பிறப்பு கேட்காமலே கிடைத்த சாபம்...

மரணம் கேட்டும் கிடைக்காத வரம்...

May 8, 2012

தேவதையின் வாசம்

தேவதையின் வாசம் அறையெங்கும்
சற்று முன்பு தான் வந்திருக்கலாம்
நான் இல்லாத நேரம்
சற்றே தயங்கி இருக்கலாம்
வெள்ளைக் கொக்கின் சிறகில்
ஒரு மெத்தை செய்து வைத்திருந்தேன்
அதை ரசித்திருக்கலாம்
அறையெங்கும் இரைந்து கிடக்கும்
புத்தகங்களையும்
ஒதுக்கி வைக்கப் பட்ட காலி மதுப் புட்டிகளையும்
கருகி தீந்து கிடக்கும் சிகரெட் துண்டுகளும்
தேவதையை சரிவர வரவேற்றிருக்காது தான்
நடுவில் தொங்கும் துணி கயிற்றில்
சாயம் போன உள்ளாடைகள்
மடிக்கப் படாத போர்வை
சுருட்டப் படாத கோரைப் பாய்
தேவதைக்கு இது புதியதாய் இருந்திருக்கலாம்
நாசி துவாரங்களில் துர்நாற்றம்
கால்களில் பிசுபிசுப்பென
ஓரமாய் வீசப் பட்ட லுங்கிகளை
வெறுத்துப் பார்த்திருக்கலாம்
வேறு வழிகள் இல்லை
கேட்டு விடலாம் யார் வேண்டுமென?
தயங்கியபடி சொன்னது
என் பெயரை
என் முகவரியை
நானில்லை அது என்று சொல்லி
கீழிறங்கும் தேவதையை
வேடிக்கை பார்க்கிறேன்
எனைச் சுற்றிலும் மணம் கமழ
பூக்களில் சிலவற்றை உதிர்த்துச் சென்றிருக்கிறது
நிறைகிறேன் நான்...

.....
...
..
நேயர் விருப்பப் பாடலொன்று
வானொலியில் ஒலிக்கிறது
"என் மேல் விழுந்த மழைத் துளியே
இத்தனை நாளை எங்கிருந்தாய்"....

காதல் களத்தில்

ஒரு விளையாட்டின் இறுதிக் கட்டப் பரபரப்பில் இருக்கிறாய்
களம் முழுதும் சுழன்றடித்து
சூழ்நிலையை உனதாக்கிக் கொள்கிறாய்
உன் மீதான குற்றச்சாட்டுகளில்
என் ஆர்வமின்மை உன்னை அச்சம் கொள்ள செய்கிறது
எனக்கு எப்படியேனும் விளக்கிவிட வேண்டுமாய்த் தவிக்கிறாய்
ஒரு சந்தர்ப்பத்திற்காகக் காத்திருக்கிறாய்
அல்லது சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக்கொள்ள எத்தனிக்கிறாய்
நேற்று வரை சுய விலக்கம் கொண்டிருந்த நீ - இன்று என் தோள் சாய்ந்து விடத் துடிக்கிறாய்
என் தோள்களோ சுமந்த பாரத்தில்
காய்ப்புக் காய்த்துக் கிடக்கின்றன
எனினும்
எனை ஏற்றுக் கொள்ளேன் என்ற
உன் அழுத்திய விளி கேட்டு
என் கர்ப்ப பாத்திரம் திறந்து
உன்னை இட்டு மூடிக் கொள்கிறேன்.

அதிஜீவனம்

சிறியதென்றாலும்
அதுவும் தயாராகிக் கொண்டுதான் இருக்கிறது
ஆனால் சுற்றிலும் அடைத்துக்கொணடபடி
பூக்களையிட்டுக் காட்டியபடி
பிரார்த்தித்த படி

என்றாலும்
இக் குன்றுப் புல்லிற்கு
வேனலினூடே
அதிகம் ஜீவிக்க இயலுமோ?

கொன்றை மரமே கொன்றை மரமே
வெயிலை உருக்கி
ஸ்வர்ணமாக்கி
காதில் அணியும் கலையை
அதற்குச் சொல்லிக் கொடுக்கிறாயா?

ஊஞ்சல் மரமே ஊஞ்சல் மரமே
வேனலை எடுத்து
குளிர்த் தொப்பியாக்கி
தலையில் வைத்துக் கொண்டு விளையாடி
அதை மகிழ்ச்சிக்குள்ளாக்குகிறாயா?

இல்லையெனில்
சிறிதன்றோ என்றெண்ணி
வேனலதை
பசுமைக்குத் திறந்து வீசிவிடும்..
‎(மலையாளத்திலிருந்து தமிழுக்கு மொழி பெயர்த்த கவிதை)
வேனில் காலத்தைப் பற்றியது..
 

போலிக் கிரீடங்கள்...

எத்தனை இரவுகள் உனக்கான காத்திருப்பில் கழிந்தது என் அன்பே..
எத்தனை பருவங்களின் சுழற்சி
மாறி மாறி வந்து போயிற்று தெரியுமா?
உனக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை..
இதோ இந்த நதியின் நீர் வற்றிப் போயிற்று
இதிலிருந்த கடைசி மீனையும்
கொக்கு கொத்திப் போயிற்று
ஒரு விடியலில்
காணாமல் போன சூரியனால்
இருட்டு கவ்விக்கொண்டது
இதய அறையெங்கும்
அழைக்கும் குரல் கேட்காவண்ணம்
உன் செவிகள் திறனிழந்து விட்டன
எதையும் நோக்கவியலா
அந்தகம் உன்னை ஆக்ரமித்துக் கொண்டிருக்கிறது
உன் கிரீடங்களை இறக்கவோ,கழற்றவோ
நீ ஒரு போதும் தயாரானதில்லை
கர்ணனின் கவசகுண்டலம் போல
ஒருவகைக் கம்பீரத்தை
கவனமாய் சுமக்கிறாய்
ஆனால் என் அன்பே...
அதன் கனம் என்னால் தாளவியலாததாக இருக்கிறது....

சொர்க்கத்தின் கதவுகள்


திறப்பதற்கான சாத்தியங்கள் ஏதுமற்று..
வானில் இறுக்கமாக
மிக மிக இறுக்கமாக
மூடப்பட்டு விட்டன
சொர்க்கத்தின் கதவுகள்
ஏகாதசியோ,சிவன் ராத்திரியோ
கிழமைகளுக்குத் தெரிவதில்லை
நாம் அவைகளுக்கு வைத்த பெயர்கள்
எப்போதும் போலே விடிகின்றன
எப்போதும் போலே மடிகின்றன
இதற்கிடையே தான் நமக்குள்ளான
பலப்பரீட்சைகள்..