பிறப்பு கேட்காமலே கிடைத்த சாபம்...
மரணம் கேட்டும் கிடைக்காத வரம்...
மரணம் கேட்டும் கிடைக்காத வரம்...
Feb 21, 2012
அணுமின்சாரம்...
அண்மைகாலமாக அனைத்து அறிவு சார் நண்பர்களாலும் மீண்டும் மீண்டும் கூடங்குள அணுமின் நிலைய ஆதரவு பெருகிக் கொண்டு வருகிறது.இந்திய அரசும், தமிழக அரசும் ஆளுக்கொரு குழுவினை அமைத்து அணுமின் நிலையம் மிகவும் பாதுகாப்பானது என்று ஆணித்தரமாக சொல்லப் பட்டுவிட்டது.ருஷ்ய அணுஆராய்ச்சியாளர்களும் தங்களின் அதி நவீன படைப்பை பெருமைப் படுத்தி சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள்.அப்படியே செயல்படுவதாக வைத்துக் கொண்டாலும் தமிழகத்தின் மின் தேவைகளை இது பூர்த்தி செய்துவிடுமா? இதில் பெறப் படும் மின்சாரம் எந்த் மாநிலங்களுக்கு, எந்த நாட்டுக்கு
பயன்படப் போகிறது என்பதுவும் முக்கியமான ஒன்று.
பாதுகாப்பானது, பாதுகாப்பானது என்று வானுயர ஒலிக்கிறது குரல். ஜப்பானில் இல்லாத தொழில் நுட்ப பாதுகாப்பா?புகுஷிமா அணு உலை விபத்தில் உலகிற்கு மறைக்கப் பட்ட செய்திகள் நிறையவே, குறிப்பாக உயிர் சேதம் குறித்த தகவல்கள். சுமார் இருபதாயிரம் வரை இருக்காலாம் என்று சொல்லி இருக்கிறார்கள். உண்மையில் கிட்டத் தட்ட இரண்டு இலட்சங்களை தொட்டிருக்கிறது உயிர் இழப்புகள். ஜப்பானின் மக்கள் தொகை, அவர்களின் தொழில் நுட்பம், உலக நடுகளின் உதவிகள் என அனைத்தும் இருந்தும், மிக மிக விரைவில் அணு உலை கதிர்வீச்சுகள் கட்டுப் படுத்தப் பட்ட போதிலும் அச்சிறிய நாட்டுக்கு இந்த மக்கள் தொகை இழப்பு என்பது மிக மிக அதிகமானது.சரி இந்தியாவை எடுத்துக் கொண்டால் ஜப்பானின் தொழில் நுட்பம் இங்கே இல்லை எனும் போதும் நாம் கொஞ்சம் கூட சளைத்தவர்களில்லை. என்ன சுற்றி வாழும் அப்பாவி மக்களின் அடுத்த தலைமுறையோ, அதற்குப் பின் வரும் சந்த்தியினரோ தான் பாதிக்கப் படப் போகிறார்கள். தமிழ் நாட்டில் பூகம்பமே வராது... என்ன தான் சுனாமி பேரிடர்கள் வந்த போதிலும் அணு மின் நிலையம் எந்த வித பாதிப்புக்கும் உள்ளாகாது. எந்த வெங்காயப் பாதுகாப்போ, மூன்றடுக்கு,நான்கடுக்கு அன்று வரிசைப் படுத்திக் கொண்டாலும், அதே எச்சரிக்கை ஏன் மக்கள் வாழும் எண்ணிக்கை அதன் சுற்றுப் புற மக்கள் பெருக்கம் போன்ற சாதராண விஷயங்களில் எடுத்துக் கொள்ளப் படவில்லை.அதுவும் படித்த நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த மக்களிடையே இருக்கும் பிரச்சனையே, எதற்காகவும் போராட மாட்டார்கள். தொலைக் காட்சியிலும், செய்தித் தாள்களிலும் அரசு தரும் அறிவியல் பூர்வமான விளக்கங்களை படித்து விட்டு மித மிஞ்சிய அணு அறிவால்? ஏன் இந்த வெற்றுக் கூட்டம் சில வெளி நாட்டு சக்தி( இது தனி விவகாரம்) களிடம் பணம் வாங்கிக் கொண்டு நல்ல திட்டத்தை எதிர்த்து போராடிக் கொண்டிருக்கிறது எனும் சிந்தனையில் அறிவுபூர்வமாக விவாதிக்கச் சொல்லிக் கொண்டிருக்கிறது. எனக்கும் கூட அவனவனுக்கு வரும் போது செத்து தொலையட்டும் என இருந்து விடலாம் என்று தோன்றுகிறது, என்ன செய்ய நான் அப்படி சிந்திக்கப் பழகியவன் அல்ல.
எதுவும் நடக்கவே நடக்காது என்று சொல்லி. எதாவது ஒரு விதத்தில் நடந்தே விட்டால், போபால் சம்பவம் எனக்கும் செய்தியாகவே தெரியும். ஆனால் மறுக்க முடியா உண்மைகளும் இன்று வரை கண்முன் தொடர்கிறது. இந்த நொடி பிறக்கும் குழந்தை எதாவது ஒரு குறையுடன் பிறக்கிறது. இன்று வரை அதன் கழிவுகள் முழுமையாக அகற்றப் படவில்லை. விபத்து நடந்து இத்தனை ஆண்டுகள் முடிந்தும் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் நம் அறிவாளி கூட்டங்கள்? இது வரை எத்தனை மக்களுக்கு நிவாரணம் வழங்கப் பட்டிருக்கிறது. இந்த குற்றத்திற்கு யார் தண்டிக்கப் பட்டிருக்கிறார்கள்.சரி எனக்கு அறிவியல் தெரியாது, ஆனால் இந்திய மற்றும் தமிழக அரசு சுயனலவாதிகளின் கபடங்கள் தெரியும். விஷ வாயு கசியும் காரணம் சொல்லி கைது செய்யப் பட வேண்டிய ஒருவனை பாதுகாப்பாக வெளி நாட்டுக்கு தப்ப வைக்கும் அயோக்கியர்கள் இங்கு இருந்திருக்கிறார்கள். இப்பொழுது இன்னும் அதிகமாகி இருக்கிறார்கள்.தமிழ், தமிழ் என சொல்லிக் கொண்டே தமிழர்களை அழிக்கும் நாசகாரக் கும்பல், அதை வேடிக்கை பார்க்கும் மற்றொரு கும்பல், தந்தை பெரியாரின் வழித் தோன்றல்கள் என்று சொல்லிக் கொள்ளும் இந்த இரு அயோக்கிய பதர்களும் இங்கு தான் இருக்கிறார்கள்.
எங்கு ஆபத்து இல்லை, வீட்டில் எரிவாயு வெடிக்காதா? பேருந்து கவிழாதா? ரயில்கள் விபத்துக்குள்ளாகாதா? இப்படி என்னைச் சுற்றி கேள்வி கேட்கும் கும்பல்களுடன் நானிருக்கிறேன். அப்போதைய விபத்துகள் எதிர்கால சந்ததிகளை பாதிப்பதில்லை. எதற்கும் விஷ வாயு கசிவினால் இப்பொழுது போபாலில் பிறக்கும் குழந்தைகளின் நிலை பற்றி விசாரித்துப் பாருங்கள்.இங்கு வியாபாரமாக்கப் பட்டு வரும் கல்வியைப் பற்றியோ, மருத்துவமனை கொள்ளைகளைப் பற்றியோ, நீர்ப்பாதையின் மணல் திருடப்படுவது பற்றியோ, பரமக்குடி, வாச்சாத்தி நிகழ்வுகள் பற்றியோ எந்த நடுத்தர வர்க்கத்திற்கும் கவலை இல்லை.. கொலைவெறிப் பாடலும், நயன்தாராவின் காதலுமே மிக முக்கியமான ஒன்றாக முன் நிற்கிறது. குழந்தைகள் கல்வி என்ற பெயரில் மீண்டும் மீண்டும் பணம் சேர்க்கும் இயந்திரங்களாக மாறிக் கொண்டிருக்க மகிழ்வோடு வேடிக்கை பார்க்கிறது, மிஞ்சிப் போனால் ஒரு ஐ.டி பொறியாலனை உருவாக்கி வெளிநாட்டுக்கு வேலைக்கு அனுப்பி மகிழும் மனநிலை மாறி விடப் போவதில்லை. தான், தன் குடும்பம் என்ற சிந்தனை மட்டுமே முக்கியமாகிப் போன சமூகத்தில், தனிமனித சுகங்களே பெரிதாய் கவனத்தில் கொள்ளப் படுகின்றன. இது ஒரு மன நோய் அன்றி வேறில்லை..
ஒன்று மட்டும் நிச்சயம், ஒரு பேரினவாத அரசையோ, மின் தேவை அதிகம் தேவைப் படும் பணக்கார தொழில் முதலாளிகள் கூட்டமோ நிச்சயம் இத் திட்டத்தை நிறைவேற்றாமல் விட்டு விடப் போவதில்லை.யார் போராடினாலும். அது சுயநலமோ, பொதுநலமோ தடுத்து நிறுத்தி விட இயலாது. எப்படியும் இன்னும் சிறிது நாட்களில் செயல் படத் துவங்கும் இந்த அணு உலை நிச்சயம் நம் தலைமுறையை பாதிக்கப் போவதில்லை.உங்களது குழந்தைகளோ, அவர்களது சந்ததியினரோ பாதிக்கப் படுவதை நாம் இருந்து பார்க்கப் போவதுமில்லை. வாழ்க அணு உலை. வாழ்க மின்சாரம்.
நிச்சயமாக இது அறிவியல் பூர்வமான ஒருவனின் செய்தி அல்ல, ஆனால் என் வருங்கால மனித இனத்திற்கு பூக்களை மட்டுமே பரிசளிக்க விரும்பும் ஒருவனின் அலறல் சத்தம்... அவ்வளவே...
Feb 20, 2012
சில உண்மைகள்...
நான் பெண் என்பதே புரிவதில்லை உனக்கு
என் மீதான சமூக கட்டுகள் மட்டும் புரிந்துவிடுமா என்ன?
உன் மீதான காதலைக் கூட உறவுகளிடம் சொல்லி
ஆசி பெறவோ அழுது புலம்பவோ முடியா நிலை...
மனதோடு காதலைப் புதைத்துக் கொண்டு
புன்னகையோடு வலம் வரும் அதே சாபம்
எனக்கும் பரிசளிக்கப் பட்டிருக்கிறது...
இன்னுமொரு மும்தாஜென நானோ
ஷாஜகானென நீயோ வாழ முடியாது
இருக்கும் தாஜ்மஹாலும் காதலின்
காட்சிப் பொருளாய் மாறிக் கிடக்கிறது...
உன்னைப் பார்த்துப் புன்னகை செய்யவோ
காதோரமாய் உன் குரல் கேட்கவோ
மழை நனைக்கும் இரவொன்றில்
நிலவை துணைக்கழைத்து நடை பயிலவோ
ஏன் ஒரே ஒரு வேளை உனக்காக
உணவு சமைத்துப் பரிமாறவோ கூட இயலாது...
என்னைப் பார்த்து கேலியாய் சிரிக்கிறாய்
எனக்கும் இது கொடுமையாகத் தான் இருக்கிறது
உன்னைச் சந்தித்த நாளை ஒன்றினை
நான் சபித்துக் கொண்டிருக்கிறேன்...
எனக்கே புரிவதில்லை நான் யாரென்று
உன்னைக் கூட தண்டிக்கத் தோன்றுகிறது
என் அழகான வாழ்வில் நீ புயல்
நீ போன பின்னதான என் வாழ்வில்
வெறும் மணற் குவியல் சித்திரங்கள் மீதம்...
இனி எப்படிப் புரிந்து கொள்வாய்
என்பதில் தான் இருக்கிறது உன் வாழ்வு
என்னைப் பற்றி யோசிப்பாய்?
உன்னால் யோசிக்க மட்டுமே முடியும்
நேசித்தலும் யோசித்தலுமே உனக்கானவை
எதற்கும் கொஞ்சம் நிகழ்காலத்திற்கு வா
அங்கு உன்னைச் சுற்றி அலையும்
சில நிதர்சன உண்மைகள்...
எத்தனையோ புதைந்த நேசங்களை
மண்மூடிப் புதைத்துக் கொண்டுதானிருக்கிறோம்
சடலங்கலெனப் பெயரிட்டு சிறிதும் தயக்கமின்றி...
இதில் நீயும் நானும் மட்டும் விதி விலக்கா என்ன?
கதவு...
கதவுகளை இறுகச்சாத்திவிட்டாய்
நான் உள்ளே வருவதெப்படி?
உடைத்து வந்தாலோ
உடைந்த கதவுகள் பற்றியே
சீற்றம் வருகிறது
உன் கதவுகளுக்குரிய சாவி
இப்போது என்னிடமில்லை
சாவியில்லாமல் பூட்டுடைக்க
எனக்கும் இஷ்டமில்லை
சாவிகள் கிடைத்தாலும்
உன் விருப்பின்றி
ஒருக்காலும் திறவேன் நான்
திறக்கும் என
நிலவின் இராத்திரிகளிலும்
நிலவை விடியல் தின்றபின்னும்
உன் கதவருகில்
காத்திருந்த நான்
தற்போது
எழும்பிப் போய்க்கொண்டிருக்கிறேன்
என் வெறுமை இப்போது
பரந்த வெளிகளால்
நிரப்படுகிறது
சிறு புள்ளியாகி
மறைந்துகொண்டிருக்கிறது
உனக்கும் எனக்குமிடையிலான
மூடிய கதவு
விதிகள் உடைபடும் சப்தம்
காலின் கீழ்
நீ கதவு திற!
பொறுக்கிச் சேகரித்த
பழைய சாவிகளெல்லாம்
அந்த வாசலில்
வைத்திருக்கிறேன் நான்
காற்றாகிவிட்ட மனதிற்கு
கதவுகள் இனி எதற்கு?
மிக அழகு
வெளி நிலவு!
கதவற்ற பிரபஞ்சம்!
திறந்த பூமி!
நான் போய்க்கொண்டிருக்கிறேன்
-கவிதா. நோர்வே
http://www.vaarppu.com/view/2592/
விலைமாது
ராமன் வேசமிட்டிருக்கும்
பல ராட்சசனுக்கு
என்னை தெரியும்.
பெண் விடுதலைக்காக போராடும்
பெரிய மனிதர்கள் கூட
தன் விருந்தினர் பங்களா
விலாசத்தை தந்ததுண்டு.
என்னிடம்
கடன் சொல்லிப் போன
கந்து வட்டிக்காரகளும் உண்டு.
சாதி சாதி என சாகும்
எவரும் என்னிடம்
சாதிப் பார்ப்பதில்லை.
திருந்தி வாழ நான் நினைத்தபோதும்
என்னை தீண்டியவர்கள் யாரும்
திரும்பவிட்டதில்லை.
பத்திரிக்கையாளர்களே!
விபச்சாரிகள் கைது என்றுதானே
விற்பனையாகிறது..
விலங்கிடப்பட்ட ஆண்களின்
விபரம் வெளியிடாது ஏன்...?
பெண்களின் புனிதத்தை விட
ஆண்களின் புனிதம்
அவ்வளவு பெரிதா?
காயிந்த வயிற்றுக்கு
காட்டில் இரை தேடும்
குருவியைப் போல்
என்னை யாரும் பரிகசிக்கவில்லை.
கட்டில் மேல் கிடக்கும்
இன்னொரு கருவியைப் போலத் தான்
என்னை கையாளுகிறார்கள்.
நான் இருட்டில் பிணமாக மாறினால்தான்
பகலில் அது பணமாக மாறும்.
பின்தான்
என் குடும்பத்தின் பசியாறும்.
நிர்வாணமே என்
நிரந்தர உடையானல்தால்
சேலை எதற்கென்று
நினைத்ததுண்டு.
சரி
காயங்களை மறைப்பதற்கு
கட்டுவோம் என்று
கட்டிக்கொண்டு இருக்கிறேன்.
என் மேனியில் இருக்கும்
தழும்புகளைப் பார்த்தால்
வரி குதிரைகள் கூட
வருத்தம் தெரிவிக்கும்.
எதையும் வாங்க வசதியில்லாத
எனக்கு
விற்பதற்க்காவது இந்த
உடம்பு இருக்கிறதே!
நாணையமற்றவர் நகங்கள்
கீறி கீறி என்
நரம்பு வெடிக்கிறதே!
வாய்திறக்க முடியாமல்
நான் துடித்த இரவுகள் உண்டு
எலும்புகள் உடையும் வரை
என்னை கொடுமைப் படுத்திய
கொள்கையாளர்களும் உண்டு.
ஆண்கள்
வெளியில் சிந்தும் வேர்வையை
என்னிடம் ரத்தமாய்
எடுத்து கொள்கிறார்கள்.
தூறல் சிந்தாத வான் மேகமில்லை.
கீறல் படாத வேசி தேகமில்லை.
என்னை வேசி என்று
ஏசும் எவரைப் பற்றியும்
கவலைப் பட்டதே இல்லை..
ஏனெனில்
விதவை - விபச்சாரி
முதிர்கன்னி - மலடி
ஓடுகாலி - ஒழுக்கங்கெட்டவள்
இதில் ஏதேனும்
ஒரு பட்டம்
அநேக பெண்களுக்கு
அமைந்திருக்கும்.
இது இல்லாமல் பெண்கள் இல்லை.
எப்போதும்
இழிவு சொல் ஆண்களுக்கு இல்லை.
முதுமை என்னை
முத்தமிடுவதற்க்குள்
என் மகளை மருத்துவராய்
ஆக்கிவிட வேண்டும்.
என் மீது படிந்த தூசிகளை
அவளை கொண்டு
நீக்கி விட வேண்டும்.
இருப்பினும்
இந்த சமூகம்
இவள்
மணிமேகலையை என்பதை மறந்துவிட்டு
மாதவியின் மகள் என்பதை மட்டுமே
ஞாபகம் வைத்திருக்கும்.
இறுதியாக
இரு கோரிக்கை.
என்னை
மென்று தின்ற ஆண்களே!
மனைவிடமாவது கொஞ்சம்
மென்மையாக இருங்கள்.
எங்களுக்கு இருப்பது
உடம்பு தான்
இரும்பல்ல.
என் வீதி வரை
விரட்டிவரும் ஆண்களே!
தயவு செய்து விட்டுவிடுங்கள்.
நான் விபச்சாரி என்பது
என் வீட்டுக்கு தெரியாது.
-தமிழ்தாசன்
http://www.vaarppu.com/view/2587/
Feb 18, 2012
சிசுக்கொலைகள்...?
ஜனனங்களுக்காய்
படைக்கப்பட்ட
கருவறைகள்..
இன்றோ
மரணங்களுக்கான
கல்லறையாய
புதிய பரிமாணம்
உயிரணுக்களின்
உயிர்கள்
அணுவணுவாய்
கொல்லப்படுகிறது
மருத்துவச் சித்ரவதைகளுடன்....
தொப்புள்கொடிகளே
தூக்குக்கயிறுகளாகின்றன
இந்தக்கருக்கலைப்பில்....
“புழுக்களை தீயிட்டு
எரிப்பதைப்போல”
என்பதை தவிர
வேறெந்த உவமைகளும்
பொருந்தப் போவதில்லை
இந்த அகால மரணங்களுக்கு...
மனிதாபிமானம்
செத்துப்போய்விட்டதை
பகிரங்கமாய் பறைசாற்றுவதற்கா
சிசுக்கொலைகள்...?
உண்டான பிறகு
சிதைப்பதை விட்டுவிட்டு
உண்டாகும் முன்
சிந்தியுங்கள்
ஏனெனில்
நீங்கள்
சிதைப்பது உயிர்களை அல்ல
இவ்வுலகின்
நாளைய விடிவை !
- சிப்லி
முகநூலில் அண்ணன் ஜெயக்குமார்
Feb 16, 2012
காதலெனும் வலை
மெல்ல மெல்ல உன்னைச் சுற்றி
பின்னிக் கொண்ட வலையில்
நானே விழுகிறேன்
காதெலெனும் பெயரிட்டு
பார்வையில் விழத் துடிக்கிறது
இன்னுமொரு பெயரற்ற நாள்
உன் நினைவுகளோடு வாழத் துடிக்கும்
இன்னும் சில மணித் துளிகள்
ஆதரவாய் தலை கோதி
புன்னகையில் எனை செதுக்குகிறாய்
சிவந்த பூக்களை எப்பொழுதும்
கொண்டு வருகிறேன் உன்னிடம் சேர்க்க
உறக்கத்தோடு சண்டை போட்டு
கனவுகளில் உனக்கான கவிதைகள் நிறைய
விழித்துக் கிடக்கிறது என் இரவு
இருவருமாய் பகிர்ந்து கொண்ட
நகைச் சுவை துணுக்குகள்
உனக்கென நான் காத்திருந்த
சாலையோர வேப்பமரம்
எதோ ஒரு காட்டுப் பூவின் நறுமணம்
நீ கடக்கும் போதெல்லாம் வீசிப் போகிறது
இப்படித் தான்
என் நினைவுகளோடு உன்னையும்
தைத்துக் கொண்டு அலைகிறது மனம்
இன்னும் மீதமாய் இருக்கிறது
நீ எனக்கென விட்டுச் சென்ற உடல்
எங்கிருந்தால் என்ன
நலமாகவே இருக்க வேண்டுகிறேன்
எதற்கும் உடன் வைத்திருக்கும்
என் உயிர் பிரியும் வேளையில்
யாருக்கும் தெரியாமல் உன் காதல்
உண்மையென்பதை சொல்
என் வாழ்விற்கும் ஒரு அர்த்தமிருக்கட்டும்...
கொன்றைப் பூக்களும் ஒரு காதலும்...
ஒரு மாலை பொழுதின் நடை பாதை ஓரத்தில்
கொன்றைப் பூக்களை உதிர்த்தபடி
நின்றிருந்த சிறு மரத்தினடியில்
சுரிதாரில் பூக்களை இறைத்த படி நீ
வண்ணத்துப் பூச்சிகளை உதிர்க்கிறது மனம்
கண்களின் வழியே பறவைகளென மாறி
வண்டுகளாய் அடைகிறது உன்னை
அதுவரை வேடிக்கை பார்க்க வந்தவனை
வாடிக்கையாய் வரவைத்தவள் நீ
பார்வைகளைப் பரிமாறிக் கொண்ட
ஒரு மழைக் காலமும்
மரியாதை பேச்சுகளுடனான
ஒரு குளிர் காலமும் கடந்திருந்தது
”போடா” என நீ அழைத்த மற்றொரு அதீதப்
பொழுதினை சுமந்து கடந்தது
ஒரு வசந்த காலம்
வண்ணம் சுமக்கும் கல்லூரியின் நிழற்குடை
கணினி பயிலும் சிறப்பு வகுப்பென
கோடையும் கடந்துவிடுகிறது
அலைபேசிகள் பரிமாற்றம் பெற
இரவுப் பொழுதுகள் உறங்கா விடியலில்
அந்திப் பொழுதுகள் சந்திப்புகளாய்
இருவரின் கனவுகளும் மின்னிப் பரவி
மின்மினிகளென ஒளியூட்டியது
இருள் சூழும் காகிதப் பூ மரத்தை
காதலுக்கு பிடிக்கிறதோ இல்லையோ
வதந்திக்கு பிடிக்கிறது காதலை
இருவருமே மறுக்கவில்லை இருபுறமும்
பிறிதொரு நாளில்
உன் தந்தை அழைப்பதாய் நீ அழைக்க
கைபிடித்து கதை பேசி புன்னகையுடன்
வழியெங்கும் நம் ஊர்வலம்
நம் கடைசி மகிழ்வு அது
உன் தந்தைக்குப் பின்னால் நீ
எனக்கு பின்னால் உன் தாய்
நலவிசாரிப்புகள் இல்லை
ஆதரவான கை குலுக்கல் இல்லை
என்ன செய்கிறாய் ?
வெறுப்பும் கோபமுமாய் ஒலித்த குரல்
உன்னைக் காதலிப்பதை
முழுநேர வேலையாகவும்
என் அலுவலகத்தில் பகல் மட்டும்
வேலையுமாய் இருப்பதை சொன்னேன்
உயிர்க் கவிதை பெற்றவர்கள்
சொற்கவிதைகளை ரசிப்பதில்லை போலும்
அதன் பிறகு மௌனம் மட்டுமே
மெல்ல வெளி வருகிறேன்
பதறிய படி ஓடி வந்து
ஆங்கிலத்தில் மன்னிக்கக் கோரினாய்
அதுவே என் காதலுக்குமாய்
அலை பேசி எண்கள் மாறிப் போனது
வீடும் தெருவும் கூட
நடந்து அலைந்து களைத்ததில்
நகரம் பெரியதாக ஆகியிருந்தது
இப்பொழுதெல்லாம் அலைபேசிக் கோபுரங்கள்
வெறும் இரும்புக் கூடுகளாகவே தெரிகிறது
அழிந்து போன சிட்டுக் குருவிகளும்
என் காதலுமாய் ஊர் முழுக்க சாட்சியென
இப்பொழுதும் கொன்றைப் பூக்கள்
உதிர்ந்து கொண்டுதானிருக்கிறது
நீ நின்ற அதே இடத்தில்...
Feb 8, 2012
ஒரு கோப்பை திரவம்...
கண்ணாடிக் குடுவையில் அடைபட்ட
பொன்னிற திரவத்தை
வெறுமையில் பார்க்கிறேன்
பார்த்தல் ரசிப்பாகிறது
தக தகக்கிறது தன் மீது படும்
மெல்லிய ஒளியை பரிதிபலித்து
இன்னும் சில நொடிகள் ரசிக்கிறேன்
இந்த ரசனை தான் இழுக்கிறது போலும்
விரல்களால் திருகி உடைபடுகிறது
இணைப்புத் தடுப்புகள்...
முதலில் பரவுகிறது நெடி
வேறு வழிகளில்லை
நாசியின் அருகே வைத்து
முழுமையாய் சுவாசிக்கிறேன்
மூச்சுக் காற்றோடு நிறைகிறது போதை
கவிழ்த்து கிடக்கும் சிறு கோப்பைகள்
நிமிர்த்தப் படுகின்றது ஒரு சிணுங்கலோடு...
பாதிக்கும் குறைவாகவே நிரப்பப்படுகிறது
நிறைகிறது குளிர் நீரும் அதன் மீது
மிதக்கும் பனித் துண்டுக்களுமாய்
இப்படியும் ரசிக்க வைக்கிறது
மிக மெதுவாய் மென்மையாய்
உதடுகளில் இணைக்க
நெடி பரவுகிறது நாவில்
தொண்டை நனைக்கும் பொழுது
துடிக்கிறது வெளித் தள்ள...
கண்கள் மூடி ஒரே மூச்சில்
குடித்து நிமிர மீண்டும் நிரம்புகிறது கோப்பை
அருகில் நிறைகிறது மிளகாய்த்தூள் முந்திரி
இரண்டாம் முறை
நெடியுமில்லை துடிப்புமில்லை
மூன்றாம் முறை
நெடி மணமாகிறது
துடிப்பு ஏக்கமாகிறது
மெதுவாய் தொடங்குகிறது தன் வேலையை
எனை நிறைக்கும் அத்திரவம்...
சுற்றம் நினைவிருக்கிறது
உறவுகள் நினைவிருக்கிறது
எல்லாம் கொஞ்சம் தள்ளியே இருக்கிறது
காயங்கள் இருக்கிறது
ஏமாற்றங்கள் இருக்கிறது
கவலை கொஞ்சம் தள்ளி இருக்கிறது
தள்ளாடும் உடல்
தாங்கும் மனது
இரவு கவிழ உறங்கி விடுகிறேன்...
ஒரு வேளை நாளையும்
காயங்களையும்
கவலைகளையும்
மறக்க மீண்டும் நான் வரலாம்
ஆனாலும்
பகலெல்லாம் சுமக்கத்தான் வேண்டியிருக்கிறது
நீ உடனிருந்த நினைவுகளை...
Feb 7, 2012
எனக்கான விடியல்...
டாக்டர் சொன்ன
அளவில்
பருக்கை
வாஸ்துக்காரன்
சொன்ன திசையில்
படுக்கை
பஞ்சாங்கம்
ஒப்புக் கொண்ட
நாளில் மட்டுமே
பயணம்
எண் கணிதம்
ஏற்றுக்கொள்ளாவிட்டால்
இன்றைய எனது பெயர்
நாளைக்கு
மாறிப்போகலாம்
சோதிடர் 'எஸ்'
என்றதற்குப் பிறகே
எனக்கு
மிஸ்ஸஸ் ஆன அவள்
வெளியில்
குறித்துக் கொடுக்கப்பட்ட
நாழிகைக்குள்
அவசர அவசரமாய்....
நடந்து முடிந்த
முதலிரவு
என் ஒவ்வொரு
அசைவுகளையும்
யார் யாரோ
முடிவு செய்கிறார்கள்
என் வீட்டு
மின் கட்டணத்தை
முடிவு செய்யும்
உலக வங்கி போல
நாளைக்கு
எனக்கான விடியலும் கூட
ஒரு கடிகார
அலாரத்தின் கையில்தான்.....
-முக நூல் பதிவு அண்ணன் ஜெயக்குமார்..
Feb 6, 2012
தேவதைகள் வருகிறார்கள்...
என் வழியெங்கும் தேவதைகள் வருகிறார்கள்
அவர்கள் தாங்கள் தேவதைகள் என்பதை மறந்து
என்னை சபித்தபடி கடந்து செல்கிறார்கள்
சபிப்பது தேவதைகளின் இயல்பில்லை தான்
இருந்தும் சாபங்கள் நிதர்சனமானவை
தேவதைகளை தேவதைகளாகவே
நம்பிக் கொண்டிருந்தேன் நான்
வரம் மட்டுமே தருவார்களென்றும்
இப்படி ஒரு தேவதையிடம் தான்
முன்பொரு நாளில் மயங்கினேன்
தினமும் வரங்களை பரிசளித்தது தேவதை
மாறாப் புன்னகையுடன் என் துணையுமாய்
நான் அத்தேவதையை நேசித்தேன்
தேவதையை கவிதையாக்கினேன்
தேவதையை கோபப் பட்டேன்
தேவதையைக் கொண்டாடினேன்
எனக்கான பூக்களை தினமும்
தந்து கொண்டே இருந்தது தேவதை
தேவதைகள் என்றுமே பெண்ணாகிவிடுவதில்லை
எனைப் பிரிய முடியா தேவதை
முதலில் தன் வரங்களை நிறுத்திக் கொண்டது
சில நாட்களில் பரிசளித்த வரங்களை
திரும்ப எடுத்தும் கொண்டது
இடைவெளியை விரும்பியது
மறை முகமாய் ஒரு பிரிவின் நாடகம் அரங்கேற
வேறு வழிகளின்றி தேவதையின்
கால்களில் கதறிக் கொண்டிருந்தேன்
கண்ணீரைக் குடித்து விலகி சென்றது
எனக்கான தேவதை
என் வழியெங்கும் தேவதைகளாக
வந்து கொண்டுதான் இருக்கிறார்கள்
என் மீது சாபத்தை அள்ளித் தெளித்த படி...
பூக்களை சுமந்த பாதை...
எவனோ ஒருவன் தொடர்வது
அனுமானமெனத் தெரிகிறது
நிச்சயம் திரும்பி பார்க்கையில்
அவன் இருக்கப் போவதில்லை
என்னைத் தொடர்வதில்
அவனுக்கு என்ன பலன்?
வேவு பார்த்துக் கொண்டே
குறித்துக் கொள்கிறான்
நான் இடரும் இடங்களில்
நான் நல்லவனா சந்தர்ப்பவாதியா
எனும் அவனது தேடல்
சுத்தமான சுயனலவாதியுடையது...
நான் சந்தர்ப்பவாதியாக
இருக்க வேண்டும் என்பதே அவன் ஆவல்
என்னைக் குற்றவாளியாக்கி
தன்னை சூழல் என்ற பெயரில்
நல்லவனாக்கி கொள்வதே
அவனுள் படரும் ரகசியம்
பேசாமல் இருப்பது போல்
பேசிக் கொண்டே இருக்கிறான்
என் தவறுகளை..
குற்றம் சுமத்தி என்னை
அவனிடமிருந்து பிரித்துக் கொள்வதே
அவன் தேவை எனினும்
அதை அவன் சுலபமாக
செய்துவிடப் போவதில்லை
எப்படியும் என்னில் வழியும்
குருதியும் கண்ணீரும்
அவன் பாதங்களை கழுவ வேண்டுமென
விரும்பி தொடர்கிறான் நிழலென...
முன்பொரு நாளில்
தவறு எனத் தெரிந்த ஒன்றை
இருவருமே தான் செய்தோம்
எனைத் தொடரும் முன்
பிரிய வேண்டும்
பிரிவதற்கென காரணங்கள்
சுடும் கற்களென அடுக்கப் பட
பொய்க் கோட்டைகள் வலிமை படுகிறது...
நம்பிக்கை ஒன்றையே
நம்பிக் கொண்டிருந்த என்னை
அதைக் கொண்டே வீழ்த்த முடிகிறது
கற்பூரம் என்று இல்லாவிட்டாலும்
நான் கழுதையல்ல
புரியும் உணமைகளோடு
இரவுகள் விழிக்கிறது
இருளிலும் தேடுகிறாய்
எனக்கெதிரான சாட்சிகளை...
சரி
இனி நானும் நடிப்பதை தவிர
வேறு வழிகளில்லை
உனக்கென நான் நின்றுவிடுகிறேன்
கூண்டுக்குள்
ஆதாரங்கள் நிரூபிக்கப் படும்
சாட்சிகள் சொல்லுவார்கள்
பிரிவு தீர்ப்பு வழங்கும்
உன் நீதி மன்றம்
மௌனம் சுமந்து நான் வெளியேற
புன்னகையோடு பார்ப்பாய்
இனி எந்தக் கவலையுமில்லை என...
இறுதியாக
உன்னிடம் சொல்ல விரும்புவதெல்லாம்
ஒன்று தான்
இன்றைய உன் புன்னகை
நாளைய கண்ணீரை ஒளித்திருக்கிறது
என் பாதைகளை அடைக்கும் முன்
அவை உனக்கான பூக்களை
சுமந்தவை என்பதையும் நினைவுகொள்...
Feb 5, 2012
என் உலகானவள்...
உன் பாதங்களை விட மென்மையான பூக்களை
உலகில் இனி யாரும் கண்டுவிடப் போவதில்லை...
ஒற்றை புன்னகையில் உலகை வெல்லும்
வித்தை உனக்கு சொந்தமானது...
பிஞ்சு விரல்கள் என் முகம் வருடும் வேளையில்
மெல்லிய மயிலிறகென மாறிப் போகிறாய்...
சுருள் விழும் உன் பட்டு கூந்தலில்
சிக்குண்டு கிடக்கிறது எனக்கான மகிழ்வுகள்...
எத்தனையோ பேர் முயன்று தோற்றுப் போக
எளிதில் நீ கற்பித்து விடுகிறாய்
பாசத்தின் மொழியை கொஞ்சும் மழலையில்...
கரு விழியின் நடனங்கள் மேடையேற
சில நேரங்களில் மயக்கி விடுகிறாய்
நாட்டிய பாவனைகளில் கிறங்கடித்து...
கால்களை உதைத்து நீந்திய போதும்
மண்டியிட்டு தவழ்ந்த போதும்
சுவர் பிடித்து நின்ற போதும்
உலக அதியங்கள் எல்லாம் அர்த்தமற்றுப் போயின...
எனகென ஒரு உலகைத் தந்தவள் நீ
என் உலகெனவே மாறி போனவள் நீ...
திருஷ்டிப் பொட்டுகள் கூட அழகாகி விடுகிறது
உன் கன்னங்கள் தொடுவதில்...
புதிது புதிதாய் விளையாட்டுகளை
அறிமுகம் செய்கிறாய் எனக்கு ...
வீடு வரும் பறவைகளுக்கு கூட
செல்லப் பெயர் வைத்து விடுகிறாய்
பிறகு நானென்ன மிஞ்சுவது...
நீ தரையில் வரையும் கோடுகள்
அழகிய ஓவியத்தின் தொடக்கமாக...
கால் கொலுசுகளில் சிம்பொனி இசைக்கும்
ரகசியத்தை யாருக்கும் சொல்வதில்லை நீ...
நானோ உன்னைப் பற்றி கவிதைகளை தேட
நீயோ சின்ன சின்ன அசைவுகளில் கூட
காவியங்களை சொல்லி விடுகிறாய்...
அம்மா எனும் அழைப்பில்
என்னுள் இருக்கும் வேதனை முடிச்சுகளை
நானறியாமல் அவிழ்த்து விடுகிறாய்...
எத்தனையோ சொல்ல நினைத்து
வார்த்தைகளில் அடையா கவிதைக்கு
உன் இன்னொரு புகைப் படத்தையே
பதிந்திருக்கலாம் நான்...
Feb 4, 2012
சுதந்திரம் வெறும் வார்த்தையில்..
சுதந்திரத்தை பற்றி எழுத
எனக்கு ஆர்வம் இல்லை -ஏன்னெனில்
இல்லாத ஒன்றை பற்றி
என்னதான் எழுதுவது ?
இதை பற்றி நினைக்கும் போதே
நாம் தொலைத்த ஒவ்வொன்றும்
எனக்குள்
சோக ஊர்வலமாய்
ஆட்டு மந்தைகளாய்
எங்களை
வெட்ட வெளியில்
அடைத்துவிட்டு
நடுவில் சுதந்திரக்கொடி
சுதந்திரமாய் பறக்க விடப்பட்டுள்ளது
சுதந்திரத்தை பற்றி
சத்தமாய் நீ பேசினால்
உன் சத்தம் வெளியே எப்போதும் கேட்காது
இங்கே பேச்சில் மட்டும் தான்
சுதந்திரம் -ஆனால்
வெளியே எதுவும் இல்லை
எல்லாம் அவர்களுக்குள் மட்டுமே...
- மதிவதனி...
Subscribe to:
Posts (Atom)