பிறப்பு கேட்காமலே கிடைத்த சாபம்...

மரணம் கேட்டும் கிடைக்காத வரம்...

Sep 21, 2011

ஒரு நாளின் பின்பகல்


செல்லரித்துப் போன
காகிதமென
கொஞ்சம் கொஞ்சமாய்
அழிந்து போகுமோ
உன்னில் என் நினைவுகள்...

தேவைப்படும் என
தேக்கி வைக்காதே
இயல்பான ஒரு நதியின்
நீரோட்டத்தைப் போல
இயல்பாய் இருக்கட்டும்...

புகைப் பட காட்சிகளென
நிறைத்து
யாதேனும் ஒரு மழைநாளிரவில்
யதேட்சையாய்க் கையிலெடுத்து
கோடை வரை ரசித்திருப்பேன்
நம் நினைவுகளை....

உயிர் பிரிந்து வெளியேறும்
தருணத்தில் புலப்படாத
மெல்லிய ஓசைகளை மீறி
ஒலிக்கும் என் கவிதைகளை
நீ
வாசிக்கும் உதடசைவுகள்...

உண்ணவும்
உறங்கவும் மறக்கலாம்
அடிக்கடி மறக்க
நினைக்கும்
நம் நாட்களைத் தவிர
எல்லாவற்றையும்...

நீ வீட்டுப் போன
எழுத்துக்களில் நான் கவிதை
மொழிகளில் நான் இசை
வர்ணங்களில் நான் ஓவியம்
சுவாசத்தில் நான் தென்றல்
அன்பில் நான் மனிதனாய்...

மொத்தமாய்
ஒரு நாளின் பின் பகல் பொழுதுகளில்
சிரித்துக் கொண்டே பேசி
உன்னிடமிருந்து
பிரித்து வைத்தாய்
கண்களில் நீர் மறைத்து
மனதில் வலி மறைத்து
உன் வரவிற்காய் காத்துக் கிடந்த
காலங்கள் மறைத்து
உன்னோடு வாழ்ந்த
கனவுகளை மறைத்து
.......
....
...

இப்படி
எதுவுமே தேவை இருந்திருக்காது
என் காதலை
உன்னிடம்
மறைத்திருந்தால்....

No comments: