பிறப்பு கேட்காமலே கிடைத்த சாபம்...

மரணம் கேட்டும் கிடைக்காத வரம்...

Nov 4, 2011

ஈக்கள் மொய்க்கும் கனவு...



வலிகளை சுமக்கும் மனதில்
தொலைந்து போன புன்னகையின்
ஆறா ரணங்களின் சுவடுகள்...

ஒவ்வொரு முறையும்
நிரம்பி வழிகிறது
உனக்கான என் கண்ணீர் துளிகளின்
நினைவு அணைக்கட்டுகள்...

அழகாய் கிறுக்கலாய்
என எதை எழுதினும்
எப்படியும் வந்து விடுகிறது
உன் பெயரின் சில எழுத்துகள்...

கட்டுப்பாடுகளற்ற வெளிகளில் திரிகிறது
பசித்த மிருகமென
சிவக்கும் விழிகளுடன்
என் மீதான உன் கோபங்கள்...

ஆயிரம் காரணம் சொல்லி
தனியே விடப்பட்டு ஒரு நாள்
இதே தனிமை சிறையில் அடைபடுவேன்
என் நிறைவேறாக் கனவுகளோடு...

எல்லோருக்கும் பிடித்திருக்கும்
என் மனதின் வரிகளை
உனக்கு பிடிக்காமல் போனதில்
வருத்தம் தான் எனக்கு...

எல்லோருக்கும் தெரியாமல் போன
என் மனதின் வலிகளை
நீ மட்டுமே கண்டுகொண்டதில்
சிறிது நேர துயரம் உனக்கு...

முடிவை நோக்கிய கவிதையொன்றில்
இன்னும் நீள்கிறது முடிவுகளற்ற
நீ விட்டுச் சென்ற
தனிமைக் குரலின் கேவல்...

வறண்டு விட்ட குருதியை
சுற்றி மொய்க்கும் ஈக்களென
ஒரு நாள் என் கவிதைகளைச்
சுற்றி கொண்டிருக்கும் உன் விருப்பங்கள்...

நிர்பந்தமென விலகி நிற்கவும்
நினைவுகளைச் சுமக்கவும்
ஏதாவது ஒரு உயிர் கனவு
பலியிடப் படுகிறது ஒற்றை நொடியில்...

வானவில்லென ஒரு கனவும்
தீராத காதலையும் தவிர்த்து
நிறைய தேவைப் படுகிறது
இன்றைய வாழ்வின் தேவைகளுக்கு...