பிறப்பு கேட்காமலே கிடைத்த சாபம்...

மரணம் கேட்டும் கிடைக்காத வரம்...

Jan 29, 2012

கண்ணீர் வேடிக்கை ....


பல வேளைகளில்
பல காரணங்களால்
தனித்து விடப்படுகிறது நேசம்
சுற்றிலும் கூரிய கத்திகளும்
நீண்ட அரிவாள்களும்
காத்திருக்கிறது எப்பொழுதும்...

சிறிதும் பெரிதுமாய்
சில லேசான காயங்களுடன்
விக்கித்து நேசத்தின் அருகில்
கிடக்கிறது பளபளக்கும்
நட்பின் கத்தி சில ரத்தத்
துளிகளின் கரையோடு...

நேசத்தின் உடலை
கூர் பார்க்க விரும்புவது
கூடவே உறவாடும்
நட்பும் உறவுமே
எதிரிகளிடம் எச்சரிக்கையாய்
இருந்து விடுகிறோம்...

காலம் காலமாய்
தொடரும் நிகழ்வுகளில்
அப்படி என்ன தான் இருக்கிறது
நம்பிக்கை கொள்ளும்
உறவுகளின் கண்ணீரை
வேடிக்கை பார்ப்பதில்...

இறுதியில் கேட்கப்படும்
மன்னிப்புகளுக்கு தலையாட்டி
வாழும் வரை சுமக்க
நேரிடுகிறது நட்பும் உறவும்
உண்டாக்கிய வடுக்களை...

ஆறா ரணமென....


புன்னகையைக் கூட
எல்லோரிடமும் பகிர
கண்ணீரை வெகு சிலரிடம்
அந்த இரவு உன் கண்ணீரை
சுமந்திருந்தது

ஆறுதலாய் தலை கோதி
மடியிலடவே துடிக்கிறது மனது
அலைபேசி மௌனமே
கையறு நிலையென
வாய்க்கிறது எனக்கு

எப்பொழுதும் உன் கண்ணீர்
உனக்காக இருந்ததில்லை
ஏதாவது ஒரு வலியை
நட்பும் உறவும் தந்துவிட
வெடித்தழுகிறாய் இரவில்

உலகின் மிக கடினமான
சூழலை உருவாக்கி விடுகிறது
நேசிக்கும் உயிரின் கண்ணீர் துளிகளும்
அதை தடுக்க இயலா கணங்களும்

உனக்கு ஆறுதல் சொல்லி
தேற்றி விட்டு கதறி
அழுகிறேன் உன் கண் நிறைத்த
நீர்த் துளிகளின் காரணமாய்
தனிமை இரவுகளில்

கண்ணீர் துளிகளுடன்
எனைத் தேடும் உன் நேசத்திற்கென
காலம் முழுதுமாய்
காத்துக் கொண்டுதானிருக்கிறது
உன் மீதான என் நேசம்

அந்த ஒரு இரவு
என் நினைவில் அகல வேண்டிய
அந்த கொடிய இரவு
அகலாமல் தானிருக்கிறது
ஆறா ரணமென....