பிறப்பு கேட்காமலே கிடைத்த சாபம்...

மரணம் கேட்டும் கிடைக்காத வரம்...

Jul 29, 2011

நினைவுத் தூறல்கள்: இப்பொழுதெல்லாம்என் கனவுகளில் தேவதைகளேவருவதில்லை...

நினைவுத் தூறல்கள்:
இப்பொழுதெல்லாம்
என் கனவுகளில் தேவதைகளே
வருவதில்லை...
: "இப்பொழுதெல்லாம் என் கனவுகளில் தேவதைகளே வருவதில்லை என்னை தனியே விட்டு செல்லும் பொழுது அவர்களையும் சேர்த்தே உன்னுடன் அழைத்து சென்றுவிட்டாய்....."

தொலைவில் நான்


இப்பொழுதெல்லாம்
என் கனவுகளில் தேவதைகளே
வருவதில்லை
என்னை தனியே விட்டு
செல்லும் பொழுது
அவர்களையும் சேர்த்தே
உன்னுடன்
அழைத்து சென்றுவிட்டாய்...

என்றைக்குமே இறந்துவிடாத
ஞாபகக் கிளிகள்
கொஞ்சம் கொஞ்சமாய்
கொத்திச் சுவைக்கிறது
குருதி பெருகும்
நினைவுக் கனிகளை...

கால மாற்றங்கள்
இனி என்னில்
உணர்வதற்கு இல்லை
இறந்த காலத்தில
மட்டுமே நான் வாழ்வதால்...

இரவுகள் பகலாகும்
விழிகள் பெயரற்ற
ஒரு நதி மூலமாகும்
கால்கள் மட்டும்
தன்னிச்சையாய்
நீ சென்ற திசையில்...

உண்ணுவதாலும்
உறங்குவதாலும்
சுவாசிப்பதாலும் மட்டுமே
நான் இன்னும்
உயிருடன் இருப்பதாய்
நம்பிக்கை கொள்கிறேன்...

உன்னை தேடி நான்
புறப்படுகையில்
அருகில் தானிருந்தாய்
புள்ளியென மறையும்
தொலைவில் சென்று விடுகிறாய்
நான் நிற்கும்
அதே இடத்தில்
அதே கணத்தில்...

Jul 28, 2011

நினைவுத் தூறல்கள்: அவன்....

நினைவுத் தூறல்கள்: அவன்....: "இப்பொழுதெல்லாம் இரவு வந்து விட்டால் நடுங்குகிறது என் மனம் என் இருண்ட அறைக்குள் எவனோ ஒருவன் நுழைந்து விடுகிறான் எதிர்பாரத நொடியொன்றி..."

நினைவுத் தூறல்கள்: சில நொடிகள்...

நினைவுத் தூறல்கள்: சில நொடிகள்...: "என் உலகத்தின் சிறந்த புதிர்களுக்கான பரிசை எப்பொழுதும் நீயே வெல்கிறாய்... வண்ணங்கள் குழைத்து உயிர் பெற்ற ஓவியங்களில் விரயமாகும் கனவு..."

நினைவுத் தூறல்கள்: மெய்

நினைவுத் தூறல்கள்: மெய்: "இன்று முழுதும் நான் உண்மைகளை மட்டுமே பேசினேன் காமத்தின் உந்துதல் ஒரு நொடி என்னை தொடவில்லை என் எதிரிகளை எல்லாம் மன்னித்தேன் உடல் வியர..."

நினைவுத் தூறல்கள்: சில நொடிகள்...

நினைவுத் தூறல்கள்: சில நொடிகள்...: "என் உலகத்தின் சிறந்த புதிர்களுக்கான பரிசை எப்பொழுதும் நீயே வெல்கிறாய்... வண்ணங்கள் குழைத்து உயிர் பெற்ற ஓவியங்களில் விரயமாகும் கனவு..."

அவன்....


இப்பொழுதெல்லாம்
இரவு வந்து விட்டால்
நடுங்குகிறது என் மனம்
என் இருண்ட அறைக்குள்
எவனோ ஒருவன்
நுழைந்து விடுகிறான்
எதிர்பாரத நொடியொன்றில்..
அவன் காலடி ஓசைகளையும்
சுவாசத்தின்
தகிப்பையும்
உணர்கிறேன்
மிக மிக அருகாமையில்...
காமத்தின் வலிமையான
சவுக்கின் வீச்சில்
என்னை
சிதறடித்து
என் கண்களில் குருதி
வழிய உறக்கம்
பிடுங்குவான்....
திடுமென விழிக்கிறேன்
ஒரு பிசாசினைப் போல்
ஓலமிடுகிறது ஒரு குரல்
அவனின் கடுமையான
தாக்குதலில்
நான் வீழ்ந்த பின்னரே
அகலுகிறான்...
மறுநாள்
பயத்துடன்
விளக்கை அணைக்காமலேயே
படுக்கை நுழைகிறேன்
முன்னிரவில்
உறங்கியும் போகிறேன்
நடுநிசி பொழுதில்
கனவென்ற போர்வையில்
மீண்டும் வருகிறான்
அவனே..

சில நொடிகள்...

என் உலகத்தின்
சிறந்த புதிர்களுக்கான
பரிசை எப்பொழுதும்
நீயே வெல்கிறாய்...
வண்ணங்கள் குழைத்து
உயிர் பெற்ற
ஓவியங்களில்
விரயமாகும் கனவுகள்..
எழுத்துகளெல்லாம்
பதுங்கிக் கொள்கின்றன
சொற்களில் கட்டுண்டு,
அனாதையாய் நீள்கிறது
கவிதையொன்று...
சல சலக்கும்
நீரோடையில்
கால் பதிக்கையில்
என்னில் பட்டு
செல்லும் நீர் துளிகள்
குளிர் நீங்கி கொதிக்கிறது...
சந்தேகமில்லை
நானே தான்,
மணிகணக்கில்
தேடுகிறேன் கண்ணாடியில்...
இன்று
உறங்கிப் போகவேண்டும்
என் மனம்
விழித்துக் கொள்ளும்
முன்னதாக...
யாருக்கேனும் கிடைத்தால்
கொடுத்துச்
செல்லுங்கள்
முடிவுறாத என் கவிதையின்
சில வரிகளை...
உதிர்ந்த சருகுகள்
காயும் புல்வெளி
காற்று அற்ற வெளி
இவற்றிலும் வளர்கிறது
அவள் நினைவு...
ஒற்றை அறை
வாடகை வீடு
உறவினர் வருகையில்
பார்வையில்
கசிந்து உதிர்கிறது
காமம்...

மெய்

இன்று முழுதும்
நான் உண்மைகளை
மட்டுமே பேசினேன்
காமத்தின் உந்துதல்
ஒரு நொடி என்னை
தொடவில்லை
என் எதிரிகளை எல்லாம்
மன்னித்தேன்
உடல் வியர்க்க
வேலை செய்தேன்
கனவுகளில்
உன் நினைவுகளே இன்றி
உறங்கிப் போனேன்
ஆனால்....
.
.
.
.
பொய்களை
மட்டுமே
எழுதினேன்...

Jul 9, 2011

சுவடுகள்


உன் குரல் கேட்க தவித்தும்
உன் அழைப்பை
அமைதியாய் வேடிக்கை
பார்க்கும் என்னில்
கண்ணீரின் சுவடுகள்
இந்த நிமிடங்கள்
உனக்கு நரகமாகி இருக்கும்
ஆனாலும் போலியாய்
புன்னகைக்கும் நிலையில் நீ
துடிக்கும் மனதில்
ஆயிரம் கேள்விகள்
யதார்த்த வாழ்வின்
முன் விடைகளின்றி நீளும்...
உணவும் நீரும்
வெறுத்த நிமிடங்கள்
உடைந்து போன
கடிகார முட்களாய்
இயலாமையில் தவிக்கும்
ஒவ்வொரு கணமும்
நிர்வாணமாய்
காட்சிப் பொருளாகிறேன்
புரியும் தானே உனக்கும்...
உறவுகளும்
பந்தங்களும் உண்மையெனில்
எனக்கும் உனக்குமான
அன்புதேவைகள் எதற்கு?
சுயநலமற்ற அன்பே
தேவையெனில்
எனக்குள் ஏன் இந்த
ஆவேச பிடிவாதம்
எனக்குள் இருக்கும்
மிருகத்தை
உணர்கிறேன் இந்த நொடிகளில்...
முத்தமிடவோ
தோள் சேர்த்து நடக்கவோ
யாரையும் அனுமதிக்காத
என் உணர்வுகளுக்கு
நீ யாரென்று தெரியும் தானே
உறக்கம் தொலைத்த
இரவுகளை நான்
உருவாக்கிக் கொள்வதின்
அர்த்தங்கள் தெரியவில்லை...
நான் யாரை வெறுக்கிறேன்
உன்னையா
என்னையா
நம் நேசத்தையா
குழம்பிப் போன
குட்டையில் மீன்கள்
பிடிக்கலாம்
மனதில்...
நேசித்த ஒரு உறவை
வெறுப்பதை விட
வெறுப்பதாய் நடிப்பது
அதிக வேதனையாய்
சில நேரம் கனவுகளை
விட்டு விலகாமல்
இருப்பது கூட மகிழ்வே....
எங்கெங்கோ திக்கி திணறும்
என் எண்ணங்களை
பொறுக்கி எடுத்து
உரு சேர்க்கிறேன்
உயிர் கொடுப்பதும்
கொடுக்காமல் விடுவதும்
உன் விருப்பம்....

Jul 7, 2011

நந்தவனம்


என்னிடம் ஒரு நந்தவனம்
இருந்தது...
அதில் சில
செடிகளும்
மரங்களும்
பின்னிப் படர்ந்த கொடிகளும்
வைத்திருந்தேன்...

என் நந்தவனத்தில்
மலர்கள் இருந்தது
காய்கள் இருந்தது
கனிகளும் நிறைய
காய்ந்து போன விதைகளும்....

என் நந்தவனத்தில்
அணில்கள்
நத்தை
முயல்கள்
எறும்புகள்
ஏன் சில பாம்புகளும்...

என் நந்தவனத்தில்
ஒரு குளமும்
அதில் வண்ண மீன்களும்
நாரைகளும்
நண்டுகளும்
நீரோடையும்
கூழாங் கற்களும் ...

பறவைகளும்
ஓணான்களும்
சிறு கீரிப் பிள்ளையொன்றும்
வண்ணத்து பூச்சிகளும்
வண்டுகளும்....

ஒரே ஒரு நொடியில்
ஆழிப் பேரலையாய்
நீ அடித்து நொறுக்கும் வரை

என்னிடம் ஒரு நந்தவனம் இருந்தது
அதில்
உன் மீதான காதலும் இருந்தது...

கண்ணீர் சாரல்


குளிர் சாரல்
நுரை பொங்கும் அருவி
தாவிக் குதிக்கிறது தண்ணீர்
கணவனோடு கைகோர்த்து
உச்சியில் நீர் விழும் பொழுது
உன் கால்களினடியில் மூச்சிரைத்து
சாகிறது என் காதல்
ஓடும் நீரோடு இரு துளி
கண்ணீர் கலந்து
மன்னிப்பை கூறுவாய்
துண்டுகளாய் சிதறிய
இதயத்திடம்...

என்னிடம் ஆயிரம்
கேள்விகளுண்டு
உன்னிடம் ஒற்றை பதில்
அதுவும் எனக்கானதாய் இல்லை
புன்னகைக்கும் உன்
உதடுகளின் ஓரத்தில்
நீ குவித்து வைத்திருந்த
நஞ்சு
எனக்கானதாய் இருக்கிறது...

என் பாடலின்
ஒவ்வொரு பல்லவியும்
சரணமும்
முகாரியிடம் மண்டியிடுவது
ஏனென்று தெரியவில்லை
கனவுகள் மட்டுமே
வாழ்வென ஆன பின்
உறக்கத்தை தொலைத்தவன் நான்...

இந்த வெறும் வார்த்தைகள்
செவிகளை எட்டப்போவதில்லை
அருவியின் சாரலில்
லயித்து கிடக்கும் உனக்கு
நிஜங்கள் துரத்தும் ஒரு நாளில்
நீயும் நானும்
பேசப் போவதில்லை
ஆனாலும் இந்த வரிகள் பேசிடும்
நீரின் குளுமையையோ
நம் நேசத்தையோ...

உடன்படிக்கை


உனக்கும் எனக்குமான
காதல் உடன்படிக்கையின்
பக்ககங்களை கிழித்தெறிகிறது
நிகழ்கால ஏமாற்றங்கள்....

விசும்பல்களுடன்
மூடிப் படுக்கையில் அருகில்
புரண்டு கொண்டிருக்கிறது
உனக்கான கவிதைகள்....

கண்ணீர் துளிகள் உணவாகும்
என்றொரு நிலை வந்தால்
இனி நான் யாரிடமும்
யாசிக்க வேண்டி இருக்காது...

கிழிந்து போன நினைவுகளை
நெய்து வருகிறது கனவுகள்
மீண்டும் புதிதாய் கிழித்து
வேடிக்கை பார்க்கிறது உன் விருப்பம்...

காரணங்களே இன்றி
தண்டிக்கப்ப் படுபவனுக்கு
ஆறுதல் மீது என்ன
அக்கறை இருந்துவிடப் போகிறது...

திசையெல்லாம் முட்கள்
பரப்பி நடக்கிறேன்
இதயத்தை விட
பாதங்களுக்கு வலிமை அதிகம் என....

காலின் கீழ் நசுக்கப் பட்ட
சிகரெட் துண்டுகளாய்
மனதின் ஏக்கங்கள்
புகைந்து கிடக்கிறது...

மதுவின் கசப்பும்
தொண்டையின் எரிச்சலும்
என்ன செய்து விட முடியும்
நினைவு ரணங்களை....

உதிர்ந்த இறகுக்கும்
பிடுங்கப்பட்ட சிறகுக்குமான
வேதனைகளை வீசும்
காற்று அறிந்திருக்குமா என்ன?...

தனிமையும்
பிரிவும்
கொடூரம் என்றாய்!
இன்று தனித்திருப்பது நான் மட்டுமே...

வெளியூரோ வெளி நாடோ
உன் அருகாமையின்றி வெறுமையாய்
என்பாய்!
புகைப் படங்களில் புன்னகை நிரப்பி...

உணர்வுக்கும் அறிவுக்குமான
போட்டிகளில் பெரும்பாலும்
அறிவே வெல்கிறது
நீ அறிவாளி....

இறுதியாய் கேட்டாய்
எனக்கான கனவுகளை
நீ ஏன் வளர்த்தாய் என
விதைத்தவள் நீயன்றி யார்....

ஒரு கனவும் சில நிஜங்களும்


ஒவ்வொரு வார்த்தைக்கும்

ஒரு வண்ணத்துப் பூச்சி

என்னுள் உன்னால்

உனக்காக....

வெடித்து சிதறும்

கண்ணீர் துளிகளில்

சேகரித்து வைத்த

உனக்கான கனவுகள்...

பயணங்கள் இதமானவை

உன்னோடு பயணிக்கும் போது

சிறகுகள் விரித்து

என்னோடு பறக்கிறது வானம்...

காதல் பறவைகள் என

மனதில் நான்

வளர்த்தவை உதிரம்

குடிகின்றன பசிக்கு...

சிதறிக் கிடந்த

எண்ணங்களை ஒன்றாக்கி

எனக்கு பரிசளித்தது

உன் காதல்...

என் கருவிழிக்குள்

ஊசி ஒன்றை இறக்கி விட்டு

நேசத்தின் வண்ணமென்று

ஓவியத்தை வரைகிறாய்...

அன்பான உன்

முத்தங்கள் எனக்கு

சில வினாடி பூகம்பங்கள்

பூ... கம்பங்கள்... உன் இதழ்களாய்...

ஒவ்வொரு முறையும்

உனக்காக காத்திருந்து

ஏமாறுவது வேடிக்கை என

நினைத்திருந்தேன் இது வரை...

என்னால் என்ன

செய்ய முடியும்? அடிக்கடி சொல்வாய்!

என் சாவு ஊர்வலம் வரும்

ஒரு நாளிலும் அதே போலித்தனம் தொடருமா என்ன?

Jul 4, 2011

கவலை எனக்கில்லையடி


மத்தியான வேளையில நிழலொதுங்க மரத்த காணோம்
ஆனாலு மாமனுக்கு மனசெல்லா கனவிருக்கு..

அவுத்து விட்ட ஆட்டுக்குட்டி தெக்கு பக்கம் போகுதடி
அடுத்த வரப்பு தாண்டிப்புட்டா வசவு வரும் வண்டி போல...

இப்படியே கனா கண்டு என் வயசு அழிஞ்சு போச்சு
தலையெல்லாம் நர முடியும் வேர் புடிக்க தொடங்கியாச்சு...

எங்க ஊரு பள்ளியில நல்ல பேரு நானெடுக்க நாலு வருசமாச்சு
ஏட்டு கல்வி நான் முடிச்சு ஏழெட்டு வருசமாச்சு...

பட்டணத்து காலேஜில் பவிசாக படிச்ச பொண்ணு
பாசக்கார மாமனோட மனசுனக்கு தெரிஞ்சுடுமா...

சுடிதாரு போட்டுக்கிட்டு மாரோடு நோட்டு வச்சு
நீ போன அழகெல்லாம் ஊரு சொல்ல கேட்டிருக்கேன்...

கம்பியூட்டர் கணக்குன்னு பாடம் சொல்லி குடுப்பவளே
கண்ணமூடி யோசிக்கிறேன் நம் கணக்கு சரிவருமா...

காடு கழனி எதுமில்ல கரவ மாடு நாலுமில்ல
அப்பனாத்தா சொத்துமில்ல எத சொல்லி பொண்ணு கேட்க...

என்னோட கனவெல்லாம் காகிதத்தில் எழுத்தாகி
வரப்பு தண்ணீரில் வரி வரியா ஓடுதடி...

மூணு மாடி வீடுகட்டி குளிரு பொட்டி ரெண்டு இருக்கு
வெறும் பய எங்கிட்ட ஆச மட்டும் தானுண்டு...

கண்டாங்கி கட்டிக்கிட்டு கருகமணி மாலையோட
அங்கங்க பொண்ணிருக்கு பெத்தவளுக்கும் கனவிருக்கு...

உன் மனசு ஆசையெல்லாம் மாமனுக்கு தெரியுமடி
காசு பணம் வாழ்க்கை இல்லேன்னு காதோரம் சொன்னவளே...

காலையில கண் விழிச்சு மாக்கோலம் நீ போட்டு
தலைகுளிச்ச ஈரம் வாசம் வீடு நிறைவதெக்காலம்...

இலக்கியமும் வரலாறும் கவிதையோட கதையும்
வாங்கி வாங்கி சேர்த்திருக்கேன் உன் ஆசை தெரியாதா..

உன்ன கை புடிச்சு வாழ போற வாழ்க்கையோட
எண்ணமிங்கே ஓடுதடி மயிலு பொன்னே எப்ப வருவ...

உங்கையால சோறு தின்னு மடிமேல தலை சாய்க்க
எத்தனை நாள் ஆகுமுன்னு யாருமொன்னும் சொல்லலையே...

நிலாகாயும் ராப்பொழுதில் நச்சத்திரம் எண்ணிடுவோம்
குளிர் காத்து அடிக்கும் போது போர்வைக்குள்ள ஒளிஞ்சிடுவோம்...

ஆஸ்தியெல்லாம் எதுமில்ல ஆண்புள்ள வேணாமே
ஆசைக்கு ஒரு மகள உன்ன போல வேணுமடி...

சடசடன்னு இங்கிலீசு சளைக்காம பேசுவியாம்
நெனச்சாலே நெஞ்சுக்குள்ள படபடப்ப இருக்குதடி...

வத்தாத கெணறு போல கனவெலாம் ஊறுதடி
ஆசைப் பயிர் விளையுதடி மனசெல்லாம் நிறயுதடி மயிலே உன்னால...

தோளட தோள் சேத்து கை புடிச்சு போகயில
அற்பனுக்கு வாழ்வு பொறந்த கதை ஒன்னு உண்மையாகும்...

வேறேதும் வேணாமே என் மடியில் தல சாய்த்து
நீயுறங்கும் நாளொன்றில் என் சீவன் போனாலும் கவலை எனக்கில்லையடி...

Jul 2, 2011

கிழிகிறது முகத் திரை..


ஒவ்வொரு முறையும் என் மணல் வீட்டை
கலைத்து போகிற காலடிகள்
யாருடையதாக இருக்கும் என்று தெரியவில்லை
சில சமயம் என் கால்களையும்
சந்தேகப் படத் தோன்றுகிறது...

சிறு புறாக் குஞ்சு
மரத்தடியில் கிடக்க...
மரத்திலேறி கூட்டில் வைத்து
தாய் பறவை வருமென வலையும்
விரிக்கிறேன் என் வீட்டில்
புறாக் கூண்டு வெறுமை என...

செய்து விட்ட தவறுகளுக்கு
உறுத்தல் இல்லாமலா போகும்,
நாளை பார்க்கலாம்
வருவது வரட்டுமென
கிழிகிறது முகத் திரை..

அதிகாலை விண்மீன் கூட்டங்களை
காட்டி மயக்கியவாறே
நிலவை திருடிச் செல்லும் என்னை
காட்டிக் கொடுக்காத
இருள் இருக்கும் வரை மட்டுமே
நல்லவனாய் நடிக்க வைக்கும் பகல்...

கண்ணாடி தொட்டிக்குள் வண்ண
மீன்களாய் வரவேற்பறையில்
படுக்கையறையில் யாருக்கும் தெரியாமல்
ஒளித்து வைக்கப் படுகிறது
என் ஆணாதிக்க சமன்பாடுகள்...

உனக்கான எல்லா வசதிகளும்
கிடைக்கும் ஆனாலும் நீ
என் அனைத்து முடிவுகளுக்கும்
சரி என்று தலையசைக்கும்
அந்த நொடிவரை...

நீ தோற்கும் பொழுது
என் புன்னகையை மறைத்து
உனக்காக விசும்புவேன்...
மனதில் நீண்டு கொண்டே
செல்கிறது கோரை பற்கள்...

எல்லாம் சரியாகிவிடும்
என் சாவில்
நல்லவனென்று நீயும் சொல்வாய்
நரகத்தில் என் இடத்தை
யாராலும் நிரப்ப
முடியாதென எனக்குத் தெரியும்...