பிறப்பு கேட்காமலே கிடைத்த சாபம்...

மரணம் கேட்டும் கிடைக்காத வரம்...

Apr 27, 2012

நான், சாத்தான், ஒரு தேவதை...

 


சில நாட்கள் நான் தேவதையைத்
தேடி அலைந்தபடி இருந்தேன்
சபிக்கப் பட்ட சாத்தானின் உதவியுடன்

மரத்தின் இலை உதிர்கிறது
தரை நோக்கி விழும் இலையில்
இதுவரை உலகம் காணா ஓவியமும் நடனமும்

காலி சிகரெட் பெட்டிக்குள் அடைபடுகிறது
அந்தரங்கக் கனவுகள் புகையும் துகளென
 என்னையும் உன்னையும் சுமந்தபடி

சாத்தான் சொன்னது இனி நீ தான் அரசன்
நான் உன் அடிமை
விழ்த்திவிடும் முதல் போதை வஸ்து

தரை படிந்து சருகாகி
மக்கி உரமாகலாம் இல்லையெனில்
என் நோட்டு புத்தகத்தில் ஒட்டப்படலாம்

அடைபட்ட காகித அட்டை எரிகிறது
என் கனவுகளை தனதாக்கிக் கொண்டு
புகைகிறது காணும் மனதும் கண்ணும்

அதோ உன் தேவதையென சாத்தான் சுட்டியது
அது தேவதையாகவும் இருக்கலாம்
உருமாற்றம் பெற்ற சாத்தானாகவும் இருக்கலாம்

இலையின் கனக்கிறது தன்னில் ஒரு மரம் கொண்டு
மரத்திற்கு ஒரு இலை தான்
இலைக்கு இன்னுமொரு மரம் சாத்தியமில்லை

மெல்ல மெல்ல சூடாகி அறை முழுதும் தகிக்க
வெந்து போன கனவுகளின் கருகும்
நாற்றமோ வாசனையோ சகிக்கவில்லை

சாத்தான் சிரிக்கிறது
கனவைத் தள்ளிவிட்டு எழுகிறேன்
சுற்றிலும் இரைந்து கிடக்கிறது சாம்பல் துகள்கள்

இந் நேரத்தில் நான் சாத்தானகி இருந்தேன்
ஒரு மரம் என்னுள் விதையாகியிருந்தது
சுவாசமெல்லாம் ஒரு தரம் கெட்ட புகை நாற்றம்

ஒரு தேவதை
ஒரு இலை
ஒரு சிகரெட்
ஒரு பெரும் கனவு
வேறு வழி இல்லை இதற்கும்
கவிதையென்றே பெயர் வை...

ரதி நிர்வேதம்

சில நாட்களுக்கு முன் ரதி நிர்வேதம் திரைப் படத்தை மலையாளத்தில் பார்த்தேன்.. நம் தமிழ் ரசிகர்களை சூடேற்றும்  பொருட்டு தெருவெங்கும் ஓட்டப் பட்ட சுவரொட்டிகள், தினசரிகளில் வந்த விளம்பரங்கள் எல்லாம் எதோ ஒரு பிட்டு பட ரேஞ்சுக்கு அதனைப் பற்றிய பிம்பத்தை உருவாக்கி இருந்தது...ஆனால் உண்மையில் அதன் கதை அமைப்பு என்ன? திரைக்கதை எப்படி? அறிந்திருப்பார்களா திருவாளர்கள்..



ஒரு பதின் வயது பையனுக்கு, ஒரு இளம் வயது பெண்ணின் மீது ( இருபத்தி ஐந்து ) வரும் நேசம், அதை தொடர்ந்து வரும் உடல் கவர்ச்சி ஆகிய சிக்கலான விஷயங்களை சொல்லி இருக்கிறார்கள். மற்றபடி விளம்பரங்களில் சித்தரித்தது போல பிட்டு படமாக இருக்கும் என்று நம்பிப் போனவர்கள் நிச்சயம் எச்சிலை துப்பிக் கொண்டு வர வேண்டியது தான்...

உண்மையில் கதையின் கரு தற்கால வாழ்வியலுக்கு முக்கியமான ஒன்றாகவே படுகிறது. பள்ளியில் படிக்கும் போதே சரோஜா தேவி, டி.வி.டி கள் மற்றும் தற்போதைய மொபைல் பட பதிவு கலாச்சாரம் என மாணவர்களின் பிரச்சனை, அவர்களின் அடி மனதில் இருக்கும் அந்த வெளிபடுத்த இயலா காமம், சந்தர்ப்ப சூழ்நிலைகள் என சொல்லிக் கொண்டே போகலாம்...

கதை தான் என்ன... கதையின் நாயகன், பனிரெண்டாம் வகுப்பு முடித்து கல்லூரியில் சேர காத்திருப்பவன். பக்கத்துக்கு வீட்டு பெண்ணிடம் கொள்ளும் நேசம் மற்றும் அதையும் தாண்டிய உடல் மீதான ஈர்ப்பு அதனால் இருவருக்குள்ளும், குடும்பத்திலும் வரும் சிக்கல்கள்... இறுதிக் காட்சியில் இருவரும் கட்டுபாட்டை இழந்து விட உடல் சேர்க்கை.. நாயகியை பாம்பு வடிவத்தில் வந்து கொன்று விடுகிறார் இயக்குனர். இவன் அழுத படி கல்லூரிக்கு செல்ல... முடிகிறது படம்...

எனக்கு தெரிந்து இப்போதைய தமிழ் படங்களில் காணும் குத்தாட்டங்களும், மார்பு குலுக்கல்களும், கழுத்து மேய்தல்களும், மழை நாட்டியங்களும் தந்து விடாத ஆபாசத்தை ரதி நிர்வேதம் தந்து விடவில்லை... நடிப்பு என்று எடுத்துக் கொண்டால் அனைவரும் தங்கள் கதா பாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார்கள் குறிப்பாக சுவேதா மேனன்..( இவர்  நடித்து நான் பார்க்கும் இரண்டாவது படம் இது, முதலில் சால்ட் அண்ட் பேப்பர்).

எதுவுமே பார்த்தவர் எடுத்துக் கொள்ளும் விதம் தான். எஸ்.ராமகிருஷ்ணன் THE PERFUME படத்தைப் பற்றி இரண்டு மூன்று முறை தன் எழுத்துகளில் சொல்லி இருக்கிறார், அதுவரை எனக்கு அந்த படம் தந்த பிம்பம் வேறு, படித்ததின் பின்ன வந்த தெளிவு வேறு. மீண்டும் பார்த்தேன் தெளிவாக இருந்தது. அது போல தான் ரதி நிர்வேதம் வெறும்  ஆபாசப் படமல்ல, தற்கால பதின் வயது மாணவர்களின் ஒரு உளவியல் வெளிப்பாடு. அதற்கு பலியாகும் ஒரு பெண்ணின் கதை.


மனதின் ஆசைகளை மூடி வைக்கும் போது ஏற்படும் அழுத்தம் எப்படியும் வெடித்தே தீரும்..

Apr 20, 2012

வெள்ளை சாக்சும்... வெளிநாட்டுப் பேனாவும்...


காலப் பெருவெள்ளம் பிரவாகமெடுத்து
நினைவுக்கடலை நிரப்ப நானோ
திரும்புகையில் வழியெங்கும் நிரப்புகிறேன்
நமக்கான கனவுகளின் சுவடுகளை...

எனக்கான கனவுகளை உனக்கான
கவிதைகளென மாற்றியிருக்கிறது நேசம்
அவையோ தீராக் காதலின்
நினைவுகளை பாடியபடி தொடர்கிறது உன்னை...

மெல்ல மெல்ல கடல் சேரும் நதியென
உன்னை நோக்கி வருகிறது என் கவிதைகள்
பேசாப் பிரிவுகளில் சோர்ந்து கிடக்கிறது
கனவுகளின் மாறா ஏக்கங்கள்...

தோல்வியென தலைகுனிகையில் ஆறுதலாய்
எங்கிருந்தோ கைகோர்த்து அரவணைக்கிறது
நிழலாய் மாறும் உன் நினைவுகளின் கரங்கள்
சில கண்ணீர் துளிகளுடன்...

நானும் நீயும் என்றுமே நிஜமில்லை
என சொல்லிச் சிரிக்கும் காலத்தை
கேலி செய்கிறது நாம் இருவருமாய்
கனவு பகிர்ந்த ஒற்றை நாளின் சில மணித் துளிகள்...

 செம்மண் புழுதி பறக்கும் சாலையிலோ
நகரப் பேருந்தின் சன்னலோர இருக்கையிலோ
அணைந்து கிடந்த தெருவிளக்கின் இருளிலோ
இன்னும் இருக்கத் தான் செய்யும்
நாமிருந்த அந்த நினைவுகள்...

 உயிர் கொண்டு மலர்ந்து கிடக்கிறது சில பூக்கள்
தோள் சேரும் மாலையாக முடியாதெனினும்
எதாவது ஒரு காலை வேளையில்
சூடிக் கொள்வாயென காத்திருக்கிறது காதல்...

வீட்டு அலமாரியில் காட்சிப் பொருளென
அலங்கரித்தபடியே இருக்கிறது காதலின் நினைவென
ஒரு ஜோடி வெள்ளை சாக்சும்
ஒரு வெளிநாட்டுப் பேனாவும்...

 நமக்கான ரகசியங்களை யாருமறியாமல்
என் வீடெங்கும் எழுதியபடி தானிருக்கிறது
பல்வேறு வண்ணங்களையும்
கனவுகளையும் நிரப்பியபடி...

அடிக்கடி இப்படித் தான் நிகழ்ந்து விடுகிறது
உன்னை நோக்கிய சில கனவுப் பயணங்கள்
கொஞ்சம் கொஞ்சமாய் விழுங்கும்
உன் நினைவுகளோடு...

Apr 9, 2012

தேவதையின் ஓவியம்


அவள் தொடங்கி விட்டாள்
அவளுக்கான உலகை படைக்க
ஒரு எழுதுகோலும்
சில வெற்றுத் தாள்களும் போதும் அவளுக்கு
ஒற்றை நிறம் கொண்டு
ஆயிரம் நிறங்களை உருவாக்கும்
அற்புதம் அங்கே நிகழ்கிறது
சிறு சிறு கோடுகளை வரைந்து காற்றென்றாள்
ஒரு ஒழுங்கில்லா வட்டத்தில்
கிடையாய் இரு கோடுகள்
நெடுவாக்கில் ஒன்றுமாய் பூனை என்றாள்
எதையுமே வரையாமல் கையிரண்டை விரித்து
வானம் காண்பிக்கிறாள்
விரல்களின் அசைவுகளில் அதில் சில
பறவைகளைப் பறக்கச் செய்கிறாள்
நெருக்கமாய் புள்ளிகளை வைத்து தரை என்று சொல்லி
அதில் ஒரு செடியையும் நடுகிறாள்
பல விதப் பூக்கள் மலரும் நானறியா செடி
இன்று அதில் ஒரு தாமரை மலர்ந்திருக்கிறது
கோணலான ஒரு கட்டம் வீடாகிறது
கூடு தேடும் பறவைகளுக்கென
அருகில் இன்னுமொரு வீடும் தருகிறாள்
அவளின் ஓவியத்தில் நிச்சயம்
இருந்துவிடுகிறது ஒரு கிணறும் அதில்
தொங்கிக் கொண்டிருக்கும் ஒரு வாளியும்
எந்த மீன்குஞ்சுகளையும் கண்ணாடித் தொட்டியில்
அடைப்பதில்லை அவள்
எப்பொழுதும் இருளாக இருப்பதில்லை அவள் உலகு
மெல்ல மெல்ல சோர்வில் அயர்ந்து
வரைந்த வீட்டின் மீதே உறங்கி விடுகிறாள்
அதுவரை வேடிக்கை பார்த்த கடவுள்
அழத் துவங்குகிறார் அவள் எந்த இடத்திலும்
தன்னை வரையவில்லை என...

Apr 6, 2012

சிதம்பர நினைவுகள்


எனது ஊரில் நான் இரண்டு விசயங்களால் கவனத்தில் கொள்ளப்பட்டேன், படுகிறேன்... ஒன்று.. மழை வரும் போதெல்லாம் நனையும் என் அடங்கா வெறி .. இன்னொன்று அதிகாலையிலோ அல்லது அனைவரும் உறங்கும் இரவுகளிலோ தனிமையில் நடந்து கொண்டிருப்பது. இரண்டிலும் எனக்கு பிடித்தமான தனிமை வாய்த்து விடுகிறது. மழை அதன் போக்கில் தான் நினைத்த போது தான் வரும், நனைக்கும்.பெரும்பாலும் தனிமையில், இரவுகளில் ஊர் முழுக்க சுற்றித் திரிந்திருக்கிறேன். புதிதான சிந்தனைகள், வாசித்த புத்தகங்கள், ரசித்த திரைப் படங்கள் என எனக்குள்ளேயே சுமந்து திரிந்து கொள்ளப் பழகி இருந்தேன்.

நேற்றும் அப்படித்தான், தோழர் அரசுவிடம் இரவல் வாங்கிய பாலச்சந்திரன் சுள்ளிக்காடு எழுதிய சிதம்பர நினைவுகள் வாசித்து முடித்த பின் மெதுவாய் கதவைத் திறந்து கொண்டு யாரையும் தொந்தரவுக்கு உள்ளாக்காமல், காலணிகள் எதுவும் அணியாமல் நடக்கத் துவங்கினேன். சிதம்பர நினைவுகள்- அவரின் ரகசிய நாட்குறிப்பின் பக்கங்கள் போல நிதர்சனத்திற்க்கு மிக அருகில், ஒருவன் தான் புகைப்பதையோ, குடிப்பதையோ, தனக்கிருக்கும் பெண் மோகத்தையோ எந்த நிலையிலும் தனக்கு மட்டுமே தெரிந்த ஒன்றாகவே புதைத்திருப்பான்... இங்கே அந்த பாசங்கு உடைத்து தன் வாழ்வின் அனைத்தையும் பொதுவில் வைத்திருக்கிறார் பாலன். ஒரு கவிஞன், எழுத்தாளன் எனும் அனைத்தையும் தாண்டி ஊர்ந்து கொண்டே இருக்கிறது அவரது எழுது கோல்.

முதலில் தொடங்கும் சிதம்பர நினைவுகளில் வயதான தம்பதிகளிடம் பேசுவதில் தொடங்குகிறது வாசிப்பவனுக்கும் அவருக்குமான சினேகம். மெல்ல கைபிடித்து நடை பழக்கும் குழந்தையென நம்மை அவரின் வாழ்வின் பகுதிகளுக்குள் அழைத்துச் செல்கிறார். அப்பாவைப் பற்றிய அவரின் நினைவுகளில் எனக்கும் என் தந்தையின் நினைவு வருகிறது, எனக்கும் அதே நிலை வந்த போது அவரின் மன உறுதி என்னிடம் இல்லை, வீட்டிலேயே இருந்து விட்டேன். சாஹினாவைப் போல் எல்லோருக்கும் ஒரு பள்ளிக் கால நினைவு நிச்சயம் இருக்கும் ஆனால் அவரைப் போல் அதன் எடையை சரி செய்து கொள்ள இயலுமா எனத் தெரியவில்லை. காலடிச்சுவடுகளில் ஒரு வயாதன பெண்ணுக்கு உணவளித்து விட்டு தன் தாயின் நினைவுகளில் மூழ்கும் சாராசரி மனிதனாய் பாலன் நம்மோடு கைகோர்க்கிறார். என்னோடு பள்ளியில் ஒரே வகுப்பில் படித்து இன்று கண் முன்னே மனநிலை தவறிய ஒருவனாக நடமாடும் ஒருவனை நான் அடிக்கடி எந்த குற்ற உணர்வுமின்றிக் கடந்து போகிறேன். அதுவே பாலனின் மோகனுக்கும் நிகழ்கிறது. கவிதைகளுக்கு கைதட்டல் வாங்கிய மேடைகள் கடந்து உணவுக்கு வழியின்றி பண்டிகை நாளில் பிச்சை புகுவதும், கவிதைகளுக்கு கைதட்டிய உயிர் அப்பொழுது அடையாளம் கண்டு கொள்வதுமான நிலை, கூனிக் குறுகி நிற்கும் பாலனோடு நாமும் நிற்பதாய் உணர்கிறோம்.

தன்னை நம்பி வந்த பெண்ணிடம் தன்னுடைய முதல் கருவைச் சுமக்கும் பெண்ணிடம், தானே தகப்பன் என அறிந்தும் சூழ்நிலைக் கைதியென கலைக்கச் சொல்வதும் அதற்கான அவரின் செய்கையும், அவரை கொலை செய்தால் தான் என்ன என்று நினைக்க வைக்கிறது. தன் குருதியை விற்று அதனை இன்னொரு உயிரின் மருத்துவச் செலவுக்காக கொடுத்து விடுகையில் இவர் எந்த மாதிரியான மனிதன் என வியக்கவும் வைக்கிறார். ஒரு தெரு விபச்சாரியை பரிதாபம் கொண்டு வீட்டிற்கே அழைத்து வந்து மனைவியிடமே அறிமுகம் செய்யும் போக்கு சற்றே வியக்க வைக்கிறது. அய்யாவு செட்டியார், ஸ்ரீதேவி,லைலா,ராதிகா என மெல்ல மெல்ல அவருக்கு அறிமுகமான அனைவரையும் நமக்கு அவர்களின் போக்கிலேயெ அறிமுகம் செய்கிறார். சிவாஜி கணேசனுடனான சந்திப்பில் அவருக்கும் முன் வசனம் பேசியதை, அவரோடு குடித்ததை சிலாகித்திருக்கிறார். கிடங்கரை ஸ்ரீவத்சன் பற்றிய குறிப்பு அவரால் மட்டுமல்ல வாசிக்கும் அனைவராலும் மறக்க இயலா ஒரு நினைவாக, ஒரு வறுமையில் உழலும் கவிஞனின் வாழ்க்கைக்கு சான்றாக நிழாடிக் கொண்டே இருக்கிறது. ஒரு வேசியின் மடியில் விடிய விடிய தலைவைத்து படுத்திருப்பது என்பது மிக சுலபமாகத் தெரிந்தாலும், அக்கா என அவர் அழைத்ததும், அவள் செல்லும் போது கொடுத்த ஐந்து ரூபாயை வாங்கிக் கொள்ள எழாத தயக்கமும் பாலனை மேம்பட்ட மனிதனாக்கி விடுகிறது. இறுதியாக டால்ஸ்டாய்க்கு நோபல் பரிசு தராமல் போனதன் கோபத்தில் இனி எனக்கு தந்தாலும் அதை வாங்க வரப் போவதில்லை என்று அமைப்பாளர்களிடமே சொல்லும் தைரியமும் பாலனுக்கு மட்டுமே உரித்தான ஒன்று.

குறிப்பாகச் சொல்லப் பட வேண்டியது மொழிபெயர்ப்பு... மிக அழகாக, இயல்பான வார்த்தைகளை கோர்த்து கொடுத்த கே.வி.சைலஜா அவர்களுக்கு நன்றி. உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.

இனி என்ன? நடந்து முடிக்கையில் ஒரே ஒரு சிந்தனை மனம் முழுதும் நிறைந்திருந்தது... நம்ம சேரனின் ஆட்டோகிராப் படத்தை அதன் திரைக்கதைக்காக ரசித்தாலும், ஒரு ஆணின் பார்வையில் சரியாகவே தெரிகிறது. எனினும் ஒரு பெண் அதே போல் பல்வேறு நேசத்தை சொன்னால்,பதிவு செய்தால் இந்த சமூகம் கொண்டாடி இருக்குமா?

அது போல ஒரு பெண் தன் எழுத்துகளின் வாயிலாக வாழ்வில் தான் கடந்த இது போன்ற நாட்களை, மனிதர்களை, நிகழ்வுகளை, பிறரிடம் தனக்கிருந்த மோகத்தை வெளிப்படுத்த இயலுமா என்பதே? காலம் பதில் சொல்லும்.

தோழர் சிந்தன் எழுதிய சில வரிகள் நினைவுக்கு வருகிறது...

எத்தனை பேர் பின்னால் வேண்டுமானாலும் சுற்று, வேசி என்று எந்த ஆண் மகனும் அழைக்கப் பட்டதில்லை...

நடந்து வீட்டுக்கு வந்து விட்டேன், யாருக்கும் தெரியாமல் போய் படுத்துக் கொள்ளவேண்டும்.





புத்தகம் - சிதம்பர நினைவுகள்
மலையாள மூலத்தின் ஆசிரியர் - பாலச்சந்திரன் சுள்ளிக்காடு
மொழிபெயர்ப்பு - கே.வி.சைலஜா

வம்சி புக்ஸ் வெளியீடு
விலை:100 ரூபாய்.