பிறப்பு கேட்காமலே கிடைத்த சாபம்...

மரணம் கேட்டும் கிடைக்காத வரம்...

Jul 4, 2011

கவலை எனக்கில்லையடி


மத்தியான வேளையில நிழலொதுங்க மரத்த காணோம்
ஆனாலு மாமனுக்கு மனசெல்லா கனவிருக்கு..

அவுத்து விட்ட ஆட்டுக்குட்டி தெக்கு பக்கம் போகுதடி
அடுத்த வரப்பு தாண்டிப்புட்டா வசவு வரும் வண்டி போல...

இப்படியே கனா கண்டு என் வயசு அழிஞ்சு போச்சு
தலையெல்லாம் நர முடியும் வேர் புடிக்க தொடங்கியாச்சு...

எங்க ஊரு பள்ளியில நல்ல பேரு நானெடுக்க நாலு வருசமாச்சு
ஏட்டு கல்வி நான் முடிச்சு ஏழெட்டு வருசமாச்சு...

பட்டணத்து காலேஜில் பவிசாக படிச்ச பொண்ணு
பாசக்கார மாமனோட மனசுனக்கு தெரிஞ்சுடுமா...

சுடிதாரு போட்டுக்கிட்டு மாரோடு நோட்டு வச்சு
நீ போன அழகெல்லாம் ஊரு சொல்ல கேட்டிருக்கேன்...

கம்பியூட்டர் கணக்குன்னு பாடம் சொல்லி குடுப்பவளே
கண்ணமூடி யோசிக்கிறேன் நம் கணக்கு சரிவருமா...

காடு கழனி எதுமில்ல கரவ மாடு நாலுமில்ல
அப்பனாத்தா சொத்துமில்ல எத சொல்லி பொண்ணு கேட்க...

என்னோட கனவெல்லாம் காகிதத்தில் எழுத்தாகி
வரப்பு தண்ணீரில் வரி வரியா ஓடுதடி...

மூணு மாடி வீடுகட்டி குளிரு பொட்டி ரெண்டு இருக்கு
வெறும் பய எங்கிட்ட ஆச மட்டும் தானுண்டு...

கண்டாங்கி கட்டிக்கிட்டு கருகமணி மாலையோட
அங்கங்க பொண்ணிருக்கு பெத்தவளுக்கும் கனவிருக்கு...

உன் மனசு ஆசையெல்லாம் மாமனுக்கு தெரியுமடி
காசு பணம் வாழ்க்கை இல்லேன்னு காதோரம் சொன்னவளே...

காலையில கண் விழிச்சு மாக்கோலம் நீ போட்டு
தலைகுளிச்ச ஈரம் வாசம் வீடு நிறைவதெக்காலம்...

இலக்கியமும் வரலாறும் கவிதையோட கதையும்
வாங்கி வாங்கி சேர்த்திருக்கேன் உன் ஆசை தெரியாதா..

உன்ன கை புடிச்சு வாழ போற வாழ்க்கையோட
எண்ணமிங்கே ஓடுதடி மயிலு பொன்னே எப்ப வருவ...

உங்கையால சோறு தின்னு மடிமேல தலை சாய்க்க
எத்தனை நாள் ஆகுமுன்னு யாருமொன்னும் சொல்லலையே...

நிலாகாயும் ராப்பொழுதில் நச்சத்திரம் எண்ணிடுவோம்
குளிர் காத்து அடிக்கும் போது போர்வைக்குள்ள ஒளிஞ்சிடுவோம்...

ஆஸ்தியெல்லாம் எதுமில்ல ஆண்புள்ள வேணாமே
ஆசைக்கு ஒரு மகள உன்ன போல வேணுமடி...

சடசடன்னு இங்கிலீசு சளைக்காம பேசுவியாம்
நெனச்சாலே நெஞ்சுக்குள்ள படபடப்ப இருக்குதடி...

வத்தாத கெணறு போல கனவெலாம் ஊறுதடி
ஆசைப் பயிர் விளையுதடி மனசெல்லாம் நிறயுதடி மயிலே உன்னால...

தோளட தோள் சேத்து கை புடிச்சு போகயில
அற்பனுக்கு வாழ்வு பொறந்த கதை ஒன்னு உண்மையாகும்...

வேறேதும் வேணாமே என் மடியில் தல சாய்த்து
நீயுறங்கும் நாளொன்றில் என் சீவன் போனாலும் கவலை எனக்கில்லையடி...

No comments: