பிறப்பு கேட்காமலே கிடைத்த சாபம்...

மரணம் கேட்டும் கிடைக்காத வரம்...

Oct 12, 2011

யானை


வேலையிலிருந்து திரும்பும் போது
ஏறக்குறைய பாதி இரவாகி விட்டிருந்தது
அதுவரை விழித்திருந்து கேட்கிறாள்
அப்பா யானைனா எப்படி இருக்கும்?
பெரிய உடல்
கரிய உருவம்
பெரிய காது
சிறிய வால்
தும்பிக்கை
என சொல்லி முடிக்கிறேன் நான்
பாடப் புத்தகத்தில்
எருமைக்கு பக்கத்தில் இருக்கும்
யானையின் படமொன்றை காட்டி
இதில் சின்னதா தானே இருக்கு என்கிறாள்
சரி விடு நாளை பார்க்கலாம் என சொல்லி
உறங்கச் சொல்லுகிறேன்
எனக்கு முன் விழித்துக் கொண்டு
யானை பார்க்கப் போகலாம் என்கிறாள்
சரி என அழைத்துச் செல்கிறேன்
பக்கத்து நகரத்தில் எங்கும் இல்லை
பெருமாள் கோவில் யானை இறந்து
மூன்று மாதங்கள் முடிந்துவிட்டதாம்
வேறு வழிகளே இல்லை
பழனி செல்லும் பேருந்தில் ஏறினோம்
இரண்டு பழமும் ஒரு தம்ளர் பாலும்
போதுமானதாய் இருக்கிறது அவளுக்கு
பக்கத்து இருக்கை சிறுவனிடம்
யானை பார்க்க போவதாக
சொல்லிக் கொண்டு வருகிறாள்
இரண்டு மணி நேரப் பயணம்
பாகனின் அங்குசத்தில்
பிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறது
பழனியில் யானைகள்
முதல் ஐந்து ரூபாய்க்கு துதிக்கை ஆசிர்வாதம்
பின்னர் கொடுத்த இருபது ரூபாயில்
சிறிது தூரம் யானைப் பயணமென
பயம் கலந்த மகிழ்வுடன் சிரித்துக் கொண்டே
கையசைக்கிறாள் எல்லோருக்கும்
திரும்பி வீடு வந்ததும்
இரு கைகளையும் விரித்து
அம்மா இவ்ளோ பெரிய யானை
என்று சொல்லி கட்டிக் கொள்கிறாள்
மீண்டும் பறந்து செல்கிறது
பக்கத்து வீட்டு வாண்டுகளிடம் விவரிக்கும் ஆவலில்
இனி அவள் சொல்லும் கதைகளில்
நிச்சயம் இருக்கும் ஒரு யானையும்
அதன் மீது பவனி வரும் இளவரசியும்
நாளை அவளிடம் யாரும்
ஒரு புலியைப் பற்றியோ
சிங்கத்தைப் பற்றியோ
சொல்லிவிடக் கூடாதென்ற
கவலை எனக்கு...