பிறப்பு கேட்காமலே கிடைத்த சாபம்...

மரணம் கேட்டும் கிடைக்காத வரம்...

Oct 4, 2007

பெண்ணல்ல நீ எனக்கு....


நாள் தவறி போனதே என

நீ வெட்கத்தோடு உரைத்ததும்

மார்பில் முகம் புதைத்ததும்

மேடிட்ட வயிறு கண்டு

முத்தமிட்டு சிரித்ததும்

புளிப்பு மாங்காய் வேண்டுமென

காதோரம் சொன்னதும்

கண்ணுக்குள் ஆடுதடி.....


மூன்றாம் மாதம் முதல்

நீர் இறைக்க தடை போட்டேன்

ஐந்தாம் மாதம் முதல்

கனம் தூக்க தடை போட்டேன்

ஏழாம் மாதம் தனில்

சீமந்தம் செய்தார்கள்

மஞ்சள் பூசி, வளவி இட்டு

திருஷ்டி சுற்றி போட்டாலும்

போய்விடுமா உன் அழகு தாய்மையில்....


ஆண்டவன் இருந்திருந்தால்

அப்பொழுதே கேட்டிருப்பேன்

ஏன் படைத்தாய்

ஆண் எனவே மண்ணில் எனனை?

தினமும் மாலை கை கோர்த்து

நடை பயின்று

இரவெல்லாம்

கண் விழித்து மடி மீது

உறங்க வைத்தேன் தாயென்றே உனை...


நாட்கள் நெருங்க நெருங்க

கலவரம் கண் மறைத்து

நம்பிக்கை கை பற்றி

மார்பனைப்பேன் என் உயிரே

இறுதியாய் பல் கடித்து

வலியென நீ புலம்புகையில்

ஊர்தி கொண்டு அவசரமாய் மருத்துவமனை

வரும் முன்னே

வியர்த்தொழுகும் முகமெல்லாம்......


சில நொடி பொழுதுகளில்

வந்தனரே உன் தாயும் என் தாயும்

உறவினரும் நண்பருமாய்

தனியறைக்குள் நீ செல்ல

கதறும் ஒலி கேட்டு தாங்கவும்

முடியாமல் தனியிடம்

அமர்ந்திருந்தேன் கண்ணீரும் இல்லாமல்

நினைவெல்லாம் உன் பிம்பம்.....


அவசரமாய் தாதி பெண் எனை அழைக்க

ஓடி வந்தேன்

உள் வர சொன்னாயாம்

சொல்லி விட்டு போய் விட்டால் மின்னல் கீற்று போல

பல் கடித்து வேதனையில்

பக்கத்தில் வாவெனவே முககுறி தனில் எனை

அழைத்து கைபற்றி கொண்டாய்....


இறுக்கும் கைகளில் உன் வேதனை நான் உணர்ந்தேன்

இருந்தும் என்ன செய்ய இயலவில்லை

உன் வலி நான் பெறவே,

ஆர்ப்பரித்து அடங்கியதும்

அரை நினைவில் நீ சிரித்தாய்

பிஞ்சு முகம் காணும் முன்னே

நெற்றி ஒதுக்கி முத்தமிட்டேன்

நீ எனக்கு உயிரடி....

பெண் குழந்தை நீ பெற்றாய்

பேரின்பம் நான் பெற்றென்

முகமெல்லாம் உன் வடிவம்

நிறம் மட்டும் பொன் எழிலாய்

நீ கொஞ்சம் கண்ணயர்ந்த வேளையில்

வெளியே வந்தேன்

அதுவரை கட்டி வைத்த

கண்ணீர் எலாம் கரை தாண்டும்

காரணம் நான் அறியேன்

புரியவில்லை அக்கணம்.....


வாரி எடுக்க வந்தார்கள்

உன் தாயும் என் தாயும்

யாரிடம் கொடுக்க?

யாரிடமும் வேண்டாம்

முதல் சொந்தம் அவளுக்கே

சொல்லி விட்டேன் என் முடிவை

30 வினாடிகள்

கண் விழித்து தேடினாய்

மகளை அல்ல என்னை

கை பற்றி மூத்த மிட்டாய்

பின் ஏந்தினாய் பெண் பூவை....


பெருமையாய் பார்த்தாள் என் தாய்

பொறாமையாய் பார்த்தாள் உன் தாய்

இருவரும் பெற்றதில்லை

இந்த பாக்கியம் என

உன் முகம் பார்த்திடவே

புன்னகைக்கும் முகமொடு

என் தாயிடம் கொடுத்தாய் நம் மகளை

அவர் கொடுத்தார் உன் தாயிடம்.....


அவனைவரும் இனிப்பு கேட்டு

வாங்கி கொடுத்த பின்

கலைந்தது கூட்டம்

தனியே நீயும் நானும்

எனக்கு எங்கே இனிப்பென்று

நான் கேட்கஇறுக கரம் பற்றி

இதழோடு இதழ் பொருத்தினாய்

இதை விட பேரின்பம்

பெறுவேனோ சொர்க்கமதில்.....


பெண்ணல்ல நீ எனக்கு

குல தெய்வம் அல்லவோ....

ஒரு தந்தையின் தாலாட்டு



என் மகளை தொட்டிலில்

இட்ட பின்சிணுங்கி

கொண்டே இருக்கும் அவளுக்காய்......

இது ஒரு தந்தையின் தாலாட்டு....


உறக்கமில்லா இரவுகளில்

எழுதும் என்கவிதைகளில்

புன்னகை பூக்களை

நட்டு போகும்

பூங்காற்றே கண்ணுறங்கு....


தோளில் ஏற்றி

வேடிக்கை காட்டும்

நாட்கள்

தொலைவில் இல்லை

பூ மகளே கண்ணுறங்கு.....


கை பிடித்து

நடை பழக்கும்

நாட்களுக்கும் பஞ்சமில்லை

கண்மணியே கண்ணுறங்கு.....


அமுதூட்டி உன்

எச்சில் தன்னில்

பசியாருவேன்

கண்ணுறங்கு....


தாயிடம் தாலாட்டு

நான் பயின்று

தயங்காமல் பாடுவேன்

தங்கமே கண்ணுறங்கு......


கொஞ்சும் மொழி

பேசுகையில்

பூரிக்கும் என் நெஞ்சம்

புது மலரே கண்ணுறங்கு....


ஆணென்பதை நான்

மறந்து தாயென்றே

எனை மாற்றிய என்

தாயே கண்ணுறங்கு.....


நீ கொடுத்த

முத்தத்தில் முக்கணியின்

சுவை உணர்ந்தேன்

தீஞ்சுவையே கண்ணுறங்கு...


தத்தை நடை

கை பிடித்து பழகிய

களைப்பெல்லாம்

போகட்டும் கண்ணுறங்கு.....


புன்சிரிப்பும்

இதழோர கதை சிரிப்பும்

காட்டி எனை வென்றவளே

உயிர் பூவே கண்ணுறங்கு.....


ஓடி விளையாடியதும்

கண்டு பிடிக்க சொன்னதும்

கனவெல்லாம் இனிததிருக்கும்

பொன் மகளே கண்ணுறங்கு....


ஆயிரம் பேர் சொன்னதுண்டு

ஆனாலும் என் பெயரை

நீ சொன்ன சொல் கேட்டு

முத்தமிழும் நான் பெற்றேன்

தமிழ் மகளே கண்ணுறங்கு.....


ஒரு மடியில் நீ உறங்க

மறு மடியில் உன் தாய் உறங்க

இருவரின் கனவினையும்

கண் விழித்து காத்திருப்பேன்

கவலை இன்றி கண்ணுறங்கு........