பிறப்பு கேட்காமலே கிடைத்த சாபம்...

மரணம் கேட்டும் கிடைக்காத வரம்...

Sep 21, 2011

குழந்தைச் சித்திரம்...

மேஜை மீதிருந்த
உங்கள் தூரிகையை
லாவகமாய்ப் பற்றி
புதிய வானத்தின் புதிய வண்ணங்களை
தீட்டுவதற்கு முற்படுகிறதொரு
குழந்தை

அதன் தூரிகை மொழியில்
முன்னேற்பாடற்ற புதிய வானம்
துலக்கம் பெரும் வேளை
பழைய வானத்தின் சாயல் ஒன்றின்
சிறு பிசிறைக் கூட
அது இச் சித்திரத்துள்ளாக
எடுத்து வரவில்லை

முற்றிலும் அது
புதிய நிறங்கள்
புதிய கோடுகள்
புதிய விஷயங்களால்
நிரம்பி வழிகிறது
உச்சரிப்பின் வார்த்தைகளற்ற
சித்திரத்தின் வான் கோப்பை

யாரும் வர வேண்டாம்
உங்கள் புலன்கள்
பிரவேசிக்க வேண்டாம்
குழந்தை ஓவியம் பார்க்க

ஒரு வேளை
நீங்கள் அதை
வானமேயில்லைஎன்று சொல்லி
அக் குழந்தையை
பயமுறுத்தி விடக் கூடும்...

-கடற்கரய்...

No comments: