பிறப்பு கேட்காமலே கிடைத்த சாபம்...
மரணம் கேட்டும் கிடைக்காத வரம்...
மரணம் கேட்டும் கிடைக்காத வரம்...
Feb 5, 2012
என் உலகானவள்...
உன் பாதங்களை விட மென்மையான பூக்களை
உலகில் இனி யாரும் கண்டுவிடப் போவதில்லை...
ஒற்றை புன்னகையில் உலகை வெல்லும்
வித்தை உனக்கு சொந்தமானது...
பிஞ்சு விரல்கள் என் முகம் வருடும் வேளையில்
மெல்லிய மயிலிறகென மாறிப் போகிறாய்...
சுருள் விழும் உன் பட்டு கூந்தலில்
சிக்குண்டு கிடக்கிறது எனக்கான மகிழ்வுகள்...
எத்தனையோ பேர் முயன்று தோற்றுப் போக
எளிதில் நீ கற்பித்து விடுகிறாய்
பாசத்தின் மொழியை கொஞ்சும் மழலையில்...
கரு விழியின் நடனங்கள் மேடையேற
சில நேரங்களில் மயக்கி விடுகிறாய்
நாட்டிய பாவனைகளில் கிறங்கடித்து...
கால்களை உதைத்து நீந்திய போதும்
மண்டியிட்டு தவழ்ந்த போதும்
சுவர் பிடித்து நின்ற போதும்
உலக அதியங்கள் எல்லாம் அர்த்தமற்றுப் போயின...
எனகென ஒரு உலகைத் தந்தவள் நீ
என் உலகெனவே மாறி போனவள் நீ...
திருஷ்டிப் பொட்டுகள் கூட அழகாகி விடுகிறது
உன் கன்னங்கள் தொடுவதில்...
புதிது புதிதாய் விளையாட்டுகளை
அறிமுகம் செய்கிறாய் எனக்கு ...
வீடு வரும் பறவைகளுக்கு கூட
செல்லப் பெயர் வைத்து விடுகிறாய்
பிறகு நானென்ன மிஞ்சுவது...
நீ தரையில் வரையும் கோடுகள்
அழகிய ஓவியத்தின் தொடக்கமாக...
கால் கொலுசுகளில் சிம்பொனி இசைக்கும்
ரகசியத்தை யாருக்கும் சொல்வதில்லை நீ...
நானோ உன்னைப் பற்றி கவிதைகளை தேட
நீயோ சின்ன சின்ன அசைவுகளில் கூட
காவியங்களை சொல்லி விடுகிறாய்...
அம்மா எனும் அழைப்பில்
என்னுள் இருக்கும் வேதனை முடிச்சுகளை
நானறியாமல் அவிழ்த்து விடுகிறாய்...
எத்தனையோ சொல்ல நினைத்து
வார்த்தைகளில் அடையா கவிதைக்கு
உன் இன்னொரு புகைப் படத்தையே
பதிந்திருக்கலாம் நான்...
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment