிணறிடம் சொல்லியபடி...
எல்லா கிணறுகளுக்கும்
தெரியும் தான்
நீரிறைத்த பெண்களின்
முகமும் மனதும்...
Subscribe to:
Posts (Atom)