பிறப்பு கேட்காமலே கிடைத்த சாபம்...

மரணம் கேட்டும் கிடைக்காத வரம்...

Jun 25, 2014

இருபெண்களும் சமூகமும்.


       சமீபத்தில் பார்த்த இரண்டு திரைப்படங்கள், நடிகை சில்க்கின் வரலாறு சொல்லும் டர்ட்டி பிக்சரும் (ஹிந்தி, தமிழ்), நடிகை ஷோபாவின் வரலாறு சொல்லும் லேகாயுட மரணமும் (மலையாளம்).
     இரண்டுமே இருவேறு காலகட்டத்தில் வெளிவந்த ஏறக்குறைய ஒரே காலகட்டத்தில் பிறந்து, போராடி சினிமாவில் கொடிகட்டி வாழ்ந்த பெண்களின் வரலாறைச் சொல்லும் படங்கள். இருவருக்கும் சில பொதுவான நிகழ்வுகள் திரைத்துறையில் பிரவேசிக்கையில் நிகழ்ந்திருக்கிறது. இருவருமே விட்டுக் கொடுக்காமல் போராடி தங்களுக்கான இடத்தை அடைந்திருக்கிறார்கள். இருவருமே உண்மையான நேசத்திற்காக ஏங்கியிருக்கிறார்கள். சில்க் கொஞ்சம் மனவலிமை அதிகம் பெற்றவராகவும், நினைத்த காரியத்தை சாதிக்க வேண்டும் எனும் வெறியுள்ளவராகவும் இருந்திருக்கிறார். பின்னர், இருவருமே தற்கொலை செய்து கொண்டு இறந்திருக்கிறார்கள்.
    1960 ல் பிறந்த சில்க்கின் பெயர் விஜயலட்சுமி, 1962 ல் பிறந்த ஷோபாவின் பெயர் மகாலட்சுமி. ஒருவர் கவர்ச்சி நடிகையாகி ஆண்கள் தூக்கம் கெடுக்க, இன்னொருவர் இயக்குனர்களுக்கான நடிகையானார். சிறுவயதில் திருமணம் முடித்து, வாழப்பிடிக்காமல் சென்னை வந்த சில்க் சிறிய கதாப்பாத்திரங்களில் நடிக்கத் துவங்கி, பின் கவர்ச்சி நடிகையாக மாறிப்போனார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் சில்க்கின் ஒரு ஆட்டம் கொண்ட பாடல் இல்லாமல் படம் இல்லை என்பதாக மாறிப்போகும்படியான ஒரு காலகட்டம் உருவாகத் தொடங்கியது. 1979 ல் வெளிவந்த வண்டிச்சக்கரம் படத்திற்குப்பிறகு தான் வெறும் ஸ்மிதா சில்க் ஸ்மிதாவாக மாறினார். அதன் பிறகு அவரது திரைவாழ்க்கை வளர்ச்சியடையத் தொடங்கியது. அலைகள் ஓய்வதில்லை, சகலகலாவல்லவன், பாயும் புலி, மூன்று முகம், தங்க மகன், நீங்கள் கேட்டவை,கீதாஞ்சலி என வெற்றிப்படங்களின் பட்டியலில் தனது பெயரும் இருக்கும்படி பார்த்துக் கொண்டார்.

     தனது ஆறு வயதிலேயே குழந்தை நட்சத்திரமாக தந்து திரைவாழ்வைத் துவங்கிய ஷோபா, 1977 ல் கதாநாயகி ஆனார். அதன் பிறகு தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய படங்களில் நடித்து புகழ்பெற்றார். நிழல் நிஜமாகிறது, முள்ளும் மலரும், ஏணிப்படிகள், பசி, அழியாத கோலங்கள் போன்ற சிறந்த படங்களில் நடித்து, பசி படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசியவிருது கிடைத்தது. 
   சில்க்கின் மரணம் என்பது அவரது 35 வது வயதில், அவரது திரைவாழ்க்கை ஒரளவிற்கு முடிவிற்கு வந்தபோது, படத் தயாரிப்பு போன்றவற்றால் ஏற்பட்ட பணபற்றாக்குறை போன்ற நெருக்கடி நிலையில் நிகழ்ந்தது. ஷோபாவோ தனது புகழின் உச்சியில் இருக்கும் போதே, நிரந்தரப் பிரிவை தேடிக் கொண்டார். 


   இனி படத்திற்கு வரலாம். சில்க்கின் கதாப்பாத்திரத்தை ஏற்று வித்யா பாலன் நடித்த படம் 2011 ல் வெளிவந்த தி டர்ட்டி பிக்சர். மிலன் லூத்ரியா இயக்கத்தில், ஏக்தா கபூர் தயாரிப்பில் வெளிவந்த படம். நஸ்ருதீன் ஷா, துஸ்ஸார் கபூர், இம்ரான் ஹாஸ்மி ஆகியோர் நடித்த இப்படத்தின் மூலம், சிறந்த நடிகைக்கான தேசிய விருது வித்யாபாலனுக்கு கிடைத்தது. இங்கு படத்தின் கதை என்ன என்பதைப் பற்றியோ யார் எப்படி நடித்திருக்கிறார்கள் என்பது பற்றியோ எனக்கு எழுதப்பிடிக்கவில்லை. சில்க் கதாப்பாத்திரத்தை சுற்றி வரும் கதை, சூர்யகாந்த், ரமா காந்த் ஆகியோர் சந்தர்பத்திற்காக சில்க் ஐ பயன்படுத்திக் கொண்டு பின், அவரை உதறித் தள்ளும் இடங்கள், இயக்குனர் ஆப்ரகாம் கதாப்பாத்திரம் இதில் குறிப்பிடத்தகுந்தது. படம் முழுக்க சில்க் போன்ற ஒரு நடிகையை எதிர்க்கும் ஒருவராகவே வந்தாலும், அவர் சில்க்கை மிகவும் நேசிப்பவராகவே இருக்கிறார். இது அனைவருக்கும் இருக்கும் இயல்பான மனநிலை. சில்க் எப்பொழுதும் வெற்றிக் குதிரையாகவே பவனி வர விரும்பும் பெண்ணாக, அனைவரின் மீதும் ஆதிக்கம் செலுத்தும் பெண்ணாக, மது, புகை போன்ற பழக்கங்களும், உச்ச நடிகருடன், அவரின் தம்பியுடன், ஒரு ரசிகனுடன், இறுதியில் தன்னை வெறுக்கும் இயக்குனருடன் என எல்லோருடனும் உடலைப் பகிர்ந்து கொள்பவராக சித்தரிக்கப் படுகிறார். (இது எந்தவகையில் உண்மை என்பதெல்லாம் சில்க்கை அறிந்தவர்களுக்கும், திரைத் துறையினருக்குமே வெளிச்சம்). இறுதியில் ஒரு படம் தயாரித்து, வீடு கடனில் மூழ்க, தன்னால் யாருக்கும் அட்டிமைப்பட்டுக் கிடக்க முடியாது எனும் சூழலில் தனது வீட்டில் தற்கொலை செய்து கொள்கிறார். 


      அடுத்து ஷோபாவின், லேகாயுட மரணம், கெ.ஜி, ஜார்ஜ் இயக்கத்தில் 1983 ல் வெளிவந்ததிரப்படம்.இப்படத்தில் நடிகர் ராமராஜனின் முன்னாள் மனைவி நளினி கதாநாயகியாக நடிக்க, பரத் கோபி, மம்முட்டி ஆகியோர் நடித்துள்ளனர். தாய், தந்தை, மகள் என சென்னைக்கு திரைப்பட வாய்ப்பு தேடி சென்னைக்கு வரும் குடும்பம், இங்கிருக்கும் தவறான மனிதர்களால் வேறு பாதைக்குத் திருப்பபடுகிறது. பிறகு சிறுகதாப்பாத்திரங்களில் தொடங்கி, கதாநாயகன் உதவியால் தொடர்ச்சியான வாய்ப்புகள் பெற்று, பெற்றோரால் பணம் காய்க்கும் பொருளாக மாற்றம் பெற்று, தற்கொலை செய்து கொள்ளும் நாட்களில் பிரபலமான இயக்குனருடன் இரண்டாம் தாரமாக வாழ்வதாக முடிகிறது. 
     இருபடங்களிலும் முன்னேறுவதற்கான அனைத்து வழிகளையும் ஒரு பெண் மேற்கொள்கிறாள் என்பதாக காட்டப்பட்டுள்ளது. அவை அவர்களின் விருப்பத்துடனோ, சூழ்நிலை என்பதான காரணம் காட்டியோ, தன்னை ஒரு பொருளாக, தன் உடலை ஒரு ஆயுதமாகப் பயன்படுத்தும் பெண்களை திரையில் காட்டியிருக்கிறார்கள். இருவரும் பெரும் பணம் சம்பாதிப்பவர்களாக மாறிய பின்னும், உண்மையான ஒரு நேசத்திற்க்கு, குறிப்பாக ஆண்களின் நேசத்திற்கு ஏங்குபவர்களாக சித்தரிக்கப்படுகிறார்கள். ஆண்களோ பெண்களை தங்களின் தேவைக்கு ஏற்ப ஒரு பெண்ணை உயர்த்தவோ, தாழ்த்தவோ முடியும் என்பதாகவும், உன்னை விட்டால் வேறு பெண் எனும் மனநிலை கொண்டவர்களாகவும் காட்டப்படுகிறார்கள். ஆண்களின் வாழ்க்கை எந்தவிதத்திலும் இவர்களின் வருகையாலோ, வளர்ச்சியாலோ, இறப்பினாலோ பாதிக்கப்படுவதில்லை என்பதாகவும், மாறாக பெண்களின் வளர்ச்சியின் பின்னால் ஆண்களின் பரிவு அல்லது கவனிப்பு இருப்பதாகவும் குறியீடாக்கப்பட்டுள்ளது. இப்படங்களின் இயக்குனர்கள் ஆண்களாக இருப்பதாலோ என்னவோ, ஆண்களின் பார்வை என்பதாக மட்டுமே இருக்கிறது. ஒரு பெண்ணை, அவர்களின் மெல்லிய உணர்வுகளை எந்தத் திரையிலும், நிஜத்திலும் வெளிப்படுத்த ஆணுக்குத் தெரியாது என்பதை அப்பட்டமாக உணர்த்தியிருக்கிறார்கள். பெண்களின் ஆடைகளை உரித்துப் பார்ப்பதே ஆண்களின் வீரம், பெருமை என்பதை கொஞ்சம் கூட வெட்கப்படாமல் வெளிப்படுத்தியிருக்கிறார்கள். 
     திரையுலகில் மட்டுமின்றி, எழுத்துலகில், அலுவலகங்களில் எப்போதும் ஆண்கள் காத்துக் கொண்டே இருக்கிறார்கள். தனக்கு வயப்படாத ஒரு பெண்ணைப் பற்றி அவதூறு கூறவும், நடத்தை பற்றி புறம் கூறவும் ஆண்கள் தயங்குவதே இல்லை. அவர்களின் வசைவார்த்தைகள் கூட பெண்ணைப் பற்றியோ, அவளின் அவயங்கள் பற்றியோ இருப்பது மிகக் கேவலம். வசதியும், அதிகாரமும் உள்ள எந்த ஆணும் இது போன்ற செயல்களில் ஈடுபட தயங்குவதே இல்லை. அழகிகள் கைது எனும் பத்திரிக்கைச் செய்திகளில் எப்பொழுதும் முக்காடிட்ட பெண்களை மட்டுமே படம் பிடித்துப் போடும் கூட்டம், அவர்களோடு இருந்த ஆண்களை வெறுமனே சபலம் என்ற சொல்லோடு மன்னித்து விடுகிறது. 
    இந்த இரண்டு திரைப்படங்களும் ஏறக்குறைய சுயசரிதை எனும் பெயரில் படமாக்கப்பட்ட, ஆண்களை விஞ்சிய இரு பெண்களின் மீதான ஆண்களின் வெறுப்பு என்பதாகவே எனக்குத் தெரிகிறது.

May 17, 2014

என் வானம், என் வனம்...

இப்படித்தான் வெளியேறினேன்
அக்கூட்டின் கதகதப்பிலிருந்து,
என்னை நேசிப்பவர்களிடமிருந்து
குறிப்பாக உன்னிடமிருந்து,
என் சுவடுகளை
காலடித் தடங்களை
நிழலின் வெளிச்சத்தை அப்படியே விட்டுவிட்டு,
கொண்டாடும் கூட்டத்தை விட்டு
அன்புகாட்டும் மனிதர்கள் விட்டு
வருவதென்பது ஆகப்பெரும் வலிதான்,
இருந்தும் இப்படியாய் ஒளிந்து கொள்வது
பிடித்தமானதாக இருக்கிறது,
எதற்காகவும்
யாருக்காகவும் வளைந்து கொடுக்கா உறுதியை
மீண்டும் கைகொள்கிறேன்,
இது தவம்,
இது வரம்,
இது மோட்சம்,
கூட்டை விட்டுப் பிரியாமல் பறவைகள்
வானம் அறியாது,
அலைதல் வேறாக இருப்பினும்
அது என் வனம்,
என் சிறகு,
என் பறத்தல்...

ஆமென்.

May 13, 2014

கவிதை...

தொடக்கமுமின்றி
முடிவுமின்றி சிக்கலாகிக் கொண்டேயிருக்கிறது
அக்கவிதை.
அது ஒரு காதலையோ
அதன்பின் அதன் மரணத்தையோ
பாடுவதாக வைத்துக் கொள்வதில்
எனக்கும்
உங்களுக்கும்
எந்த வகையிலும்
பிரச்சனைகள் இருக்கப் போவதில்லை.
இன்னமும் கூட
அக்கவிதை
அப்படியே தான் இருந்து தொலைக்கிறது
தொடக்கமும்
முடிவுமின்றி...

மனதின் ருசி

கட்டற்று மிகைவளர்ந்த விழுதொன்றில்
உயிர் தொங்கி விளையாடும் அத்தனியுடல்
தனிமை உக்கிரங்களின் தகிப்பிலொரு கொள்ளி வைத்த
ஆதிக் கனவின் தீண்டலில்
கொடும் பாம்புகளில் பற்கள்,
அர்த்தமற்றுக் கிடக்கிறதென அவ்வுடல்
பெருத்து அழுகி துர்நாற்றமுடன்
நெளியும் புழுக்கள் இடம் மாற்றிக் கொள்ளும்
நிறைவேறா அம்மனதின் ருசிகளை,
மண்மூடலோ
தீக்கங்கோ சுட்டெரிக்க முயலும்
இவ்வளவு தான்
ஆசையென சொல்லிக் கொண்டிருப்பதில்
சட்டென வீழ்வதில்
வீழ்த்துவதில் அப்புழுக்கள் மிஞ்சின.