பிறப்பு கேட்காமலே கிடைத்த சாபம்...

மரணம் கேட்டும் கிடைக்காத வரம்...

Jul 2, 2011

கிழிகிறது முகத் திரை..


ஒவ்வொரு முறையும் என் மணல் வீட்டை
கலைத்து போகிற காலடிகள்
யாருடையதாக இருக்கும் என்று தெரியவில்லை
சில சமயம் என் கால்களையும்
சந்தேகப் படத் தோன்றுகிறது...

சிறு புறாக் குஞ்சு
மரத்தடியில் கிடக்க...
மரத்திலேறி கூட்டில் வைத்து
தாய் பறவை வருமென வலையும்
விரிக்கிறேன் என் வீட்டில்
புறாக் கூண்டு வெறுமை என...

செய்து விட்ட தவறுகளுக்கு
உறுத்தல் இல்லாமலா போகும்,
நாளை பார்க்கலாம்
வருவது வரட்டுமென
கிழிகிறது முகத் திரை..

அதிகாலை விண்மீன் கூட்டங்களை
காட்டி மயக்கியவாறே
நிலவை திருடிச் செல்லும் என்னை
காட்டிக் கொடுக்காத
இருள் இருக்கும் வரை மட்டுமே
நல்லவனாய் நடிக்க வைக்கும் பகல்...

கண்ணாடி தொட்டிக்குள் வண்ண
மீன்களாய் வரவேற்பறையில்
படுக்கையறையில் யாருக்கும் தெரியாமல்
ஒளித்து வைக்கப் படுகிறது
என் ஆணாதிக்க சமன்பாடுகள்...

உனக்கான எல்லா வசதிகளும்
கிடைக்கும் ஆனாலும் நீ
என் அனைத்து முடிவுகளுக்கும்
சரி என்று தலையசைக்கும்
அந்த நொடிவரை...

நீ தோற்கும் பொழுது
என் புன்னகையை மறைத்து
உனக்காக விசும்புவேன்...
மனதில் நீண்டு கொண்டே
செல்கிறது கோரை பற்கள்...

எல்லாம் சரியாகிவிடும்
என் சாவில்
நல்லவனென்று நீயும் சொல்வாய்
நரகத்தில் என் இடத்தை
யாராலும் நிரப்ப
முடியாதென எனக்குத் தெரியும்...