பிறப்பு கேட்காமலே கிடைத்த சாபம்...

மரணம் கேட்டும் கிடைக்காத வரம்...

Jan 21, 2012

நேசித்தலாகும் கோபங்கள்...


நாம் இருவருமாய் வந்த பாதையில்
அங்கங்கே சிதறிக் கிடக்கிறது
உன் மீதான என் கோபங்களும்
என் மீதான உன் கோபங்களும்
சில ரணங்களும் சில மாயச் சுவடுகளும்...

புரியப்படா கோபங்கள் தவிர்த்து
மின் மினிகளென மின்னி மறையும் சில
மின்னலைப் போல் வெட்டியும் சில
சமாதான வார்த்தைகளில் சரணடையும் சில
நீளும் நாட்களும் வாரங்களுமாய்
பதற வைக்கும் சில
கோபங்கள் நேசத்தின் பிரதி...

உன் அன்பையும் அரவணைப்பையும் போலவே தான்
உன் அக்கறை கோபங்களும்
காதலைப் போலவே அடர்த்தியாகவும்
ஒரு நதியின் எதிர்பாரா வெள்ளமெனவும் பாய்கிறது
என் மீதான உன் ஆவேசங்களும்
வீசி எறியப் படும் சொற்களில்
சில நேரங்களில் தீப் பிழம்புகளும்
பார்வைகளில் அக்கினிப் பிரவாகமும்...

கோபங்களைப் புரிந்து கொள்ளாமல்
நேசத்தையும் புரிந்து கொள்ள இயலாது
யாரும் அறியாமல் பூட்டி வைத்த நேசம் போலன்றி
எப்படியும் வெளிவருகிறது கோபம்
என் மீது நேரடியாகவோ
பிறர் மீது மறைமுகமாகவோ
செயல்களின் வெளிப்படாகவோ...

சிவக்கும் கன்னங்களும்
துடிக்கும் உதடுகளுமாய்
கோபங்கள் உன்னை மேலும் அழகூட்ட
தவித்து விழுகிறது உன் சொற்கள்
சில நேரங்களில் தேர்ந்த மருத்துவனின்
கத்தியின் லவாகத்துடன் மென்மையாய்
என்னில் இறங்கி அறுத்தெறிகிறது
என் பிடிவாத புற்றுகளை...

நேசித்தலைப் போல் நிரந்தரமின்றி
உனக்குள் அடைபட்டுக் கிடக்கிறது கோபம்
என் தவறுகளில் வெளிப்பட,
பல நேர கோபங்களில் மெளனமே சொற்கள்
சில நேரம் சொற்களே கோபங்கள்
எப்படியிருந்தும் உன் நேசத்தில்
குறைவதில்லை நீ
கோபம் முடியும் கணங்களில்
அதிகமாய் நிறையும் உன் காதலில்
நிரப்புகிறாய் என் வாழ்வின் நிமிடங்களை...

முழுதாய் உன் நேசத்தை புரிய வைக்கிறது
உன் அக்கறை கோபங்கள்
சில பேசவும் பார்க்கவும் முடியாத
நாளின் பொழுதுகள் கோபங்களென மாறி
சுட்டெறிக்கிறது இருவரையும்
குரல் கேட்டுக் குறையாக் கோபங்கள்
கண் கலங்க கரைவதும் உண்டு
மற்றொருவர் மீதான கோபமும் எரிச்சலும்
வேறு வழியின்றிப் பாயும் போது
துடித்தழுகிறது நேசத்தின் ஒரு பாதி...

கோபங்கள் எனக்கான ஒரு கல்விக் கூடம்
என் நிலை உணர வைக்கும்
உன் சூழலைப் புரியவைக்கும்
ஒரு சிறிய அரவணைப்புக்கு ஏங்கி
தோள் சாய்ந்து கண்ணீருடன்
தன்னையும் கரைத்துக் கொள்ளும்
உன் கோபங்களையும் தள்ளி நின்று
நேசிக்க மட்டுமே முடிகிறது என்னால்....

நம் பாதையை திரும்பிப் பார்க்கிறேன்
இருவரின் கோபங்களும்
கை கோர்த்து வருகிறது
புதிதாய் ஒரு கோபத்தை சேர்த்துக் கொண்டு
காத்திருக்கிறேன் உன் அதீத நேசத்தை
மீண்டுமொருமுறை அடைந்து விட
உன் நேசமின்றி வாழ்வது சாத்தியமில்லை
எனும் பொழுது சாத்தியமற்றுப் போகிறது
உன் கோபங்களின்றி என் வாழ்தலும்..

No comments: